சன்னல் திரையின் மடிப்பை 
கூட்ஸ் இரயிலின் பெட்டியை 
எண்ணிய மனதோடு எண்ணுகிறேன் 

வாசல்நடை தப்பிய பிடிவாதத்தின்
ஆயுளும் முன் முடிவும்
காரி உமிழ்கிறது தனக்குத்தானே

போக்கிடமற்றவாறு பழக்கிய
பெல்ட் மாட்டிய அந்த நாய்
நன்றியோடு இருப்பதாய் சொல்கிறாய்

பற்களின் இடுக்குகளில்
சிக்கிய துணுக்கென உறுத்துகிறது
அச்சொல் வேறொன்றுமில்லை

பிறகு

Tuesday, February 24, 2015 | 0 comments »

நிழல்கள் கீழ் நிற்க விரும்பும் 
உன் பிரத்யேக கண்களை 
இரவிலும் கண்டதுண்டு 

மணிக்கூண்டிலிருந்து
மணிக்கொருமுறை ஒலிக்கும்
வசனத்தை கேட்க மெளனிக்கிறாய்

மெளனிக்க சொல்கிறாய்

சாக்லேட் தாள் கிழிக்க சொல்லிக்கொடுத்த
மதியம் தப்பிய மாலைக்குள்
நான்கில் மூன்று தும்மல்களை

கைக்குட்டைக்குள் சேகரித்தாய்
கடலில் வாழும் மீன்களென
இலக்கற்று பறக்கத்துவங்கியது

தெருவிளக்குகள் சூரியனாய்
தெரிந்ததோ என்னவோ
இருட்டியது குறித்து பேசவில்லை

துருத்திக்கொண்டிருந்த
பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த கைக்குட்டை
என் கொடியிலாடும் க்ளிப்பிற்குள் அகப்படவேயில்லை

கொஞ்சம் அழுந்தப்பொத்திய 
கண்களை கசக்கியபடி 
கால்மடக்கியமர்ந்த கடற்கரையில் 

ஓர் இரவை பல துண்டுகளாக
உணர்ந்தக் கதையை பக்கவாட்டில்
ஒன்று ஒன்று என கோடிடுகிறாள்

இருகோடுகளின் இடைவெளி
வயல் வரப்பென வரைகிறது
சாய்ந்த அந்தியின் கணக்கில்

வாய் பொத்தி அழும் உதட்டின்
கீறல்களில் எச்சில் பூச இல்லை
சுனைக்கான அந்தக்கரங்கள்

நண்டின் கால் தடங்கள்
அழிக்கும் அலைகளின்
உள்ளே வெளியே ஆட்டத்தில் 

சிணுங்கலுக்கும் முனகலுக்குமான
இடைவெளிக் கனவுள்
வானும் கடலும் மோதும் திரையில்

ஆமையின் தலையென மேலேறிய
நிலவின் அரை வட்டத்தில் நிறுத்தி
பற்தடங்களைத் தேடுகிறாள்

நாணி பின் விடுவித்த விரல்கள்
நடுங்கத்துவங்குகிறது
குறிப்புகள் எழுத எழுத

இரவல் இரவு

Tuesday, February 24, 2015 | 0 comments »

நடந்து நடந்து பாதம் அகன்று
மிதியடி தாண்டி வெளியேறும்
கிழவியின் ஓர் விரலை
ஒத்திருக்கிறது இவ்விரவு

தன்னைத்தானே மூடிக்கொள்ளும்
சுவர்களோடு
ஆயிரம்கால் அட்டையென
முன்னேறுகிறேன்
காலத்தின் நசுக்கலுக்கு அஞ்சி

மழையென பொழியும் குழாயின்
துளைகளில் உயிரைத்துளைக்க
முனைகிறேன்
எப்போதுமில்லா உத்வேகத்தில்

ஈரம் சொட்ட சொட்ட முகம் நனைய அனுமதித்த
ஈரக்கூந்தலின் உதிர்வில்
நெளிகிறதென் காமம்

உப்புக்காற்று சுவைக்கும்
தேகத்துளையினுள்
எப்போதும் பொருந்துவதில்லை

சோழியுருட்டும் கண்களின் வழி
ஊடுருவிய செயற்கை புன்னகையும்
அவசரகால ஆறுதலும்

இனி எப்போதும் கூடாதெனும்
முன்முடிவின் இறுதியில்
போர்க்களம் அமைக்கிறாய்

திரும்பிப்படுத்தல் குறித்து
சலமற்று இருப்பதாய் காட்டும் இரவில்
கேவுகிறது மெளனம்

மீனின் செதிலருக்கும் கைப்பக்குவமாய்
சொற்களை தூவுகிறாய்
புறாக்களுக்கான நெல்மணிகளாய் 

மந்தை மாடுகள் கிளப்பும்
அந்திப்புழுதி கடக்க
காத்திருக்கும் வேலியோரத்தில்
தட்டானின் புணர்ச்சி

எதிர் இருக்கைகள் வெறுக்கும்
உன் ஆதிக்காலத்தின் இருப்பை
புன்னகைக்கிறேன் காகிதக்கோப்பையில்

நியாயங்கள் விரும்பாத செவிகளுக்கு
ஆகச்சிறந்த பரிசாய்
நினைவுகளை துல்லியமாய் கேட்கும் திறன்

மீன் குஞ்சுகள் வாங்கிவரும்
நெகிழிப் பையினுள்
சதா தங்கிவிடுகிறது கண்கள்

ஒரு கிலோ மீட்டருக்குள்ளான
தூரத்தை இப்படியா கடப்பது
அடிக்கு அடி நடந்து?

நெரிசல்கள் என்று சொல்லமுடியாத
சாலையில் தேங்கிக்கிடக்கிறது
கானல் குழிகள்

எப்போதும் இப்படித்தான்...
மீனென நீந்த ஏங்கும் சாலையில்
ஒருபோதும் வருவதில்லை

நினைவில் தேக்கிய நிகழ்வுகள்

அது உன் மரணத்தின் பயணமெனத்தெரியும்

ஓர் ஆணின் ஓலமும்
ஒப்பாரியும் தெருவில்
கேட்பதில்லை கேட்டதில்லை

இப்படி ஆணுக்கு ஆண்
சொல்லிக்கொள்ளலாம்

உதிர்ந்தபின் பூக்களை
பூக்களென்று எப்படிச்சொல்வது
துரோகத்திற்கு பாலினமில்லை

ஒட்டகத்தின் சேமிப்புக்கிடங்கென
உனையடைத்து பயணிக்கிறேன்
துருவேறிய தண்டவாளத்தில்.

மழையின் ஈரத்தில் தொலைத்த 
சருகின் சரசரப்பு அமிழ்ந்து
விடுவிக்கிறது ஒவ்வொரு எட்டு நடையை

முன்னெச்சரிக்கையற்ற இப்பாதையில்
உனைக்கண்டால் என்ன?
எனைக்கண்டால் என்ன?

வேண்டுதலற்ற பிரார்த்தனையில்
கைக்கூப்பிய விரல்களுக்குள்
தற்காலிகமாய் அகப்பட்டு செத்தொழி

பட்டாம்பூச்சியாய்..

