தனது உறக்கத்திற்கான அனுமதி வேண்டி
குறுஞ்செய்தியொன்றினை
என் அலைபேசியில் கிடத்தியிருக்கிறாள்

இன்னமும் உரையாடல் நீளவேண்டுமென்ற
மனதின் தவிப்பினை தவிர்த்து
அவளுக்கான இனியஇரவினை சொல்லியாயிற்று

முன்னமே நிறைந்துகிடக்கும்
நேற்றைக்கும் இன்றைய இரவிற்குமான
இடைவெளியின் பரிமாற்றங்களை

வலக்கையை தலைக்கு கொடுத்தபடி
மெல்லிய வெளிச்சத்தில்
குறுஞ்செய்தியினை வாசிக்கத்துவங்குகிறேன்

கடத்திப் போகும் நிமிடங்களில்
காதலோ காத்திருத்தலோ முத்தமோ
வந்துவிடாதா என்றொரு ஏக்கத்தில்....

முந்தைய இரவுகளில்
இன்றாவது வருமென காத்திருந்து
அவளும் தூங்கிப்போயிருக்கலாம்!

உன் ஈரக்கூந்தலில் துளிர்விடும்
காம அதிர்வுகளை
நீர் உலர்ந்த உதட்டினில்

அனிச்ச மலரினை ரசித்தது மீறி
மலையினை மறைக்கும் மஞ்சரியாய்
உள் நுழைத்து ஊற்றெடுக்கிறது காமம்

தெளிநல் நீரோடையில்
பொறுக்கிடும் கூழாங்கற்கள் போல
நாவெனும் கை பரவுகிறது
மார்புக்கு மேலாடும் நீர்த்துளிகளுக்கு

மோதிக்கொள்ளும் கால் பெருவிரல்கள்
கால்கள் மேலேர
பின்னிடையிறங்கி தசையமுக்குகிறது கைகள்

அடர் மூச்சின் சூட்டினில் கலையும்
மீசை ரோமங்களை கடித்து
தோள் பற்றிக்கொள்கிறது பற்கள்

பூனைமுடிகள் சிலிர்க்கும் முதுகில்
விரல்கள் படர
மெத்தை நனைக்கிறது ஏனைய துளிகள்!

ஒற்றை நாணயம்

Saturday, September 01, 2012 | 0 comments »

அவசரமாய் கையுதறிச்சென்ற
உன் வளையல் கைகளின் ஓசையினை
காது நிரப்பிக் கொண்டிருக்கிறேன்

உன் பின்னங்காலிலிருந்த
ஒரு தீக்காயத்தை காண நேர்ந்தது
நீ பாவாடை சட்டையிலிருந்தாய்

பின்னெப்பொழுதாவது
தழும்பின் கதை கேட்டிடவும்
எப்படித்துவங்குவதெனவும் யோசித்திருந்தேன்

காத்திருப்பின் ஆயுளை
நிமிடங்களாக நொடிகளாக
கணக்கிடமுடியாதொரு இப்பொழுதில்

உன் ஒற்றை ரூபாயிலிருந்து
மேலேறிய என் வீட்டினுள்
தலை வைத்திருக்கிறேன் வருடம் பதினான்கு!

சன்னலின் திரைச்சீலை விலக்கி
வீதியில் விழுந்துகிடக்கும்
மின்சார ஒளியில் நீளும்

யாரோ இருவரின் கை கோர்த்த
நிழல்களும்
வெகுநேரமாய் காத்திருக்கும்
தனியொரு நிழலும்

வாகனங்கள் சத்தம் நின்றிருந்த
சாலையின் இருபக்கங்களிலும்
நடப்பதுமாய் நிற்பதுமாய் பிம்பங்கள்

தூரலுக்கோ மழைக்கோ அடிபோடும்
மேகக்கலவியும் காற்றசைவும்
கால்மேல் கால்போட்டு நீ புத்தகம் வாசிப்பதை

கன்னம் நனைத்தபடி
உருளும் மேற்சொன்னகாட்சிகளை
வேறெங்காவது கடத்திவிட எண்ணி

படிக்கட்டுகளில் வந்தமர்கிறேன்
பால்காரன் ஒருவன் கேட்டுச்செல்கிறான்
இனிமேல் நீங்கதான் பால் வாங்குவிங்களா?

எப்பொழுதும் நீ
எனக்காக விட்டுத்தரும்
சன்னலோர இருக்கையில்

காய்ந்த பருத்தி கம்பு
முந்தானை கிழித்துவிட்டதாய்
பனைமரத்தடியிலமர்ந்து சொல்லிக்கொண்டிருந்த
காட்சி படர்ந்து கிடக்கிறது

கஞ்சி வாளிக்குள் ஒவ்வொரு வெங்காயமாய்
உரித்து போட்டுவிட்டு-எனது
கால் பெருவிரலில் கசியும் குருதியில்
மணல் தெளித்து வைத்துக்கேட்டுக்கொண்டிருந்தாய்

அன்றும் சைக்கிளின் பின்னிருக்கையில்
உனக்குப் பதிலாய்
புல்கட்டினையே கிடத்திவிட்டு
பின்னர் வருவதாய் சொல்லியிருந்தாய்

உன் பாதம் அழுத்தி அழுத்தி
பிய்ந்திருந்த ஒற்றைக்கால் செருப்பினை
முருங்கை மரத்திலிருந்து அவிழ்த்து
வீட்டிற்குள் வைத்துவிட்டு

இவ்வருட தீபாவளிக்கும்
அழையாத உன் மகன் வீட்டிற்கு
சென்றுகொண்டிருக்கிறேன்!

