பருகுதல்

Friday, December 02, 2016 | 0 comments »

மீசை வரையும் பழங்கஞ்சி போல 
உனைப்பருகி 
சுட்ட கருவாடென 
உடலைத் தொட்டுக்கொள்ள வேண்டும்

வரப்பினிடையே விரைந்தோடும்
நீர்க்கால்களின் நடுவே-உன்
தொட்டாச்சிணுங்கி முதுகைக் கிடத்து

தென்னங்கீற்று இடைவெளியில்
உன் முகம் மோதும் வெய்யிலை
இடவலம் ஒதுங்கும் முலைகளின் நடுவே
சாரைப்பாம்பின் நகர்வென திருப்பி விடு

இப்போதைக்கு
மேற்கிலிருந்து இறங்கி வரும் நிழலை
பலாச்சுளையென பருகலாம்.


நிறங்களின் வழியே
ஊடு பாயும் உடலை
கருப்பு வெள்ளையென
பிரதியெடுத்துக் கொள்கிறேன்

விரல்களின் நீட்சி
பற் தடங்களுக்குத் தப்பிய பாகம்
நாவின் முனகல்கள்

கண்கள் வர்ணம் பாய்ச்சும்
அபூர்வத்தை
ஓர் விடியலில் நிகழ்த்தியபின்
மெளனித்திருந்தோம்
உடல்களின் வழியே

நிழலாடுதல்

Friday, December 02, 2016 | 0 comments »

அங்கம் பிரதிபலிக்கும்
ஆடைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
பின்னிருந்து பிம்பம் உடைக்கும் 
விளக்கொளியின் ஊடுருவல்
காமத்திற்குத் தப்புவது என்றும்
காமத்திற்குத் தாவுவது என்றும்
ரசனை என்றும்
நீண்ட விவாதமது

கவனம் குவியாது 
'சேனல்' மாற்றிக்கொண்டிருந்தாய்

மழைக்கு எதிரியாக பாவிக்கும்
ஆடையின் நிறங்களை
பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம்

நிறங்கள் ஒரு வகையில்
சாபம் எனும்போது
நிழலாடத் தொடங்கியிருந்தாய்

Blogger Wordpress Gadgets