மழைக்கான வெக்கை ததும்பும் இரவில்
தூக்கம் வேண்டித்தோற்கும் நத்தையுடலில்
சுமையென எதைச்சொல்வதென்பது குழப்பம்

இருளுக்குப் பழகிப்போன இக்கண்களை
வைத்துக்கொண்டு என்ன செய்ய?
ஒட்டடைகள் தன்னைத்தானே வரைகிறது

முதுகின் பிசுபிசுப்பில் தரை வரையும்
நிர்வாண ஓவியங்கள்
கவிழ்ந்துப்படுத்தாலும் காண இயலாதவை

பின் மண்டையில் வெட்டுண்ட நாய்
காயத்தோடு அலைவதாய் ஓர் வாழ்வு
பூமியின் சுற்று மாறும் நாளொன்றில்

துளிர்க்க துளிர்க்க
பற்றியெரிவேன் மூங்கில் காடென
நீங்கள் இசைக்க மறந்த குறிப்போடு

வலியத்திணிக்கும் ஓணானின் 
அறியாமை கண்டு நடுங்குவதில்லை 
காத்திருந்த கண்ணிகள் 

பருவச்சூட்டிற்குத் துணையாகும் 
மழையின் இரைச்சலுக்கு
உணவில்லை தேகமெங்கும்

வேலிகள் எப்போதும்
வேலியாக மட்டும் இருந்துவிடுவதில்லை
மாறாக

ஓணானின் வாழ்விடம்போல்
அனுமதித்து வேடிக்கைப்பார்க்கிறது
சமிக்ஞை செய்யும் விலங்குகள் போல

தூரிகை காற்றில் மிதக்கிறது 
அல்லது மூழ்குகிறது-உன்
வளைவுகள் வரைகையில்

வலக்கரம் நழுவுகிறது 
இடக்கரம் கோதுகிறது
வானவில் பிறையாகிறது

மேகங்கள் உரசி உரசி
பொடி செய்து குழைத்த பூச்சு
தேக நிறமாகிறது

உனக்கான விடுமுறையில்
தாடையை முட்டுக்கொடுத்து
கால்நகம் அழகூட்ட துவங்கு

குதிங்காலுக்கும் விரலுக்குமான
பள்ளத்தாக்கில் நமக்கு
காமம் சமைக்கிறேன்

தடுத்துக்கொண்டே அனுமதி
எப்போதும் போல

நான்... நீ

Tuesday, February 24, 2015 | 0 comments »

மொழி தின்ற ஊமைப்படம் நீ
விழி தந்து காட்சியோட்டும் திரைத்துணி நான்

பாதைகளற்ற மழை நீர் நான்
தேக்கிக்கொள்ள அனுமதிக்கும்
தாகநீர் நீ

சமிக்ஞை அறிவிக்கும் மயில் நீ
நின்றாடும் மழை நான்

தவமிருக்கும் கூட்டுப்புழு நான்
சிறகளிக்கும் வரம் நீ

மடல் திறக்காத வாழை நீ
இளங்காலை ஜனிக்கும் பனித்துளி நான்

கால் பற்றும் கொலுசு நான்
எனைத்தாங்கும் கணுக்கால் நீ

அணையில் ததும்பும் நிலவு நீ
உனை சூழ்ந்த நாற்சுவர் நான்

ஏந்துகையில் மலராத மொட்டு நான்
சூடுகையில் இதழ்விரித்த பருவம் நீ

ஒளியில் நீந்தும் துகள்கள் நீ
இடையில் கைநீட்டும் சிறுபிள்ளை நான்

கடல் மணலில் வீடுகட்டும் விரல்கள் நீ
உனையெப்போதும் உரசிக்கொள்ளும் ஈரம் நான்

கொலைக்கான மனநிலை 
கிட்டியபின் தேர்ந்தெடுக்கும்
களமும் தலையும் ஆயுதமும்

தாவலுக்கான தவளையின்
அனுகுமுறையில் காத்திருக்கிறது
ஈரம் காயா மழைத்தரையில்

ஈசல்களின் வருகையில்
முடிவுக்கு வரும் நிலத்துக்காரனின்
தற்கொலைக்குறிப்பு

நீங்கள் எல்லாம் யூகிக்கும்
மொழிக்குள் அடங்காதவை
உச்சுக்கொட்டுங்கள்

மஞ்சள் விளக்கின் 
ஒளி வழியே 
உறுதிசெய்தாகிவிட்டது 
மழையின் அளவை

போர்வைக்குள்
சுருண்டு கிடப்பவளை
அள்ளியெடுத்து
சன்னலின் முன் நிறுத்தும்
நினைவுகள்...

நல்லவேளை அறையில்
நிலைக்கண்ணாடியில்லை

பற்றி எரிகிறது
உன் உடலின் சூடு
என் நிழல் விழும்
திசையெங்கும்...

எரிவதில்
எது நீ
எது நான்
மெழுகின்
கம்பீரம்
தரை படர்ந்த பின்?

பாவனைகள்
அறியமுடியா இரவில்
உள் சொருகும் உன்
கருவிழி வழித்துணை

வாசம் நுகரும்
அக்குளுக்கும்
பின்னங்கழுத்துக்கும்
நடுவே சுழல்கிறது
சுனை சுழி அருவி

பிரிவின் கணம்
எட்டுவதில்லை
கொக்கிகள்

போ என்று
திரும்பிக்கொள்வதும்
மணிக்கட்டு பற்றுவதும்
பசலை விதை விழும்
நிலம்

உந்தன் சமிக்ஞை
எந்தன் பயணத்தின்
நுழைவுச்சீட்டு

இயங்குதலில்
உயிர் எழுத்து காமம்
மெய் எழுத்து காதல்

கண்ணீர் உகுக்க
மறுக்கும் பிரிவில்
பற்தடப்பதிவு தோளில்

நீட்டிக்க விரும்பும்
சந்திப்பில் முந்துகிறது
நாணமும் கொஞ்சம் நாமும்

உடலின் கடலில்
கைகள் வழிகாட்டி
கண்கள் கலங்கரை

கைக்கெட்டும்
தூரம்தான் காது
உதடு உந்துகிறது
தாழ் திறக்க...

விழி பொத்தும்
விரலிடுக்கின் வழி
புருவம் தளிர்க்கும்
பருவக் காட்டில்

இனியெப்போதும் வேண்டாமென்று
ஞாபகத்தின் தீண்டலயாய் கன்னத்தை
ரேகைகள் கிழிக்குமளவிற்கு

தண்டவாளக்கரையோர நடையில்
எச்சிலெட்டா தூரத்திலிருக்கும்
உதட்டால் முத்தமிடுகிறாய்

முனுமுனுக்கும் சொல்லின்
அர்த்தம் வேண்டுவதாயில்லை
அவரவர் மனப்பாங்குகிற்கு

அகன்ற வழியில் சக்கரம் சுழலா
தண்டவாளத்துருவின் ஈர வாசம்
புற்கள் மிதிபடும் ஓசை

திரும்புதல் குறித்தான பிரக்ஞை
காட்டிக் கொடுப்பதாயில்லை
நம்பிக்கையின் உதிர் சிறகுகள்

இன்னும் இறகுகளாகத்தானிருக்கிறது

சரி
இப்படி வைத்துக்கொள்ளலாம்

தட்டான்கள் அமரும்
முள்வேலியில் நுழைக்கும்
விரல்களை உற்று நோக்கு

அதற்கு முன் கூர்மையாய்
ஒட்டாமல் கவனிக்கும்
இமை முடிகளை தரிசி

மூச்சின் ஓசை குறைத்து
நடுக்கமற்று முன்னேறும்
துணிச்சல் பாராட்டு

விரலின் பிசுபிசுப்புகள்
சிறகையடைந்ததும்
கொலைக்கான முயற்சியென

அறியாமல் அரங்கேறிவிடுகிறது
ஒரு கொலை அல்லது
ஒரு விபத்து

இப்போது நியாயப்படுத்து
உன்னை

சரணடைதல்

Tuesday, February 24, 2015 | 0 comments »

