ஆற்றில் துணி துவைத்து
பிழைப்பு நடத்தும் கிழவி ஒருத்தி
தன் மகள் வயிற்று மகளுக்கு
துண்டு ஒன்றில் நீர் அரித்து
மீன் பிடிக்க கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்

கல்லில் விழும் ஒவ்வொறு அடிக்கும்
உள் வாங்கிச் செல்லும்
மூச்சுக் காற்றின் ஓசை
தனிமையை நிருபித்துக் கொண்டிருந்தது

ஓரமாய் மேய்ந்து கொண்டிருந்த
ஜோடிக்கழுதைகள் ஒரு சேர சத்தமிட
கொக்கு கூட்டம் இறக்கையடித்து
திசை நோக்கி கலைந்து சென்றது

புல் தரையில் ஒரு கைப்பிடி
பிழிந்து வைத்த பழைய சோற்றினை
சமீபமாய் சேர்ந்துகொண்ட
நாய் ஒன்று தின்னத்துவங்கியது

உலர்ந்த துணிகளெல்லாம்
மூட்டையாகி கழுதைக்கு சுமையாகிப்போக
சிறுமியிடம் தப்பிய மீன்கள்
நீர் வற்றி இறக்கத்துவங்கின...

மழையும் நீரும் ஆறும்
காலமும் கழுதையும்
கொக்குகளும் குருவிகளும்
பாட்டியும் அங்ஙனமே!


என் ஆகாயத்தின் அளவினை
உன் நினைவுகள்
அனுமதியின்றி தீர்மானிக்கின்றன

நீ ஆசையாய் பதித்திட்ட
செயற்கை நிலவும் நட்சத்திரங்களும்
சதா சிரித்துக்கொண்டேயிருக்கின்றன

இழுத்துப்போர்த்திட்ட போர்வையின்
இடுக்குகளில் கை நுழைவது போன்ற
பிரம்மை எவ்விரவும் உடைவதாயில்லை

பாதத்தில் கோடுகிழிக்கும்
விரல் நகங்களின் இணைப்புகளில்
ஓரு முத்தத்தை பரிசளிக்க விழைகிறேன்

தொட்டில் அசைவில் விழிக்கும்
மகளின் பெயரை நொடிக்கொருமுறை
செல்லம் கொஞ்சுகிறாள்

பிரசவத்தில் உன் குரல்வழியே கேட்ட
காதலனின் பெயர்-நான்
விரும்பாமலே ஒலித்துக்கொண்டிருக்கிறது!


அடையாளங்கள் தொலைப்பது பற்றி
வெகு நேரமாய் நிலவற்ற இரவில்
விவாதித்துக்கொண்டிருந்தாள்...

கையிலிருக்கும் லைட்டரை
பற்றவைத்தும் அணைத்தும்
கண் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தாள்

தன் கைப்பையிலிருக்கும்
டிக்கெட் குவியல்களை கொளுத்துவதுபோல
கொளுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்

தனக்குப் பிடித்தவைகள் பிடிக்காதவைகளென
நீளும் பட்டியலில் இறுதியாய்
"ம்ம்ம் அப்புறம் நீ" என்று முடித்து வைத்தாள்

ஒரு வழிப்போக்கனின் புன்னகையை
ஏற்றுக்கொண்டவளாய் அவன் போகும்வரை
பார்வையை செலுத்திக்கொண்டிருந்தாள்

அவனைத்தெரியுமா என்ற வினாவில்
தெரிந்து என்ன செய்யப்போகிறாய் என்றாள்
டிக்கெட் எரிந்து கொண்டிருந்தது!


என் மீதான உன் பிரியங்கள்
பைத்தியக்காரத்தனமென புரிந்துகொண்டதாய்
கடைசி செய்தி அனுப்பியிருக்கிறாய்

ஒரு சண்டைக்கும் அதன் பின்
பேசிக்கொள்வதுக்குமான இடைவெளியில்
நொந்துகொள்வதை முணுமுணுக்கிறாய்

மறுபடி சொல்லென வேண்டுகையில்
அனுதாபம் வேண்டாமென
வார்த்தையால் முகத்தில் அறைகிறாய்

ஒவ்வொருமுறை பிரிவதாய்
நீ சொல்வதும் மீண்டும் பேசிக்கொள்வதும்
ஆறுதலாய் இருந்தது எனக்கு...

