ஆமென்

Friday, December 14, 2012 | 0 comments »


சந்தேகத்தின் பெயரில் தொடரும்
தொடர் துரோகங்கள் என்னை
யார் என எனக்கு அறிமுகம் செய்கிறது

புறம் தள்ளுதலில் நிகழும் அகத்தின்
வெறுமையில் நெருங்கும் ப்ரியத்தின் கைகள்
தூக்கு கையிறுகளாய் பாவிக்கின்றன

இயலாமையின் கோபம் தனிப்பதற்காக
உங்கள் கரிசனத்தில் எரிச்சலுறும்
பொழுதுகளில் திட்டிக் கொள்கிறேன்

தன்னைத்தானே அமைதி படுத்துதல்
உங்களுடனான அனுசரித்தல்
சுயத்தின் நேசம் தேடுதல் என

வாழ்தல் பற்றி தெளிவுறாத
புரிதலற்ற வாழ்வு எனது என்பதை
நீங்களும் அறிந்து கொள்வீராக!

ஆமென்


பேசுவதற்கான காரணங்கள் தேடுகையில்
புன்னகையொன்றினை உதிர்த்து
எடுப்புக் குழந்தைபோல விழி வைத்திருக்கிறாய்

இருவருக்குமான மெளனம் உடைபடுவது
ஒரே நேரத்திலிருக்க வாய் விட்டு சிரிக்கிறாய்
மீண்டும் மெளனம் உடுத்திக்கொள்கிறாய்

உனக்கும் எனக்குமான அறிமுகங்களை
மீண்டும் சிலாகிக்கத் துவங்குகையில்
மணி பார்த்து தலை நிமிர்கிறாய்

வெளிநாட்டு சாக்லெட் என கொடுத்து
அதன் கதை சொல்லியபடியே
நீயே பேசுவதற்கான முடிச்சவிழ்கிறாய்

காதலை சொல்லுவதற்கான யுக்தியும்
சொற்களும் வாய்க்கபெறா பொழுதொன்றில்
இதயக்குறியீடு அனுப்புவாயென காத்திருக்கிறேன்!


ஒரு பாதசாரியின் மனஉறுதி போல
புதிதாய் தடம் பதிக்கிறேன்
நீ இல்லாத உனை கூட்டிக்கொண்டு

இலைகளற்ற மரங்களின் கிளைகளில்
காய்ந்து போன சதைத்துண்டுளின்
வாடை வீசியபடி பயணிக்கிறது பாதை

பயமற்ற பைத்தியக்காரனைப்போல
உனை முன்னிறுத்தி உன் மொழிபேசி
இதயத்துடிப்பின் ஓசையில் நடக்கிறேன்

எனை முந்திப்போன உன் பிம்பத்தின்
சீழ்வடிந்த வாடைக்கொண்டு
உன் இருப்பின் அடையாளம் காண்கிறேன்

அங்கே
என்னைபோல் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான்!


மெளனத்தில் உள்ளூறும்
மரணம் பற்றியதான எண்ணங்களில்
அகால மரணமா கண்ணீர் அஞ்சலியாவென

நொடிக்கொருமுறை மூச்சுத்திணறத் திணற
என் மிதான பிடிமானங்கள் உடையுமளவிற்கு
கேட்டுக்கொள்கிறேன் நான் என்னிடம்

சுமத்தலின் பாரம் அடுத்தவர் அறியாத
மனச்சுமையோடு கேள்விக்கனைகள் எழுப்பி
விடையறியாது உழல்கிறேன் உமிழமுடியாமல்

ஒரு பாவ மன்னிப்பிற்கோ பாவத்திற்கோ
துணிந்திடாத வாடகை உடலுக்கு
தினம் ஒரு காயமென பரிசளிப்பதைவிட

உயிர் கொடுத்தவனிடம் உயிரை
திருப்பிக்கொடுக்கும் வழியும் கால அவகாசமும்
எவ்வளவு என்று கேட்டுவருகிறேன்!