பனிக்கட்டித் துண்டுகள் மிதக்கும்
கோப்பையில் மதுவின் வர்ணம்
மலைத்தேன் நிறத்தை குடிக்கிறது

அது கரையக்கரைய

ஒரு மிடருக்குப்பிறகான
மேசையடையும் "டொக்" சத்தம்
குளியலரை தாள்ப்பாழ் காட்டுகிறது

சில்லிட்டு நனைய நனைய

நத்தையின் கூட்டினை
நினைவு படுத்துகிறது சுமையா
சுகமா என்றறியா காமத்தை

அக்குள் மணக்க மணக்க

தலைகீழாக பார்க்க விரும்பும்
மூளை மண்டியிடுகின்றது
எதெற்கென எவர்க்கென தெரியாமல்

மனம் வெதும்ப வெதும்ப

கட்டிலின் கால்கள் விரும்பா தேகம்
பாய் விரிக்கையில் நழுவிய
உச்சாடன சொற்கள

கன்னங்களின் பாலம் கண்ணீரானதில்
நெற்றி தொட்ட உலர்ந்த முத்தத்தில்
யானையளவு பசிக்கத்துவங்கியது

காட்சி விரிய விரிய

சரணடைதல் என்பது சிறையல்ல
என்று உறுதியாய் நம்பத்துவங்கிய
பின்னிரவில் முத்தம் துவங்கியது

பாதத்திலிருந்து

கேவல்கள் நிறைந்த பொழுதை
வாய் திறவாமல் கழிப்பதென்பதன்
துயரம் தெரியுமா உனக்கு?

உலையேறும் அரிசி
இறந்தவனின் படயலுக்கா
இலைபோட்டு காத்திருப்பவனுக்கா

பரிமாறுபவரின் கைகள் கூட
தீர்மானிக்க அனுமதியில்லை
கடமைக்கென நிகழும் விளையாட்டில்

விருட்டென கடக்கும் வாகனத்தில்
விழுந்திறக்கும் கருவேந்திய நாயாய்
கனவுகள் உடைக்கிறாய் எதிர்பாரது

சிதைவுகளின் பிசுபிசுப்பு
கூடி நிற்பவர்களுக்கு அனுதாபம்
எப்போதும் கரைந்த உனக்கு உணவு

முத்தம்

Tuesday, February 24, 2015 | 0 comments »

சந்தித்துத் திரும்பும் 
வேளையிலெல்லாம் 
சிடுசிடுவென விழும் 
உன் சொற்களை

நேரத்தின் ஆயுளை
நீட்டிக்கொள்ளமுடியாத
இயலாமையின் துயரென
குறித்து வைத்திருக்கிறேன்

நொடிக்குள் அத்தனைமுறை
திரும்பி திரும்பிப்பார்த்து
முக்குத் திருப்பத்தில்
உண்ணும் இதழில்

கண்கள் அகல விரித்து
வரவேற்கும் பேத்தியை
அள்ளிக்கொள்ளும் தாத்தாவிற்கு

கசிந்த கள்ளிப்பழமாய்
ஈரம் பாய்ந்திருக்கும்
தசைகள் இறுக்கிய கண்கள்

தென்னிய நரம்புகளில்
இரயிலோட்டும் விரல்களில்
பாம்படம் உருக்கிய மோதிரம்

"நல்லாவே இல்ல தாத்தா" என
பாட்டி பெயர் சொல்லி அழைப்பதை
நிராகரிக்கும் பேத்திக்கு

மனைவி மாடுமுட்டி இறந்த கதை
பேத்திக்கு சொல்ல வளரவில்லை
என்பதை தாத்தா அறியாமலில்லை

வெக்கம்திண்ண சிறுக்கி
கண்ணவச்சிருக்கா செதுக்கி
அச்சுவெல்லம் உருக்கி
சொல்லுக்குள்ள பதுக்கி

கண்ணுமுன்ன நிக்குறா
கண்ணுமுன்னு தெரியாம சொக்குறா

பொத்தி வச்ச இலவம்
கட்டிலுல வெடிக்கிறா நிதமும்
சக்கரமா சுத்துறா
சுக்குநூரா திரிக்கிறா

பத்தவச்சி எரியுறா
பக்குவமா சமையுறா
பந்திவச்சி உண்ணுறா
படயலாவும் மாறுறா

நர்த்தகியா ஆடுறா
வெள்ளாடு போல மேயுறா
என் தேகக் கூட்டுக்குள்ள
ஆவி போல சுத்துரா
ஆலிங்கனம் மீட்டுறா

வெக்கங்கட்ட சிறுக்கி
என் உசுர கொளுத்தி

இப்படியாக

Tuesday, February 24, 2015 | 0 comments »

அறையின் வெடிப்புகளில்
ஊறும் எறும்புகளின்
போராட்டத்தில் மேலெழும்

மணற் குவியலின் ஊடே
உணவிற்கான தேடலும்
கண்டெடுத்தலுக்கான தடயமும்

காட்சிகள் விழுங்கிக்கிடக்கும்
கண்களை கொத்துவதற்கான
மேற்கூரையற்ற நாற்சுவர்

வலிந்து வலியேற்றிய
துளியில் மண்டிக்கிடக்கிறது
கொலைக்கான காரணங்கள்

கட்டில் தவிர்
வட்டம் அடி
கூடல் கடல்

எடை தொலை
உடல் ஊன்று
மனதால் பற

சிந்தனை விழுங்கு
சீர் மற
வரையறை தகர்

போர் என நிகழ்த்து
ஆயுதம் கண்கள்
தோல்வி தழுவு

ஐம்பூதம் மறந்து
பஞ்சபூதம்
உடலில் காண்

வில்லென வளை
ஓடையென நெளி
அலையாய் இரு

மேகமென பினை
வானமென தொடர்
மழையென பொழி

வழி நடத்து
பாதை தொலை
இலக்கை சேர்

சுற்றம் மற
குற்றம் தேடாதே
விடை கண்டெடு

சைவம் படை
அசைவம் புசி
அர்த்தம் பிழை

நீ வருவதற்கான சாத்தியக்கூறுகளற்ற
பொழுதறிந்தும்
மேய்ப்பனின் மனதோடு தேடுகிறேன்

உன் சீசா ஆட்டத்தில் மேலும் கீழுமாய்
நான் மட்டுமே மாறிக்கொண்டிருப்பதை
அறியாமலில்லை நடுவில் நீ

ஓர் பேய் மழைக்குப்பின் மரச்சரிவில்
எஞ்சிய தேங்காய் பொறுக்கும் சிறுவனுக்கு
பறவைக்கூட்டின் நியாயம் தேவையில்லை

காத்திருப்பின் அசாத்தியத்திற்குப் பின்
ஒரு மென்சோக குரலும்
தப்பித்தலுக்குமான விழியும் போர்த்துவாய்

தெரியும்...

திரும்புதல் குறித்த சமிக்ஞையின்றி
முன்னேறும் தடயங்களற்ற
காய் நகர்த்தல்கள் உன் பலம்

பழக்கப்படுத்திக்கொண்ட ஓர்
வேட்டை நாயின் மோப்பமாய்
என்னையறிந்திருப்பதும் உன் பலம்

முன்னெப்போதுமற்ற உன்
கேவல்களின் ஓசை
விடுவித்தலுக்கான அழைப்பு

அதுவும் தெரியும்...