பிரியமாட்டாயென ஒவ்வொருமுறையும்
காத்திருப்பின் காலவெளியின் இருபக்கமும்
நினைவுகளை பயிர் செய்து வைத்திருக்கிறேன்.

நாம் சேருவதன் நிமித்தமாய் புன்னகையூற்று
அல்லது ஒருபிடி எச்சில் ஊற்று
நிராகரிப்பின் முட்கள் துளிர்க்கட்டும்!



எல்லா பாதையிலும் எவனோ ஒருவன்
கை நீட்டி பேசிக்கொண்டிருக்கிறான்
ஒருவன் வழிமறித்து கேட்கிறான்

சுட்டிக்காட்டுவதாகட்டும் கேள்வியாகட்டும்
பிழையாகட்டும் விமர்சனமாகட்டும்
எளிதில் யோசிக்கவைத்துவிடுகிறார்கள்

அவசர நடையோ சிந்தனைமுகமோ
கேட்பதென தீர்மானித்தபின் அவர்களின்
கேள்விகள் கேட்கப்படாமலிருப்பதில்லை

கேட்பவர் யாரென அறியாதிருந்தும்
கேட்பது இன்னதென அறியாதிருந்தும்
பதிலோ புன்னகையோ பிறந்துவிடுகின்றன

தப்பித்தலுக்காக நாம் இடைச்செருகும்
பதிலோ புன்னகையோ ஒப்புக்கானதென
அவர்களும் அறியாமலில்லை!


அழுவதற்கான காரணமேதுமின்றி
அழுவதற்கு ஆயத்தமாகிறது
கைவிடப்பட்ட மனது

இசைக்கும், ஆறுதல் குரலுக்கும்
செவிகொடுக்காத மனதோடு
வாழ்வதற்கு சிரமமாய் இருக்கிறது

பேரிறைச்சலோ அதீத அமைதியோ
எதையும் ஏற்பதாய் இல்லை
எந்தப் பொழுதிலும் எந்த நிலையிலும்

ஒரு தற்கொலை கனவைக்கூட
சாதகமாக்கத் தெரியாதாவென
ஏளனமாய் சிரிக்கிறது பின்பு அழுகிறது

மூடிய விழியோ விட்டம் பார்க்கும் விழியோ
சாதகமாய் இல்லை... எதையாவது
முன்னிறுத்திக்கொண்டேயிருக்கிறது

தற்காலிகமாய்
காயமொன்றினை பரிசளியுங்கள்-அது
உடலளவில் இருக்கட்டும்!

உதவி

Thursday, January 10, 2013 | 0 comments »


புறக்கணிப்பின் காயங்கள்
இமைப்பீலிகையில் சீழ்வடிந்து
உறைந்துக்கிடப்பவனை பார்த்ததுண்டா?

சோகத்தின் பிரதிநிதியாய்
வெளியேறும் கண்ணீர்த்துளிகளை
சமபந்தி செய்திடமுடியாது எவருக்கும்

அறைக்குள் தஞ்சம் புகுதலோ
அரவற்ற இடத்தில் லயித்தலோ
எளிதில் வாய்த்துவிடுவதில்லை

உங்களின் முகசுளிப்பும்
முணுமுணுத்தலும் ஒருவனின்
வெளிப்படுத்துதலை கட்டுப்படுத்துகிறது

அழவேண்டிடும் நேரத்தில்
இடமற்று அலையும் தனியொருவனின்
மனநிலையை சந்தித்தவரா நீங்கள்?

ஆம் எனில்
கருணையின் அடிப்படையில்
தற்கொலைக்காவது உதவுங்கள்...



வாழ்வது பற்றியதான மனநிலை
சலனத்தில் சிக்கிக்கொள்கிறது
ஆம்புலன்ஸ் ஓசை கேட்கும்போது

பின் கதவுக்கண்ணாடிவழியே
காணக்கிடைக்கும் முகமானது
அனுமதியின்றி துக்கத்தை புகுத்துகிறது

நகரத்தின் சாலை நெரிசல்களில்
சன்னமாய் விழும் அலறல்கள்,
பாம்படம் பூட்டிய கிழவியின் ஓப்பாரியை

எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி
என் கால்விரல் கட்டி என்னை எனக்கே
மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது

காதல்
காமம்
பசியென
நீளும் கனவுகளைத் தாண்டி

ஒரு மரணத்தில் பூத்துவிடும்
சாலைப்பூக்கள் நெடியேற்றுகிறது
இறப்பு பற்றியதான எதார்த்தத்தை!

