நகரத்து வீதிகளின் அகலத்திற்கு
முன் நடந்து கொண்டிருக்கிறாய்
பாதத்தினுள் சிக்குண்டு திரும்புகிறது
அணியமாட்டேன் 
என்று மறுத்த ஜீன்ஸ்
வெட்டுவதற்கு முன்
சுட்டிக்காட்டி பிய்த்த
கொய்யாமொட்டு
வெய்யிலில் ,மிளிரும்
சிலந்தி வலையில்
தரை தொடாதிருக்கும்
இலை
எது நீ
எது நான்
கோபம் தணிய
கோபப்படு
உப்புச்சுவைக்கு...

இடைவேளை

Sunday, February 28, 2016 | 0 comments »

அறுவடைக்கால கதிரென
எடை தாங்காதிருக்கிறது
கூட்டல் குறியென
இருவரும் உள்ளங்கை
பற்றிகொள்கிறோம்
இடைவெளியில்
உன் நரம்புகள் தாழ்பாள்
தோட்டாக்கள் பாய்ந்த
மிளா ஒன்று
கனவில் குறுக்கிடுகிறது
வாய் நிறைந்த உமிழ் நீரை
சன்னல்வழி துப்பியபின்
இரு தொடைகளை
நெஞ்சோடு ஒடுக்கிக்கொள்ள
நெருக்குகிறேன்
சந்தேகத்தில் பார்த்துக்கொண்டேன்
மொபைல் டேட்டா
இயக்கத்தில்தான் இருக்கிறது

Thursday, February 25, 2016 | 0 comments »

முத்தம்
விரல் நுனியிலும் இருக்கிறது
கீழ்த் தாடை
அசைவது தெரியாதவாறு 
பபிள்கம் மென்னுகிறாய்
கன்னத்தை
அழுத்திப் பிடிப்பேன் என
உன் ஸ்பீடாமீட்டர்
வேண்டுமென்றே குறைகிறது
உந்தித் துப்பிவிட்டு
ஆள்காட்டி விரலை
மடித்து உயர்த்துகிறாய்
முத்தம்
உதடுகளால் மட்டும்
கொடுக்கப்படுவதில்லை

நதி
கரை தொலைக்கும் வேகத்தில்
நகம் களைகிறாய்
உன் புன்னகைக்கு
பெயர் மாறிக்கொண்டிருக்கிறது
சாமர்த்தியம் என்ற முடிவு
உனக்கும் அசூசையாக
இருக்கிறது தானே?
பயண வாகனம்
மாறிக்கொண்டிருக்கின்றன
சிறு இடைவேளை
நீல நிற டிக்
சரிபார்க்கப்படுகிறது
தூங்கியதற்கான மன்னிப்பு
அதன் சாக்கில்
காலை வணக்கம்
மற்றும்
கொஞ்சம் நீட்டித்தல்
புகைப்படம் மாற்றுவோம்
தற்காலிகமாய் பயன்படுத்தியதிலிருந்து
தவறி விழும் ஸ்மைலிகள்
அணைந்த விளக்கின் சூடு
தொடுதலில்
போ போ போ போ போ(டி,டா) லூசு
நீ தான்
ஏன்
ஒன்னுமில்லை
நம்பிட்டேன்
விழுங்கப்படும் வார்த்தைகளுக்கு
கேடி, ஃப்ராடு என்ற பெயருண்டு
சரி
சில
முன்முடிவுகளை, யோசனைகளை
தகர்த்துவிடுகிறாய்
கோச்சிகிட்டியா
புறாக்களும்
தானியங்கள் தான்
ஸ்மைல் ப்ளீஸ்

கோடு வரைதல்

Tuesday, February 23, 2016 | 0 comments »

நீ எதிரில் அமர்ந்து,
எடுத்துப்போடாமலிருந்த
இரயில் பயணச்சீட்டில்
வளைவு நெளிவுகளாய்
கோடுகள் வரைவாய்
உனக்குப் பேனா பிடிக்காது
காதுக்கும் கண்ணுக்குமான
இடைவெளியில்
பென்சில் நிற்பது போன்று
புகைப்படம் அமைவதாய் இல்லை
வேண்டுமென்றே வேகமாகக் கோதுவாய்
பர்ஸைத் திறக்காதே என்று
கை அலம்பச் செல்வாய்
புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறாய்?
காத்து நிற்பவன் குறித்துச் செல்வான்
நெளிவுகளை உதடுகளாக்கி
முத்தமிட்ட அன்று
கற்றைக் கூந்தலைக்கோதி
நான் விரும்பும் இடத்தில்
நிறுத்தினாய்

உன் அறையெங்கும் 
சன்னல்கள் நிறைந்திருக்கும்
பிம்பம் எழுவதாய் 
செய்தி அனுப்பியிருந்தாய்
மணி 1:47

கண் அயந்திருக்கமாட்டேன் என்பதை
உன் அலைபேசியில்
விழிப்புக் காட்டிக் கொடுத்திருக்கும்

ஐ லவ் யூ-வை
முத்தமாகவும் கடத்த வேண்டியிருக்கிறது

தொடுதலுக்கும், அணைப்பிற்கும்
பரபரக்கும் உள்ளங்கையில்
தற்சமயம் கன்னம் வைக்கிறேன்

தோன்றும்போது தலைவருடு

நதியைப் பெயர்த்தெடுக்கும் 
பிரயர்த்தனத்தோடு
கடல் குடிக்கிறாய்

பாத மண் தட்டிவிட்டு
ரகசியமாய் திரும்புகிறாய்

முட்டிவரை மடித்துவிட்ட ஜீன்ஸ்
சில்லிடும் காற்றில்
மனம் அவிழ்க்கிறது

உதிர்த்த மனமின்றி
அடுத்த சிக்னல் விரைகிறாய்
ஆரஞ்சு விளக்கு குழப்புகிறது

Blogger Wordpress Gadgets