தற்கொலை

Sunday, October 30, 2011 | 0 comments »

நிலவற்ற இரவில்
என் மேனியெங்கும்
வெறுமை பிசுபிசுக்க
கடற்கரையில்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்..

என் கண்ணீரின் சாயல்
இந்தக் கடல் என,
வெகு நேரமாய் என் அன்பினை
இதய வடிவில் விரல்களால் தீட்டி
ஆறுதல் சொல்லிப் பார்கிறேன்...

அலைகள் ஒவ்வொரு முறையும்
என் அன்பினை ஏற்கிறதா
இல்லை வெறுப்புற்று
அழித்துச் செல்கிறதா
என அறியாது மீண்டும் மீண்டும்
இதய ஓவியம் நீட்டுகிறேன்..

எங்களுக்குள் புரிதல்கள்
நிகழ்ந்தபாடில்லை...

நான் அன்பு
செலுத்தி தோற்றதாகவே
இருக்கட்டுமென
என் உயிரினைத் தருவதாய்
உள் இறங்குகிறேன்!

அலைகள் ஒவ்வொன்றும்
உள் இழுப்பதும் வெளியில்
தள்ளுவதுமாய் என் உயிரினை
ஊஞ்சலாக்கி அலைக்கழிக்கின்றன

நான் விழுந்து எழும் வேளையில்
என் முகத்தினில் உமிழ்ந்து
ஆனந்த கூச்சல் செய்கின்றன...

இவைகள் என்னை
உதாசினப்படுத்துகின்றன
என்பதறிந்தும்
மனம் ஒப்பவில்லை....

எப்படியும் என் உயிர் குடித்து
சதைப் பிண்டத்தை
வெளியேற்றுவாய்
என்ற நம்பிக்கையில்
இதோ என் உயிர் மாய்க்கிறேன்!

பகலென்றும் இரவென்றும்
யூகிக்க முடியாமலும்,
அது ஒரு அறை என்றும்
இல்லை வீதி என்றும்
சரிவர சொல்ல முடியாமலும்
ஓவியம் ஒன்று
என் விழிகள் இரண்டையும்
ஆட்படுத்தியிருந்தன...

அதனருகே சிதறிக் கிடந்த
இன்னபிற ஓவியங்களையும்
இவைகள் இன்னதென்று
எதனுடனும் ஒப்பீடும்
செய்திட இயலவில்லை...

என்னால் ஈர்க்கப்பட்ட
அந்த ஓவியமும்
மனிதனின் சாயல் என்பது தவிர
வேறெதையும் என் சிந்தனைக்கு
உணர்த்தவில்லை!

என்னையும் அறியாது
நான் சுற்றி சுற்றி வர
வரைந்தவன் பார்வையற்றவன்
என்று எண்ணச் சொல்கிறது மனது

அவ்வழியாய் வந்தவர்கள்
ஓவியன் இறந்து விட்டதாய்
எங்கோ இழுத்துச்செல்ல
யாவரும் இருளில்
மறைந்து  போகின்றனர்...

மீண்டும் ஓவியத்தை
உற்று நோக்க
அவன் இழுத்துச் செல்லப்பட்ட
இடத்தில்
உள்ளங்கையில் தாங்கும் அளவிற்கு

வெட்டப்படாத
தொப்புள் கொடியோடும்
பனிக் குடம் உடைந்து
நீர்கறையாகவும்
ஓவியத்தில்
சிசுக்களாய் நிறைத்து கிடக்கின்றன.

ஒருவேளை அந்த ஓவியம்
யாருக்கும் புலப்படாத
ஆதாம் என்றால்

இரத்தமும் சதையுமாய்
சிதறிக் கிடக்கும்
சிசுக்களை வீசிச்சென்ற
ஏவாள் எங்கே?

குருடன் என்று
எண்ணத் தோன்றிய
ஓவியன் யார்?

அன்றொரு நாள்
இவளும் இப்படித்தான்
அழுது கொண்டிருந்தாளாம்...,

வார்த்தைகளோ இல்லை
ஆறுதல் சொல்வதோ
மருந்து இல்லை என்பது
அவளும் அறிந்த ஒன்று தான்!

