பருகுதல்

Friday, December 02, 2016 | 0 comments »

மீசை வரையும் பழங்கஞ்சி போல 
உனைப்பருகி 
சுட்ட கருவாடென 
உடலைத் தொட்டுக்கொள்ள வேண்டும்

வரப்பினிடையே விரைந்தோடும்
நீர்க்கால்களின் நடுவே-உன்
தொட்டாச்சிணுங்கி முதுகைக் கிடத்து

தென்னங்கீற்று இடைவெளியில்
உன் முகம் மோதும் வெய்யிலை
இடவலம் ஒதுங்கும் முலைகளின் நடுவே
சாரைப்பாம்பின் நகர்வென திருப்பி விடு

இப்போதைக்கு
மேற்கிலிருந்து இறங்கி வரும் நிழலை
பலாச்சுளையென பருகலாம்.


நிறங்களின் வழியே
ஊடு பாயும் உடலை
கருப்பு வெள்ளையென
பிரதியெடுத்துக் கொள்கிறேன்

விரல்களின் நீட்சி
பற் தடங்களுக்குத் தப்பிய பாகம்
நாவின் முனகல்கள்

கண்கள் வர்ணம் பாய்ச்சும்
அபூர்வத்தை
ஓர் விடியலில் நிகழ்த்தியபின்
மெளனித்திருந்தோம்
உடல்களின் வழியே

நிழலாடுதல்

Friday, December 02, 2016 | 0 comments »

அங்கம் பிரதிபலிக்கும்
ஆடைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
பின்னிருந்து பிம்பம் உடைக்கும் 
விளக்கொளியின் ஊடுருவல்
காமத்திற்குத் தப்புவது என்றும்
காமத்திற்குத் தாவுவது என்றும்
ரசனை என்றும்
நீண்ட விவாதமது

கவனம் குவியாது 
'சேனல்' மாற்றிக்கொண்டிருந்தாய்

மழைக்கு எதிரியாக பாவிக்கும்
ஆடையின் நிறங்களை
பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம்

நிறங்கள் ஒரு வகையில்
சாபம் எனும்போது
நிழலாடத் தொடங்கியிருந்தாய்

கண்ணிலிருந்து தவறினாலும்
கழுத்தில் தொங்கும் முன்னேற்பாடுடன்
கண்ணாடி

உயர் கட்டிடங்களுக்கான
இடைவெளியில் விழும் வெய்யிலைத்
தாண்டும் சீறுடைகள்

தெரியமறுக்கும் அலைபேசி டிஸ்ப்ளே

பள்ளிக்கு நடந்து செல்லும்
வாய்ப்பினைப் பெற்றவர்கள்
பாக்கியவான்கள்

புல்லட் கிலோமீட்டருக்கு
எவ்வளவு கிடைக்கும்?

புதிய எண்ணில் இருந்து
ஒரு ஹாய்

எல்லாம் நினைப்பு தான்

முத்தம் உங்களை அழைக்கும்போது
அடிநாவின் எச்சில்
முகம் வரைகிறது

பரிட்சயமான/ பரிட்ச்சயமாக்க
உங்கள் இருப்பிடத்திலிருந்தே
அவ்வுதட்டை திறக்கிறீர்கள் 


கூடுமானவரை விழுங்கிவிட்டு
அருகிலிருக்கும் தண்ணீர்ப் பாத்திரத்தை
வேகமாய் கவிழ்க்கிறீர்கள்

உமிழின் கணம் உடலில் உடுத்தி
மெதுவாய் தலை திருப்புகிறீர்கள்
விடுவதாய் இல்லை வெய்யில்

பென்சில் சீவுவதற்கு என்று
அறையில் சிறிய கத்தி ஒன்று
துருவேறாமல் பாதுகாக்கப்படுகிறது

எழுதாமலே எப்படிக் கறையும்?
அல்லது
எப்படி முனை மழுங்கும்?