காகங்களின் இறக்கைகளும் கண்ணாடியும்
நீண்ட கம்பில் வெள்ளைத் துணிகளும்
நூல்களும் காற்றிலாடிக்கொண்டிருந்தன

புறாக்களுக்கும் காக்கைகளுக்கும்
எச்சரிக்கையென ஐந்து வயது மகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தாள் தாய்

நெல்மணிகளும் கடலைகளும் காயும்
அந்த மொட்டைமாடியில்
கேள்விகளால் படிக்கட்டு செய்தாள் மகள்

ஒவ்வொரு கேள்விகளிலும்
உதிரும் விடைகளும் எழும் எதிர் கேள்விகளும்
முன்பொறுமுறை சொன்ன கதையினையும்

நினைவூகூர்ந்தவள் பொய்யாவென கேட்க
தாயின் மெளனத்தால் மகளிடம் மனிதம் பிறந்து
கடவுள் கேள்விக் குறியானார் மனதில்!

டைரி

Friday, December 14, 2012 | 0 comments »

நூல் நுழைய முடியாதவாரு
துருவேறியிருந்த ஊசியின் துளை வழியே
கடந்த காலத்தை காதலித்துக்கொண்டிருந்தாள்

பழுப்பேறி முனைமடங்கி பனிக்காலத்து

ஈரம் பாய்ந்து புத்தகத்திற்கான வாசமும்
வியர்வை வாடையும் வீசிக்கொண்டிருந்தது டைரி

நடுக்கங்கள் தீராதிருந்தாலும்
பொடிய மூடிய கண்கள் அகல விரித்து
விரல் வருடியபடி வாசித்துக்கொண்டிருந்தாள்

கையின் அழுத்தம் பதிந்து
வியர்வையின் நிறம் ஏறியிருந்த
ஒரு பக்கத்தில் ஊசியின் கதையெழுதியிருந்தது

ஒரு சொட்டு கண்ணீரும்
தாளமுடியாத துக்கமும் வெட்கமும் சூழ
உடைந்த குரலில் வாசிக்கத்துவங்கினாள்

திட்டுக்களோடும் சிணுங்கல்களோடும்
தானேயறுத்த ரவிக்கையின்
ஊக்குகளை வைத்துக்கொடுத்த நாள் இதுவென்று!

தளிர்

Friday, December 14, 2012 | 0 comments »


இன்னொருவரின் விழிகளில் புரண்டு
தெருவோர புத்தகக்கடைக்கு மறுவிலைக்கு வரும்
புத்தகங்கள் வாங்க அவளும் வந்திருந்தாள்

நாவெங்கும் ஆங்கிலம் குதப்பி
மிதவேகமாய் துப்பிக்கொண்டிருந்தாள்
சற்றுமுன் தோழியாகிய ஒருவளிடம்

தன்னைப்பற்றிய அறிமுகங்களும்
எதிர்பாராது நிகழ்ந்த அப்பாவின்
மாறுதல்களென சொல்லிக்கொண்டிருந்தாள்

பயணத்தில் காதல் பறவைகளை கொண்டுவர
மிகுந்த சிரமமுற்றதாகவும் பின் ஆசுவாசமானதாகவும்
இரை விற்கும் கடையினை வினவிக்கொண்டிருந்தாள்

நான் வசிக்கும் அதே தெருவில் இடது பக்கமாய்
நான்கு வீடுகள் தள்ளி அவள் வசிப்பதது அறிந்ததும்
பூனை வளர்த்திடும் ஆசை மேலோங்கியது

ஏனெனில்
எனக்கு அவளை காதலிக்கவேண்டும் போலிருக்கிறது!