மதி

Thursday, January 10, 2013 | 0 comments »

சாலையெங்கும் வியாபித்துக்கிடக்கும்
நிலவின் ஒளியை
வானம் பார்த்து படுத்திருந்தாள் மதி

நாய் தன் குட்டிகளோடு இடம்பெயர
பேசுவதற்கு யாருமற்றவளாய்
மெளனத்தை துணைக்கு அழைத்திருந்தாள்

அன்றைய பொறுக்கல்களில்
உடைந்த பொம்மையோ பற்களுடைந்த சிப்போ
எந்தத் தெருவிலும் கிடைக்கவில்லை

நடுநிசியில் வெற்றிலையிடிக்கும் ஓசை
அன்றேனோ கேக்காதிருக்க
பீங்கான் தட்டு கண்ணீரால் நிறைந்திருந்தது!

நீங்கள்

Thursday, January 10, 2013 | 0 comments »

ஒப்புக்கொடுப்பதன் நிமித்தமாய்
உங்கள் தவறுகளை மன்னிக்க
எல்லா இரவிலும் மன்றாடுகிறீர்கள்

பிராயச்சித்தம் தேடுவதற்காய்
புண்ணியம் செய்வதென
எல்லோரிடத்திலும் அன்பு செய்கிறீர்கள்

ஒரு வழிப்போக்கனின் பசியறிந்து
உணவிற்கான பணம்கொடுத்து
புண்ணியக்கணக்கை எண்ணுகிறீர்கள்

ஆலயம் கடந்து போகையில்
உங்கள் கடவுளின் குறியீடுகளை
காற்றில் வரைந்து கொள்கிறீர்கள்

சாலையின் நடுவே கழிவுகளை அள்ளி
வெளியேறுபவனைக்கண்டு
முகம் சுளிக்கிறீர்கள்...

உங்களுக்கு துர்நாற்றமாகவும்
அவனுக்கு கடவுளின் எச்சமெனவும்
தோன்றக்கூடமென எண்ணுகிறீர்களா?

உங்களுக்குத்தெரியுமா
அவரவர் பசிதீர்க்கும்
காமத்தின் எச்சம் தான் நீங்கள்!


விவாதம் விரும்பாதவளாய்
பதிலேதும் கைவசம் இல்லாதவளாய்
பொய்பேச மறுப்பவளாய் இருக்கிறாள்

பிடிவாதக்காரியென திமிரானவளென
குற்றம் சுமத்தமுடியாதொரு
பாவனை முகத்தில் பதித்திருக்கிறாள்

மரம் கொத்தியின் பார்வையென
குவித்தும் பரப்பியும் எதிரிலிருந்தே
புரியாதொரு சைகை செய்கிறாள்

முதல் புன்னகையோ முதல் நிராகரிப்போ
எதுவும் வாய்க்காத முதல் சந்திப்பினை
நினைவு கூர்ந்து கைகுலுக்க எத்தனிக்கிறேன்

நழுவுதல் போன்ற சமிக்ஞையோடு
உங்களுக்கு இப்படித்தோன்றுவதில்
தவறில்லையென விடைபெறுகிறாள்!


இறந்தது குறித்ததான
உங்கள் துக்க விசாரிப்புகள்
வேடிக்கையாக இருக்கிறது

உங்கள் உச்சுக்கொட்டல்களோ
ஆச்சர்ய கைவைப்புகளோ
முகம் சுழிக்க வைக்கிறது

காரியமாய் இருப்பது பற்றிய
உங்கள் வகுப்பெடுப்பு
முகத்தில் உமிழ்வது போலிருக்கிறது

விடைபெறுகையில திணிக்கும்
ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும்
நேரம் தின்றதற்கான கூலியென தோன்றுகிறது

எரியும் மெழுகின் புகையினூடே
புகைப்படத்தின் புன்னகை அழத்தூண்டுவதாய்
வாய்பொத்தி விடைபெறுகிறீர்கள்

இறந்தது குறித்ததான
உங்கள் துக்க விசாரிப்புகள்
வாடிக்கையாக இருக்கிறது...



