பேசுவதற்கு எதுவுமில்லை
சரி
கொஞ்சம் பார் கொஞ்சமாவது

ஒரு ஆச்சர்யக்குறியோ
ஒரு கேள்விக்குறியோ
நிகழும்படி பார்த்துக்கொள்

பின் விவாதி
பின் சண்டையிடு
மெளனம் உடுத்து

நீயா நானாவென்வதை தளர்த்து
மேனி தொடுகையில்
விரல்கள் மோதட்டும் பாதையில்

வேறு கண்கள்

Saturday, September 14, 2013 | 0 comments »

உன் வருகை குறித்து
முன்பொருமுறை வரைந்த
தூரிகையின் வர்ணத்தில்

மெழுகு ஒன்று
உருகி
உருகி

உருகியவற்றின்
பின்னிருந்த
உருவம் மறைந்து-அது

இன்னாளில்
வேறு ஒருவரின்
கண்வழியே...

காளான் வருகை

Saturday, September 14, 2013 | 0 comments »

வேர் இறந்த மரமொன்றில்
பொழியும் மழைபோல-நீ
காளானாய் வந்திருக்கிறாய்

லாடம் இழந்த காளை
உழுதலின் வலி அறியாது
புன்னகையில் புண்ணாக்கி,

திரும்பிப்போகையில்
விட்டுப்போகும் விசும்பல்
என் உடலதிரச்செய்கிறது

குளக்கரையில் பாதம் அகன்ற
முதிர் கிழவி நடக்கையில்
எழும் செருப்பு சப்தம் போ

முள்வேலி முடிச்சு ஒன்றின்
இடுக்கில் சிக்குண்ட
தட்டானின் இறக்கை விடுத்து

உடல் கொய்து போகும்
எறும்பொன்றின்
லாவகம் பேசியபடி

வார்த்தைகளால் நிகழ்ந்த
காயங்கள் பற்றி-நீ
வகுப்பெடுக்கிறாய் அந்தியில்

களத்தில் கிடக்கும் வாளின்
குருதி யாருடையதென
போட்டியாய் இருக்கிறது...

நிழல்வடிவ கனவுகளை
வண்ணங்களில்
காட்சிப்படுத்துகிறேன் உனக்கு

நீயுந்தன் கருப்பு வெள்ளை
கண்களின் அலட்சியத்தில்
வானவில் உடைக்கிறாய்

மாறிப்போகும்
முகபாவனைக்கண்டு
விளையாடுகிறேன் என்கிறாய்

புணரும் நாயைப்பிரித்து
வலியறியாது சிரிக்கும்
பதின் வயதுக்காரனைப்போல

கா-தல்

Saturday, September 14, 2013 | 0 comments »

பிரியமோ துயரமோ
கள்ளிச்செடியினூடே படரும்
கொடியினை ஒத்திருக்கிறது

கொடி யாரது
கள்ளிச்செடி யாரெதுவென
வினவும் நடுநிசியில்

தற்செயலாய் பிய்ந்த
தசையின் குருதியில் பெயரெழுதி
புகைப்படம் அனுப்புகிறாய்

கவனிக்க மறந்த ரோஜாவை
வாசல் தேடிப்போகிறேன்
முட்கள் அழகாய் பூத்திருக்கிறது

நீரடர்ந்த விழியில்
கருவிழி மிதக்க
நீந்திக்கொண்டிருந்தது
உயிர்

ஒவ்வொரு பார்வைக்கும்
விழித்திருப்பலுக்குமான
இடைவெளியில்
வானளவு வளர்ந்திருந்தது
நாணம்

மென் தசையழுந்த
பின்னிடைப்பற்றி
உடல்கோர்க்க
கழுத்தில் கோர்த்திருந்தது
விரல்கள்

பேசுவதற்கான
இடைவெளியிருந்தும்
மெளனம் போர்த்தி
மூச்சில் காய்ந்துகொண்டிருந்தது
இரவு

ஒரு முத்தத்திற்கு
முன்னேற சூடேற்றும்
விழி உருட்டலிலும்
ஏக்கத்திலும் ததும்பியிருந்தது
காதலோடு கூடிய காமம்

உலர் உதட்டில்
விரல் படர்த்தி
ஆயுள் ரேகை தொலைத்து
தீட்டிய புருவம்
நேர்த்தி ரசித்து

