பழுப்பிலைகள் மட்டுமே
உதிரும் அந்த மரத்திலிருந்து
கிளையொன்று முறிந்திருக்கிறது

மூத்திரவாடைகள் நிறைந்த
மரத்துமூட்டில் கூடும் கால்கள்
உமிழ்வதும் புகைப்பதும்

எவனோ ஒருவனை பழிதீர்க்க
பேசுவதும் எவளோ ஒருத்தி
காதலிக்கப்படுவதும்

இன்னபிற உரையாடல்களும்
வசவு வார்த்தைகளும்
புதிதில்லை அம்மரத்திற்கு

இருந்தும் கிளைமுறிந்த அன்று
தன் கூட்டை சுற்றி சுற்றி வந்த
பறவையன்றி வேறெவருமில்லை!

என் வானம்
இருண்டுகொண்டே வருகிறது
இந்த மதிய வேளையிலும்

உன் மடியில் கிடத்தி
விழிமூடிய இமையை
பிரிப்பதற்காக முனைகிறாய்

முதலில் கொஞ்சுகிறாய்
அடுத்து கெஞ்சுகிறாய்
பின்னர் கதறி அழுகிறாய்

அசைவுகளற்று கிடப்பதறிந்து
மார்பில் முகம் புதைத்து
ஈரம் சொட்ட அழுகிறாய்

விபத்துப்பகுதியென
அறிவிக்கப்பட்டிருந்தும்
உன்னை அந்த சிக்னலில்

முதன் முதலாய் கண்டு
கடக்காமலிருந்தது
என் தவறு தான்...

என்ன செய்ய?
இப்படியெல்லாம்
கற்பனை செய்து பார்க்கிறது

நீ ஏற்கமறுத்த என் காதல்!

"ம்"

Tuesday, April 30, 2013 | 0 comments »


நீ
மன்னிப்பு கேட்டதில்
வருத்தம் தான் எனக்கு

தற்செயலாய் உதிர்த்த
சொல்லின் உச்சாடனம்
அப்படி தூண்டியிருக்கலாம்

ஒரு புன்னகை
ஒரு பிடிவாதம்
ஒரு அதட்டல்

போதுமானதாய் இருக்கிறது
இயல்பாய் பேசுவதற்கும்
இவ்விரவும் தொடர்வதற்கும்

இருவரும் பதிலனுப்பிவிட்டு
வராத குறுஞ்செய்தியின்
நிலவரமறிய அழைத்துப்பேச

இருவரும் ஒருசேர
சொல்லிக்கொள்ளும்
நீள் ம்-ல் உடைகிறது

மன்னிப்பும் வருத்தமும்!
 

இடைவெளி!

Tuesday, April 30, 2013 | 0 comments »

தாழிட்ட மனதிற்கு
அடையாளம்
தெரியாமலில்லை

கதவிற்கும்
தரைக்குமான இடைவெளியில்
நின்று கொண்டிருக்கும்

ஒற்றைக்கால் செப்பு காப்பும்
வெள்ளி கொலுசும்
யார் யாரென்று...

அளவாய் தூண்டிய
சிம்மிணி விளக்கில்
கழுத்தில் ஒளிர்வது 
வெளியில் பொழியும்
மழைத்துளியா?
வியர்வை மழையா?

கூந்தல் சிக்கெடுக்க
கொங்கை மறைத்து
உன் விரல்படர
உதடு மட்டும்
பாலைவனம்!

தொப்பலாய் நனைந்து
உதரும் பாவாடையில்
உதிரும் நீர் முத்துகள்
நடனமாடுகிறது-உன்
கொலுசொலி கேட்டு!

கார்முகில்கள் உடைந்து
விழும் மழையில்-நீ
கார்கூந்தல் கலைத்து
ஆடும் விரல்கள்
காமத்தின் படிக்கட்டுகள்

உன் ஈர உடைகள்
கொடியேற-என்
தேக நரம்புகள்
மேலேற வேண்டுகிறது
ஒரு மழைக்காலம்

நீ மாராப்பு கட்டி
கடக்கையில் எழும்
அக்குள் வாசனையில்
தொடுத்த மல்லிப்பூக்கள்
உதிரிகளாகிறது
கட்டிலில்!

எதிரெதிரே மழை
தெளித்து விளையாடும்
இடைவெளி குறைந்து
மீசை முடிகளின் ஈரம்
துவட்டுகிறாய்
மூச்சுக்காற்றில்

தலை காயும்வரை
தலையணை பொறுக்காது
என்றால்
மடிதாங்கு என்கிறாள்
வியர்வை வழிகிறது
இடையில்

நீரில் பதித்த
பாதச்சுவடுகள்
காயும்வரை
பொறுக்கவில்லை
தரையும் தழுவலும்!

