உன் வாசிப்பிலிருந்து
விடுபட்ட

என் கவிதைகளின்
எண்ணிக்கைத் தெரியுமா?

உன்னைப் பற்றிய
புரிதல்களும்

என் நேசத்தின்
ஆழங்களும்

சத்தியமாய் நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை

ஏன் இந்தக் கேள்வி கூட
நியாமில்லை..

வெயில் இரவில்
பனிப்பொழுதில்

புனையப்படும் உன்னுடனா
சீதோசன உணர்வுகள்

தேதிகளிட்டப்படி
வெற்றுக் காகிதங்களான நாட்களுண்டு

சிலந்தியின் பின்னல்களை
எண்ணத்துவங்கும்

ஒரு கானல் பொழுதில்-என்
விழித்திரையிலிருந்து விடுபட்டிருப்பாய்

அத்தருணங்களில் கண்களில் துவங்கி
தொண்டைக்குழி வந்தடையும்

கண்ணீரில்-நீ
முழுவதுமாய் நிறைந்திருப்பாய்

பின்னொரு பொழுதில்
என் சுய நினனைவிழந்து

உன்னால் புலம்பிட நேரிடலாம்
என் தாயால் நீ தூற்றப்படலாம்

அதனாலயே எக்கடிதத்திலும்
உன் பெயர் எழுதிடவில்லை!

ஒரு ராத்திரியில்
வா
கண்ணாமூச்சி விளையாடலாமென்றான்

போ உன் பேச்சு "கா" என்றாள்

வெடுக்கென முகத்தை திருப்பிட்டவளை
கெஞ்சுதல் என்பது அலாதி இன்பமவனுக்கு
அவளது எதிர்ப்பார்ப்பும் அது தான்!

ஒன்னும் வேணாம் போடா என்றாள்

விரல்களுக்கு சொடுக்கெடுக்கும் சாக்கில்
வீரல் நீவி முத்தமிட எத்தனிக்கையில்
சட்டென இழுத்தவள்

டேய்! நீ கள்ளன்டா என்றாள்

நீண்ட இருக்கையில்
கால் நீட்டி சாய்ந்திட்டவளின்
கால்களுக்கு இதமாய் ஒத்தடமிட,

போ போ சமாளிக்காதே என்றாள்

அவிழ்ந்திட்ட கூந்தலை
அவள் அள்ளி முடியும் தருணத்தில்
பட்டென இதழ் முத்தம் பதிக்க

குட்டொன்று வைத்து போடா என்றாள்

இரவின் மின்விளக்கேற்றி
ஒரு குவளை நீர் பருகியவளிடம்
கண்களை சிமிட்டியபடி தாகமெனவும்

அடி வாங்குவ போடா என்றாள்!

இழுத்துப் போர்த்தி புரண்டு படுத்தவளை
இறுக அணைத்து காது கடிக்கையில்
நெஞ்சில் சாய்ந்து சினுங்கியவள்

வெவ்வவே வெவ்வவே போடா என்றாள்!

தடதடக்கும் இரயிலின் சத்தம்
கிறீச்சென தண்டவாளம் உரசும் சத்தம்
பேசித்திரியும் சனங்களின் சத்தம்

இரயிலுக்கான காத்திருப்பு
காதலியின் வருகை
புதுமுகத்தின் அறிமுகம் என
காத்திருக்கும் அந்த நிமிடங்களில்

பார்வையற்றவன் ஒருவன் இசைக்கும்
புல்லாங்குழலின் இசைக்கு
என்றாவது செவி மடுத்ததுண்டா?

வறுமையின் கோடுகள் நிறைந்த
விரல்களின் கீறல்களிலிருந்து கசியும்
அந்த மெல்லிசையை கேட்டுப்பாருங்கள்

அதன் ராகமானது
பார்வையற்றவனென்ற வருத்தமாக இருக்கலாம்
ஆதரவற்றவனென்ற வேதனையாக இருக்கலாம்
அடைக்கலம் இல்லாத ஏக்கமாக இருக்கலாம்

படிப்பில்லையே என்ற வருத்தமாக இருக்கலாம்
உழைக்க முடியவில்லை என்ற ஆதங்கமாக இருக்கலாம்
கடவுள் மேல் உள்ள கோபமாக இருக்கலாம்

கரிசனம் இல்லாத மக்களுக்காக இருக்கலாம்
தூரத்தில் சாப்பாட்டின் வாசனை நுகர்ந்து
அதன் பெருமூச்சில் எழும் தாகமாகவும் இருக்கலாம்

படபடக்கும் உங்கள் காத்திருப்பின்
நிமிடங்களில்
இசையினை உங்கள் காதுகளுக்கு
யார் வார்த்தாலென்ன?

