பிறகெப்பொழுதாவது-நீ
நேற்று அழுததற்கான காரணம் சொல்லென
குறிப்பெழுதி படுக்கையில் வைத்திருந்தேன்

உன்னாலல்ல என்ற சொல்லானது
தனித்தனி எழுத்துக்களாய் ஆங்கிலத்தில்
பதிவாகியிருந்தது உதட்டுச்சாயத்தினால்

தேநீர் கோப்பை உதட்டினை தொட்டுவரும்
ஒவ்வொரு வேலையிலும்
கடைக்கண்ணிலும் விழியுர்த்தியும் பார்த்தாள்

பின்னர் போர்க்கால வேகத்தில் முத்தமிட்டு
மேசையிலிருக்கும் காகிதத்துண்டினை
பார்க்க சொல்லி பயணிக்கத்துவங்கினாள்

மதியப்பொழுதில் வீடு திரும்பியவள்
அவளின் உதடு காதுமடலில் படுமாறு
பயந்துட்டியா என்கிறாள்...

சித்திரவதையாய் இருக்கிறது!

வெக்கை பொழியும்
உச்சி வெயில் பொழுதில்
அது கேட்டுக்கொண்டேயிருக்கிறது

என் விழியில் வழியும் கண்ணீர் அதிர
உன் நிராகரிப்பினை
கர்வம் சிந்த வெளிப்படுத்தினாய்

துருவேறிய சன்னல் கம்பிகளில்
தாளமுடியா சிரிப்பில் பதித்த-உன்
கை ரேகைகள் பாதையமைக்கின்றன

அறையதிரும் அந்த எக்காள சிரிப்பானது
முகாமமைக்கிறது
என்னிலிருந்து உன்னை வெளியேற்ற..


சன்னலை அலங்கரிக்கும்
படுகிடை நீள் பட்டையில்
மேலிருந்து கீழாய் கீழிருந்து மேலாய்

விரல் இழுக்கும் ஓசை
ரசித்தபடி சிந்தித்துக்கொண்டிருந்தது
நிறம் பூசிய விரல்கள்

காற்றில் வீசும் அரச இலையின்
சரசரப்புகளும் சிதிலமடைந்த
ஓடு வேய்ந்த கட்டிடமும்

அந்த பெரு நகரத்தில்
கிராமத்தை பசிக்கச்செய்யும்
புள்ளியளவு பசுமை

கூவிக்கலைந்த குயிலின் கானம்
அவளை வழியனுப்புகையில் கசிந்த
பெண் நாயின் கண்ணீரை ஒத்திருந்தது!

வீடு

Monday, March 11, 2013 | 0 comments »

எரியாத மின்விளக்கின் மேல்
தும்பியின்
உயிர் மரித்த இறகுகளும்

அங்காங்கே வெட்டுப்பட்ட
பல்லி வால் துண்டுகளும்
சிறகு உதிர்ந்த எறும்புகளும்

சிலந்திகள் வாழும் மின்விசிறியும்
காய்ந்துபோன மாவடுக்களும்
பனிக்குடம் உடைந்த சீலைத்துணியும்

வியாபித்துக்கிடக்கும் அறையில்
வெளவால்களின்
இரத்தைக்கரை படிந்த இறக்கைகளும்

நாய்கள் ஜாக்கிரதை
என்ற எச்சரிக்கை பலகையும்
கொண்ட வீடு அது!

ஒவ்வொருமுறை பேனா காகிதம்
தொடும் போதெல்லாம்
புள்ளியாய் நின்றுவிடுகிறாள்

எழுத்துக்கும் எனக்கும் ஊடேயான
காலத்தின் இடைவெளியில்
நழுவிடாது நங்கூரமிட்டிருக்கிறாள்

அறுபட்ட கோழியின் துடிதுடிப்பாய்
உருவமில்லா உணர்வுகள்
மேலெழுந்து மேலெழுந்து அடங்கிவிட

சடலத்திற்கு நிகழும் மயிரெடுப்பு போல
உணர்வற்று கிடத்தியிருக்கிறாள்
நினைவுகளின் தரையில்...


வழித்தடங்கள் இல்லா பாதையில்
பயணித்துக் கொண்டிருக்கிறது
கருவிழிகளற்ற விழிகள்

நிரம்பி வழியும் அவளின்
விழிக் கோப்பையின் அடியில்
ஆதாம் உண்ட ஏவாளின் சாபம்

மோப்ப நாய்கள் நிறைந்த வனத்தில்
அடையாளமின்றி செல்லவியலாதது
பெரும் துயரம்...