நெற்றிபரப்பில் ததும்பும்
முத்த அலைகளில்
காமத்தின் முத்தம்
கணக்கிலடங்காமலும்
காதலின் முத்தம்
மூன்றாகவும்...

விழிமூடி துயிலக்காத்திருக்கும்
வேளையில் மனக்கண்ணில்
உருண்டோடும் காட்சிகள்,

முறிந்த கள்ளிப்பால்
தெரித்து கண்ணில்விழுவதுபோல
அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன

நிலம் நினைத்து நிலம் நிறுத்தி
தூங்கத்துணிய அங்குமிங்குமாய்
அலைந்து கொண்டிருக்கிறது மனது

திசைகளெங்கும் கதவடைக்க
கிளைபரப்பிய சல்லிவேர்கள்
நிலம் கிழித்து ஆணிவேரூன்ற

நினைவுகளின் சட்டத்தில்
தூக்குக் கயிற்றின் வடிவமொத்த
இரு விழிகள்!


அங்குமிங்குமாய் புத்தகம்
அடுக்கி வைக்கப்பட்ட மேடையில்
சிதறிக்கிடக்கும் சில்லறைகளை

கையிலள்ளி மேலும் கீழுமாய்
குலுக்குகையில் எழும் ஓசை
அவ்வளவு ஆறுதலாயிருக்கிறது

உதட்டளவு மெனளத்திற்கும்
மனதின் பேரிறைச்சலுக்கும்
இந்த கோடை இரவில்,

நடுநிசியில் பசித்து அழும்
தாயில்லா குழந்தையின் மனதோடு
ஒத்திசைப்பதுபோலவேயிருக்கிறது

நீ
உடைந்து அழுததை நினைத்து
வேறென்ன செய்துவிட முடியும்?

சில்லறைகளை துளிகளாக்கி
விழிகளில் வழியவிடுவதே
ஆறுதலாயிருக்கிறது எனக்கும்!
 

:) :(

Monday, April 29, 2013 | 0 comments »


எப்போதும் தாமதமாய்
தூங்கச் செல்கிறேனென
திட்டிக்கொண்டிருக்கும்
தோழி ஒருத்தியை,
தற்காலிகமாய் சந்தித்தேன்

நமக்கு ராத்திரினா
அவருக்கு பகலாமென
திருமண வாழ்க்கையை
சொல்லிச்செல்கிறாள்!
 

ஒரு மன்னிப்பை வேண்டுவதற்கு
பெரிதாய் ஒன்றும்
திட்டமிட வேண்டியதில்லை

மன்னிப்பினை
முன்வைப்பதென்பது
அவமானகரமான காரியமா?

ஆம் எனில்

உறுத்திக்கொண்டேயிருக்கும் தவறு
வருத்திக்கொண்டேயிருக்கட்டுமென
விட்டுவிடுவது நல்லது

கேட்கப்படும் மன்னிப்பினை
புன்னகைத்து நிராகரிப்பவரை
பின் தொடர்வதென்பது

தற்கொலை ஒத்திகையென
கயிற்றில் தொங்குவது
போன்றது அது!

கை மாற்று

Monday, April 29, 2013 | 0 comments »

கறிக்கோழி கடையில்
சேவல் ஒன்று
கூவிக்கொண்டிருக்கிறது
எத்தனையாவது காலையோ?
விலைகேட்டு ஒதுங்கியவர்
எத்தனை பேரோ?

மட்டையின்
ஈரப்பசை தளர்ந்து
ஓலையில் பச்சையிழந்து

காற்றின் வேகத்திற்கு
மரத்தில் மோதி சரசரக்கும்
அந்த பனைமரத்தில்

மூக்கனாங்கயிறோடு
முடிச்சிடப்பட்ட
மாடு ஒன்று

வாய்க்கெட்டாத
புல்லுக்காக
சுற்றி சுற்றி வருகிறது...

அம்மா! அம்மா! அம்மா!

வெயில் பொழியும் சூட்டிற்கு
நிகராயிருக்கிறது-உன்
புன்னகை நிரம்பிய சொற்கள்

எழுதுவதற்கு வாய்ப்பளிக்காது
விரல்களுக்குள்
நான் கோதிய மயிரிழைகளும்

விரல்வடிவ இரத்தக்கோடுகளும்
சன்னல் கம்பிகள் நிழல்விழும்
அறை கதவின் பின்

உதடில்லா முகம் வரைந்து
நீ பேசாதவாறு என் உதட்டின்
தசையறுத்து முத்தமிட்டிருக்கிறேன்

விலா எலும்புகளின் இடுக்குகளில்
பாய்ந்து கொண்டிருக்கிறது
புன்னகை நிரம்பிய உன் சொற்கள்!

