கோடை விடுமுறையில்
வருடா வருடம்
ஊர் வந்து திரும்பும் போது
வணங்கிப்போகும்
சுடலைமாடன் கோயில் முன்
பூ உதிர்ந்த நாரில் அவளோடு
தாலி கட்டி விளையாடிய
நாட்கள் மட்டும்
உதிராமல் இருக்கிறது
மனக்கண்ணில்!

இறக்கை அடித்துக் கிடக்கும்
கோழி ஒன்றின் உடலும்
பித்து பிடித்து விட்டதாய்
புலம்பி அழும் தாயும்
முணுமுணுத்தபடியே
எதிரில் ஒரு மந்திரவாதியும்
புகை நிறைந்து வடியும்
அந்த அறையில்
புள்ளியென நானும்
மீதம் யாவும்
அவள் நினைவுகளும்!

காத்திருப்பதில் உடன்பாடில்லை
நீண்ட பெருமூச்சில் அதன் தளர்வு தெரிவதனால்
நினைத்திருக்க முடிவுசெய்திருக்கிறேன்

அடர்ந்த சாலையில் பொழிந்த மழையில்
பீறிட்டு மிளிரும் விளக்கு வெளிச்சத்தில்
குடையினை மிஞ்சிய சாரலில்
நனைந்த படி அதனை ரசிக்க வேண்டும்

தூரத்தில் ஊளையிடும் தெரு நாயின்
குரலொன்று கேட்டபடி மீதம் யாவும்
மயான அமைதி கொண்டிருக்க வேண்டும்

சாலையில் விரைந்தோடும்
மழை நீரின் இரைச்சல்கள்
சரசரவென காதுகளை துளைக்க வேண்டும்

பச்சை வாடை உதிர்த்து
எரியும் விறகுகளின் ஊடே
சடலம் அமைதியாய் உறங்கட்டும்

வேறொரு உருவில் வேறொரு உடலில்
வேறொரு கனவில் உலவ காத்திருக்கிறேன்
நினைத்திருப்பதிலும் உடன் பாடில்லை...

புள்ளிகளாக
வட்டமாக வளைவுகளாக
கட்டமாக கோடுகளாக
எத்தனை எத்தனையோ
எழுதிப்பார்க்கிறேன்..

மெளன கூச்சலுக்கான
வடிவமோ உருவமோ
வார்த்தையோ தாலாட்டோ

முடிச்சிலும் இல்லை
மூச்சிலும் இல்லை
நிறமிழந்து நிற்கும்
இந்த பட்டாம்பூச்சிக்கு!

இடுப்பில் குழந்தையுடனும்
உடல் மூடாத ஆடையுடனும்
கையேந்தி நின்றிருந்தாள்
அந்த சிறுமி!

தினந்தோறும் இதே
பாதையில் பயணிப்பவர்கள்
வழக்கமாய் வரும் சிறுமி என
முகம் திருப்பிக் கொண்டும்

இன்னும் சிலர் இது இரண்டும்
வாடைக்கு விட்ட குழந்தையென
அச்சிறுமியின் காதுபட பேசியும்
கடந்து சென்றனர்

சொகுசு காரில் செல்பவனோ
தன் காரினை தொட்டுவிடாதே எனவும்
கண்ணாடியை முழுமையாய்
அடைத்தும் திட்டி அனுப்புகிறான்

குழந்தைக்கு பசியென வயிற்றைக்காட்டி
கையேந்துபவள்
அன்றேனோ தன் வயிற்றினையும் பிசைந்து
கையேந்துகிறாள்

அவளின் வாடிய முகமும்
உள் சென்ற குரலும்
யார் காதுகளையும் எட்டியும் எட்டாமலும்

சிக்னலில் ஒவ்வொன்றாய்
கழியும் நொடிகளை கணக்கிட்டபடி
நிற்க

இவள் பருவம் எட்டிய நிமிடங்களை
சொல்லியனுப்ப பள்ளி ஆசிரியையோ
தோழிகள் கூட்டமோ

பக்கத்து வீட்டு அக்காவோ
தாயோ பாட்டியோ
வாய்க்கவில்லை இவளுக்கு!

