உன் நினைவுகளை சுமப்பது என்பது
அத்தனை அசெளகரியமாக
இருக்கிறது எனக்கு

இதயத்தின் கொள்ளளவு என்னவென்பதை
என்னை விட உன் நினைவுகளே
நன்கு அறிந்து வைத்திருக்கிறது

அவ்வளவு ஆக்கிரமிப்பு
அத்தனையும் அபகரிப்பு

முன்னெப்பொழுதோ தவற விட்ட
ஒரு புன்னகை
சொல்லி வைத்த ஹாய்
கொடுத்து வாங்கிய எண்கள்
பரிமாறிய உணர்வுகள்

இப்படி எத்தனை எத்தனையோ
ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு நினைவு ஒவ்வொரு கனவு

ஒரு கொலையோ தற்கொலையோ
சாத்தியமெனில்
கொலைசெய்
அல்லது
தற்கொலைக்கு தூண்டு!

வீதியெங்கும் சிதறிக் கிடக்கும்
உன் நினைவின் வெப்பத் தணலில்
இதயம் கொண்டு நடை பழகுகிறேன்


அதன் மாமிச வாசனையில்
எனை சூழ்ந்த கனவுக் காட்சிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
செந்நாய் போல பிய்த்து தின்னுகிறது

நினைவுகளின் கூரிய பற்களிலிருந்து
நழுவிய மாமிசத்தின் துடிப்பினை
கண்ணீர் ஒழுக தப்பித்து

கருக்கலைந்த ஒரு தாயின்
அழுகை சத்தம் போல
மனமெங்கும் கனத்தபடி
திசை தெரியாது பயணிக்கிறேன்

மரணத்தின் வாசற்படியில்
கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள்
ஒற்றைக் கால் காதலி!

உடைமரக் காடுகளின் வழியே
ஓலமிட்டு ஓடும்
ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குரல்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க

திண்ணையிலமர்ந்த படி
வெடித்த சிரிப்புச் சத்ததுடன்
மதுவில் குருதி கலந்து ஒருவன்
தரையிலூற்றி நக்கிக் கொண்டிருந்தான்

ஊரடங்கிக் கிடக்கும்
அத்தெருவில் பெட்டை நாயினை
சில ஆண் நாய்கள்
பின் தொடர்ந்து கொண்டிருக்க

ஓடுகள் சரிந்த பாழடைந்த வீட்டிலிருந்து
பரத்தையொருத்தி
ஆணுறையை வீதியெறிந்து செல்கிறாள்

தெருவிளக்கின் நிழலில்
நின்றிருந்த சிறுமியானவள்
எழுந்து போனவனின் முகம் பார்க்க

ஒரு அலறல் சத்தத்தோடு எழவும்
மிச்சமிருந்த ஒரு குவளை நீரும்
கைப்பட்டு தரை சேர்ந்திருந்தது

இடம் பெயர்ந்த முதுகின்
வியர்வை அச்சுகளும்
தலை நனைத்த வியர்வைகளும்
பயம் கூட்ட

விறுவிறுவென எழுந்தவன்
விந்தனுக்களை வெளியேற்றி
மீண்டும் உறங்கிப்போகிறான்!

அப்பெருங்காற்றில்
சாலைகளிலெல்லாம் உதிர்ந்து கிடந்தன
இலைகள்

இன்று
நிழல்களாய் விழுந்து கிடக்கின்றன
கட்டிடங்கள்!

வற்றிப் போன ஓடையை கண்டவன்
தன்னலம் விரும்பி
என்னைத் தேடத் தொடங்கினான்

தேடினான் தேடினான்
மண்ணைத் தோண்டி தேடினான்

முதலில் ஈரம்
பின் கசிவு
பின் ஊற்று

நீரிரைத்தான்
விவசாயம் செய்தான்
சுத்தம் செய்து பருகத்துவங்கினான்

அசுத்தம் செய்தான்
வீணடித்தான்
விஞ்ஞானமென்றான்

அவனின் குடைச்சல்கள்
தாழாது
நான் கீழ் நோக்கி போகப் போக

இயந்திரம் கண்டெடுத்தான்
ஊசி போட்டு பின் தொடர்ந்தான்
தன் வசப்படுத்திக் கொண்டான்

இயந்திரம் அமைத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய் உறியத் துவங்கினான்
மேலும் மேலும் சுயநலமானன்