நீ பருவம் எட்டிய
ஊர்கிணற்றினை சுற்றித்தான்
எத்தனை கனவுகள்!

இரட்டை நிலவு
அழகாகிறது
ஊர்கிணறு!

நீ துவைத்து முடிக்கும் வரை
வளையோசை
ரசித்திருக்கும் ஊர்கிணறு

உன் தோழிகளுடனான
சிரிப்பு சத்தத்த்தில்
உன் குரலை எதிரொலிக்கிறது
ஊர்கிணறு

கால்கொலுசு தேடியழுத
உன்
விசும்பல்கள் நிறைந்தது
ஊர்கிணறு!

உடைந்த உனது
வளையல் துண்டுகளை தாங்கியது
ஊர்கிணறு

காதோடு பேசிட்ட
ரகசிய கிடங்கு
ஊர்கிணறு!

முத்தத்தில் நழுவிய
உன் ஜடமாட்டி தாங்கியது
ஊர்கிணறு!

நீ
தலை நனைத்த கூந்தல்
துளிகள் தாங்கியது
ஊர்கிணறு!

உனது மெளனத்தின்
விழி ஊற்று
ஊர்கிணறு

நீ
பிசைந்து ஊட்டுகையில்
சிதறிய காதல்
நிறைந்தது ஊர்கிணறு!

நீ ஒட்டிவைத்த
நெற்றிப்பொட்டு தாங்கியது
ஊர்கிணறு!

நீ வாய்கொப்பளித்த
எச்சில் அமிர்தம் தாங்கியது
ஊர்கிணறு!

உன் கூந்தல் உதிர்
பூக்கள் தாங்கியது
ஊர்கிணறு!

உன் நாணத்தின்
நிழல் தாங்கியது
ஊர்கிணறு!

உன் கோபத்தின்
முனுமுனுப்பு தாங்கியது
ஊர்கிணறு!

உன் காமத்தின்
சினுங்கல்கள் நிறைந்தது
ஊர்கிணறு!

நம் காதலின்
காவல் தெய்வம்
ஊர்கிணறு!

நீ மனைவியாக
முடிவெடுத்த இடம்
ஊர்கிணறு!

இதழ் ஒத்தடம்

Saturday, September 01, 2012 | 0 comments »

காக்கா கடியில் துவங்கி
முன்பல்லால்
கடிக்கத்துவங்கியிருக்கிறாள்!

கண்ணை மூடச்சொல்லி
கண்ணை மூடிக்கொண்டு
இதழால் தாழிடுகிறாள்

முத்தமிட்ட தடயமில்லையென
மீண்டும் மீண்டும்
முத்தச்சண்டை!

விரலை கடித்து
இதழுக்கு முன்னேர
உன்னதம் ஓர் உணவு நேரம்!

மேலுதடில்லை கீழுதடென
கைகளால் நெருங்கி
இதழ் பூட்டு!

உன் விழியின் இறுக்கம்
திறக்கும் வரை
விடுபடாது உதடுகள்!

நழுவிடாமல்
தழுவிடுதல் போன்றது
இதழ் முத்தம்!

குட்டொன்று பெற்று
சட்டென்று நிகழும் முத்தம்
நீளும்!

எச்சில் பண்டம்
இதழ் முத்தம்!

அதிகாலை சோம்பல்
அத்துமீறி நுழையும்
முத்தத்தில் கலையட்டும்!

யார் நிறுத்துவதென்ற
போட்டியில்
முன்னேறுகிறது முத்தம்!

முத்தக்கவிதைக்கு
வளையல்கள் தாளம்
இடை நடனம்!

காமத்தின் பள்ளியறைக்கு
விரல்களால் படியேறி
இதழ்களால் நடைசாத்து!

கடைசியாய்
முத்தமிட்ட இடம்
நினைவில் இல்லை!


கண்ணாமூச்சி

Saturday, September 01, 2012 | 0 comments »

இருக்கையிலிருந்தபடி
தனக்குப்பின்னதான படிக்கட்டில்
கையூன்றி புத்தகம் வாசிக்கிறாள் சஹானா

கதவு திறந்திடும் சத்தமோ
அழைப்புமணியின் ஓசையோ
எதிர் பார்த்த நிமிடங்களில் நிகழவில்லை

காத்திருப்பின் நிமிடங்களில் தொலையும்
பொறுமையினை மீட்டெடுக்க
அங்குமிங்குமாய் நடக்கத்துவங்கினாள்

சன்னோலரம் தோள் சாய்த்து
காற்றில் படபடக்கும்
காகிதத்தின் ஓசை கேட்கத்துவங்கினாள்

மார்பழுந்த கையூன்றி
படுக்கையில் விழுந்தவளின்
கண்களில் எழுத்துகள் விழவில்லை

ஒரு மிடறு தேநீருக்காக துடிக்கும்
அவள் உதடுகளை சமையலறைக்கு
புத்தம் வாசித்தபடியே கூட்டிச்செல்கிறாள்

சர்க்கரை தேடி கைகள் மேலேர
இடையாடும் கூந்தல் முதுகிலேர
பெருவிரலூன்றி முன்னேற

கதவிற்குப்பின் காத்திருந்த கால்களிரண்டும்
அவளின் மேலேறிய பாதத்தின்
இடைவெளியில் நுழைய

சினுங்கல்கள் முனகலாக
விரித்து வைத்திருந்த புத்தகம்
திரும்பிப் படுத்துக் கொண்டது!