முனை ஒடிக்கும் பொழுதெல்லாம்
அதனோசை எழாதிருக்க
கைக்குட்டையின்
கடைசி மடிப்புவரை மடித்து உடைக்கிறேன்

தகவல் சொல்வதற்கும்
அனுமதி கேட்பதற்குமான
சூட்சமத்தை,
இல்லை
சுதந்திரத்தை
கொடுப்பது பிழை
எடுப்பது தவறு

இயல்பு நிரந்தரமானதல்ல

தேகங்கள் கலைந்த பின்பு
சூடிக்கொண்ட ஆடைகள்
அவரவர் நதியில் குமிழ் உடைக்கிறது
நுகரப்படாத வாசனையொன்று
நினைவிலிருந்து அது நீ என்றதன்
இரவில் முன்பு கானல்
பின்பு பனி

கணுக்கால்வரை அனுமதிக்கும் அலையில்
கரையொதுங்கிய வலைத்துண்டு
காலில் சுற்றிக்கிடந்ததை
பதற்றம் குறையாமல் சொல்லிக்கொண்டிருந்தாய்

நகத்துண்டுகள் பற்களில் பிடிபடாதிருக்க
நீ தேர்ந்தெடுத்த நகப்பூச்சு நிறம்
கண்மூடி முத்தமிடும் வெளிச்சம் கொண்டது

நிழலை அடையாளம் காணும் சூட்டினை
பந்தெனெ உருட்டி
நாசியில் வைத்து விளையாடுகிறாய்

கொலுசின் இடைவெளியில்
பெருவிரல் நுழைக்காதே
உன்னிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது

நதியின் பிறவிகுணம் குறித்து
விவாதிக்க கோடை தேவையாக இருக்கிறது.

ஐஸ் கட்டிகள் தவிர்க்கப்பட்டு ஒன்று
ஐஸ் கட்டிகள் மற்றும் சீனி குறைத்து ஒன்று

உண்மையை உண்மையென்று நம்புவதற்கு
டெசிபல் குறைந்த சந்தேகமும் கூட வருகிறது

உனக்கு மிடறு
எனக்கு மடக்கு

உனக்கு மடக்கு
எனக்கு மிடறு

நினைவில் வைத்துக் கொள்ளட்டுமென
உன் பயணங்களின் ஊடே 
என்னைக் காண அனுமதிக்கிறேன்

உற்சாகம் ததும்பிய மெளனத்தில்
புதிர் ஒன்றைக் கட்டுகிறாய்
தூக்கணாங்குருவிக் கூடென

விளக்கங்கள் தேவையற்றிருப்பதாய் நம்பும்
நேரடி விவாதங்களை
விரலிடுக்குகளில் பதியம் வைக்கிறாய்

கண்ணாடியில் கல்லெறிந்து
பிம்பங்கள் பரப்பிய உரையாடலில்
காயங்கள் இல்லை

குதிங்கால்வரை போர்த்திக்கொள்ளும் ஆடையினுள்
உன் கால்கள் போகும்பாதையை
முக்கோணமாய் வரைகிறேன்

நிர்வாணம் காணாத புணர்தலின் வழியே
காயங்கள் மறைந்ததன் ரகசியம் உடைக்கிறாய்
பங்கிட்டுக்கொள்ள என்னஇருக்கிறது?

கருணை கேடயமற்றது

நீ கருணையற்று 
மிச்சம் வைத்திருக்கும் நிழலின் 
கொடிய மிருகத்தை 
மடிப்புகளில் விட்டிருக்கிறாய்

இருக்கையின் வலது பக்கம்
சிதறிக்கிடக்கும் நகத்துண்டுகள்
மான் மேயும் லாவகங்கள்

முள் பிரிக்காது உண்ணும்
நெத்திலி மீன்
நம்பிக்கைப்பற்றி கேட்கிறாய்

பிறகு
காமச்செதில்களை உதிர்த்து
கண்களில் பொருத்திவிட்டு
'அப்புறம்' என்கிறாய்

அலை மடிப்புகள் உறைந்து கிடக்கும் 
புகைப்படம் ஒன்று 
உன் சொல் விழுங்களை 
நினைவூட்டுகிறது 