புண் துளைக்கும் புழுக்கள்
கண்ணில் தட்டுப்படுவதில்லை
அப்படியே நீயும்

ஊனத்தின் பாத்திரமறிந்து
பிச்சையிட எத்தனிக்கிறாய்
கருணையின் சாயலோடு

காரி உமிழ்வதற்கான எச்சிலை
தக்கவைத்துக்கொண்ட உன்
காதலை நாய்க்கு அறுத்தெரி

இத்தனையும் தெரிந்தபின்
உன்னை சபித்துக்கொண்டிருப்பதில்
யாதொரு நியாயமுமில்லை

செத்தொழி

உனக்கும் எனக்குமான பகடையாட்டத்தில்
மீண்டும் மீண்டும் காய் உருட்டுவதற்கான
வாய்ப்புகளை வழங்கிக்கொண்டேயிருக்கிறாய்

சர்பங்களின் கூடறிந்தவளாய் அல்லது
சர்பங்களை நீயே நிறுவியது போலவும்
மிக நெருக்கத்தில் விட்டு மீட்கிறாய்

என் இதயத்தசை சிக்கிய உந்தன்
கடவாய் பற்களின் துணுக்கெடுக்க-என்
விலா எலும்புகளையே பயன்படுத்துகிறாய்

உன்னைக் கேள்வி கேட்கும் நாளில்
ஊசிக்கம்பில் பூசைக்கு நுழைத்த சேவலின்
குருதி வழிவதுபோல நம்பிக்கையாய்

கேள்விகளின் மீதும் நம்பிக்கையின் மீதும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்
வாழ்தல் உனக்கென தீர்மானிக்கும் வரை

பசி தீர்ந்த ப்ரிதொரு நாளில்
உன் அசாத்திய சொற் கட்டுகளை
அதன் இணைப்பின் சுவடு தெரியாமல்

உனக்கான வாசலை வடிவமைத்து
என் சன்னலடைக்கிறாய் மீண்டும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்

மன்றாட்டுகளில் அடங்காத கடவுளின்
மனம் கொண்ட உன் பலிபீடத்தில்
இப்போது இரண்டாவது ஆடு

இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும்-இனி
உன் பலிபீடம் மேய்ச்சல் நிலமாகட்டும்
என் கண்ணீரில் முளைத்த புற்களால்

எதற்கும் தயாராய் இரு

என் மாமிசச்சுவையின் பின்புலம்
தெரியவரும் நாளொன்றில் மேய்ச்சல் ஆடு
நரியின் விழியோடு துரத்தலாம்

அங்கே ஒரு யுத்தம் தொடங்கும் வீடு தப்பி
காட்டுப்பூனையாகியிருக்கும் உனக்கும்
எதுவறியாமல் விழித்துக்கொண்ட நரிக்கும்

உன் ஓடுகால்கள் இளைப்பாற
முட்டிற்கு கைகொடுத்து குனியுமிடத்தில்
ஒழுகும் எச்சிலின் துளி விழாது பார்த்துக்கொள்

என் கல்லறையின் பசுமை கெடாதிருக்கட்டும்
எனதருமை துரோகத்தின் துவக்கமே
உனக்கான கடைசி உயிர் உடலற்று துயில்கிறது..

வீழ்த்தப்படும் புதைகுழி
மூடியச் சருகில் நீ
எப்படி மலர்ந்தாய்
வாடாத மலராய்?

உன் சாதுர்யம்
கற்கும் நாளில்
செத்தொழியென வாழ்த்தி
செத்துப்போவேன்

நீ எப்போதும் போல
மகளுக்கான வாஞ்சையோடும்
காதலிக்கான காமத்தோடும்
கண்ணீர் உதிர்த்து,

அகால மரணம்
சுவரொட்டி மேயும்
கருப்பு நிற ஆட்டின்
சிரத்தையோடு...

பின் ஞாபகார்த்தமாக
கழுத்தறுத்தலில்
மிஞ்சிய குருதியில்
தேகம் குளி

நீயும் உன் துணையுமாய்

ஜோக்கர்

Tuesday, February 24, 2015 | 0 comments »

பதின்மூன்று அட்டைகளையும்
நான்கு வகைப்பூக்களையும்
ஒரேயொரு பொம்மையோடும்

இருவிரல் பிடிக்குள் விரிந்திருக்கிறது
கவிழ்த்துவதற்கான அந்த ஓர்
கடவுச சீட்டு எதுவென்று அறிய

சுற்றுக்கு ஏறும் இருப்பும் விடுவித்தலும்
மாறி மாறி நிகழும் பைத்தியத்தின்
மனநிலையில் வந்தமர்கிறது ரம்மி

துணை சேர்ப்பதன் நிமித்தம்
கடைக்கண் ஜோக்கர் நிமிர்த்துகையில்
யாதொரு பாவனையுமின்றி

பதின்மூன்றில் உருட்ட வேண்டியிருக்கிறது
எதிராளிகள் கண் தப்பியபடி
சலமற்ற என் விழியாய்

மலர்த்திய அட்டைகளில் எத்தனை
ஜோக்கர்கள் வீழ்ந்திருக்கிறதென்று
அடையாளம் கண்டுணர்ந்து

மீண்டும் ஒருமுறை
உறுதி செய்யும் ஜோக்கரில்
ரம்மி கலைவதை மனம்

முன்னமே இருபது புள்ளிகளோடு
கவிழ்த்தவன் பார்க்கையில்
பிரித்தடுக்கத்துவங்குகிறது மூளை

கழிக்கும் அட்டையை போடச்சொல்லும்
எதிர் குரலுக்குப்பின்
நீர் வட்டமாய் வெளியேறுகிறது கனவுகள்

எதனூடாவது பொறுத்திக்கொள்ளலாமென்று
ஒதுக்கிய பொம்மைப்படம் மெதுமெதுவாய்
ஏந்தியவன் முகமென மாறத்துவங்குகிறது

காதல் முறிவுக்குப்பின்
வாழ்வா சாவா என்று முற்றிய
மன நிலையைப் போல

அந்தரத்தில் உருளும் விழிகளை
நீர்குமிழ் உடைக்கும் குழந்தையாய் 
துரத்திக்கொண்டிருக்கிறாய்

குத்தூசி கொடுத்து குமிழுடையென்றால்
அதில் எழும் துயரம் பரிதவிப்பு
அத்தனையழகென ரசிக்கிறாய்

நீ எதிர்கொள்ள முடியாதென
அறிவித்த எந்தன் கருவிழியை
பதியம் வைத்த ரோஜாவிற்கு தருகிறேன்

உயிர்பறி-அல்லது
காரி உமிழ்ந்திடு
நினைவுகள் முடிச்சிட அலைகிறது

கனவின் நீரோடைக்கான 
தடுப்பாகவும் திறப்பாகவும் 
தாங்கி நிற்கும் கதவின்

பிடிவாதமாய் தேக்கியிருக்கும்
உன் சார்பு கொண்ட
பொய்களின் சாவியும்

மெய் பொருந்தா
நினைவுகளின் கதவடைத்து
உண்மையின் ரகசியத்தையும்

தனியொரு பரிசலில்
நீரின் இழுப்பிற்கு
ஒத்திசைத்து அனுப்பியிருக்கிறாய்

பின்பு
கரையொதுங்கிய சடலத்தில்
மன்னிப்பின் ஒப்பாரி வைக்கிறாய்

பிரார்த்தனைகளின் கசிவில்
தொட அனுமதித்த தீட்டின்
குருதி வாசனை

விடுபடுதல்

Saturday, February 21, 2015 | 0 comments »

ஓங்கிச் சாத்துதலில்
சந்திக்க நேரிடும்
கதவின் அதிர்வை
முதுகு காட்டி கேட்கிறேன்

திரும்பிச்செல்ல
தயாரானதன் அடையாளம் அது

யாதொரு அச்சமற்ற சூழலை
முகத்தில் உண்டாக்கியது போக
அதிரும் விரல் நக இடுக்குகளை

தென்படும் கண்களெல்லாம்
கொண்டாட்டத்துடன்
துளைப்பதாய் இருக்கிறது

கொலைக்கான தூண்டுதலும்
தற்கொலைக்கான தவமும்
கலையும் தருவாயில்

உன் மார்பு போல் 
அடைக்கலமாய் எதுவுமில்லை
வீறிடத்துடிக்கும் உதடுகளுக்கு

?????