கையில் நெழியும்
கார்குழல் நுகர
தலைசாய்க்காது
பொறுமையின் உருவம்
தொலைந்து தேட

முன்னழகிற்கும்
கழுத்திற்குமான தூரத்தில்
மினுக்கும் தங்கத்தில்
விரல் நுழைத்து
மூச்சில் நனைய

காத்திருப்பின் நீளம்
போதுமென கைநீழும்
பின்னிடையேறிய முதுகில்
படர்ந்து கிடந்தது
ஒரு தயக்கம்

இதழுக்கான சுதந்திரம்
முழுவதுமிருந்தும்
எதைப்பற்றுவதென
தொடர் யுத்தத்தில்
உயிரூட்டி உயிர்குடித்து

இளமையின் வனப்பில்
சுடரேற்றி
இருளில் ஒளிகாட்டிய
விழியில் பதிந்தது
முதல் முத்தம்

அன்பு

Saturday, September 14, 2013 | 0 comments »

மணலில் படர்ந்து கிடக்கும்
நெருஞ்சி முள் கொடியின் 
அடர்த்தியை ஒத்திருக்கிறது
உன் பேரன்பு

எனக்குள் விழுந்த இடத்தையும்
கிளைவிட்ட வேரினையும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மூங்கில் தீ போல பரவுகிறாய்

மனமெங்கும்
சிந்தனையெங்கும்
உடலெங்கும்
உணர்வெங்கும்

நீலம் பூத்துக்கிடக்கும்
மென் உடலினை
மொய்த்த வண்டொன்றின்

விழிமூடலில்
தாயின் வாஞ்சையோடு
தலைசீவும் கைகள்

ஒருபக்க கூந்தல் முடிச்சு
உதட்டில் சிவப்பு சாயம்
ஸ்டிக்கர் பொட்டு, பவுடர்

முட்டிப்பொட்டு மடிசாய்ந்த
ஒருபக்க கன்னம்
மூக்கினோரம் விழி நீர்

மற்றும்
கரைபடிந்த குறியும்
குருதி வழிந்த யோனியும்

எச்சில் உமிழ மணலிட்ட
ஷெர்லாக் டப்பாவும்
வெற்றிலை இடிப்பானும்

கோடைக்கால விசிரியும்
மழைக்கால சணல் சாக்கும்
கொண்ட வீட்டில்

கணவனுக்கு காதுவரை
போர்த்தி உறங்கிய பாட்டிக்கு
கை நீட்டவும் கை காட்டவும்

இரு கால்கள் நீட்டி
குப்புற கவிழ்த்து குளிப்பாட்டிய
மகனும் மகளும் முகவரியில்லை

சிறகினூடே அலகு நுழைத்து
கொத்திக்கொண்டிருக்கும்
சாம்பல் நிறப்பறவையின்

வட்டவடிவக் கண்களின்
நிறத்தினை ஒத்திருக்கிறது
கீழுதட்டின் உள் பக்கத்தில்

தின்னமாய் கடித்த பற்களின்
காமம் போர்த்திய
காதல் சிவப்பு..

நிறமற்ற சொல்

Saturday, September 14, 2013 | 0 comments »

இங்கு எங்கோ தான் நிறமற்ற
அந்த சொல் தவறியிருக்கலாம்
அல்லது விழுங்கப்பட்டிருக்கலாம்

ஒன்று ஒன்றன்பின் ஒன்றென
நிர்பந்திக்கப்பட்டதென
விசும்பலின் ஈரத்தில் அறிந்தது

கழுத்தை சுற்றிப்படும் துப்பட்டாவின்
தொடுகை விரும்பாதவளுக்கு
கயிற்றின் இறுக்கம் எப்படியிருந்திருக்கும்?

தூரம் போக போக
நீளும் நிழலை ரசிக்கும்
மகள் போல மழையிரவில்

இருவரும் பின்னிக்கிடந்ததை
"வாட் யூ மீன்" என முகம் சுழித்ததை
இருமுனை கோர்த்துப்பார்க்கிறேன்

பார்வையின்
தேடலுக்கும் தொலைதலுக்குமான
ஆயுளறிந்தும் கூர் செய்கிறேன்

நித்தமும் சுழலுமென்று...