நட்சத்திரங்களின் நகர்வென
உலா வருகிறாய்

மலர அனுமதிக்காத
சிகப்பு மொட்டு

கண் தவிர்த்து மூடிக்கொள்ளும்
எவளோ ஒருத்தி

மேலும்
நினைவுகள் கவனச்சிதறல்

நீ
கவனக்குவியல்

நீ
ரகசிய உளவாளியாக
நியமிக்கப்பட்டிருக்கிறாய்
உனக்குள் உனக்கு

அனுமதித்தல்
ஒருவகை(யில்) சிறை

கேள்விகள் தீர்ந்தபாடில்லை

முத்தங்களின் கடவுச்சொல்
கண்டறியப்படாமல் இருக்கிறது

உன் நிபந்தனைகள்
சொற்களற்று இருக்கிறது

என் நிலத்திற்கான வேலி
தடயமின்றி
அப்பால் சென்றுகொண்டிருக்கிறது

நீ
ஓங்கிச்சாத்த மறுக்கும் கதவில்
தாழ்பாள் இல்லையென்று
சூசகமாய் அறிவித்தது
எதன் பொருட்டு?

முத்தம்
அனுமதி கேட்பதில்லை
தெரியும் தானே?

முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஏன் இவ்வளவு 
தீவிரமாக இருக்கிறாய்

நத்தையின் ஓடு சூரியச்சூட்டில்
உடைவதாய் கனவு நேற்று

அதன் பிங் நிறத் தசையை
உன் கீ செயினிலிருந்து
யோசிக்கிறேன்

முத்தமிடாமல் கிளம்ப எத்தனிக்கையில்
பைக் சாவியை எடுத்த இரவு அது

திருப்பங்கள் அப்படியே தான் இருக்கிறன

நகரத்து வீதிகளின் அகலத்திற்கு
முன் நடந்து கொண்டிருக்கிறாய்
பாதத்தினுள் சிக்குண்டு திரும்புகிறது
அணியமாட்டேன் 
என்று மறுத்த ஜீன்ஸ்
வெட்டுவதற்கு முன்
சுட்டிக்காட்டி பிய்த்த
கொய்யாமொட்டு
வெய்யிலில் ,மிளிரும்
சிலந்தி வலையில்
தரை தொடாதிருக்கும்
இலை
எது நீ
எது நான்
கோபம் தணிய
கோபப்படு
உப்புச்சுவைக்கு...

இடைவேளை

Sunday, February 28, 2016 | 0 comments »

அறுவடைக்கால கதிரென
எடை தாங்காதிருக்கிறது
கூட்டல் குறியென
இருவரும் உள்ளங்கை
பற்றிகொள்கிறோம்
இடைவெளியில்
உன் நரம்புகள் தாழ்பாள்
தோட்டாக்கள் பாய்ந்த
மிளா ஒன்று
கனவில் குறுக்கிடுகிறது
வாய் நிறைந்த உமிழ் நீரை
சன்னல்வழி துப்பியபின்
இரு தொடைகளை
நெஞ்சோடு ஒடுக்கிக்கொள்ள
நெருக்குகிறேன்
சந்தேகத்தில் பார்த்துக்கொண்டேன்
மொபைல் டேட்டா
இயக்கத்தில்தான் இருக்கிறது

Thursday, February 25, 2016 | 0 comments »

முத்தம்
விரல் நுனியிலும் இருக்கிறது
கீழ்த் தாடை
அசைவது தெரியாதவாறு 
பபிள்கம் மென்னுகிறாய்
கன்னத்தை
அழுத்திப் பிடிப்பேன் என
உன் ஸ்பீடாமீட்டர்
வேண்டுமென்றே குறைகிறது
உந்தித் துப்பிவிட்டு
ஆள்காட்டி விரலை
மடித்து உயர்த்துகிறாய்
முத்தம்
உதடுகளால் மட்டும்
கொடுக்கப்படுவதில்லை