Saturday, February 21, 2015 | 0 comments »

நீ தைரியமாக பரிசளித்த
உன் ஆதிக்கால திமிரை
கர்வம் கொண்ட காதலை

மண் பானையினடியில் 
சுருண்ட சர்பம் போல
ஏன் பதுக்கியிருக்கிறாய்?

உன் கோப்பைக்கான குரல்
சிதறிவிட்டதென்றா?

உன் பழத்திற்கான கைகள்
தடம் அற்றுவிட்டதென்றா?

உன் உணர்வுக்கான நிழல்
தொலைந்து விட்டதென்றா?

கைக்குள் பொதிந்து போகும்
நறுமணம் மாறிவிட்டதென்றா?

உன்னை உனதாய்
காட்டிக்கொள்ள இருந்த
ஒரே உயிர்

தற்கொலை செய்துகொண்டது என்றா?
அல்லது
கொலை செய்யப்பட்டது என்றா?

...........

Saturday, February 21, 2015 | 0 comments »

உனது பலிபீடத்தில்
சந்தன சுத்தத்திற்குப் பின்
குருதியின் உறைநிலையை

சிதறவிடாமல் தக்கவைத்த 
மூளையின் அடுக்குகளில்
கொழுவும் முட்கள் கோர்

சடலம் புதைப்பதற்கு
பாதத்துணையில் அளக்கும்
தோண்டுபவனின் நம்பிக்கையாய்

சொற்களால் வலுவேற்று
இன்னமும் என்ன இருக்கிறது
தாய் தலையறுத்து கரு சிதைந்த பின்?

சமிக்ஞை

Saturday, February 21, 2015 | 0 comments »

புன்னகைக்கான ஒத்திகைகள் 
தொட்டிலாடும் குழந்தையின் 
கண் மூடலுக்கான நிமிடங்களாய் 

பொய்களின் புரவியேற்றி
கண்ணாடியில் காணுகிறேன்
விரல்கள் நடுங்கத்துவங்குகின்றன

முதுகை ஒடுக்கிக்கொடுக்கும்
ஊக்கு அவிழ்தலுக்குப்பின்
கிட்டிவிடும் அனுமதியாய்

கைவிடுதலுக்கென ஓர்
சமிக்ஞை செய்
இரவில் இருள் இல்லை

நழுவுதல்

Saturday, February 21, 2015 | 0 comments »

மிச்சமிருப்பதாய் எதற்கும்
மீண்டும் ஒருமுறையென
கவிழ்த்துப்பார்க்கிறேன்

கறையிலிருந்து தப்பிவிட்டதாய்
ஒருமுறையும்
சொட்டுகள் ஏதுமில்லைல்லையென
ஒருமுறையும் சொல்லியாயிற்று

நீ எலும்பு புடைக்கப் புடைக்க
குடித்த தேநீர் கோப்பையின்
கைப்பிடி போலிருக்கிறது

இறுகுதல் போலொரு
பாவனையின்
நழுவுதல்

.........

Saturday, February 21, 2015 | 0 comments »

மத்தியான ஓட்டு வெய்யிலில்
கால் கூட்டி அமரும்
முதியவரின் கண் இடுக்குகளில்

நரை பூத்த மீசையும்
சிமெண்ட் பூச்சிக்கு முந்தய
செங்கலின் ஈரமும்
 

இருள் கிழித்தேறும் குரலில்
கொடுக்கின் சுரபியாய்
மாற்றிக்கொண்டிருக்கிறாய்

இட்டு நிரப்புவதற்கான
கோப்பையாய் இல்லாதிருந்த
எனதுன் கனவுகளை

அழுகையை ஓலங்களாக்க
பொழும் முயற்சிக்கும்
மதில் சரிந்த மனதை

நீலநிற கோலிகுண்டைப் போல
சுண்டி அடிக்கிறாய்
சில்லுகளாய் கருவிழிகள்

உன்னை விடுவித்துக்கொண்டு 
காலத்திடம் ஒப்படைக்கும் 
உன் அறியாமைக்கு 

இன்னும் என்னென்ன 
பெயர் வைக்கலாம் என்று 
உயிர்க்கிளி திறக்கிறேன்

புகைப்படமெனக்கிடந்த நிகழ்வுகள்
தவளையென பேசுகிறது
கனுக்கால் நரம்புறுவி

எனை நோக்கி ஊரும் பாதையில்
பற்தடங்களின் சுவடுகள்
உச்சச் சுவையில் கடல்கள்

அதற்கு முன்னதாக நடந்தது
என்னவென்று தெரியாது

இடைகளும் முன்னழகும் தேடும்
இருக்கையின் கண்களும் 

கை வைப்பதற்கும் உரசுவதற்கும்
சமயம் பார்க்கும் உருவங்களும்

எதன் பொருட்டும் எதையும்
கனவு காணக்கூடாத கண்களும்

கூடவே தொற்றிக்கொள்ளும்
வேடிக்கை மனிதர்களோடும்

மஞ்சள் விளக்கின் ஊடே
ரதமென நகரும் பேருந்தில்

சந்தனம் பூசிய கன்னங்களோடும்
சூடிய பூக்கள் சூடியபடியே

பூட்டிய வளையல்கள் களையாமலும்
சன்னலோர இருக்கை பிடித்துக் கொடுத்திருக்கிறாள்

தன் மகளை
சூல் அழைத்து வரும் தாய்

சொற்கள்

Saturday, February 21, 2015 | 0 comments »

விலா எலும்புகளின்
இடுக்குகளில் குடியேறியிருக்கிறது
பிடுங்கி எறிய விரும்பும் சொற்கள்

வறுமை தேசத்து குழந்தையிடம் 
புடைத்துப் பிளுருவதை எனக்குள்
ஆடை அகற்றி தேடுகிறேன்

அகப்படுதலுக்கும் நழுவுதலுக்குமான
இடைவெளியென்பது காதெட்டாமல்
மேல் பொத்தானற்ற குழந்தை

தாயின் கைப்பற்ற மனமின்றி
வீடு திரும்புதலை போல
யுகம் யுகமாய் நடந்துகொண்டிருக்கிறேன்

நினைவுகள் என்பது
நிமிடங்களின் அளவீடல்ல
உணர்வுகளின் சுழி

மதில்

Saturday, February 21, 2015 | 0 comments »

பதட்டத்தைக் காட்டிக்கொடுக்கும்
கை உதறல்களையும் 
வார்த்தை உடைதலையும் 

மணல் பதித்து வைத்த 
மண் பானையில்
நீரென ஊற்றுகிறேன்

கொலைக்கான காரணங்கள்
கேட்க மறுக்கும்
இடது பக்க மூளையை

கயிற்றின் முன்னிறுத்தி
தைரியத்திற்காக காத்திருக்கிறேன்
வாழ்ந்துகெட்ட முதியவனைப்போல

