உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

நான் உன்னவிட ஒரு ஸ்டெப் மேல என்று என் தோள் அழுத்திய படியே கோயில் வாசலில் உன் பின்னங்காலை இறுக்கியிருந்த லெதர் செருப்பை விடுவித்துக் கொண்டிருந்தாய். உன் காலில் இருந்து செருப்பு நழுவும் நொடிகளை கச்சிதமாய் விரல்களால் பாதத்தில் கோடு கிழித்திருந்தேன். நீ கலைந்து ஓடும் மான் போல சட்டென படிகளேறி கோயில் வாசலை அடைந்திருந்தாய்.

ஒவ்வொரு படிக்கட்டுகளாய் மேலேற மேலேற கோயில் கருவறை பார்த்து நின்றபடி பக்கவாட்டில் கண்ணை உருட்டிக் கொண்டிருந்தாய் நான் சிரிக்கவும் தலையை நேராக்கிக் கொண்டாய். எனக்கும் இப்படி நடந்து கொள்வது தான் பிடித்திருந்தது. கோயிலில் வைத்து விழும் திட்டுக்களில் தான் எத்தனை காதல்.

அதில் ஒரு அமைதியை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது
அதில் ஒரு மென்மையை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது
அதில் ஒரு கெஞ்சலை கூடவே வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
அதில் ஒரு செல்லப் பாசாங்கோடு துரத்த வேண்டியிருக்கிறது
அதில் ஒரு தாவலை தவிர்க்க வேண்டியிருக்கிறது
அதில் தெத்துப்படும் காமத்தை ஒளித்துவைக்க வேண்டிருக்கிறது

உன் சம்பிரதாயங்கள் முடிவில் தூண் அருகில் என் தொடைக்கு மேல் உன் மூட்டு அழுந்த அமர்ந்து கொண்டு வெகுநேரமாய் குங்குமத்தை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாய். உன் ரேகை மடிப்புகளில் ஊறிய குங்குமச் சிவப்பை விரலில் ஏந்தி நெற்றி தொடுகையில் எப்படித்தான் முத்தமிடுவாயோ? உள்ளங்கைக்கு கொஞ்சம் கீழ் உதட்டால் ஒத்தடமிடுவிடுவாய்.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

அன்று நீ ஏனோ கடவுளை கும்பிட மறுத்திருந்தாய். நாம் எப்போதும் அமரும் அதே தூணில் வைத்துத் தான் உன் வகிட்டில் குங்குமம் வைத்துவிடச் சொன்னாய். கைப்பை ஏன் இத்தனை பெரிதாய்? இத்தனை கனமாய்? என்றதுக்கு மனமும் தான் என்று முனுமுனுத்தாய். திருமணப் பத்திரிக்கையையும் நீட்டியிருந்தாய்.

பிறகு என் அலைபேசியை எடுத்து மெயில் மீ அவர் ஆல் போட்டாஸ் என்று உன் பெயருயும் என் பெயரும் சேர்ந்தது போன்ற மெயில் ஐடியும் கொடுத்தாய்.

Blogger Wordpress Gadgets