அலையாடும் கரைதொட்டு
கால் மடக்கி
கடல்நோக்கிப் பார்த்திருந்தனர்

ஒரு
யுவன் யவதி

கரையொதுங்கிய
கிளிஞ்சல்கள் போலிருந்தது
விழியுருட்டலில்லா பார்வைகள்

இடைவெளியானது
காற்றில் பறந்து உடையும்
நீர்க்குமிழிகளின் அளவு இருந்தது

இருவரும் மெளனம் ஊட்டி
உள் அனுப்பும் கடலைகள்
இரைஞ்சி கொண்டே சொன்னது

இருவருக்குள்ளும்
யார் காதலை சொல்வதென்ற
தயக்கமாக இருக்கலாம்

அல்லது
பிரிதலுக்கு முன்னதான
வாழ்த்துரையாக கூட இருக்கலாம்!

உன்னைப்பற்றிய நினைவுகள்
ஜன்னலோரம் தலைசாய்க்குமேயன்றி
மழையில் நனைய அனுமதிப்பதில்லை!

கண்கள் உதிர்க்கும் துளிகள்
மடி சேரும்
மழை சேருவதில்லை!

மழையாடும் நடனமும்
அதனுடனான ராகமும்
உன் பிரிதலின் நினைவூட்டல்!

உன் நினைவாய்
கண்கள் நிறைந்துகிடக்க
எங்கு போய் கலந்திடும்
மழை!

மழை நின்றும்
சன்னல் கம்பியின் அடியில்
தேங்கிடும் துளிகளாய்
உன் நினைவுகள்!

உன் நினைவுக்குளத்தில்
மூழ்கிகிடக்கிறேன்
மழையில் நனையாமலே!

என் பாதம் மட்டும்
நனைத்துக்கொள்கிறேன்
உன் தேகம் தொட்டுதான் கடந்திருக்கும்
இந்த மழையோடை!

மழை நனைத்த
குருவியின் இறக்கைபோல
நானும் உன் நினைவுகளும்!

உன் மடியின் கதகதப்பு
மழை நனைத்த
இந்த சுவருக்கு இல்லை!

எத்தனை கண்ணீர்துளிகளோ
இந்த மழையினுள்
கடலெல்லாம் உப்பு!

நீ தலை சாய்த்து நின்ற
பேருந்து நிலைய தூண்களெல்லாம்
இந்த மழையில் என்ன செய்யும்?

வாசல்வரை வந்துவிட்ட
மழையிடம் சொல்லிவிடவா
உன் முகவரி தெரியாதென்று!

உன் உச்சந்தலை
முத்தத்தை நினைவூட்டும்
இந்த மழையை என்ன செய்ய
நானும் சேர்ந்து அழுதுவிடவா?

தாழிடவும் இயலவில்லை
சன்னலுக்கும் கண்களுக்கும்
மழையால்!

மொட்டை மாடிக்கு
துணியெடுக்க ஓடுகையில்
கால்களுக்குள் குறுக்கிடும்
காதலை என்ன செய்திருப்பாள்!

எல்லா மழையிலும்
என்னை பருகத்துவங்கிவிடுகிறது
ஒரு தேநீர் கோப்பை!

கண் தட்டாமல்
பார்த்ததில் நேற்று நீ
இன்று மழை!

மழையில்
ஒரு ஆறுதலுண்டு
வெடித்து அழுதாலும்
வெளியில் கேட்டிடாது!

அழுவதற்கு
காரணம் வேண்டாம்
மழை போதும்!

காற்றினை ஆடையாக்கித்திரியும்
யாசகன் ஒருவன் வனங்களின் நடுவே
யோசனையோடு பயணிக்கிறான்

ஆம்
அவன் கடவுளிடம் யாசிப்பவன்

விலங்குகளின் புணர்வு
பறவைகளின் கூடல் கண்டவன்
கடவுளிடம் ஒரு கோரிக்கை வைக்கிறான்

அது அது அந்தந்த
இனங்களோடு புனர்ந்துத்திரிய
நான் தனித்திருப்பது ஏனோவென்று?