பின்பொரு நாள்
நான் உறைதலை அறிந்து
செயற்கை குளிர் சாதனப்பெட்டி செய்தான்

உறைய வைத்தான் நீராக்கினான்
குளிர வைத்தான் குடித்தான்
மதுவில் மிதக்க வைத்தான் மூழ்கடித்தான்

என் சுயம் தப்பிய ஒரு காலையில்
உறை நிலையிலிருந்த என்னை
காற்று நிரப்பும் ஒரு இரப்பர் பையிலிட்டு

கட்டி வைத்து
என்னை வெளுக்கத் துவங்கியிருக்கிறான்

என் இழப்பிற்கு பின்னதான
உங்கள் கண்ணீர் ஊற்றினை

கடன் கேட்டு வரலாம்
திருடலாம் அத்து மீறலாம்
அகிலம் முடிவுக்கு வரலாம்!

உன்னையெனக்கு
நெடுஞ்சாலை பிரிவிலுள்ள
ஒரு தேனீர் கடையில் அறிமுகம்

அவ்விரவு முழுவதும் நான் வேண்டுமென
நீ வினவ
நமட்டுச் சிரிப்புடன் ஒத்துக்கொண்டேன்

தூரத்தில் மின்னிக் கொண்டிருக்கும்
ஒரு தெருவிளக்கினை நோக்கியபடி
சிகரெட்டினை புகைத்துக் கொண்டிருந்தாய்

வெகு நேரமாய் அறை திரும்பாது
நீ நின்றிருக்க
இதற்குத்தான் வரவழைததாயா என்றேன்

தூங்குவதென்றால் தூங்கு என சொல்லி
அறையின் கதவை
வெளியே தாழிட்டுக் கொண்டாய்

இறுக மூடியும் தூங்கவியலா
என் கண்கள் முன்னே
பற்தடங்களும் நகக்கீறல்களும் முன்னிற்க

நான் தேம்பி அழுவது
காதுகளில் விழவும்-உன்
விழிகளை மெதுவாய் திறந்து மூடி

உன்னையேதும் செய்திட மாட்டேன்
அமைதியாய் தூங்கச் சொல்லி
போர்வை போர்த்தி விட்டாய்

அறையின் வெளியே
வெகு நேரமாய்
எதையோ வாசித்துக் கொண்டிருந்தாய்

காலையில் உன் முகவரி கொடுத்து
தோன்றும் போது
அழைக்க சொல்லி விடைபெற்றிருந்தாய்

அவ்வுரிமையில்
இம்மடல் வரைகிறேன்

என் வலது கழுத்தோரம்
நீளும் நரம்பினை-நீ
நாவால் வருடியபடி
புணர்ந்து செல்வாயா?

பின் குறிப்பு:
நான் இப்போது விலை மாது அல்ல!

அழகி

Friday, June 15, 2012 | 0 comments »

அளந்து வைத்தது போல
நெற்றியில் சந்தனம்
அதன் மேலே
சின்னதாய் ஒரு பொட்டு

இடவலமாய்
உருளும் கருவிழிகள்
குட்டி குட்டி நிலவாய்
நெற்றியில் பருக்கள்

அடிக்கடி கைபேசி
பொத்தான் அழுத்துகையில்
எட்டிப்பார்க்கும் வர்ணம் பூசாத
விரல் நகங்கள்

கருப்பு நிற தோல் பொருத்திய
கைக்கடிகாரம்
அவள் நிறத்திற்கு போட்டியாய்
ஒரு தங்க வளையலென,

கண்கள் வரை மறைத்துக்கட்டிய
அப்பேரழிகியோடு
ஐந்து நிமிட பயணம்
ஷேர் ஆட்டோவில்!


யாருமில்லா அறையில்
இதயத்தின் இறைச்சல்கள் நிறைந்திருக்க
வெளியுலகமெல்லாம் ஊமைபேச்சு

பிடரி மயிர் நனைய
வியர்க்கும் இவ்விரவில்
மரமறுக்கும் வாளினை நக்கத்துடிக்கும்
மனதின் பேராவலை

இருளில் தடவித் தடவி எடுத்த
பேனாவின் துணையோடு
அறையெங்கும் காகிதம் நிறைத்தும் தீராது

இறுகப் பற்றிய உச்சிக்கூந்தலை
நர நரவென அறுத்தெறிய,
வழியும் இரத்த வாடையோடு

தொப்புள் கொடியின் ஆயுள் கேட்க
தாயின் ஆன்மா தேடி
வீதியலைகிறான் ஒருவன்!