ரசித்துப்பாருங்கள்!

வாசித்து முடிந்து நீளும் அக்கைகளுக்கு
உங்கள் பையிலிருந்து கைக்கேரும் காசு
நிச்சயமாய் சில்லறையாய் இருக்காது!

உங்களுக்குத் தெரியாது
அவள்
திரும்பி வரப்போவதில்லை

இதயம் கனத்த இரவில் எதையோ
காற்றில் வரையத் துவங்கிவிடுகின்றன
எனையறியாது எனது கைகள்

அதன் கிறுக்கல்கள்-அவள்
முகமாகவோ பெயராகவோ
இருக்க வேண்டுமென முயற்சிக்காமலேயே

முகிலினங்கள் தனையறியாது
வரைந்து செல்லும் ஓவியம் போல
அதுவும் அவளாகவே ஆகிப்போகிறது

அறை முழுவதும் நிறைந்து கிடக்கும்
அவள் முகங்களை
தொட்டுவிட எத்தனிக்கிறேன்

சிறுமி ஒருத்தி உடைக்க ஓடும்
நீர்க்குமிழ்களை போல
ஏமாந்து தத்தளிக்கிறேன்

திசை தோன்றி திசை மறையும்
நிலவின் நீளத்தை ஆமை வேகத்தில்,
நத்தைச் சுமையோடு கடக்கும் இவ்விரவில்

உங்களிடம் எனது கன்னங்களில்
படிந்து கிடக்கும் நீர் ரேகைகளை
புன்னகையிட்டு மறைத்துச் செல்கிறேன்

எனக்குத் தெரியும்
நீ
நினைவை விட்டு அகலுவதேயில்லை!


ஒரு இரவினை திருடி
அவளை மடியில் கிடத்தி
இது உனக்கு அது எனக்கு என்றேன்

இல்லை இல்லை
எனக்கு மட்டும் என்றாள்

மூடிய விழியில்
வழிந்தோடும் காட்சிகள்
உன்னோடு என்றும்,

விழிமுன் உனை நிறுத்தி
மெய்மறக்க செய்யும் காட்சிகள்
என்னோடு என்றேன்...

ம்ம்ம் என புரண்டவள்
நிலவினை சூழ்ந்த மேகம் போல
போர்வைக்குள் மறைய

அவள்
நாணக்குடை பிடித்தாள்
குடைக்குள் மழை!

புரிதல்

Thursday, May 03, 2012 | 1 comments »

கேள்விக்கான
பதில் சொல்லுதல் என்பது
பிற்பாடு
காரணம் சொல்லுவதாய் தோன்றலாம்

பின்பு
பொய் சொல்லுவது போன்றோ
சமாளிப்புக்காரன் என்றோ
பட்டம் பெற நேரிடலாம்

அதில் எழும் வாக்குவாதங்கள்
இருவரில் ஒருவரை கெட்டவனென
மனது காட்சிப் படுத்தலாம்

சந்தர்ப்பங்கள் தேடலாம்
சந்தர்ப்பங்கள் அதுவாகவே அமையலாம்
அன்றே அதனை சொன்னேனன்று
பரிகாசமும் எழலாம்

கேள்வி கேட்பதை விட
பதில் சொல்ல முனைவதை விட
புரிதலே ஆரோக்கியம்!

புறநகர் இரயில் நிலையத்தின்
கடைசி இருக்கைக்கு அழைத்தவள்
அவள் பக்க நியாயங்களையும்
காரணங்களையும் எடுத்துரைத்தாள்

வினவப்படும் வினாக்களுக்கு
அவள் உதிர்த்த
வார்த்தைகள் யாவும்

செங்கற்கட்டு போல
மொத்தமாய் சரிந்து விழுந்தது
நெடுந்தூர கனவின் நடுவில்!

விழித்திரையில்
அடுத்தடுத்து விழும் காட்சிகள்
நிஜமாகிவிடுமோவென அஞ்சுகையில்,

மற்றபடி வேறொன்றும் இல்லை
தொடர்பிலேயே இரு என
விட்டுச் செல்கிறாள்
மணவோலையை!


மது

Thursday, May 03, 2012 | 0 comments »

ஜன்னலில் படர்ந்திருந்த
பாகற்கொடியின் இலை ஒன்றினை
இதழில் கவ்வியபடி
தொலை பேசியிலிருந்தாள் மது

"ம்" என்றாள்
இல்லையென்றாள்
சிணுங்கினாள்
கோபமுற்றாள்
கெஞ்சினாள்
விசும்பினாள்

முறிந்த கொடி
மீண்டும் முளைக்க
நீர் ஊற்ற துவங்கினாள் காலையில்!

Blogger Wordpress Gadgets