ஆம்
அவன் பெண்களை பார்த்திறாதவன்

உடலசைவற்ற பெண்ணொருத்தியை
அவன் கண்ணில் படச்செய்து
அதோ அவளை ரசி என்றார் கடவுள்

விரைப்படைந்து கசியத்துவங்கிய
ஆண்குறியினை கண்டவன்
அருவருப்படைந்து அலறலானான்

அவன் பெரும் கூச்சலில்
விழித்தவளின் விழி பார்த்தவன்
முலைக்காம்புகளை திருகிப்பார்கிறான்

அவனுக்கு முன்னதாகவே
படைக்கப்ட்டிருந்தவள் அவள்,
முன்னமே கடவுளிடம் கேட்டிருந்தவளாய் முன்னேறுகிறாள்

தொடுதல் தீண்டல் பசித்தல் புசித்தல்
எவ்வாறென அறியா ஈருயிருக்கும்
இலையாடையுடுத்தும் எண்ணம் புகுத்துகிறார்

இலைமறைத்திட்ட பாகங்கள்
சிந்தையில் சூடேற்ற
உடலொரு உணவாக உடலொரு பசியாக

இரவாய் பகலாய் மழையாய் குளிராய்
உஷ்ணமேற்றி உச்சவமாட
திறக்கத்துவங்கின பாதைகள்

கூடலின் நிறைவாய் அவன் எட்டிப்போவதும்
அவள் மீண்டும் வேண்டி தோற்பதும்
கடவுள் சாத்தானாக அவதரிக்கிறான்!

நிலா

Saturday, September 01, 2012 | 0 comments »

ஒரு பெளர்ணமி இரவில்
நீ முற்றத்திலிருந்து கடித்து துப்பிய
நகத்துண்டுகளைகண்டு
தேயத்துவங்கிய நிலவு இன்று
பிறை நிலா என்றானது!

உனக்கும் நிலவுக்குமான
நடை பயணம்
நம் காதலின் ஆயுள்!

நிலவின் ஒளிவழி
உன்
நிழல் விழுகையில்
அழத்துவங்குகிறது வானம்!

உன்னைப்பார்ப்பதற்கு
முன்புவரை
சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம்
நிலா!

இரவுக்கு நிலவென்பது
அள்ளிமுடியா கூந்தலோடு
வீதிவந்த அன்றிலிருந்துதான்
என்கிறது நிலா ஆய்வு!

உன்னைப்போலவே
ஆடையுடுத்தி அழகு பார்க்கிறது
நிலவுக்கு மேகங்கள்!

ஒரு கோடை இரவில்
மேற்கூரையில்லா
குளியலறையில் நீ குளிக்க
நிலா மறைய
அது அமாவாசை என்றானது!

உடைந்து விழுகிறது
நிலா-நீ
மாராப்புகட்டி குளம் இறங்குகையில்!

எதிர் எதிர்
துருவங்கள்
நிலா
நீ!

உடலாடை

Saturday, September 01, 2012 | 0 comments »

அதிகாலை சுவாசம்
ஆயுளுக்கு நல்லதாம்
வா பறிமாறலாம்!

யாரின்று
போர்வை மடிப்பதென்பதில்
துவங்கட்டும்
அதிகாலை முத்தச்சண்டை!

உன்
முத்தத்தில் துவங்குகிறது
என்
அதிகாலை குளியல்!

விடுபடமுடியாமல்
தவிக்கிறது
உன் கூந்தலுக்குள்
என் விரல்கள்!

ஆடை மாற்றத்தில்
இடம் மாறுகிறது
உன்னிடமிருந்து
எனக்கு நாணமும்!

நகம் வெட்டச் சொல்லி
சண்டையிடாத காலை
அவளில்லா நாளிலே!

கடிகார முட்கள்
பாராத
விளையாட்டு நீ

முத்தமாய்
இருக்கட்டும்-உன்
கீறலுக்கான ஒத்தடம்!

ஈரம் உலர்த்த,
வேண்டும்-உன்
அதிகாலை முத்தச்சூடு

நாமிருவரின் கண்ணாமூச்சி
போர்வைக்குள்
ஒளிந்து கொள்வது மட்டுமே!

அதெப்படி
இருவரும் ஒரே நேரத்தில்
விழிக்கிறோமென்றேன்
மூக்கு வியர்த்திருக்கும்
காமத்திற்கு என்கிறாள்!

நனைத்து கொண்டேயிருப்போம்
நீயும் நானும்
காய்ந்து கொண்டேயிருக்கட்டும்
நிலவும் சூரியனும்!

பூக்களும் செதில் சூழ்ந்த மொட்டுகளும்
இலைகளும் புற்களும் நனையும்
பனிப்பொழிவு காலை அது

கண்ணாடித்திரை வழியே விரியும் காட்சியில்
காதல் செய்துகொண்டிருந்தன
இரண்டு முயல்குட்டிகள்

உடல் சூட்டினை போர்வைக்கு
பகிர்ந்திட்ட அந்த காலையில்
நிலவோடு விளையாடிக் கொண்டிருந்தன முகில்கள்

பனியடர்ந்த பேழையில் இதயம் வரைந்து
அதனுள் அவனெழுதும் அவள் பெயர் கண்டு
மின்னும் விண்மீன்கள்

அவன் அப்படித்தான்
ஓரிரவும் உறங்கமாட்டானென
சொல்லித்திரியும் பைத்தியங்கள்!