தொடர் மழையின் இரவில்
திண்ணையில் ஒதுங்கிய
நாயின் ஊளையின் குரலால்

தோளில் சாய்ந்துறங்கும்
மகளின் காதுகளில் விழவும்
தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள்

பயம் அப்பிய மனதினை
விரல்களில் புகுத்தி தோள் பற்றி
கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள்

சந்தையில் சந்தித்த
கீழத் தெருக்காரன் ஒருவன்
பாலுக்கான காசோடு வருவதை
அவள் அறிந்திருக்க நியாயமில்லை!

பிறந்த குழந்தையின்
பாதத்தை ஒத்த நிறம்
அவளின் முகம்

அளவாய் உயர்த்தி ஏறிய
படிக்கட்டுக்கும் தரைக்குமான
இடைவெளியில் முத்துக்களாலான கொலுசு

ஜன்னலோர இருக்கையமர்ந்தவள்
தொடுதிரை அலைபேசி வருடியபடி
தூரத்த்திலொரு பார்வை

கண்கள் நிரம்ப சோகம்
இதழில் கசியும் புன்னகையென
மொழி பெயர்க்க முடியாதொரு காலையில்

முழுக்கப் போர்த்திய
அவள் பூவுடலில்
படர்ந்து கிடந்த சோகத்தினை

இறங்குமிடம் வருகையில்
தோள் சாய்ந்தபடி அழுது தீர்க்கலாம்
ஆறுதல் தேடி தனித்திருக்கலாம்

அல்லது
அங்கொருவன்
இது போல் ஒரு கவி புனையலாம்!

உன் பதிலுக்காக காத்திருந்து
கழியும் இப்பொழுதினை
வெறுமனே
வேடிக்கை பார்த்தபடி கடத்துதலென்பது

வழி தெரியா பாதையில்
புதிதாய் பயணிக்கும் ஒருவன்
வழிகாட்டும் அறிவிப்பு பலகையினை
எதிர் நோக்கி பயணிப்பது போன்றது

தொப்புள் கொடி அறுபடாத
குழந்தையொன்று எறும்பின் கடியில்
குப்பைதொட்டியில் அழுதபடி
தாயின் வருகைக்காக காத்திருப்பது போன்றது

புதுமனத் தம்பதியரின்
கூடலுக்குப் பின்னான
மெளனத்தின் மனநிலை போன்றது

வரிவரியாய் கையில் கோடுகளிட்டு
கசியும் குருதியில்
கிறுக்கிப்பார்ப்பது போன்றது

பிரசவித்த குழந்தையொன்றின்
வீரிட்டு அழும் சத்தம் கேட்க
காத்திருக்கும் கணவன் மனைவி போன்றது

உன் பதிலுக்காக காத்திருந்து
கழியும் இப்பொழுதினை
வெறுமனே
வேடிக்கை பார்த்தபடி கடத்துதலென்பது!

மூடாத அவன் விழி முன்னே
கள்ளிச்செடியின் கூரிய முற்கள்
நகக்கண்ணுக்குள்ளே இறங்குவது போலவும்

எவனோ ஒருவனை
மடியில் கிடத்தி கண்ணாடி சில்லுகளை
கண்ணுக்குள் ஊற்றுவது போலவும்

பரத்தையொருத்தி
வாடிக்கையாளனின் வருகைக்காக
ஆடையின்றி காத்திருப்பது போலவும்

தோகை விரிந்தாடிக்கொண்டிருக்கும்
மயிலின் இறகுகள்
தீப்பற்றி எரிவது போலவும்

பாலுக்கழும் குழந்தையின்
கண்ணீர் தாங்காது
தாயொருத்தி
மார்பறுத்து இறப்பது போலவும்

கரும்பூனை ஒன்று
பெண்ணின் மார்பினை
நகத்தினால் கீறிவிடுவது போலவும்

பழுக்க காய்ச்சிய கம்பியினை
ஆணுறுப்பில் சூடிட்டு
ஒருவன் இறப்பது போலவும்

தனிமையின் காட்சிகள்
நீளும் அவ்விரவில்
வெடுக்கென கண்மூட

அவனோ
அறையின் மின்விசிறியில்
தூக்கிட்டு செத்துக்கொண்டிருந்தான்!