ஆளரவமற்ற சந்தையில்
கழுகுகளின் பசியாற
உயிர்பிரித்து பரிமாற்ற

ஈடுகொடுக்கவியாலாத வேகத்தில்
ஓட்டமெடுப்பவள் தன்னையறியாது வீதியில்
விட்டுச்செல்கிறாள் யோனிக் குருதியை!

அவள்

Monday, March 11, 2013 | 0 comments »

அவள்
என்னோடு இருக்கும்
காலத்தினை
தீர்மாணிப்பது
மணிக்கொருமுறை
எடுக்கும் சொடுக்குகள்

அவள்
புளியங்காய் குதப்பும்
அழகில் குவியும் உதடுகள்
கண்டு பூ மொட்டுகளுக்கு
பொறாமை!

பப்பாளி குழலில்
நீ வாசிப்பது
புல்லாங்குழலா
பூவிதழ் காம்பா?

அவள் வீட்டு மாடிக்கும்
என் வீட்டு மாடிக்கும்
இடையே காகம் கரைவது
காணாது உறங்குவதில்லை
விழிகள்!

கோயில் சிலைகளில்
குங்குமம் தட்டிவைக்கும்
பழக்கம் நின்றது
நீ என் கைப்பிடித்து
நேற்றியில் வைக்கசொன்னதிலிருந்து

தாவணியில் நூலுருவி
தாலியுருட்டிக்கேட்கிறாள்
ஒவ்வொரு பெளர்ணமி
சந்திப்பிலும்!

அவளது வீட்டின்
சன்னல் கம்பிகளில்
இருவரின் கை ரேகைகள்!

அவள்
கெண்டைக்கால் கொலுசில்
மஞ்சளும் மஞ்சமும்!

நீ
உச்சி வெயிலில்
தாவணி போர்த்தி
நடக்கும் அழகைக் காணும்வரை
நிலவைப்படைக்கும் எண்ணமில்லை
ஆண்டவனுக்கு!

உள்ளங்கைக்குள்ளேயே
முடிந்துவிடுகிறது
அவளோடு விளையாடும்
நண்டூறுது நரியூறுது
விளையாட்டு!

நீ
இல்லாத வேளையிலும்
ஊர் கிணற்றில்
கொலுசு சத்தம்!

தண்ணிக்குடம்
இடுப்பிலேறியதும்
சிணுங்க ஆரம்பிக்கிறது
அவளின் வளையல்கள்!

நிலாவுக்கு சோறுட்டுகிறாள்
அவளின் அம்மா-அவள்
என்னோடு
சண்டையிட்ட பொழுதுகளில்!

அவள்
பூக்கட்டும் நாற்றில்
விரலின் வாசம்
பின்னர் அதுவே
பூ வாசம்!

அவள்
வீட்டு ஓட்டு நிழலில்
மல்லிகைப்பூ உதிரிகளும்
நகத்துண்டுகளும்!


எங்கேயோ தொடங்கியிருந்த
உனக்கான முத்தத்தை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்

சொற்களின் பரிமாற்றத்தில்
பலாச்சுளையின் துளிபோல
நழுவியது அந்த ஏக்கம்

யாரென காத்திருத்தலில்
இருவருக்கும் நடுவில்
பதுங்கியிருந்தது முத்தம்

வெகுதூரம் நடந்து பிரிந்த
மஞ்சள் விளக்கின் ஒளி
நிறைந்த சாலையில்

கைகோர்த்த நம் கைகளுக்குள்
துளிர்த்திருந்தது
கொடுக்கப்படாத முத்தம்!


பாதம் அடிபட்ட குழந்தையின்
முகபாவனையையும் கை செய்கையையும்
ஒத்திருக்கிறது சண்டைக்குப்பின் உன் முகம்

கோபத்தில் கடித்துக்கசியும் குருதியில்
உதட்டின் உட்தசை நிறமிழந்து
வன்மமாய் உருவேறுகிறது காதல்

மணல் வெடிப்புகளில் வேகமாய்
பாயும் நீரினைப்போல பிடிவாதங்களால்
நரம்புகளில் நிரம்புகிறாய்

தழுவுதலில் பெற்றிடும்
முத்தத்தத்தின் விளக்கவுரைகள்
உன் மூடிய விழிகளுக்குள் இருக்க

வாதையினால் உலர்திராட்சை உண்ணும்
ஓய்வு நாளின் பின்மதியபொழுதில்
வாசிக்கத்துவங்குகிறேன்-நீ

தூங்குவதுபோல தூங்குகிறாய்!