சிநேகமாய் இருந்த பொழுதுகளை
அசைபோட்டபடி
கடிதமொன்றை வரையத்துவங்குகிறாள்

அதன் நீட்சியானது
அவனில்லா ஏக்கத்தினை
வெளிக்காட்டிடாதிருக்க போராடுகிறாள்

ஒவ்வொரு பத்திக்குமான இடைவெளியில்
நிகழும் மீள் வாசிப்பில்
அக்காகிதத்தினை கிழித்தெறிகிறாள்

சொல்லத்துடித்திடும் பேராவலை தனக்குத்தானே
வைத்துக்கொள்ளவும் விரும்பாதவள்
தன் காதலை சொல்லிவிட விரும்புகிறாள்

உதட்டுச் சாயம் பூசுவதை
கணவனுக்காக விட்டிருந்தவள்
வெற்று காகிதம் முழுவதும்

இதழ்கரை பதித்து மின்னஞ்சல் ஏற்றுகிறாள்
பிரிவதாயிருந்த கணவனின்
கடிதமொன்று பதிவிறக்கம் செய்தபடி!

யூகம்

Saturday, September 01, 2012 | 0 comments »

மேசைக்கும்
இதழுக்குமான இடைவெளியில்
நின்றாடுகிறது ஒரு தேநீர் கோப்பை

இடக்கை பழக்கமாயிருக்கலாம்
இடது பக்கம் சரிந்த கூந்தலை
வலது கையால் கோதிக்கொண்டாள்

கோப்பையேந்தும் கிண்ணத்தில்
வட்டமிட்டமிட்டபடி
தேநீர் பருகாமலிருந்தாள்

கைப்பையினில் நுழைந்து வெளியேறும்
கையின் வேகமும் தடுமாறும் விரல்களும்
நடனமாடும் மெழுகின் ஒளியும்

அவளெதிரே
யாருமில்லா கடைசி மேசையில்
உலவ விட்டிருந்தது ஒரு அச்சுறுத்தலை...

அழுதுகொண்டிருந்திருக்கலாம்
சுவற்றில் தெரிந்த நிழலில்
கண்ணீர் கோடுகள் விழவில்லை!

நீ என்பவள்...

Saturday, September 01, 2012 | 0 comments »

புலராத பொழுதில்
பனிபடராத மொட்டு
நீ...

நிலவில்லா இரவில்
நடமாடும் வெண்முகில்
நீ...

அலையில்லா கடலில்
விளைந்த முத்து
நீ...

ஆளில்லா தீவில்
முளைத்த மூங்கில்
நீ...

போரில்லா நாட்டில்
பூத்த பூங்கொத்து
நீ...

தேரில்லா கோயிலில்
வலம்வரும் தேவதை
நீ...

அவிழ்க்க முடியாத
அழகிய புதிர்
நீ...

ரவிவர்மன் தூரிகையில்
தவறிய தாரகை
நீ...

செதுக்கவியலா
சிற்பம்
நீ...

எழுதவியலா கவிதையின்
அந்தாதி
நீ...

அதெப்படி இருவருக்குமே
ஏறியிறங்குகிறது தொண்டைக்குழி
மழையை பருகாமலே!

நனைந்துவிட
நீ வேண்டும்
நனைத்துவிட
நான் வேண்டும்
நனைக்க
மழை வேண்டும்

புத்தகம் நனைந்துவிடக் கூடாதென
நீயும்
நீ நனைந்துவிடக் கூடாதென
நானும்
எத்தனை நாள்தான் வேண்டுவது
வா நனையலாம்!

எதைக் கேட்பது
ஓடிவருகையில் எழும்
கொலுசின் ஒலியையா
உன்னைத்துரத்தி வரும்
மழையின் ஓசையையா?

நீ மஞ்சளிட்ட
முகம் தொட்டு
மழை கொடுத்திருக்கலாம்
வானவில்லுக்கு ஒரு நிறம்!

கெஞ்சுவதற்கும்
கொஞ்சுவதற்கும்
வேண்டும் மழை

காக்கா கடிகடிக்க
தூது போகிறது
மழை!

எதை நிறுத்துவது
மழையையா
நீ ஓடிவருகையில் தடுமாறும்
என் மூச்சையா?

நீ
ஓடிவந்து கட்டிக்கொள்வதற்காகவே
சண்டையிடலாம் மேகங்கள்!

முழுக்க நனைத்துவிடுகிறது மழை
ஆடையையும்
ஆசையையும்

தூரல் பிடிக்குமா
சாரல் பிடிக்குமா என்கிறேன்
உன்னோடு நனைய பிடிக்குமென்கிறாள்

பறவைகளெல்லாம் மழையில்
என்ன செய்யுமென வருந்துகிறாய்
போர்வைக்குள் நுழைந்தபடி

வானுக்கும்
இப்படித்தான் வியர்க்குமாவென
வினவுகிறாள்
கலவி முடிந்த தருணத்தில்!

மழையில்
நிலா தேடுகிறாள்
கண்ணாடி காட்டினால்
மறையத்துவங்குகிறாள்
மார்புக்குள்!

வானம் பார்த்து நனைய
அவ்வளவு ஆசையா என்கிறேன்
முதன்முறை எனைதூக்கி
நனைத்த அன்றிலிருந்து என்கிறாள்

நீ
சட்டென உதிர்த்துவிடும்
கிளைசேர்ந்த மழை நீரில்
முளைத்துவிடுகிறது மெல்லிய காமம்!

ஆடை மாற்றிட
தாழிடுகிறாய்
ஆசை தணித்திட
போரிடுகிறாய்

தொப்பலாய்
நனைத்துவிட்ட மழையை
நீ திட்டுவதும் நான் ரசிப்பதும்
இவ்விரவின் ஒத்திகை!