இருவருக்குமான விவாதங்களுக்குப்பின்
விலகுதல் பற்றி பேசத்துவங்கினாய்
வரி வரியாய் வழியும் வலியாய்

உடலின் பசி மறைத்து
பேச்சினில் மூழ்கிடும் வேளையில்
ஒரு முத்தத்திற்கு அடிபோடுவதையும்

யாருமில்லையென உணரும் பொழுதில்
மிரளும் கண்களுக்கும் திமிறும் கைகளுக்கும்
தற்செயலாய் சண்டையிட்டு நிறுத்தி வைப்பதையும்

நீண்ட பயணத்தில் தயக்கத்துடன்
முதல் நாள் தோள் சாய்ந்ததையும்
நினைவுகூற, சட்டென முகம் சுழித்தாய்

பிரிதல் பற்றிய உன் புரிதல்களை
நானும் புரிந்து கொள்ள வேண்டுமென
என் குரலுக்கு செவி சாய்க்காது பேசினாய்

உன் அருகாமையின் வேண்டுதலை வேண்டிட
நிராகரிப்பின் நியாயம் பேசி
விடைபெறுதலின் நிமித்தமாய் முத்தமிட்டாய்

உன் எச்சில் தின்ற என் நெற்றி பரப்பினை
கண்ணாடியில் காணுகையில் உயிரறுக்கிறது
இதற்கும் நீயே முடிவொன்றை சொல்லிச்செல்?

மணமகளை அழைத்துவரச்சொல்லிக்கொண்டிருக்கின்றனர்


அந்தரத்தில் சுழலும் விசிறியின்
வேகத்தினை வியந்தபடி சஹானா
தலை தாளாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்

மனித ராசிகள் ரசித்திடாத
சாம்பல் நிறப் பட்டாம்பூச்சியின்
இறக்கையடிப்பிற்குப் போட்டியாய்

டியூப் லைட்டிற்கும் அதன் பட்டைக்குமான
இடைவெளியில் பூச்சிகளை உண்டபடி
வாலசைத்துக்கொண்டிருந்தது பல்லி ஒன்று

கெளளி சத்தத்தில் தலை திருப்பி
கிளுகிளுப்பை சத்தம் தாண்டி
ஓசை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தாள்

பஞ்சாங்கத்து வரியின் வழிப்படி பல்லியை
துடப்பத்திற்கு இரையாக்கினாள் அம்மா
மெல்ல அழத்துவங்கினாள் சஹானா!

நினைவுகள்

Friday, December 14, 2012 | 0 comments »


மனதோடு உடலையும்
தளர்வடையச்செய்கிறது
உன் நினைவுகள்!

விழி மூடவும் அனுமதியாது
விழி திறக்கவும் அனுமதியாது
கருவிழியில் சம்மணமிட்டிருக்கிறது
உன் நினைவுகள்!

வேடிக்கை பார்க்க வைத்து
என் தூக்கத்தோடு
விளையாடிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்!

என்
விரல் நடுக்கங்களில்
தாளமிடுகிறது
உன் நினைவுகள்!

நாவிருந்தும்
என் மொழியறுத்து
சுவைக்கிறது
உன் நினைவுகள்!

புருவங்களின் இடைவெளியில்
நாட்டியமாடுகிறது
உன் நினைவுகள்!

விழியெங்கும் பூத்துக்கிடக்கும்
பூக்களை அனுமதியின்றி
பறித்துச் செல்கிறது
உன் நினைவுகள்!

பாலையெனவும்
பெருமழையெனவும்
என் விழிகளை தீர்மானிக்கிறது
உன் நினைவுகள்!

உடலை சுமந்துத்திரியும்
உயிருக்கு ஓய்வு குடுக்க
போராடுகிறது
உன் நினைவுகள்!

தூண்டில் புழுவாகவும்
புழு விழுங்கும் மீனாகவும்
எனையாக்கி மகிழ்கிறது
உன் நினைவுகள்!


கனவுகளுடைத்து விளையாடும்
உன் விழிகளின் அதிர்வுகளால்
மீளா துயரத்தில் கிடத்தியிருக்கிறாய்

எதிர் திசையிலிருந்து சிதறவிட்டுப்போகும்
உன் உமிழ்தலையும் கேலிச்சிரிப்பும்
எனக்கானதென உறுதிப்படுத்தியிருக்கிறாய்

விரைந்தோடும் ஓடையில்
மேலெழுந்து நீரடையும் மீனைப்போல
உனைக்கண்டு மேலெழுந்து உடைகிறேன்

புறக்கணிப்பின் போக்கினை அறிந்தும்
படுக்கையில் விசிறிக்கிடக்கும் முதியவர் போல
போக்கிடமின்றி உனை சுற்றியலைகிறேன்

அலை தப்பி கரையேறிய கிளிஞ்சல்கள்
காட்சிப் பொருளாகிப்போவது போல-உன்
இருப்பிலிருந்து இல்லாது செய்திருக்கிறாய்

என்ன ஒன்று மரண ஓலத்திலோ
துக்கவிசாரிப்பிலோ காட்சிப் பிழையாவேனென்ற
வருத்தம் மட்டும் உண்டெனெக்கு!