திறந்து வைத்த சன்னல் வழி
அறையெங்கும் அலறுகிறது
உச்சத்தின் முனகல்கள்

நாவின் ஒப்பந்தம் பிறழ்ந்த
கோடைக்கால உச்சியில்
பால் தப்பிய குழந்தையாய்

மெதுமெதுவாய் குரலேற்றி
சோழியின் உருட்டல்களாய்
வழிய விடுகிறாய் கண்ணீரை

தீர்மானித்து வைத்திருந்த
சொற்களை பாசியின் நழுவலாய்
செவி பாய்த்ததும்

தலைகீழ் கட்டி உரிக்கும்
ஆட்டின் தோலாய்
சரசரவென வெளியேறுகிறாய்

நம்பிக்கையின் உயிர் பறித்து

பாதத்தின் மென்மை
எப்போதும் உன்னை
மடியிலேயே கிடத்தச்செய்தது

நாணல் போலெறும்
மீசை வளைவுகளும்
குழையும் அழகும்

இளம் சூட்டோடு
நள்ளிரவில் தொடரும்
மிருதுவான உறுமல்களும்

ஒருபோதும்
அனுமதிக்கவில்லை
உனை சந்தேகிக்க

மரப்பட்டையில் நகம் புதைத்து
வேட்டையாடும்
இரவின் கண்கள் உனதென்ற நாளில்

பூனை வீடு கடந்திருந்தது

இருந்தும் இல்லாமலிருக்கும் 
வேளையில்
நிகழும் தேடலில் 
நீயெனக்கு மெளனத்திருவிழா

நுரை ததும்பத் ததும்ப
கடலைக் குடிக்கிறது
நான்கு கண்களின்
மூன்று பார்வை...

விரலிறங்கும் வரை
மணலில் ஆழம் பதிக்கும்
பின் மாலையில்
மஞ்சள் பூ விரிகிறது கடலிலும் கண்களிலும்

ஒரு கணிப்பில்
பாதத்தடம் தொடர்வது அறிந்து
எட்டுக்களை எட்டி வைக்கையில்
போதுமென கைசேர்கிறாய்
காதல் கடலில்

ஒரு பக்கம் நீ
மறுபக்கம் நான் என
கடிபடும் சோளத்தில்
நடுபக்கத்தில் மோதிக்கொள்கிறது
கன்னங்கள்

துணைக்கு சற்று கீழிறங்கியமர்ந்து
விரலிடுக்குகளின்
மணல் உதிர்த்து
கடலுக்கு செவிகொடுத்து
மொழிக்காக காத்திருப்பதும்
காதலே

உப்புக்காற்றின் பிசுபிசுப்பை
கைக்குட்டையிலும் துப்பட்டாவிலும் பதிந்து
இரவில் காட்சியோட்டுகிறது
காதல்

கிளம்பிவிடலாமென எத்தனித்து-பின்
நகரும் முட்களின்
வேகம் பொறுக்காமல்
கடிகாரம் மறப்பதும்
காதலே

கையை மட்டும் பிடித்துக் கொள்ள
அனுமதித்த மனது
திரும்புகையில்
தோளில் சாய்ந்து கொள்கிறது

காற்றிலாடும் திரைச் சீலையை ஒதுக்கிவிட்டு
நிலா ஒளியை முதுகில் கிடத்தி
துணையை ரசித்திருப்பதும்
காதலே

இரைச்சல்கள்

Saturday, February 21, 2015 | 0 comments »

அவிழ்ந்து விடக்கூடாதென
அரைஞாண் கொடியிடையில்
பின்னியிருக்கும் கால்சட்டையும்

பூட்டப்படாத முதல் பொத்தானின்
இடப்பக்கத்தை ஏந்தி ஏந்தி
ஒழுகும் மூக்கு துடைத்து ஓடும்

ஓர் மாலைநேர பள்ளிமுடிவில்
தட்டான்கள் பறக்க போட்டிபோடும்
புழுதி பறக்கும் சாலையை

முகவரி தொலைத்துத் தேடுகிறார்
புதுக்காரின் மேனுவலில்
சில்றென் லாக் வழியே...

ஊடாட்டம்

Saturday, February 21, 2015 | 0 comments »

கொழுவு ஈட்டி கிழிக்கும்
பாம்பின் தசையில் உண்ட
மாமிசங்களின் அடையாளமில்லை

அரச இலைகள் சரசரக்கும்
மேக்காற்றில் எளிதாய்
இரவுகள் தீர்வதில்லை

ஈசல்களின் வருகைக்கு
மழையும் மழை நிற்பதும்
தேவையாய் இருக்கிறது

உள் ஒளித்து வெளிக்கொணரும்
சந்திப்பதற்கான சொற்களின்
தாய உருட்டதலாய்...

உன் பல் நெறிப்புகளின் அழகை
பூனையின் அழுகுரலில் ஏற்றி
காற்றில் பறக்கவிட்டிருக்கிறேன்

அந்தரங்கள் அவிழும்
நரம்புகளின் ஊடாட்ட தசையறுத்து
தரையிறங்க கால் ஊட்டுகிறேன்

ஒற்றைக்கால் கொக்குகளென
காத்திருப்பதை
காட்டிக்கொள்வதில்லை கழுகு

சம்பிரதாய புன்னகை எப்படியிருக்குமென
ஒத்திகை முடிந்தபின்
மறந்துவிட்ட ஸ்டிக்கர் பொட்டு வைத்தாயிற்று

வரப்போரம் மடிந்துகிடக்கும் கதிர்களில்
மிதிபடாமல் இருக்க தூக்கிச்செல்கையில்
மூக்குப்பொடி வாசனை எட்டிவிட்டது

நாட்கணக்கை தெரிந்து வைத்திருந்த
மூளையை உறிஞ்சி எடுக்க
இடமளிப்பதாய் இல்லை மூச்சு

எதிர் வீட்டில் அணைந்த
சன்னல் வெளிச்சம் உதட்டை
நனைக்க வைத்தது, நனைந்தது

போக்கிடமற்றவர்களை அனுமதிக்கும்
ஊர் கல்லும் திண்ணையும்0
குளிர்சியாய் இருந்தது

வேண்டுதல்

Saturday, February 21, 2015 | 0 comments »

நீ கைப்பிடித்து
பள்ளிக் குழந்தையை
சாலை கடத்திவிடும்
நிமிடங்களில் பெறும்
அந்தக்கதகதப்பில்
கன்னம் பதிக்க வேண்டும்
ஓரிரவு

தாய் கைப்பற்றி
வீதி நடக்கும் குழந்தையின்
தலையலசி உதிர்க்கும்
உந்தன் புன்னகையை
கோர்க்கவேண்டும்
பட்டாம்பூச்சி இறகில்...