உன்னை சுமக்கும் அளவிற்கான
வலுவில்லை என்னிடமும்-உன்
மெளனத்தில் தவிக்கும் இதயத்திடமும்

பின்னிரவுகளில் நீ அழைக்கும்
என் பெயரின் ஓசை
இசைத்துக்கொண்டேயிருக்கிறது

கொஞ்சம் அதிகமாகவே
பலகீனமாக்கியிருக்கிறாய் என்னை
வெளியேறுவதற்கான முன்னெடுப்புகளில்

முன்னெப்பொழுதோ உன் அழுகையை
பூந்தொட்டியில் பதியம் வைக்க அவைகள்
சிரித்துக்கொண்டிருப்பதாக சொல்லியிருந்தேன்

இன்று உன் மெளனம் கீறும் சூட்டில்
பொழிந்த அன்பின் விளைச்சலில்
என் கண்ணீரின் வாசமடிக்கிறது!

உடன்பாடுகளற்று 
உயிர் கூசும் நடுநிசியில்
நெஞ்சின் ரொமங்கள் பிராண்டுகிறாய்

மொழி பெயர்க்க முடியா
உள்ளுணர்வுகளை வேற்றுமொழியில்
கசியவிட்டு கரைசேருகிறாய்

கோபம் களைவதற்கும் கோபம்
கொள்வதற்கும் காரணங்கள்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன

இருந்தும்

வழி தப்பிய ஆடு போல
முணுமுணுக்கும் வேலையிலெல்லாம்
சேருமிடம் சேர்க்க இயலாதிருக்க

நீ உயிர்த்தெழுவதாய் சொல்லிக்கொள்ளும்
அதிகாலை புணர்ச்சி கனவினால்-என்
இயலாமையின் குறிப்பெழுதுகிறாய்...

அது
முடிச்சுகள் அவிழ்ப்பது பற்றியும்
முடிச்சுகளிடுவது பற்றியுமிருக்கிறது!

கா த ல்

Monday, April 29, 2013 | 0 comments »

நீ செல்லமாய்
குட்டுவதும் அடிப்பதும்
ஒரு அணைப்பிற்கின்றி
வேறெதுவாய் இருக்க முடியும்?

முற்றமென நினைத்தாயோ?
வியர்வை தெளித்து
மீசையால் கோலமிடுகிறாய்
என் தேகத்தில்!

நீ கேட்கும்
"என்ன பண்ற" என்பது
உனக்கு கேள்வியாகவும்
எனக்கு கட்டளையாகவும்
உன்னோடு
பேசத்துவங்கிவிடுகிறேன்!

உன்
பிடிவாதத்தின்
பின்னணியில்
ஓராயிரம் கொஞ்சல்கள்!

மீசை குத்துகிறது
என்பதிலிருந்து
மீசை கூசுகிறதென
முன்னேறியிருக்கிறாய்
நீ!

போகாதே என்பதன்
அருஞ்சொற்பொருள்
நீ சொல்லும்
ச்சீ போடா...

முத்தமென வினவவும்
சுற்றுமுற்றும் சுழலும்
உந்தன் விழிகளிலே
நான் காண்கிறேன்
தேரோட்டம்!

நிழலொதுங்கும் சாலையில்
வியர்கிறது...
நம் கை கோர்த்தலில்
காதலுக்கு!

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
காத்திருந்து ஒருசேர
அழைக்கையில்
நமை விடுத்து
பேசிக்கொண்டிருக்கிறது
காதல்!

உனக்கே உனக்கென
வாங்கிக்கொள்வதில்
முதலாவதாய் முத்தமும்
மொத்தமாய் கவிதைகளும்!

நா குட்டி

Monday, April 29, 2013 | 0 comments »

அவளுக்கு தன் மகனை
இப்படித்தான் அழைக்க பிடிக்கும்
நா குட்டி...

புத்திக்கு தெரியும்
நிலையின் குறுக்கே பலகையிட்டு
ஆணியடித்திருக்கிறதென்று

அடுக்களையில் இருக்கையில்
அதிகமாய் பதறுவாள்

பாதி தூக்கத்திலேயே
அழைக்கத்துவங்கிவிடுவாள்

நா குட்டி
என்ன பண்ணிட்டு இருக்க?

எப்போதும்போல ஒலிக்கத்துவங்கிவிடும்
முன்னமே பதிவு செய்திருந்த குரல்

வெளாண்டுட்டு இருக்கேன்மா...

மல்லி உதிரிகளை
முடிச்சிடும் பூக்காரனின்
கைகளுக்குள் அகப்படாது

நழுவிச்செல்லும் மொட்டுகள்
கூந்தலுக்கும் சேராது பூஜைக்கும் ஏறாது
வீணாகிப்போகுமே அதுபோல

பிரிவோமென சொல்லிப்பிரிந்த
நீள முத்தத்தின் எச்சில்
அரளி விதையின் சுவையிலிருக்கிறது!