கோடையில் கூடிப்பிரிந்த வேளையில்
வெயில்படர முதுகு காட்டி காதலி
தனக்குள்ளே விசும்பிக்கொண்டிருந்தாள்

உலர்ந்து கொண்டிருக்கும் வியர்வை மிஞ்சிய
தண்டுவடத்தில் சிலிர்த்திட்டிருந்தது
பூனைமுடிகளும் பூத்திருந்த துளிகளும்

அஸ்திவார மண்குவியல்களில்
புரண்டு ஒட்டிய மணல்போக இடது தோளில்
கவியொன்று எழுதியிருந்தான் காதலன்

அழித்திட மனமில்லையென்றும்
வீட்டிற்கு செல்ல வழியில்லையென்றும்
செல்லக் கோபமுமாய் முனகலுமாயிருந்தாள்

தன் உடலெங்கும் வியாபித்துக்கிடக்கும்
உன் முத்த வடுக்களை
என்ன செய்வதாய் உத்தேசம் என கேட்க

மார்பிடையில் கவியெழுதி வாங்கி
முத்தத்தின் எச்சில் தொட்டு
அழித்துக்கொண்டிருந்தாள் முந்தைய கவிதையை!


அகாலமாய் சொல்லொன்றை உமிழ்ந்து
பரிகாசத்தால் கட்டத்துவங்கியிருக்கிறாய்
உனக்கும் எனக்குமான விரிசல் பாலத்தை

உணர்வுக்குஞ்சுகளை சுமக்கும் இதயக்கூட்டில்
தாய்ப்பறவையில்லையென அறிந்து வார்தையெனும்
நெல்மணிகளை உணவெனத் தூவுகிறாய்

சொற்கள் சிக்குண்டு உயிரான
உயிரே உயிர் பிரியுமென தெரிந்தும்
உயிர் வைத்த உயிரே உயிர் பிரிக்கிறாய்

கூடிக்கிடக்கும் கோயில் புறாக்களை
ஆலயமணியோசை கலைப்பது போல
நீயும் நானுமாயிருக்க நீயே கலை(க்)கிறாய்

வார்த்தைகளில் உடைபடும் ஆன்மாவின்
ஓசை விரும்பும் உன் மென் காதுகளுக்கு
இனியும் தீனி போட திராணியில்லை...

ஆதலால் விடைபெறுகிறேன்!


வீதியெங்கும் தேங்கிக்கிடக்கும் மழை நீரில்
புதுப்பாவடை சட்டையை பார்த்துப்பார்த்து
ரசித்து கடந்து கொண்டிருந்தாள் சஹானா

அம்மா தொடுத்து வைத்துவிட்ட பூக்கள் உதிர்த்து
தேங்கிய பள்ளங்களுக்கு ஒன்றென
நார் மட்டும் மிச்சம் வைத்திருக்கிறாள்

கலைந்திட்ட கூந்தல் முன்னெற்றியில்
அவள் ஆடிய நடனத்தை அரங்கேற்ற
அம்மாவுடனான பாடலை தனியே பாடுகிறாள்

கருவிழிக்கு போட்டியாய் மேகம் போட்டியிட
முன்னமே அறுந்திட்ட பாசியின் முத்துக்களை
சட்டையில் மடித்தவளாய் நடை போடுகிறாள்

அருந்த பாசியின் உதிர்ந்து தொலைந்தது போக
மிதமிருந்தது கண்டு அம்மா திட்டவும்
அழுது கொண்டு சஹனா சொல்கிறாள்

உன் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவுக்கு
சின்னதாய் பாசி கோர்த்து போடலாம்மா என்று!