என் மீதான உங்கள் நம்பிக்கைக்கும்
என் மீதான என் நம்பிக்கைக்கும்
இடைவெளி அதிகமாகவே இருக்கிறது

என் சுயம் பற்றிய உங்களின்
கருத்துக்கணிப்பும் பழக்கங்களும்
தோல்வியுற செய்கிறது காலம்

நான் என்றொரு பிம்பத்தை
என் பங்கிற்கு நானும் காலமும்
தோதுவாய் மாற்றிக்கொண்டிருக்க

குற்றவாளியாகவும் குற்றவாளியாக்கியும்
ஆதங்கத்தையும் அனுதாபத்தையும்
என் மீது பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்

சிறுமியொருத்தி சேகரிக்கும்
உண்டியல் காசுபோல ஏதுமறியாது
உங்கள் கடமையை செய்துகொண்டிருக்கிறீர்கள்

ஒரு துக்கத்தை அதன் போக்கில் சென்று
கவிதையாக்கிக்கொள்ளும் சுயநலக்காரன்
நான் என்பது அறியாமல்!


வாழ்வது போலொரு பாவனை
செத்தவன் போலொரு வாழ்வு

நலம் விசாரிப்பில்
ஆறுதல் சொல்கிறேன்
என்கிறீர்கள் நீங்கள்
நினைவு கொள்கிறீர்கள்
என்கிறேன் நான்

மண்டியிடுவதை
நீங்கள் பிராத்தனை என்கிறீர்கள்
அடிமைத்தனம் என்கிறேன் நான்

என் அந்திக்காடு
ஒளிர்கிறது என்கிறீர்கள்
எரிகிறது என்கிறேன் நான்

பூவைப்பறிப்பது போலிருக்கிறது
உங்களுக்கு...
வலுக்கட்டாயமாய்
பிடுங்குவது போலிருக்கிறது
எனக்கு!

இறந்தது போல
நடித்துக்கொண்டிருக்க
கழுகுகள்
தசைக்கிழித்துக்கொண்டிருக்கிறது
நானோ சத்தமின்றி அழவேண்டும்...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும்

என் வழியெங்கும்
பணத்தின் வாடைகள்
பிணத்தில் புழுக்கள்



இறக்கைக்கு ஓய்வேதும் விரும்பாது
செவிவழியே பறந்துகொண்டிருந்தது
துருப்புச்சீட்டு ஏந்திய பறவையொன்று

யோசித்தலையும் புரிதலையும்
யோசிக்க மறந்திருந்திருந்த பொழுதொன்றில்
அது வாய்வழியே பிறந்திருந்திருந்தது

எதிர் கேள்வி எழுப்பாதவர்களை
நன்கு அறிந்திருந்தது அப்பறவை
அவர்களும் தலையாட்டிக்கொண்டிருந்தனர்

நலன் விரும்பியோ உண்மை அறிந்தவனோ
நியாயத்தின் பக்கம் நிற்பவனோ
எவரும் வாய்க்காத தருணத்தில்

பழிக்கப்பட்டவன் இறந்திருந்தான்
துரோகம் செய்தவன்
துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தான்!


உன் ஞாபகத்துகள்கள்
நம்மைப்பற்றிய எண்ணத்தை குவிக்க
என்னை எனக்கு மறைக்கிறது

பிடிவாதங்களில் எழுந்த
மெளன அடுக்குகள் உரமாகி உருமாறி,
சந்தேக பிம்பத்தை உடைய விடுதாயில்லை

நம்பிக்கையில் துளிர்விடும்
புன்னகை வாய்க்காத பொழுதொன்றில்
பெருக்கெடுக்கிறது கண்ணீர் நதி

உருண்டோடும் துளிகளெல்லாம்
ஒன்றாகி மெளனமெனும் புற்றுகட்ட
குடியேறுகிறது புறக்கணிப்பெனும் சர்ப்பம்!

எழுத்துக்கள் ஏதுமற்றிருந்த நோட்டில்
இடதுபக்கத்தாளில்
நீர் விழுந்ததற்கான துளி படிந்திருந்தது

புரட்டிப் பார்த்ததன் அடையாளமாய்
வலப்பக்க காகித முனையில் அழுத்தமும்
வியர்வையும் அச்சேறியிருந்தது

பெயரேதும் எழுதப்படாதிருந்த
அக்காகித அடுக்குகளை காணுகையில்
நீங்களும் இப்படி யூகித்திருக்கலாம்

எழுத்துகள் ஏதும் வாய்க்காமல்
காதலை சொல்ல துளி கண்ணீரை
அக்காகிதத்திற்கு பருகக்கொடுத்திருக்கலாம்...