விடுமுறை நாளொன்றின்
அந்திப்பொழுதில்
சூடான தேநீரொன்று
ஒரு மிடரு பருகி

தலை குளித்த கேசத்தில்
சுற்றிய பூத்துவாலையோடு
கண்சிமிட்டி கை நீட்டிட

செல்லமாய் கன்னம் கிள்ளி
பருக பருக
கண்களால் தனை விழுங்கி

கண்ணாடி முன் நின்று
கூந்தல் உலர்த்திட
இடையில் வழியும் நீரினை சுண்டி

முதுகில் பரவிய கேசம் ஒதுக்கி
செல்லமாய்
வலது தோள் கடித்து

அவன் காய்கறிகள் நறுக்கிட
தோளில் கையூன்றி
உச்சந்தலையில் தாடை கிடத்தி
கொஞ்சுதல் மொழி பேசி

இருவருக்குமான உணவினை
ஒரு தட்டில் வைத்து
வாயூட்டி உண்ட பின்

அவன் மடியினில் அமர்ந்து
மார்பில் சாய்ந்தபடி
காதல் பேசி காதல் பேசி

இரவின் ஆடை புகுகையில்
ஓரக் கண்ணால் ரசித்திடும்
அவன் கண்களை முத்தமிட்டு

படுக்கையறையில் வேண்டுமென
புரண்டுபடுத்து அவனிடம்
முத்தங்கள் கணக்கின்றி பெற்று

யுத்தத்தின் முடிவில்
அவன் மேல் தவழ்ந்து
நெற்றியில் முத்தம் பெற்று

உறங்கிட விரும்பிய
அத்தாவணி கனவிற்கு
வாய்த்த ஒரு முந்தானை இரவில்

கண்களில் நீர் வழிந்தபடி
அவள் கதறக் கதற
அவன் வெடித்த சிரிப்புடன்

உருகும் மெழுகினை
ஒவ்வொரு சொட்டுகளாய்
இட்டுக்கொண்டிருந்தான்
அவள் யோனியில்!

ஒவ்வொரு முறை
இரயில் கடக்கையிலும்
சட்டென ஒரு உருவமெழுந்து
தன் உடல் மறைத்து, பின் குத்தவைக்கும்

ரோட்டோர சனங்களும்
தாழ்த்தப்பட்ட மக்களும்
தண்டவாளப் புதர்கள் நாடாது
தனக்கென கழிப்பிடம் வீடமைக்கும்
நாள் வருமுன்
இந்தியா வல்லரசு என எப்படி ஏற்பது?

நெடுநீள பயண களைப்பிலும்
குதூகலமாய் கடந்து செல்லும்
புதுமணத் தம்பதி

தன் தாய் தந்தை
கைபிடித்தபடியே ஆடி ஆடி செல்லும்
கைக்குழந்தை

மகனோ மகளோ உறவோ
யாரோ ஒருவரின்
வருகைக்காக காத்திருக்கும்
ஒரு முதியவர்

குறுஞ்செய்தியில்
தகவல் சொல்லியபடி
காத்திருக்கும் ஒரு யுவதி

என் செல்லங்களா
என் பட்டு
நான் பெத்த செல்லங்களே என
கையேந்தி இருக்கும்
ஒரு யானைக்கால் கிழவி

கண்ணில் நின்றாடும்
பிம்பமொன்று
கதவருகே நிழலாடுது

வாசலின் குறுக்கே நீளும்
நரம்பு கயிற்றில்
என் ஆடை மட்டும் தனியாடுது

எதிர் கட்டிலின்று
ஏதுமில்லாது போனது கண்டு
கண்ணில் நீராடுது

எதையோ பேசிட திறக்கும் இதழ்கள்
எவருமில்லையென அறிந்து
அதுவாய் தள்ளாடுது

ராஜா மீட்டும்
நீண்ட வயலின் கேளாது
காதுகளிரண்டும் செவிடானது

மீண்டும் துணைக்கு வரும்
தனிமை கண்டு
அறையே இருளானது

இனி
நானே அறையின் கதவை
தாழிட வேண்டும்
நானே அறையின் கதவை
திறந்திட வேண்டும்

பேரழகி

Friday, June 15, 2012 | 0 comments »