இப்படியாய்

Friday, December 14, 2012 | 0 comments »

இலையுதிர் கால சருகுகள் பாதம்சூழ
எதோ சத்தம் கேட்டவள் போல
பக்கவாட்டில் விழியுருட்டி
நடந்து சென்று கொண்டிருக்கிறாள்

அருகிலோடும் நீரோடையில்
நீர் கிழிக்கும் பாம்பொன்றின் வேகத்தை
அம்பெய்து வெளியேறும் வில்லின்
மடிப்பு அளவிற்கொரு பார்வை குறுக்கி

நரம்புகளென பின்னலிட்டுக் கிடக்கும்
இலையற்ற கிளைகளில் கூடுஒன்று கண்டு
பரிதாபப்படும் அன்பின் மொழியை
விழிகளால் முத்தமிட்டுச் செல்கிறாள்

வாடைக்காற்றில் சில்லிட்ட கைகளை
உள்ளங்கை உரசி கன்னத்தில் ஒத்தடமிட்டு
பனியென உருகியவளாய்
காதல் குழைத்து பார்வையை நழுவவிடுகிறாள்

இப்படியாக
வேண்டுமென்றே மறுத்திடும் அவளின்
முத்தத்திற்கான முகபாவனையை
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் ஓவியமாக!


யாருமற்றதாய் உணரும் காலங்களிலெல்லாம்
உனக்கொரு கடிதம் எழுதிட
மனம் முயன்று பின்பு தவிர்த்துவிடுகிறேன்

எதெற்கென கனிக்கமுடியாமல்,
மனம் சுமக்கும் உருவமில்லா சுமையோடு
அந்திப்பொழுதுகளில் பற்றி எரிகிறேன்

காடுகள் அழிந்து கூடுகளற்று
மணலற்ற பூமியில் முட்டையிட்டு
முட்டையுடைந்து அழியப்போகும் பறவைகள் போல

உன் அன்பின் கருவில் என்னுள் விளையும்
துளிகளையும் ஏனைய சொற்களையும்
அழித்துக்கொள்ளப்போகிறேன், கொல்லப்போகிறேன்

என் வனாந்தரத்தில் முளைத்திருக்கும்
ஒற்றை ஆலமரமாய் அதில்-நீ மட்டும்
சொற்களின் விழுதூன்றி நிரந்தரமாகியிருக்கிறாய்

நானென நீ அறியாத வண்ணம்
உதிர்ந்து கொண்டிருப்பேன்
ஒவ்வொரு இலையாய் ஒவ்வொரு இலையாய்!


உனக்கும் எனக்குமான உரையாடல்களை
நாளொன்றில் நொடிப்பொழுதின்
வார்ததையென பக்கங்களின் எண்ணிக்கை
காற்றில் பிடிபடாமல் உலவுகிறது

பிணக்குகளற்று பிரிவுக்கு ஆயத்தமான
உன் சொல்லென்றின் முனைபிடித்து
இதயத்தில் கோர்த்திருக்கிறேன்
உள்ளிறங்கி கோடுகிழித்துக்கொண்டிருக்கிறது

இருவருமாய் பின்னலிட்ட
சிலந்திவலையில்
பதிமூன்றாவது அடுக்கில் நானும்
இருபத்தியேழாவது அடுக்கில் நீயும்

நமக்கான பயணத்தில்
நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்
நீ கீழறங்கிக்கொண்டிருகிறாய்!

சில புள்ளிகளும் அதனைச்சுற்றிய
நெளிவுகளும் வாய்க்கும் வேளையில்
புறக்கணிப்பின் அடையாளமாய்-உன்
வீட்டு வாசலில் சுண்ணாம்பில் கோலமிடு
என் நினைவெறும்புகள் வழிதப்பி அலையட்டும்!
பாலை நிலமென
வெடித்துக்கிடக்கும் உதட்டின்
தசையறுத்து ஈரம் வாங்கிச்செல்கிறாள்
விடைபெறுதலும் கூடவே
ஒரு வழியனுப்புதலும்!

Blogger Wordpress Gadgets