மழை நனைந்து தலை துவட்டி
கொடியிலிடும் பூத்துவாலையில்
மீசை முடியும் கற்றை கூந்தலும்!

அவளின் ஈரக்கூந்தலில்
சீகைக்காய் வாசனை
இந்த மழை இரவில்!

ஆவி பறக்கும்
தேநீர் கோப்பையில்
இருவரது இதழ்கள்
இரவின் கனவுகள்

கைகோர்த்து கடக்கும் சாலையில்
பட்டாம்பூச்சி கூட்டம்
மழை இரவு மனதில் கனவு

பின்னிருந்து அணைத்தபடி
தெருவிளக்கின் வழியே
காணும் தூரலும் ஒரு தூண்டுகோல்
இவ்விரவின் விளையாட்டிற்கு!

சரிவா மழை நிற்கட்டும் என்றால்
அதற்கும் சிணுங்குகிறாள்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வியர்க்கிறது
மெதுவாய் மெதுமெதுவாய்!

தரைக்கும் கதவிற்குமான
இடைவெளியில் வழியும்
நனைந்த ஆடை நீரில் நீந்துகிறது
அவளின் உதிர்ந்த முடிகள்

விரல் கோர்கிறாய்
விழி மூடுகிறாய்
மழை இரவு


ஏக்கம்

Saturday, September 01, 2012 | 0 comments »

பேருந்தின் வேகம் கூட கூட
கடைசியிருக்கை சென்று
ஜன்னல்வழியே கையசைக்கும் பேரன்

முன்னரே பதிவு செய்திட்ட
இருக்கையினை
மனைவியோடு சண்டையிடும் மகன்

தலை காட்டிட மாட்டானாவென
தூரத்தில் நின்றிருக்கும்
அப்பா!

இப்படியாய்

Saturday, September 01, 2012 | 0 comments »

உன்னைத் தேடுதலின் நிமித்தம்
எழும் களைப்பில் அமருமிடமானது
விலைமாதுவின் வீடாக இருக்கலாம்

வாடிக்கையாளன் எவருமில்லையென
வாசல் வருபவள் பின்னுருவம் கண்டதும்
பேரம் பேசுவதற்கென முகம் காணலாம்

ஒருவேளை நாமாக இருக்கக்கூடுமெனில்
முகம் மறைக்கவோ
முகம்மூடி அழுதிடவோ முனைந்துவிடாதே

இறுகிய முகம் தவிர்த்து சலனமேதுமின்றி
ஒருமணி நேரமென துவங்கி ஓரிரவு வரை
புன்னகையுடன் விலைபேசு

ஆயுள் முழுமைக்கும் விலை கேட்கையில்
வாடிக்கையாளனிடம் பேசுவது போல
என்னிடமும் எரிந்துவிழு

நான் முதன்முதலாய் எழுதிய கடிதம் நீட்ட
படித்துவிட்டு குற்ற உணர்ச்சியும் சேர்த்து
ஆணுறைகளின் குவியல்களையும் அப்புறப்படுத்து

விடுதியில் தங்கிப்படிக்கும்-உன்
மகளைக் கூட்டிவந்தால்-என்னை
அப்பாவென அடையாளம் காட்டுவாயா காதலியே!

அன்பே
தூக்கம் கலைத்தல்
எப்படித் தெரியுமா இருக்க வேண்டும்

கட்டிலில் ஓரமாய் துயிலுகையில்
பூவுக்கும் பனித்துளிக்குமான
தொடுதல் போல அருகிலமர வேண்டும்

மூடியப்போர்வையை கொஞ்சமாய் விலக்கி
தோள்பட்டையில் கை சேர்த்து
உன் வருகைக்கான அழுத்தம் பதிக்க வேண்டும்

கன்னம் முழுக்க கை வருடி
மீசை முறுக்கி
வலிக்காமல் இழுக்க வேண்டும்

புரண்டு படுக்க திரும்பும் தருணத்தில்
முடிக்குள் விரல் நுழைத்து
அங்குமிங்குமாய் விரலசைக்க வேண்டும்

போடி என செல்லமாய் திட்டும் போது
உலர் உதட்டினை
விரலால் அங்குமிங்கும் கோடிட வேண்டும்

மேலேறியமர்ந்து முத்தமிட்டு தூக்கம் கலைக்க
மீண்டும் ஒருமுறை-நான்
தூங்குவது போல நடிக்க வேண்டும்

நீளக்கூந்தல் முதுகிலாட
வெள்ளைப்பூக்கள் நிரம்பிய
கருமேக பாவாடையுடுத்தி

பால்நிலா சட்டையணிந்து
அதில் கொஞ்சம் அழகேற்றி
என்னை மெல்ல நெருங்குகிறாள்

பெருவிரல் தரையூன்றி
மேலே மேலே எத்தனிக்கிறாள்
பறிக்கமுடியாது தத்தளிக்கிறாள்

நான் மட்டும் கேட்டிடும் அளவிற்கு
கொலுசொலி இசைத்து
துள்ளிப்பறித்திட ஆவல் கூட்டுகிறாள்

நிறம் மாறிவிட்ட பாதம் கண்டு
முகம் சுழிக்கிறாள்
முட்கள் பதித்ததற்காய் கண் நிறைகிறாள்

தேவதையுனக்கு பூவொன்றினை
உதிர்க்கமுடியாது போன எனக்கு
ரோஜா செடியென்ற பெயரெதற்கு?

