தடங்களற்றப் பாதையில்
பயணிப்பதன் சாதுர்யமாய்
கருவேறிய உடல் பற்றி
புணரும் உன் சிந்தனை
ஊடாடுகிறது
கூடுதல் நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறாய்
பப்பாளிப் பழம் திகட்டிய கதை
சொல்வதற்கென காதுகள் இல்லை...

தவளையின் தாவலென
முன்னதுக்கும் இன்னதுக்குமான
இடைவெளி
கிளர்ந்தெழும் நரம்புகளின்
பசியென தீனியிடுகிறாய்
வெளவாலின் கருங் குருதியை
நினைவுபடுத்துகிறது-உன்
வேட்கைக்கு உண்ணக்கொடுக்கும் உடல்

மங்கிய ஒளியில்
குளியலறை வாசலில் நின்று-நீ
சிந்தும் புன்னகையைத் தான்
துடைத்தெறிந்து கொண்டிருக்கிறேன்
இந்நாளில்

தலைப்பில் எழுத்துப்பிழை இல்லை
நீங்கள் பொதுவாய் குறை சொல்வதற்கென
முன் வைக்கும் நான் போல
புறந்தள்ளுவதற்கில்லை
இந்த என்

இந்த என்
எண்களின் ஊடு விளையாட்டு
சுய புலம்பலின் ஓற்றையடிப்பாதை
பதில்கள் வேண்டாமென
ஒருமனதாய் தீர்மானித்து
காத்திருக்கும் கள்ள மனம்

அது
ஒருவித விடுபடுதலுக்கான
காப்பாற்ற முடியாத ரகசியம்

அடித்துச் சாத்திய
சன்னலின் இடுக்கிலிருந்து
சுவரோவியம்
வரைந்துகொண்டிருந்த மழையை
கலைந்த கனவின் ஏதோவொரு
முடிச்சின் தொடர்ச்சியென
திறவா கண்கொண்டு பார்க்கிறாய்
தானாகவே முன்வரும்
நிறமற்ற முலைகளை நிஜமென
கவ்வ எத்தனிக்கையில்
தூக்கத்தில் ஊறிய எச்சில் ஒழுகுகிறது.
யார் மீதும் புகார்களற்ற அந்தக் கனவில்
பாலின சந்தேகம தூங்குவதாயில்லை 

துரு

Monday, May 04, 2015 | 0 comments »

பிணையம் வைத்து மீட்டெடுக்கும்
மெளனங்களை
சூடேறிய ஆடையகற்றி
பதற்றத்தோடு தொட்டுப் பார்க்கிறாய்
உன் ரசனைகளின் கூறுகளென-நீ
தேர்ந்தெடுத்த  தனித்தக் காட்டில்
மரங்கொத்தியின் துளையோசை
ஈரமறிந்து இறங்குகிறது
உன்னைப்போல் அல்லாது...

   

Blogger Wordpress Gadgets