நீர்க் குமிழ்கள்
உடைத்து விளையாடும்
பூங்காவோர சாலையில்
பார்வையை கடத்துகிறது
குமரி உன் குழந்தமை

மேலேறியிறங்கும்
சீசா பல்லக்கின் நடுவே
வாலிபத்தை அமர்த்தி
குதுகலிக்கிறாய்
பருவம் எட்டா சிறுமியாய்

கடைசி முறையென
அடம்பிடித்து ஏறும்
ராட்டினத்தின் மகிழ்வை
வீதியெங்கும் கூட்டிவருகிறாய்
ரதமாய் நீ அதன் அமர்வாய்

அடம்பிடித்து வாங்கும்
இதய வடிவ பலூனின்
முனை கட்டும்போது
ஒருமுறை நீயும் அடுத்து
என்னையும் ஊதவைக்கிறாய்

சத்தம் கேட்காமல்
உறிஞ்ச முயன்று தோற்கும்
குல்பி ஐஸ்-ஐ மெதுவாய்
கடிக்கத்துவங்குகிறாய்
காதுமடல் போல

மங்கலான விளக்கொளியில்
இருக்கை எதிரிலா அருகிலா
முடிவற்று வீட்டிற்கு வாங்குகிறாய்
மடியில் அமர

வீடருகே வந்ததும்
இளைப்பாறுதல் என
தோள் பற்றத்துவங்குகிறாய்
மோகத்தை கடத்தி

காய்ந்த துணி படுக்கையில்
மடிக்க வேண்டுமென்று
நழுவுகிறாய் விளக்கணைத்து

இணையாக துணையாக
என் கைப்பிடியிலும்
கண் பிடியிலும் வேண்டும்

என் அறையின் தாழ்ப்பாளாகவும்
என் வீட்டின் திறப்பானாகவும்
நீ வேண்டும்

தும்மலின் நெடி
நீயாக வேண்டும்
என் உயிரின் கொடி
உனதாக வேண்டும்

நெஞ்சத்தின் ஆளுமை
நீயாக வேண்டும்
வாழ்வின் மிச்சத்தை நீ
முழுமையாக்க வேண்டும்

கொஞ்சத்தின் கொஞ்சமே
கோபமுற வேண்டும் அதுவும்
மஞ்சத்தில் தீர்ந்து போக வேண்டும்

தூக்கம் கலைதலும்
நீயாக வேண்டும்
துயில் நிகழ்வதும்
உன்னால் ஆக வேண்டும்

பெரும் சோகத்தில்
காமுற வேண்டும்
கடும் கோபத்தில்
தந்தையாக வேண்டும்

கொஞ்சலில்
தாயாக வேண்டும்
கெஞ்சலில் மகள்போல்
ஒரு பார்வை வேண்டும்

பொழுது கழிவது
உன்னுடன் வேண்டும்
பொழுது புலர்வது
உன்னுடல் வேண்டும்

சமையலறை நீ
ஆள வேண்டும்
சமஞ்சகொடி எனை
நீ சூழ வேண்டும்

காத்திருத்தலில்
அம்மாவாக வேண்டும்
கண்டதும் கட்டியணைத்தலில்
மகளாக வேண்டும்

உன் மடி
என் இரண்டாம்
தொட்டிலாக வேண்டும்

பசித்த பொழுதில் 
பாதையெங்கும் நாசியில் நுழைந்த
அந்த புளியோதரை வாசனைப்போல

எங்கேனும் மரணத்தின் வீச்சை
நாசி கண்டடைந்துவிடாதா
என்றொரு நப்பாசை

கரிசல் மணலின் மயிலாட்டத்தில்
உதிர்ந்த மயிலிறகு ஒன்று
நாட்குறிப்பினுள் இருந்து கொண்டு

நரம்புகளை உருவுவதற்கு
ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோற்கத் தோற்க

ஒரு பார்வையில் கிழித்தெரியும்
அளவிற்கான தோலின்றி வாழ்வது
சிரமமாய் இருக்கிறது எனக்கு.

கனவுகளறுத்து விளையாடும்
அன்றையப் பொழுதினை
சபித்துக்கொள்ளும் படி

இரவுகள் அத்தனை
இதமானதாய் இருப்பதில்லை
எல்லா காலங்களிலும்

பின்னங்கால்கள் உடைந்து
இழுத்துச் செல்லும் நாயைப்போல்
உடல் சுமந்து அலைகிறேன்

உயிர் என்பது எண்ணிக்கையிலல்ல
முதலில்-அது
என்னுடலிலிருந்தே நிகழட்டும்

கைக்கெட்டும் தூரத்தில்
கைத்தொடாமல் 

இமைதட்டும் வேகத்தில்
விழிமறைக்காமல்

உலர் உதட்டின்
ஈரம் தெறிக்காமல்

வார்த்தைகளின்
வேகம் புரியாமல்

மெளனத்தின்
அர்த்தம் திணறாமல்

அசைவுகளில் ஆடை
சரிசெய்து கொள்ளாமல்

இசைவுகளில்
அங்கம் ரசிக்காமல்

இந்த நிறமற்றக் கனவில்
அப்படி என்ன பேசுகிறேன்

நிழல்போல நீண்டுக்கிடக்கும்
உன்னோடு?

பூத்துவாலையோடு இணைத்துக்கட்டிய
ஈரக்கூந்தல்

பின்னங்கழுத்தில் வழிந்துகொண்டிருக்கும்
நீர்த்துளிகள்

பளிச்சென காட்டிக்கொடுக்கும்
முதுகில் ஒட்டிய பூனைமுடிகள்

தாவணியையும் ரவிக்கையையும் நனைக்கும்
ஆற்றில் துவைத்துமுடித்த துணிகள்

சிற்றிடையில் நழுவி நழுவி
மேலேறும் குடம்

இடுப்பில் எடுத்துச்சொருகிய
பூப்போட்ட பாவாடை

கணுக்காலில் பூட்டாகிக்கிடக்கும்
கொலுசு

வெண்பாதம் சிவக்க சிவக்க நடக்கும்
வயக்காட்டு வரப்பு

வாழைத்தோப்பு மறைவில் நின்று
பயமுறுத்தும் காதலன்

குடத்தின் கழுத்திலிருந்து உள்ளங்கை
நீரேந்தி முகத்திலெறிந்து விரையும் காதலி

நினைவுகள்

Saturday, February 21, 2015 | 0 comments »

நினைவுகள் குடித்து
தேயும் இரவில்
அடையாளம் தெரிவதில்லை
தவிப்பும் தேடலும்
அவரவர்க்கு

உரையாடல்கள்
கழுத்தறுப்பதாய் உணர்ந்த
நாளொன்றில் உடுத்திய மெளனம்
புறக்கணிப்பாய்
பிரகணப்படுத்தியது காலத்தின்
திருவிளையாடல்

இன்னும் உறுதிப்படுத்த
என்ன இருக்கிறது
மிச்சமிருக்கும்
நம்பிக்கையைத்தவிர

குரலறுத்து விளையாடும்
சொல் விளையாட்டில்
கண்ணீர் சுவையை
நம்புவதில்லை செவிகள்

சொற்களின் காயங்கள்
தேக்கங்களாகவும்
மெளனத்தின் காயங்கள்
காலம் காலமாகவும்

பிடிவாதம் பிடிமானத்தை
சோதிக்கலாம்
பிசையும் நெஞ்சை
சரிசெய்துவிடாது

சோதனைக்கூடத்தில்
எலியாகலாம் தான்
வெற்றியில்
கைகோர்ப்பது யாரோடு?

கடந்து செல்லும்படி
வைக்கவில்லை
உன்னை நானும்
என்னை நீயும்

மெளனமும் உரையாடலும்
தீர்வில்லை என்றானபின்
காயங்கள் ஆற்றுமா
காயத்தை

கிழித்துக்காட்ட
நம்பிக்கை ஒன்றும் தசையில்லை
உணர்வுகளின் தவம்

பேசத்தெரியாத நாக்கு
பாசமில்லாத குரல்
அக்கரை இல்லாத போக்கு

கை நடுக்கமிடும் வேளையில்
சிந்தனை முனைமுறித்து
மழுங்கச்செய் காலமே

செயலுக்கு லாயக்கற்றவன்
என்றானபின் இந்தக்காதலை
எழுதி என்னவாகப்போகிறது

( )

Saturday, February 21, 2015 | 0 comments »

பெருத்த பசியோடு சாலையில்
கை நீட்டிட வேண்டும்-யாரும்
பசியாற்றாது கடந்துவிட்ட பிறகு

கொஞ்சம் வெடித்து அழ வேண்டும்
அது வரை பொறுத்திரு!