கூந்தலேற முடியா பூவினை
தினம் தினம் பூத்தெதற்கு-உன்
பாதம் தாங்கும் புற்களாயிருக்கலாம்!

இவ்விரவில் எந்தவொரு
இசைக்கும் செவிமடுக்கவில்லை
என் காதுகள்

மெளனத்தின் மனவொலி
பிடிக்கவில்லை என்கிறது
என் கண்கள்

நடந்து பார்க்கிறேன்
விட்டம் பார்கிறேன்
வானம் பார்கிறேன்

காகிதத்தில் கிறுக்கல்களில்லை
கற்பனை கவிதையாகவில்லை
கண்களில் காட்சியேதுமில்லை

என்னவென சொல்லிவிட முடியாத
இந்த வெறுமையை
என்னவென எழுதிவைக்க?

சண்டையிட்டு உறங்கும்
அவளின் உள்ளங்காலில்
விரல்களால் கோடுகிழிக்கலாம்

பாதி தூக்கத்தில் அவளின்
முனகல் ரசித்தபடியே
விடியும் வரை காத்திருக்கலாம்!

தாவணியெல்லாம்
கட்டத்தெரியுமா என்கிறேன்
தாலிகட்டு
சேலைகட்டுகிறேன் என்கிறாள்

வாங்கிய பூவை
ஏன் வைக்கவில்லை என்கிறேன்
வைத்துவிடுகிறென் தாவென
கேட்கவில்லையெங்கிறாள்

உனக்கு ஏண்டி இவ்வளவு
பிடிவாதம் என்கிறேன்
ஒரு நாள் விரதமிருந்தால்
சாக மாட்டேன் போடா என்கிறாள்

அப்படி என்னதான்
வேண்டுவாய் என்றேன்
நீ வேண்டுமென்று
வேண்டினேன் என்கிறாள்

போடி லூசு என்றதும்
போடா எருமை என்கிறாள்
செல்லப்பெயர்கள்!

ஏய் உனக்கொன்னு தெரியுமா என்றவள்
ஒன்றுமில்லையென
இறுக கைப்பற்றிக் கொள்கிறாள்
அதுவொரு கனவென
தொலைபேசியில் தொடர்வாள்

உன் பார்வையில்
உடையலாம்
உருண்டோடலாம்
கண் சிமிட்டிவிடாதே
வளையல் கடையில்!

ராட்டிணம் ஆடுகையில்
ஏன்
மடியில் படுத்துக்கொண்டாய் என்கிறேன்
போடாவென்று
தோளில் சாய்ந்து கொள்கிறாள்

எத்தனைமுறை தான்
ஒவ்வொரு ஜடமாட்டியாய்
கண்ணாடிமுன் வைத்துப்பார்ப்பாய்
அள்ளி முடியும்-உன்
கொண்டை அழகுக்கு ஈடாகுமா சொல்?

மீசையில் ஒட்டியதாய்
துடைத்தவள்
விரலை சப்பிக் கொள்கிறாள்
தேன் மிட்டாய் பிடிக்குமாம்

திருவிழா கடையெங்கும்
சுற்றிவிட்டு-நீ
தாடி எடுக்கவில்லையென்றால்
கரடி பொம்மைதானென கண்ணடிக்கிறாள்

யாருக்கும் தெரியாமல்
எப்படி திருநீரு வைத்தாய் என்கிறேன்
நேருக்கு நேர்
முட்டிக் கொள்ளும் போது என்கிறாள்

என்னதிது
பெருவிரலில் மோதிரம் என்றவள்
மெட்டியாக்கிக் கொண்டாள்
திருவிழா முடியும்வரை!

அவள் விரல் விடுத்து
சாலை கடந்தது கோபமாம்
பாதி தின்றிருந்த ஐசை
பிடிங்கிக் கொண்டாள்

அவ்வளவு இஸ்டமா உனக்கு
கூந்தலை என் மடியில்
கிடத்தியிருக்கிறாயென்றேன்
“போ” என்கிறாள் எழாமலே

மணலில் கிறுக்காதே
நிலா மறைகிறது என்றேன்
'ம்" என இழுத்தவள்
கொட்டொன்று வைக்கிறாள்

பனிவெடிப்பா என்கிறேன்
ஏன் ஒத்தடமிட ஆசையோ என்கிறாள்
உதட்டைக் கடித்தபடி

எப்பொழுது தான்
கச்சேரி பார்ப்பாய் என்கிறாள்
உன் கண்களாடும்
நடனம் போதுமென்றேன்
தொடையில் கிள்ளி வைக்கிறாள்

பச்சைக்குத்திக்கலாமா என்கிறாள்
வேணாமடி என்றதும்
கைக்குட்டையில் பெயர் காட்டுகிறாள்
குழந்தை போல!