உடலை பாளமாக கிழித்து
அதில் பாடை செய்து
இறுதி ஊர்வலம் நடத்துகிறீர்களாம்
கேள்வியுற்றேன்

குழந்தை ஒன்றின் கையில் கொடுத்து
அந்தரத்தில் கயிற்றில்
ஆட சொல்கிறார்களாம்
அதையும் கேள்வியுற்றேன்

இளம் பிராயத்தில் வெட்டி சென்று
சுபதினங்களில் பந்தக்காலிட்டு
கொண்டாடுகிறீர்கள்
என்பதையும் கேள்வியுற்றேன்

இசை தட்டுகளில்
குரலடைத்து விற்பனை செய்வதும்
மெய் மறந்து ரசிப்பதையும்
கேள்வியுற்றேன்

வீதியில் வாசித்து
ரூபாய் பத்தென
இசையினை விற்பவனை
போலி எனவும் வணிகமெனவும்
அவமதிப்பதையும் கேள்வியுற்றேன்

தணலொன்று விழுந்து
அதிலெழுந்த என் அழுகுரலினை
தொலைக்காட்சியில் கண்டு உச்சி கொட்டி
கடந்து செல்கிறீர்களாம் கேள்வியுற்றேன்!
வாழு வாழ விடு வாழ வை!

கட்டிலின் முனையில்
இரத்தக்கரை படிந்திருப்பதாய்
காலையில் அறையின்
போர்வை மாற்றிய
தங்கு விடுதியின் பணியாளன்
கண்ணில் படுபவர் யாவரிடமும்
முனுமுனுத்துக் கொன்டிருக்கிறான்!

வழிபாடு

Wednesday, February 29, 2012 | 0 comments »

கண்மூடி கை கூப்பியபடி
மர இருக்கையில் அமர்ந்து
கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்
அந்த பாட்டி

கூட்ட நெரிசல் இல்லை
ஒலிப்பெருக்கி இல்லை
முனுமுனுப்பு இல்லை
நேரக்கணக்கு இல்லை
போதனை இல்லை
காணிக்கை தட்டு இல்லை

பூட்டிய கோயில் முன்னமர்ந்து
பிராத்தனை செய்வதில் தான்
எத்தனை அமைதி
எத்தனை நிம்மதி!

சாலையை பார்த்தபடி
மூன்றாவது மாடியில்
அமைந்திருந்தது அவனது அறை

முழங்கை இரண்டும்
பால்கனி தடுப்பு சுவற்றில்
ஊன்றிய படியோ,

குதிக்கால் இரண்டும்
தடுப்பு சுவற்றில் நீட்டியபடியோ
புத்தகம் ஏந்திய மடியோடு
மெளனத்திருப்பான்...

அக்குள் வழியே
காற்று வாங்குவதென்றால்
அவனுக்கு பிரியமாய் இருக்கலாம்
வெள்ளை பனியன் அணிந்திருப்பான்

கருப்பு நிற பேனாவினால்
எதையாவது
கிறுக்கிக் கொண்டிருப்பான்

அவன் இருக்கையின் பின்புற
சுவற்றில் எதோ ஒரு போராளியின்
புகைப்படம் ஒன்றினை ஒட்டியிருப்பான்

அதிகம் தொலைபேசியில் பேசமாட்டன்
இரவு விரைவாகவே
விளக்கணைத்து தூங்கிவிடுவான்

இரண்டு நாள் முன்பு
வாடகை தருகையில் கவனித்தேன்
மணிபர்ஸில் ஆணுறை
ஒன்று வைத்திருந்தான்

நேற்று மாலை மளிகை கடையில்
எடைக்கு போட்ட செய்தித்தாளின் நடுவே
"முடிவுறா கவிதைகள்"
என்றொரு தலைப்பிட்ட டைரி இருந்ததாம்

அவனின் இறப்பிற்கான
விசாரணை தொடரும்!

Blogger Wordpress Gadgets