காதல்=கடல்

Saturday, September 14, 2013 | 0 comments »

எனக்கான பிரத்யேக அழைப்பென
முன் நீட்டுகிறாய்
உனக்கான திருமண அழைப்பிதழை

விவாதங்கள் விரும்பாத உன்
புன்னகையை தேநீர் கோப்பையில்
ஊற்றவியலாத சாலை அது

உதிரும் பாதாம் இலைகளில்
பழுப்பு நிறத்தினை ஒத்திருக்கும்
முக வாட்டத்தினை

பசுமையாக்க முயன்று தோற்று
நெற்றி சுருக்கத்தில் உதிரும்
காய்ந்த சந்தன துண்டினை

கரைத்து கரையொதுக்க
மோடம் போட்டிருக்கிறது
நமக்கான வானம்...

சிறுவர்களின் கூச்சல்கள் நிறைந்த
அந்தத்தெருவில்
புழுதிகள் தீர்மானித்துக்கொண்டிருந்தத

ஒவ்வொருவருக்குமான
கொண்டாட்டத்தையும்
மன,உடல் வலிமையையும்

விரல் அச்சுகள் பதிந்த
சட்டையின் பதைபதைப்பு
ஒரு இரவில் தொலைந்து போக,

எல்லா மாலை வேளையும்
விடுமுறை பொழுதுகளிலும்
மண் தரைகள் தேடித்திரிகின்றன

கான்கிரீட் மூடிய
அச்சிறுவர்களின் சந்தோசத்தையும்
பாதத்தடங்களையும்..

உன் நேற்றைய நடுநிசி விசும்பலில்
தீராது ஊறிக்கிடக்கும்
மாளாக்காதலை ஊட்டிக்கொண்டிருந்தாய்

பேரன்பின் போக்கு அறிந்தும்
உன்னை தேற்றுவதான முனைப்பில்
வார்த்தைகள் தோற்றுக்கொண்டிருந்தது

சதைப்பசியறியா உன் மழலை
பதற்ற மொழியில் காதுகளிரண்டும்
என் சுற்றத்தை மறந்திருந்தது

ஆறுதல் படுத்துவதன் அபத்தமறிந்து
விழி வழிய பின் தொடருகிறேன்
முத்தங்கள் உவர்க்கட்டும் காற்றில்...

தனித்துயர்

Saturday, September 14, 2013 | 0 comments »

இருபக்க கதவு கொண்ட
வீட்டினை பூட்டிவிட்டு
வெளியேறுகையில்
ஒருமுறை இழுத்துப்பார்த்து

முன்னமே புகைத்து அணைத்த
சுருட்டினை பற்றவைத்தபடி
வேப்பமர நிழலில்
பேசித்திரும்பும் தாத்தாவுக்கு

சந்தைக்குப் போன பாட்டி
திரும்பி வந்தால்
எட்டத்திலிருக்கும் சாவி
எட்டுமாவென கேட்ட
பேத்தி நினைவில் வந்தாள்!

அவர்கள்

Saturday, September 14, 2013 | 0 comments »

நல்லவேளை
கனவிற்குமுன் இறக்கவில்லை
அடையாளம் தெரிந்தது அவர்களை

அவர்களென்பது
வேறு எவருமில்லை
நீங்கள் தான்...

அட! நீங்கள்தான்

நல்லவேளை
கனவிற்கு முன் இறக்கவில்லை
அடையாளம் தெரிந்தது என்னை

....................

Saturday, September 14, 2013 | 0 comments »

மணிக்கூண்டினுள் வசிக்கும்
புறாக்கள் எழுப்பும் சத்தத்தை
கலைக்க மனமில்லை

இன்று 
அவன் விடுமுறைதான்
எதற்கும் கொன்றுவிடுதல் நல்லது

பள்ளி சென்றிருக்கும்
தோழிக்கு பரிசளிக்க
அணில்குட்டிகள் இருக்கிறது!

காலம்

Saturday, September 14, 2013 | 0 comments »

எல்லாமுமாய் இருந்துவிட
ஏதோ ஒரு காரணத்தை
முன்னிருத்துகிறது காலம்

ஒரு மரண ஓலத்தையும்
மங்கள வைபவத்தையும்
ஒரே தெருவில் கடக்கையில்

இரண்டுமாய் இருக்கத்துடிக்கும்
மழை கரைத்த மதில் போல
எப்பக்கமும் சரிய இருக்கிறது

யாரோ ஒருவரின்
பதிலோ கேள்வியோ அயராது
புற்றமைக்க முனைவதென்பது

முதுகுச்சூட்டில் சீழ் வழியும்
படுக்கையில் விழுந்த முதுமையின்
மனதை கொண்டதாயிருக்கிறது..

Blogger Wordpress Gadgets