இருந்தும் நான் அழுவது கண்டு
ஆறுதல் சொல்ல
என்னை அவள் மடியில்
சாய்த்துக் கொண்டாள்!

கசிந்து கொண்டிருக்கும்
என் குருதியின் வாடை

அருகில் துயிலில் இருந்த
யாருடைய நாசியும்
துளைக்கவில்லை போலும்...

இரவின் நிர்வாணம்
அப்படி இவர்களை
பழக்கப் படுத்தியிருக்கலாம்!

என்னை அவள் தேற்ற
முயல்கிறாள் முடியாமல்
வார்த்தையில் உடைகிறாள்...

சிறிது மெளனம் திண்று
அவள் சோகம் தொடர்ந்தவள்
இரவு என்பதனால்
தன் அடிவயிற்றில் வலி கொடுத்தவன்

மனிதன் என்பது தவிர
அடையாளம் ஏதும்
தெரியவில்லை என்றாள்...

அவன் விட்டு சென்ற
தடயம் ஏதேனும்
இருக்கிறதா என்றால்
என்னை கை நீட்டுகிறாள்
என் தாய்!

தூரத்திலிருந்து கைகாட்ட கூட
அவன் முகம்
அவளும் அறியவில்லை...

இப்பொழுது என்னிடமும்
அடி வயிற்றில் வலி தவிர
வேறொன்றும் இல்லை!

சருகு!

Sunday, October 16, 2011 | 0 comments »

இவைகள் இவைகளாக
இருந்தது இல்லை

வெளீர் பச்சை
நிறம் சொருகி
அதிகாலை சூரியனுக்கு
தன்னை படையல் வைக்கிறது

அவ்வழியாய் கடத்து போகும்
ஒரு புகைப்படக்காரன்
தன் நிழற்படக் கருவியில்
அடைத்துச் செல்கிறான்...

அவன் மாட்டி வைத்த
கண்ணாடி குடுவை வழியாய்
சிலர் கண்களை

ஈர்த்துச் செல்கிறது
அந்த இளந்தளிர்!

பொழுதுகள் புரள புரள
துளிர் விட்டு
வளர துவங்குகிறது...

வளரும் காலங்களில்
சில வெட்டுக்கிளிகள்
இலைகளை கூர் பார்க்கிறது

பறவைகளின் எச்சில் படுகிறது
காய்கனிகளுக்கிடையே
கல்லடியும் படுகிறது....

திடுமென ஒருநாள்
இவ்விலைகள் எல்லாம்
சிலருக்கு நிழலாய்
உட்புகுத்தப்படுகிறது!

இவைகள் பழுப்பு நிறம்
கடக்கும் பொழுது
துளிர்கள் எல்லாம்
இலைகளாக மாற

அப்பழுப்பிலைகள்
உதிரத் துவங்குகிறன...

சிற்சில காற்றில
அலைகிறது...

சிற்சில மரத்தினடியில்
மவுனித்து கிடக்கிறது....

சிற்சில
மண்ணில் உரமாகிறது...

சிற்சில
தீயினில் சாம்பலாகிறது...

இப்படித் தான் மனித
வாழ்க்கையும்!

உனது இடது கை
எழுதும் பழக்கம்
எனக்கும் கற்று கொடு...

உன்னை அதிகமுறை
கேலி செய்திருக்கிறேன்
என்பதற்காய்
மறுத்து விடாதே!

உனக்கு நியாபகம்
இருக்கிறதா?
மேசையில் வைத்து
எழுதும் போது

நீ கையை
தட்டி விடுவதாய்
டீச்சரிடம்
அடி வாங்கி கொடுத்திருக்கிறேன்

சாப்பிடும் போது உன்னை
நொட்டாங்கையன் என்று
உன் மனதை
காயப்படுத்தியிருக்கிறேன்

மன்னித்துவிடு நண்பா
உனது இடது கை
எழுதும் பழக்கம்
எனக்கும் கற்று கொடு...