இப்படித்தானென பிரித்திடாது
விரல் கோதி விட்ட
உச்சந்தலை வகிடு

துண்டித்த வானவில்லென
அதனில்லாத நிறத்தில்
ஒரு வில் புருவம்

சரிந்து விழுந்த
முன்னெற்றி கூந்தலின் ஊடே
ஒளிரும் விழி

குத்திட முனையும்
மூக்கில்
சின்னதாய் மூக்குத்தி

இதழோரம்
கசிந்து விழும்
மெல்லிய புன்னகை

வர்ணம் தீட்டாத
எதார்த்தம் மிஞ்சிய
உதட்டழகு

மலையென ஏறியிறங்கும்
அம்சமாய்
இரட்டை நாடி

மொத்தத்தில்
என் சப்த நாடியும்
விழி கூட்டுக்குள் அடைத்த
இயற்கை சீற்றமடி நீ!

புணர்ந்து கலையும் வரை
நாய்களையே வெறித்திருக்கும்
இராப்பிச்சைக்காரன்

மொட்டை மாடியில்
சுய இன்பம் தேடும்
ஒரு வாலிபன்

இரண்டாம் முறையாக
எதிர்வீட்டில் எரிந்து அணையும்
சாளரத்தின் வெளிச்சம் பார்த்தபடி
ஒரு முதிர் கன்னி

ஊர் பாலத்தின் அடியில்
முட்புதர் அருகே காத்திருக்கும்
ஒரு விலை மாது

நிரம்ப போதையில்
நிர்வாணமாய் வீதியுறங்குபவனை
கடந்துபோகும் ஒரு விதவை

முலைக்கழும் குழந்தைக்கு
பாலூட்டும் பெண்ணின் மார்பு நோக்கும்
பதின் வயதுக்காரன்

இவர்களுடனே
நிலவாய் நட்சத்திரமாய்
ஆப்பிளை கடித்த
ஆதாமும் ஏவாளும்...

அவனுக்கு
இருபத்தி ஒன்றாவது
பிறந்த நாள்

அன்றைய இரவின்
கடைசிப் பந்தியில்
அவனும் ஒருவன்

இளமையின் மிகுதியால்
வந்தவர்கள் கண்ணுக்கு
அவளோ இன்னும் அழகு

மூன்றில் ஒருவனென முடிவாக
அவரவர் ஒரு விலை பேச
முதலில் வந்தவன் தவிர
இருவரை தவிற்கிறாள்

அறை சென்றவனை
சபித்துச் செல்கிறான் ஒருவன்
விலை மாதுவை
திட்டிச் செல்கிறான் மற்றொவன்

அவளை உறங்கச் சொல்லிவிட்டு
காற்று வாங்குகிறான்
இன்னொருவன்!

தேரைகள் நிறைந்த
அடர் வனத்தில்

ஒரு
தவளையின் கனத்த சத்தம்
உன்னை சூழ்ந்திருக்கிறது

உன்னை
காயப்படுத்தியதாய் சொல்கிறாய்

காய் நகர்த்தியது
மனதறிய எனக்குத் தெரியாது

என் முகம் உனக்கு
அருவருப்பாய் முன்னிருத்தப்பட்டிருக்கிறத

மண்டியிட்டு
என்னை நியாயப்படுத்தவுமில்லை

குற்றம்
குற்றமாகவே இருக்கட்டும்

நானும்
அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறேன

ஆம்
நானும் அப்படித்தான் நடந்து கொண்டேன்!

யாருமற்ற அந்தப் பூங்காவில்
நிலவின் ஒளியில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழுத்த இலைகள்

காற்றில் சலசலத்தபடி
அதன் தனிமைக்கு
இசை மீட்டுக் கொண்டிருந்தது
உதிர்ந்த இலைகள்

சொட்டு நீர் பாசனத்தால்
மரங்களின் தண்டினில்
கசிந்து கொண்டிருந்தது
நீர்த் துளிகள்

மூடிய கிணற்றில்
கம்பிகளின் வழியே நழுவிய
இலைகளை தாங்கிக் கொண்டிருந்தது
சிலந்தி வலைகள்

யாருக்கும் தெரியாமல்
பூங்காவின் அழகினை
வர்ணித்துக் கொண்டிருந்தது
சில நரைத்த முடிகள்!


Blogger Wordpress Gadgets