அல்லது

கொடுக்கப்பட்ட மனதானது
மறுக்கப்பட்டு விழுந்த
சொட்டு கண்ணீராகவும் இருக்கலாம்!


சதைகளின் அடையாளமான
வியர்வை தொலைந்து
குருதி உறைந்துக்கிடந்தது களத்தில்

உடல்கள் சிதறுண்ட பாகங்களை
எது எது எதற்கென பொருத்திப் பார்க்க
பிணக்குவியல்கள் நாதியில்லாதிருந்தது

எய்யப்பட்ட அம்பு
உடைந்த வாள்
வளைந்த வில்
சொருகப்பட்ட ஈட்டி

யாவற்றையும் சுமந்த உடல்கள்
சுவர் ஓவியத்தின் சாயலை போல
சுமந்திருந்தது அக்களம்

வரைந்து விட்டவன் கடந்துவிட
ஓவியத்தை சிதைத்துக்கொண்டிருந்தது
ஓர் கழுகு!


உன் பிரிவில் முளைத்துக்கிடக்கும்
என் ஞாபகச் செடிகளில்
காய்த்துக்கிடக்கிறது கண்ணீர் துளிகள்

வேலியின்றி அலையும் எண்ண மிருகம்
என்னைத்தின்று அதன் எச்சத்தில்
மீண்டும் பரவிக்கிடக்கிறது ஞாபகங்களாய்

ஒரு நலம் விசாரிப்பில் தீர்ந்துவிடாத
உனதன்பின் காலங்களை எண்ணி
தொலைபேசி துண்டிப்பில் வருந்துகிறேன்

உன் வருகையின் காலம் அறிந்தும்
பிரியத்தின் கதகதப்பினை வேண்டும்
மனதினை பதியமிட்டு வைத்திருக்கிறேன்

உதடுகள் பிரியாது முளைவிடும்
மன ஒலிக்கு
மெளனம் என்று பெயரிட்டிருக்கிறேன்


புருவங்களில் அழுந்தும்
மூன்று பருவ கனவுகளிலிருந்து
விடுபடுவதற்கான வழி தெரியவில்லை

நிர்பந்தங்கள் ஏதுமின்றி
நிர்பந்திக்கும் காலவெளியெங்கும்
மலட்டு விதையாய் கடந்த வருடங்கள்

ஆறுதலுக்காக உறங்க எத்தனிக்கையில்
இரவுப்பொழுதுகளில் முந்திக்கொள்ளும்
எண்ணங்களும் வார்த்தை வடுக்களும்

ஒரு இயலாமையின் முகபாவனையும்
அறியாமையில் எழும் இயலாமையும்
முன்னிருக்கும கண்ணாடியை ஒத்திருக்க

சகதியில் கால் குழைத்து விளையாடும்
குழந்தையொன்று மண்மூடி இறப்பதுபோல
அகாலமாய் முடியட்டும் என் காலம்!

பசி

Sunday, January 06, 2013 | 0 comments »


முட்களால் ஆன இரண்டு கூடு
இருவேறு திசையில் இரண்டு காகம்
இலைகள் உதிர்ந்த ஒரு மரம்

நிழல் தாங்கும் சாலை
நிழல்மேல் ஒதுங்கும் முதுமை
வெயில் குடிக்கும் ஒரு மரம்

விரைந்தோடும் வாகனங்கள்
பொறுமையற்று நிகழும் நெரிசல்கள்
இடையூறாகத்தெரியும் ஒரு மரம்

இரும்பு பற்களில் சிதறும் துகள்கள்
அகலமாகும் எண்பதடி சாலை
மரம் இருந்தது என கேட்கும் வாக்கியம்

நீங்களும் பரிதாபப்பட்டிருக்கலாம்
உச்சுக்கொட்டுங்கள் வசைபாடுங்கள்
பின்பு கடந்து போங்கள்!

சிலுவைகள் விதைக்கப்பட்டிருந்த
நிலத்தில் உலவிக்கொண்டிருந்தாள்
மெழுகுவர்த்தியுடன் ஒற்றைக்கால் சிறுமி

பெயர்களுடனான பிறப்பு இறப்பு குறிப்புகளை
எட்டாய் மடிக்கப்பட்டிருந்த
காகிதத்தோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தாள்

குறிப்புகள் யாவும் பொருந்திப்போனதில்
சருகுகளின் இசையோடு மெளனம் ஊற்ற
காலத்தின் வழியெங்கும் பூத்திருந்தன காளான்கள்

அதே பெயரில்
அதே பிறப்பில்
அதே இறப்பில்
மீண்டுமொரு கல்லறை காண்கையில்
அவளுக்கு நரைத்திருந்தது!