நதி
கரை தொலைக்கும் வேகத்தில்
நகம் களைகிறாய்
உன் புன்னகைக்கு
பெயர் மாறிக்கொண்டிருக்கிறது
சாமர்த்தியம் என்ற முடிவு
உனக்கும் அசூசையாக
இருக்கிறது தானே?
பயண வாகனம்
மாறிக்கொண்டிருக்கின்றன
சிறு இடைவேளை
நீல நிற டிக்
சரிபார்க்கப்படுகிறது
தூங்கியதற்கான மன்னிப்பு
அதன் சாக்கில்
காலை வணக்கம்
மற்றும்
கொஞ்சம் நீட்டித்தல்
புகைப்படம் மாற்றுவோம்
தற்காலிகமாய் பயன்படுத்தியதிலிருந்து
தவறி விழும் ஸ்மைலிகள்
அணைந்த விளக்கின் சூடு
தொடுதலில்
போ போ போ போ போ(டி,டா) லூசு
நீ தான்
ஏன்
ஒன்னுமில்லை
நம்பிட்டேன்
விழுங்கப்படும் வார்த்தைகளுக்கு
கேடி, ஃப்ராடு என்ற பெயருண்டு
சரி
சில
முன்முடிவுகளை, யோசனைகளை
தகர்த்துவிடுகிறாய்
கோச்சிகிட்டியா
புறாக்களும்
தானியங்கள் தான்
ஸ்மைல் ப்ளீஸ்

கோடு வரைதல்

Tuesday, February 23, 2016 | 0 comments »

நீ எதிரில் அமர்ந்து,
எடுத்துப்போடாமலிருந்த
இரயில் பயணச்சீட்டில்
வளைவு நெளிவுகளாய்
கோடுகள் வரைவாய்
உனக்குப் பேனா பிடிக்காது
காதுக்கும் கண்ணுக்குமான
இடைவெளியில்
பென்சில் நிற்பது போன்று
புகைப்படம் அமைவதாய் இல்லை
வேண்டுமென்றே வேகமாகக் கோதுவாய்
பர்ஸைத் திறக்காதே என்று
கை அலம்பச் செல்வாய்
புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறாய்?
காத்து நிற்பவன் குறித்துச் செல்வான்
நெளிவுகளை உதடுகளாக்கி
முத்தமிட்ட அன்று
கற்றைக் கூந்தலைக்கோதி
நான் விரும்பும் இடத்தில்
நிறுத்தினாய்

உன் அறையெங்கும் 
சன்னல்கள் நிறைந்திருக்கும்
பிம்பம் எழுவதாய் 
செய்தி அனுப்பியிருந்தாய்
மணி 1:47

கண் அயந்திருக்கமாட்டேன் என்பதை
உன் அலைபேசியில்
விழிப்புக் காட்டிக் கொடுத்திருக்கும்

ஐ லவ் யூ-வை
முத்தமாகவும் கடத்த வேண்டியிருக்கிறது

தொடுதலுக்கும், அணைப்பிற்கும்
பரபரக்கும் உள்ளங்கையில்
தற்சமயம் கன்னம் வைக்கிறேன்

தோன்றும்போது தலைவருடு

நதியைப் பெயர்த்தெடுக்கும் 
பிரயர்த்தனத்தோடு
கடல் குடிக்கிறாய்

பாத மண் தட்டிவிட்டு
ரகசியமாய் திரும்புகிறாய்

முட்டிவரை மடித்துவிட்ட ஜீன்ஸ்
சில்லிடும் காற்றில்
மனம் அவிழ்க்கிறது

உதிர்த்த மனமின்றி
அடுத்த சிக்னல் விரைகிறாய்
ஆரஞ்சு விளக்கு குழப்புகிறது

கண்ணி

Sunday, January 31, 2016 | 0 comments »

நீ ஒரு ரகசிய குறியீடு
அது
நானும் கண்டறியாத ஒன்று
தூக்கத்தில்
புலம்பலில்
அவை வரையப்பட்டிருக்கலாம்
சொற்களாலும் கூட..,
வாசலில் கழற்றி கையிலேந்தி
வீட்டிற்குள் போட்டதாய் நினைவு
பிறிதொரு நாளில்
காற்றில் அது
மர்ம முடிச்சு மற்றும்
கண்ணி

Please propose me

Friday, January 22, 2016 | 0 comments »

புருவம் எவ்வளவு அழகு என
மழித்துப்பார்க்கப் போவதாய்
பேசிக்கொண்டிருந்தாய்
உனக்கா எனக்கா என்ற கேள்வி
எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தது
அமர்ந்துப் பேசுவது பிடிக்காதென்ற விவாதம்
உனக்கும் பிடித்திருந்தது
மாதிரி என்றும், போல என்றும்
எதனோடும் ஒப்பிடுவது
பிடிக்கவில்லை என்றாய்
பிறகு
உன் முயற்சிக்குத்தான்
இன்னுமொரு வாய்ப்பு
உனக்கில்லை என்றாய்
Please propose me