'என்னடி பண்ற" என்கிறேன்
உன் சட்டையில் என் தாவணி
முடிச்சிடுகிறேன் என்கிறாள்

"டேய்" என இழுத்தபடி
முகம் பார்க்கிறாள்
கழிவறை கூட்டிப் போய் வந்ததும்
கைபிடித்து கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்

ஏண்டி மெளனமாய் இருக்கிறாய்
என்கிறேன்
எதாவது பேசுடா என்கிறாள்
திருவிழா முடிவுறும் வேளையில்

யாருமில்லா நேரத்தில்
வீட்டில் என்னசெய்வாயென்றேன்
உன்னுடன் காதல் செய்வேன் என்கிறாள்
புருவம் உயர்த்தியபடி!

உங்க அம்மா எங்க என்றதும்
ஏன் என்னை அம்மா ஆக்கலாம்னா
என்றபடி கதவைத் தாழிடுகிறாள்
என்னை வெளியில் தள்ளிவிட்டு!

திரும்பிப் பார்க்காமல்
போ என்கிறாள்
வாசலை விட்டு நகராமல்!

வானுயர் காற்றாடியின்
இறக்கை சுற்றல்கள்

சூரியன் சூழ்ந்த
கருமேகங்கள்

மேடு பள்ளங்களாய்
பச்சையுடுத்திய மலைகள்

சாலையோர மரங்கள்
அதனூடே வீடுகள்

விரைந்தோடும் வாகனங்கள்
காது கிழிக்கும் ஒலிப்பான்கள்

கைகளில் புடைத்தோடும் நரம்புகளை
வருடி விடும் காதலி

கன்னம் பற்றி
முத்தமிடும் காதலன்

காட்சிகளை எழுத்தாக்கும்
ஒரு ரசிகன்!

மழையில்

Saturday, September 01, 2012 | 0 comments »

வா
வானம் பார்த்து
தூறல் நனையலாம்

வா
ஆடை பிழிந்து
விரல் சூடேற்றலாம்

வா
நாணம் தொலைத்து
பார்வையில் பேசலாம்

வா
இடைத் திருகி
முத்தம் ஊட்டலாம்

வா
காதுமடல் சிவக்க
கதை பேசலாம்

வா
ஜன்னல்வழி
காதல் பேசலாம்

வா
மெத்தையில்
மூச்சொலி கேட்கலாம்

வா
மழையளவு நனைய
விளையாடித் தீர்க்கலாம்!

சதுரங்கம்

Saturday, September 01, 2012 | 0 comments »

கடிவாளமின்றி அலையும்
கற்பனை குதிரை

சுயம் விரும்பி
அத்துமீறும் மந்திரி

அரணமைத்து
அடங்க மறுக்கும் யானை

யாவருடனும் பயணிக்கும்
சிப்பாய் என நகரும்

என் சதுரங்க வாழ்கையில்
நீயே ராணி!

மெளன குவியல்

Saturday, September 01, 2012 | 0 comments »

மெளனத்தின் துவாரங்கள்
கண்களில்!

சொற்குவியல்
இதயமளவில் உழலுமாயின்
மெளனம் என்று பெயரிப்படகிறது

இருள் சூழ்ந்த பொழுதொன்றினை
கடன் கொடுங்கள்
விழி மூடியும் பிரகாசமாய் கிடக்கிறது!

நினைவுப் பேழை
கைமாறுமே அன்றி
உடைவதேயில்லை!

இலையேறி பிழைத்துக் கொள்ள
நதியில் நீரில்லை
கரையில் மரமுமில்லை!

கோடையானால் என்ன
குளிரானால் என்ன
இதயம் கனக்கையில்
கண்களுக்கும் வியர்க்கும்

இயலாமையின் கால்கள்
எட்டாக
தெருவெங்கும் ஓலம்!

வளைவு படிக்கட்டின்
கைப்பிடியில்
சறுக்கிக் கொண்டு வருகிறது
சொட்டளவு கண்ணீர்!

பாதச்சுவடுகளை
அள்ளியணைக்க
விரைந்தோடுகிறது
மணல் காற்று!

சருகுகள் நிறைந்த
ஆலமரத்தடியில்
சத்தமின்றி பதுங்குகிறது
நான்கு கால்கள்!


நாளத்தின் கற்றையொன்றினை
முடிச்சிட்டு விளையாடுகிறது
வீதியில் குழந்தையொன்று!

இறக்கை முளைத்த
பாம்பொன்றின் இடுக்கில்
சிறைப்பட்டிருக்கிறது
வட்டமிடும் கழுகு ஒன்று!

நீரற்ற கிணற்றில்
சிலந்தி வலையொன்று
உடல் சூழ்ந்து கிடப்பது
போன்றொரு காட்சி கண்களில்!

விழி மூடும் தசையறுத்து
கண்விழித்து
கிடக்க சொல்கிறது மனது!

ஊரடங்கிய இரவில்
பிசாசுகள் பியித்து தின்ன
தோதுவாக நிர்வாணமாய்
நடக்க சொல்கிறது மனது

வற்றிய குளத்தில்
பிளந்து கிடக்கும்
மண் செதில்கள் போல
தசை அறுக்க சொல்கிறது மனது

அடர்த்தி மிகுந்த
கண்ணாடி பேழையினை
உடைத்திட்டு இரத்தம் ஒழுக
உறங்கிட சொல்லுது மனது

ஊறல் மிகுந்த
இலையொன்றினை
நாவில் தடவி விட்டு
அதன் அரிப்பு தாங்காது
நாவினை கடித்து துப்பிட
சொல்கிறது மனது!

Blogger Wordpress Gadgets