நேற்று அப்பாவிற்கு
பீடி பற்றவைக்க
தீப்பட்டி எடுத்துக்
கொடுக்கவில்லை என்று

குடி போதையில்
இதோ பார்
என் கையில்
சூடு வைத்து விட்டார்

தீபாவளி

Tuesday, October 11, 2011 | 2 comments »

இதுவரை வராத அழைப்பும்
கேட்டிராத குரலும்
நேற்று என் அலைபேசியில்...,

சம்பிரதாய நலன்
விசாரிப்புகளுக்குப் பின்
பேசிட வார்த்தைகள் ஒன்றும்
கிடைப்பதாய் இல்லை
இருவருக்கும்!

தமயனுக்கே
உரிய தொனியில்
ஒரு அதட்டலும்
அறிவுரைகளும் கூறி முடிக்க

தனது தேவை 
என்னவென்று
முதன் முறையாக
வினவுகிறான் தம்பி ..,

தனது அன்றாட பொழுதுகள்
கழியும் விதம் பகிர்வதும்
எனக்கும் நியாயமாய் படவில்லை!

தம்பியும் பெரிதாய் ஒன்றும்
கேட்டுவிடவில்லை..,

அண்ணா தீபாவளிக்கு
எனக்கு ஒரு பண்ட்
ஒரு சட்டை!

பாவாடை சட்டையில்
இருந்த தங்கையோ
இம்முறை
சுடிதார் கேட்டிருக்கிறாள்..

இதோ இந்த சென்னையில்
இன்று காலை
பற்பசையின்றி
வேப்பமர குச்சி தேடி அலைந்த

என்னை போன்ற
அண்ணன் மார்களின்
நிலைமை தம்பி, தங்கை
அறிய வாய்ப்பில்லை,
சொல்வதும் நாகரீகம் இல்லை!

அறை எண்___

Sunday, October 09, 2011 | 0 comments »


தூண்டப்படாத
விளக்கொன்றில்
குடியிருக்கும் அறையில்

அவனும் அவனுமாகிய
தனிமையும்

விசும்பல் வெளியே
கேளாதிருக்க-தன்
மெளனத்தினால்

சத்தமாய்
இரைந்து கொண்டிருந்தான்
மனதில்!

மனித உருவம்
பொரித்த வியர்வை
வரைபடம் ஒன்று

முதுகின் கீழ்
கால்கள் ஒடுக்கி
படுத்திருக்க

அவன்
தனித்திருப்பது அறிந்து
ஒற்றை சன்னலும்
தாழிட்டுக் கொண்டது

ஏமாற்றத்தின்
பிம்பங்கள் யாவும்
கருப்பு வெள்ளைக்
காட்சிகளாய்

அவன் கன்னத்தில்
பிரதிபலிக்கும்
கண்ணீர் ஒவியங்களாய்

தூரிகையின்றி
வரையப்படும்
இரவுக் காகிதங்கள்

இன்றும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது...

அறை எண் மாறினாலும்
நிகழ்வுகள் மாறாமல்!
நினைவுகள் மாறாமல்!

கைபேசி

Monday, October 03, 2011 | 0 comments »

பாதி தூக்கம் கலைத்து
என் காதுகளில்
அமர்ந்து கொள்கிறாய்..,

அனுமதியின்றி
என் விரல்களால்
தீண்டப்படுகிறாய்

எவனோ ஒருவன்
தூக்கம் தொலைக்கிறான்
என் தூக்கம் கலைக்க
தூது போகிறாய்..,

என் மார்பினிலே அதிக
நேரம் தவழ்கிறாய்
என் முதுகினில்
மாட்டிக் கொண்டு
தவிக்கிறாய்!

சில நேரம் மென்மையாய்
பாட்டிசைக்கிறாய்..,
நான் சோர்வடைந்தால்
மெளனமாக இரைந்து
சுழலுகிறாய்..,

என்னோடு அதிகமாய்
படுக்கையில்
புரண்டவள் என்பதனால்

சாட்சிக்காக பெருவிரல்
ரேகை வேறு
வாங்கிக் கொள்கிறாய்

சூடாகிறாய்
சூடேற்றிப் பார்கிறாய்
உன் உடல் மீதான தாகம்
எனக்குத் தீர்ந்திருக்குமோ?

இன்னோருவன்
கைத் தீண்டலில் நீ
என்னொருத்தி
உடல் மொழியில் நான்!

Blogger Wordpress Gadgets