நிர்வாணம் ரசிப்பது
காமத்தில் சேராதென்ற விவாதம்.
அடுக்குச் செம்பருத்தியைவிட
ஒற்றை இதழ் தான் பிடிக்குமென்று 
எண்ணெய் காய்ச்ச
ஒவ்வொரு இதழாய் பியித்துக் கொண்டிருந்தாய்
பனியையும்
மெதுவாய் மேலேரும் வெயிலையும்
காட்சிப்படுத்தியிருப்பது அழகென
"பருவமே புதியபாடல் பாடு"
பாடலைப் பார்த்தபடி
எதை எதையோ சொல்லிக்கொண்டிருந்தாய்.
கால் விரல்களின் ஏற்ற இரக்கங்களில்
பனிச்சறுக்கு விளையாடிய நகங்களை
கூர் செய்து பின் மழுங்கடித்த மாலை
அப்படியேதான் இருக்கிறது...
பலிபீடத்தை பாலில் சுத்தம் செய்கிறார்கள்

உனக்கு இரவை அறிமுகப்படுத்த
தேவையில்லாதிருந்தது
ஒரு கட்டத்திற்குப் பிறகு
மின்விசிறி ஓடும் சத்தம் கூட
இரைச்சலாகிப் போனது
செருப்பில்லாமல் நடந்த வரப்பில்
புற்கள் பாதம் அளைந்ததை
அதே கூச்சத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாய்
உச் கொட்டியதை
முத்தமில்லையென நிரூபிக்க
அதிக நிமிடங்கள் பிடிக்கவில்லை
யார் முந்திக்கொண்டதென்ற
யோசனை தேவையற்றிருக்கிறது
பச்சை வட்டத்தில்
வலப்பக்கம் நோக்கி நிற்கும்
வெள்ளைநிற முக்கோணம்
அழுத்தப்படாமல் விட்டிருப்பதின்
சூட்சமம் தான் புரிந்தபாடில்லை
மிருதுவாய் அறுபடுகிறது
பகலிடமிருந்து இரவு

இரு நாட்டிற்கிடையேயான எல்லைக்கோடு
வீட்டிற்குள்ளிருந்து
சாலையை கடக்கும் புகைப்படத்தை
வெகுவாக சிலாகிக்கிறாய்
முதுகைத் தட்டிக்கொடு
அல்லது தொடு என
வழியனுப்பும் போதெல்லாம்
ரேகைகள் படர்வதற்குத் திட்டுவாய்
பரவாயில்லை
இன்றையப் பேச்சை நீட்டிக்க
உனக்கொரு செய்தி கிடைத்திருக்கிறது என்றேன்
மெளனத்தில் ஊடாடும் நினைவுகளை
உனக்கும் சேர்த்து யோசிக்கிறேன்
சொல்லிக்காட்டுவதில்
என்ன நிகழ்ந்துவிடப் போகிறது
அழைப்பு ஒன்று காவல் இருக்கிறது
பிடி கொடுக்காமல்

சூது

Tuesday, January 12, 2016 | 0 comments »

சம்பிரதாய முத்தம் பற்றி
திரைப்பட விழாக்களைக் காட்டி
சொல்லிக்கொடுக்கிறாய்
விடுமுறை நாட்களில் மட்டுமே
சந்திக்கொள்ளும் நம் பொதுச்சூழலில்
இப்படியாவது கன்னம் வை என்கிறாய்
மல்டி காம்ப்ளெக்ஸ் அல்லது
ஜூஸ் கடைக்குள் நுழையும்
இடைவெளி தூரத்தில்
கண் பார்த்துப் பேசச் சொல்லிக்கொடுகிறாய்
மேலும்
நீ வெளிக்காட்ட அனுமதிக்காத
சாமர்த்தியம் ஒன்று மிச்சமிருக்கிறது
என் விலா எலும்புகள் நொறுங்க அணை

Blogger Wordpress Gadgets