பேசியது நீ
கேட்டவன் நான்
என்ற முறையில் கேட்கிறேன்

உந்தன் பிடிவாதத்திலிருந்து
நீ வெளிவரும் கால அளவை
எனக்கும் நிர்ணயிக்காதே

மடிசூடு

Saturday, February 21, 2015 | 0 comments »

பால்வடிந்த
உதடு

தாய்மை புகட்டுகையில்
சுடும் காற்று

மாராப்பு பற்றிக்கொள்ளும்
விரல்கள்

மடியில் நீந்தும்
கால்கள்

கைகளில் தவழும்
உடல்

தந்தைக்கு
காட்சியாக

தாய்க்கு
மூச்சாக

வலி இன்னதென உணரமுடியாது
தகிக்கும் பொழுதில்
வேக வேகமாய் வெளியேற

தொலைவிலிருந்து கிழவி ஒருத்தி
ஓட்டைவிழுந்த பானையில்
நீரெடுத்து வருவது போல விரைகிறேன்

ஆறுதலின்றி அலைகிறது
பொட்டலில் விழுந்த
துளிகள்...

செத்துவிடலாம்
கொலைப்பழி ஏற்கத்தான்
யாருமில்லை-ஏன்
நானும்கூட...

மரணத்தின் ருசியறிய
ஆசைப்பட்டு
தற்கொலையின் பசிக்கு
உணவாக ஆசைப்பட்டு
அனுபவிக்கமுடியாதென
உணர்ந்த நாளொன்றில்
நடைபிணமாய்
வாழத்துவங்கினேன்
புன்னகையின் பாதையில்!

அருகாமையே
தீர்வென்றானபின்
சொற்களெதற்கு?
காலத்தை வளைத்து
முடிச்சிடு...

பால்வடிய பெயர் கிழித்த
கள்ளிச்செடியின் முட்களுக்குள்
படுக்கையமைத்து
பால்யம் தேடுகிறேன்

இருந்தாய்
இருக்கிறாய்
இருப்பாய்
இப்போதைக்கு
இளைப்பாரிக்கொள்கிறேன்
இக்கவிதையில்

மனமும் மெளனமும்
நிகழ்த்தும்
கூட்டுவிளையாட்டில்
பொய் சொல்லிப்பழகுகிறது
உதடுகள்!

நெடிய கோடையில்
நீண்ட நடையில்
பாளம் பாளமாய்
பிளந்து கிடக்கும்
மணல்வெடிப்பின்
இடுக்குகள் வழியே
தொலையவேண்டும்

நீர் அரித்து
மினுக்கும் மதியவேளை
ஆற்றுமணல் கொண்டு
மூடமறுக்கும்
விழியின் கதவை
தாழிட வேண்டும்

இரவு
எனக்கொரு பொதி
விடிய விடிய
சுமக்கிறேன்

எழுத்தாணி
துணை நில்லாது போகும்
இரவில் துயரத்தை
வழியவிடு விழிவழியே

காலம்

Saturday, February 21, 2015 | 0 comments »

தன்னை நாய் என
எண்ணியிருந்தான்
அவன்

இல்லை இல்லை நீ
தேங்காய் என்றது
காதல்

அட மடையா
நாயும் தேங்காயும்
நீதானென்றது காலம்

வீணையின் நரம்பு
அறுபடுகையில் எழும்
மென்னதிர்வாய்-உன்
நினைவுகள்

தடங்களற்ற பாதையில்
தடம் பதித்து நீளும்
ஒரு பொழுதில்
எங்கேனும் மறையக்கூடும்
உனை சுமக்கும் நான்

அலையின் மணலரிப்பாய்
உள்ளிருந்து உள்ளிழுக்கிறாய்
என்னை

பறப்பதற்கான சிறகுகள்
காட்டுகிறாய்
வானமெனம் ஓடிட்டு

நரம்பினைக்கொண்டு
என்னை எனக்கே
முள் வேலியாக்கியிருக்கிறாய்
உன் ஒத்திசைவுக்கு ஏற்றார்போல

என் அலங்காரங்கள்
உன்னை பிரதிபலிக்கிறது
முகபாவனை
என்னைக்கண்டு
பல்லிளிக்கிறது

சுயமென
மெளனம் காக்கிறேன்
இருளென
பற்றவைக்கிறாய்

துணையென எண்ணி
இணையாய் படறுகிறேன்
வேலிக்கொடியென
கத்தரிக்கிறாய்

எனது படிக்கட்டுகளை
தீர்மானித்து நிற்கிறேன்
இயக்கத்தை நீ
எடுத்துக்கொள்கிறாய்

கரையொதுங்கிய
கடல் சிப்பிகளை
மடி சேர்க்கும் சிறுமியாய்
குதுகலிக்கிறேன்
குப்பையென கையுதறுகிறாய்

உன் பயணமெங்கும்
உடனழைக்கிறாய்
ரெக்கைகளை நீ அசைத்து
கூண்டிற்குள் எனையிருத்தி

நிலைக்கண்ணாடி எனில்
பாதரசமாகிறாய்
கண்ணாடிக்கோப்பையெனில்
எதிர் துருவம் அமர்கிறாய்

குழாயிலிருந்து
பீறிடும் நீராய்
உமிழ நினைக்கிறேன்
உச்சந்தலையில்
பெண்மை ஆணியடிக்கிறாய்

காத்திருப்புகள்
புறக்கணிப்பாகும் நாளில்
விடுதலைக்குத்துணிகிறேன்
சோதனையென
கெக்கலிட்டு சிரிக்கிறாய்

நரம்புகளின் ஓசை
அணைத்தும் சமயம் பார்த்து
மீட்டுகிறாய்-அது
முகாரியாய் இருந்தாலும்
கால்மேல் காலிட்டு ரசிக்கிராய்

உன் கைபற்றி
நடக்க எத்தனிக்கிறேன்
சிறையென உதறுகிறாய்

பறவையின் லாவகம்
வாய்த்துவிடும் கனவில்
தட்டியெழுப்பி
மோகம் புசிக்கிறாய்

வருகைக்கான
வாசல் இருப்பில்
வேடிக்கைப்பார்கிறதா
கண்களென
வேலியிடுகிறாய்
அன்பின் படயலுக்கு

கைக்குள் துயிலும்
குழந்தையின் எச்சில்
ஒழுகலை துடைத்தெடுக்கும்
தாயாய் விழித்திருக்கிறேன்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
நினைவிலில்லை உன் புன்னகை

சொற்களின் சுதந்திரத்தை
மூச்சுக்காற்றின் வழி
உலவவிடுகிறேன்
காற்றிலொரு இறகு
உதிர்த்து...

சுவற்றுப்பல்லிபோல
உன் நாவெட்டும்
தூரத்தில் எனையிருத்தி
உன் விருப்பமென
மெச்சுகிறாய்

பட்டாம்பூச்சியாய்
அமர விழைகிறேன்
இறகு பிடித்து
காக்கிறேன் என்கிறாய்

Blogger Wordpress Gadgets