ஒரு பெண்ணை பழிப்பதற்கான
காரணங்கள் எல்லோருக்கும்
காரணமின்றி கிடைத்துவிடுகிறது

தவறாகவோ தவறுதலாகவோ
எளிதில் வாய்த்துவிடுகிறது பட்டமும்
அதில் பொதிந்திருக்கும் அபத்தங்களும்

நண்பனுடான உரையாடலில்
வந்துபோகும் மூன்றாமவன் மேல்
நொடிக்கொருமுறை விழுகிறது அச்சொல்

இயலாமையின் உச்சத்தில்
பதற்றத்தின் தற்காப்பில் அறியாமையில்
உமிழப்படுகிறது அப்படியொரு சொல்

கெட்டவார்த்தைகளின் நடுவில்
பட்டம் பெற்றுப்போகும் பெண்ணானவள்
தாயானவள் என்பதை நீங்களும் அறியாமலில்லை!

மாயன்

Sunday, January 06, 2013 | 0 comments »


தினமும் ஒரு பெயரைச் சொல்லி
அதற்கு கிழமையென்று பெயரிட்டு
யாரையாவது பயமுறுத்துகிறீர்கள்

நிமிடமென்றும் நொடியென்றும்
நாழிகையென்றும் வகுத்து
யாரையாவது உதாசினப்படுத்துகிறீர்கள்

உங்கள் கொள்கையை மனநம்பிக்கையை
அடுத்தவனிடம் கூறி
அவனையும் சஞ்சலப்பட வைக்கிறீர்கள்

ஏதுமற்று வாழ்ந்த நாட்களைத்தின்று
செறிக்காது போன நாகரீகம் விழுங்கி
நான் நீ என தன் சுயமிழந்து சுயம் அறியாது

கருணையை கொன்று கள்ளமில்லா
மனதைக்கொன்று புகழ்பாடி
புகழ் விரும்பி வஞ்சத்தோடு வாழும் நீங்கள்

சிறியவன் என்றும் வாலிபன் என்றும்
வயோதிகன் என்றும் காலத்தை காரணியாக்கி
நன்றாகவே நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்!

அல்லது
யாருமறியாது ஏமாற்றுகிறேன் என
ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்...


அழுவதற்கு ஆயத்தமாய்
தானுமற்ற இடமொன்றைத் தேடி
இருளில் மூழ்குவதென முடிவெடுத்தவன்

சன்னல்களற்ற அறை
காற்றுபுகமுடியாதொரு அடைப்பு
இடுக்குகளில்லா கதவினை கண்டான்

கண்ணீரின் பிசுபிசுப்பினை துடைக்க
அப்பா உடுத்திய லுங்கியொன்றோடு
தாழிடப்பட்டது அறை

அழுவதற்கான காரணங்கள் யாவும்
யாருக்கென யாரலென குமைந்து
மூச்சினை அடைத்திருந்தது சிந்தனை

நிசப்தங்கள் ஆழும் அந்த அறையும்
அதன் சூழலும் கதறல்களை
கவனமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தன

அவனோ
தன்னைத் தேடுவதற்கு கூட
யாருமில்லையென மீண்டும் அழத்துவங்கினான்


நான் எப்படி நகர்ந்து படுத்தாலும்
என் தொடுவுணர்வு இன்றி மகள்
உறங்கமாட்டாள் என்றாள் அக்கா

தேர்வு விடுமுறையில் அயல்தேசம்
வசிக்கும் தகப்பனை காணும் ஆவலில்
மகளும் ஆவலாய் இருப்பதை சொல்லியவள்

மகளுக்கு மகளாக மாறியிருந்தாள்
குழந்தையாக மாறியிருந்தாள்-தன் மகள்
அப்பா பிள்ளையென புலம்பியும் வைத்தாள்

தனக்குத்தானே ஆறுதலாய் மகளின்
ஆசையையும் தகப்பனின் தவிப்பையும்
புரிந்தவளாய் அனுப்பவும் தயாராகியிருந்தாள்

பிரிவின் பொழுதுகளை இரவுகளை
மகள் அருகாமையின்றி
எப்படி கழியும் இந்த பத்து நாட்கள்?

