மேசையிலிருந்து
தவறி உடைந்த கண்ணாடியில்
தனது நூற்றுக்கணக்கான
முகங்களை
ரசித்துக் கொண்டிருந்தது
குழந்தை
பதறியபடி
படுக்கையிலிருந்து
எழ முடியாமல்
செருமிக்
காட்டும் தாத்தா
அங்க என்னனு பாருங்க
என்றபடி
அடுப்படியில்
சமைத்துக்
கொண்டிருக்கும்
அம்மா
கிழவனுக்கு
இப்ப என்ன வேணுமாம்
என்றபடி
வராண்டாவில்
காற்று வாங்கும் பாட்டி
உன் புருசனுக்கு மருந்து கொடுத்தியா
என்றபடி
வாசலிலிருந்து வண்டி கழுவும்
அப்பா
அம்மா, பாப்பா
கண்ணாடிய
உடச்சிட்டாவென
போட்டு கொடுக்கும் அண்ணன்
காயமேதும்
இல்லையென
நிம்மதி
மூச்சு கொள்ளும்
குடும்பம்!

0 comments
Post a Comment