............

Monday, April 29, 2013 | 0 comments »

தூக்கம் கலைந்த பின்னிரவில்
கேட்கும் அழுகை சத்தமானது
குழந்தையுடையதென நினைத்திருந்தேன்

பழைய சீலைமறைவு குளியலரையும்
கதவில்லா சன்னலும் ஒரு மின் விளக்கும்
தாழிடாத வாசலும் கொண்ட வீட்டில்

ஈரமாகாத சீசன் டவலும்
சின்ன சின்னதாய் வெட்டப்பட்ட
ரேசன் கடை வேட்டியும் காயும் மதிலில்

கடந்தவாரம் தென்னைமூட்டில்
புதைக்கப்பட்ட குழந்தையைப் போலவே
அழுது கொண்டிருக்கிறது ஒரு பூனை!

சூரியனற்ற வானம்
பொழியும் இருளில்
வெக்கை முளைக்க

கண்ணீர்
பிசுபிசுப்புகளில்
கதவடைத்துக்கிடக்கிறது

உலர்ந்த உதடுகளும்
வறண்ட தொண்டையும்
நனைந்த விழிகளும்

அவரவர் தேசத்தில்
அவரவர் நேசத்தில்
நனைந்து கொண்டிருக்க

நிலவின் தூரல்கள்
சிலருக்கு கண்ணீராய்
சிலருக்கு கவிதையாய்!

கோவில்
கொடைவிழாவில்
ஆட்டின் தலையறுத்து
குடல் கழுவப்படும்
ஆற்றின் கரையில்
தொப்புள் கொடியறுந்த
கருப்பையும்
உடைந்த கலயத்துண்டுகளும்!

கோலம்

Monday, April 29, 2013 | 0 comments »

பறவைகளும்
அணில்களும்
நிறைந்த வீட்டில்
அவைகளை திட்டுவதற்கு
ஒரு பாட்டியோ
விளையாட அழைக்க
ஒரு மகளோ
வாய்க்காத அவளுக்கு
நான்கு புள்ளிகளிட்டு
கோலமிட தெரியும்!

அதற்குப்பின் 
நீயும் நானும்
சந்திக்கவேயில்லை

சீருடை தவிர்த்து
வண்ண வண்ண உடைகளில்
ஒரு பட்டம்பூச்சி போல

ஒருபோதும் உன்னை
என்னால்
கற்பனை செய்ய இயலவில்லை

எப்போது யோசித்தாலும்
பள்ளியில் தான்
இருக்கிறாய்

உனக்குத்தெரியுமா?
நீ வளரவும் இல்லை
பருவமடையவும் இல்லை

அதே மூன்றாம் வகுப்பு
"C" பிரிவில் தான்
இன்னமும் படிக்கிறாய்...

ஒரு இரவில இலக்கின்றி
வைக்கப்பட்ட புள்ளிகளை
எனக்குச் சாதகமாய் இணைக்கிறேன்.

ஓவியத்தின் நேர்த்தியோ
பெண்ணிய வளைவுகளோ
நிர்பந்திக்கப்படவில்லை

பாதையோ
பயணத்தின் காட்சிகளோ
எதன் நீட்சியும் கோர்வையாகவில்லை

வர்ணங்கள் தீட்டும் பொருட்டு
ஒரு சிலுவையில்
பறவையின் சிறகுகள்

அவைகளோ
இருவேறு பறவைகளின்
ஒரு பக்கச்சிறகுகள்

ஒன்று இரத்தம் வழிந்தும்
மற்றொன்று எறும்பு மொய்த்தும்!

எழுதித்தீர்ந்த பேனாவின் முனைகொண்டு
குருதி வழிய துளையிட்டிருக்கிறாள்
உள்ளங்கையின் பள்ளத்தில்

சூடேற்றிய ஸ்பூனின்
கைப்பிடி பாகம் கொண்டு
சூடிட்டிருக்கிறாள் தொடையில்

ஈரம் நிறைந்த பூந்தொட்டியினை
கால்பெருவிரல் சிதைத்து
ரோஜாமுட்களால் கிழித்திருக்கிறாள் நாவில்

கரடி பொம்மை பியித்தெறிந்து
கட்டில் கம்பி கடித்திருக்கிறாள்
கண்ணாடியுடைத்து முத்தமிட்டிருக்கிறாள்

எத்தனைமுறை முத்தமிட்டிருப்பாள்?
தெரியாது...
குழந்தையில் எச்சில் ஒழுகலைப்போல

பசையோடு வடிந்து கொண்டிருந்தது
கழுத்தினை இறுக்குவதற்கு
அவள் பயன்படுத்திட்ட கயிறு...

Blogger Wordpress Gadgets