பிள்ளையின் அன்பை
அவளின் மொழியை, பாசத்தை
சின்ன சின்னதாய் குறிப்பெடுத்து வை

பருவம் கடக்கையில்
உன்னுடனான என் பிரிவென
உன் மகளிடம் கொடு

அப்பா பிள்ளை, அன்றிலிருந்து
அம்மா பிள்ளையாகியிருப்பாள் என்றேன்
அளவாய் சிரித்து வைக்கிறாள் அக்கா!

கவிதாயினி

Sunday, January 06, 2013 | 0 comments »


அவன் அவளுக்கு வரிசையில் ஒருத்தனென
அறிந்தபின்னும் மனவிருப்பத்தை
கடிதமெழுத முடிவெடுத்திருந்தான்

அவனுக்கு அவள் முதலாம் அழகி என்பதாலும்
அதுவே கடைசியெனவும் தீர்மானித்து
சாளரத்தில் கூடுகட்டி வாழும் அணில்களின்

மெல்லிசைக்கு காதுகொடுத்துவிட்டு
கண்ணாடிப்பேழையிலான ஓவியமொன்றின்
நிர்வாணத்தை ரசித்துக்கொண்டிருந்தான்

பாதி தூக்கத்தில் ஒளிரும் கருவிழியை
முழுவதுமாய் ஆக்கிரமிக்கவேண்டுமென
புரளும் பக்கமெல்லாம் வந்தமர்ந்தான்

வாடிக்கையாளர்கள் கடன்சொல்லிப்போக
பெயரும் பணமும் குறிப்பெடுத்துவைக்கும்
கந்தலாகிய நோட்டில் அவளுக்கான கடிதத்தை

என் மனம் ஈர்த்த பேரழகி! என துவங்கி
பெயரெழுத முனைகையில் பெயரறியாது
இடம் விடுத்து தொடங்கியிருந்தான்...

தூக்கத்தில் எவன் தாயையையோ
வேசியென பழித்து தடாரென எழுந்தவள்
அவன் புன்னகை கண்டு முகம் சுழித்தாள்

கலைந்த கூந்தல்கட்டி முகம் நனைத்து
ஆடை களைந்து கால்விரித்து
ம் என கோபக்குரல் விடுத்து கண்மூடினாள்

உச்சந்தலையில் முத்தமிட்டு அவளின்
பிறந்த மேனியில் ஆடைமூட பால்யம் நினைத்து
அப்பாவென கதறி அழத்துவங்கினாள்

செத்துக்கிடந்த அவள் மனதுக்கு
உயிர் கொடுத்தவனை வழியனுப்பியவள்
பின்னர் கவிதாயினி ஆகியிருந்தாள்!


சிலையென நகரும் பிம்பமொன்று
தினம் தினம் கனவில் வந்து நின்று
தூக்கம் திருடிப்போகுதே விழிகள் தின்று

அனுதினம் அதன் உருவம்கொண்டு
விடிந்ததும் விழி வீதி சென்று
தொலைந்திட தொலைந்திட தேடத்தூண்டுதே

மேகங்கள் கூடிப்பொழியும் தூரல்கள்
அதில் நனைந்தாடிடும் மென்பாதங்கள்
பொருந்திட விரைந்தோடுது ஏக்கங்கள்

நெருங்கி நெருங்கி கண்கள் விரிந்திட
கொங்கைகள் இரண்டும் உள்ளம் கவர்ந்திட
கனவினில் தின்ற சுவை கூந்தாடுதே

வளைந்து அகன்ற கொடியிடை நெளிய
பிசைந்து அறுந்திட்ட மணிமுத்துக்கள் மிளிர
உயிர்கொடியில் தங்கிட்ட நீர்கண்டு கூச்சல்போடுதே

முன் நெற்றியில் விழுந்த ஒற்றைத் தூரிகை
அகன்று ஒடுங்கும் தோள் கொண்ட தாரிகை
பச்சை நரம்பு கழுத்தில்கண்டு இச்சை கூடுதே

கண்கள் தின்ற கண்கள் கண்டு செவ்விதழ் கொய்து
இடைதாண்டி ஆடிடும் கூந்தல் தொட்டபாகம் தொட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் பருகிட படர்ந்திட

பனிபோல் உருகியோடியது அவள் தேகம்!

Blogger Wordpress Gadgets