என் இருக்கையினையும்
நீ தான் தீர்மானீத்தாய்
நம் பயண காலங்களில்

உன் கன்னம் நோக்கி
உதடுகள் திரும்பும் வேளையில்
தொடையில் கிள்ளி வைப்பாய்

உனக்கும் அதுதான் பிடித்திருந்தது

கேள்விகளற்ற உன் பதில்கள்
பொழிந்த பின்னிரவின்
நாளுக்கு பின்னதான வாழ்வில்

இருவர் இருக்கை இல்லையென
எந்த பேருந்தையும் தவிர்ப்பதில்லை
மாறாக பயணிக்கிறேன்...

இப்பொழுதெல்லாம்
உன்னைப்பற்றிய நினைவுகள்
தொடுவுணர்வு வேண்டுகிறது

மரணிக்கலாமென்றிருக்கிறேன்!

அவளுக்கு கூழாங்கற்களில்
சுட்டிக்கல் பிடிப்பதென்றால்
அத்தனை விருப்பம்

மீன்வரத்து நின்றிடும் நாளில்
நிரோடையில்
கண் அலச துவங்கிவிடுவாள்

பாட்டியோடு சென்றாள்
தாயோடு சென்றாள்
தோழிகளோடு சென்றாள்

பாவடை சட்டையில் சென்றாள்
தாவணியில் சென்றாள்
தோழியோடு சென்றாள்

வளையல்கள் ஓசை தீர்ந்த நாளொன்றில்
தாவணியில் இருந்தாள்
தாவணியில் இறந்தாள்!

அந்தக்கடற்கரையில் அவளுக்கு
நண்டு ஒன்று அங்குமிங்குமாய்
ஓடுவது தான் படித்திருந்தது.

நிலவின் சிவப்பு மஞ்சளானதும்
கடலினை மறந்து அலையை,
நண்டை ரசித்துக்கொண்டிருந்தாள்

கடலில் படரும் நிலவின்
வெளிச்ச விரிவினை காணக்காண
தனை மறந்து கொண்டிருந்தாள்

ததும்ப ததும்ப எழும் நுரையில்
நண்டின் கொடுக்கினை அதனழகை
தொட்டுப்பார்க்க வேண்டுமென்றாள்

என் பார்வை என்னவென அறிய
நான் அவளை பார்க்கும்வேளையில்
அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்

ஒட்டியிருந்த மணல் மெதுவாய்
உதிரத்துவங்கியது...

சாட்சி

Monday, March 11, 2013 | 0 comments »

உறங்க மறுக்கும் விழிகளை
சதா திட்டிக்கொண்டேயிருக்கிறேன்
நான் நானற்று வாழும் வேளையில்

இரவுகளில் தெருவில் கீரை விற்கும்
கிழவி ஒருத்தியின் குரலில்
உன் பெயர் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

இடமும் வலமுமாய் படுக்கையில்
தலையுருட்டி விழித்துப் பார்க்கிறேன்
நீண்ட கூந்தல் படுக்கையில் கிடக்கிறது

எதும் பெண்ணை அழைத்து வந்ததாகவோ
புணர்ந்ததாகவோ கொலை செய்ததாகவோ
நாட்காட்டியில் குறிப்பில்லை...

நினைவிலும் இல்லை!

தூங்கிவிட்டதாய் தொடங்கும்
தலைவருடலும் அதற்கு
தோதுவாய் புரண்டு படுப்பதும்

பழக்கப்பட்டுவிட்டது
நீல நிற விளக்கிற்கும்
சன்னல் காற்றிற்கும்

மெளனங்கள் அரசாலும்
அவ்விரவுகளில் தூங்காது
கனாக்கானும் நீயும் நானும்

எப்போது தூங்கிப்போவது
என அறியாது நீளும்
இருவருக்குமான கதகதப்பில்

உனையறியாது பிறையென
மிளிரும் உன் கண்களை
நான் காணும் வேளையில்

நிலவுக்கு சமிக்ஞை செய்து
தலைதிருப்பி
வெளியேறுகிறது பல்லி ஒன்று!

விழியின் கதிர் வீச்சில் நான்
தொலைந்து விட்டதாய்
அவளிடமே அவளின்
இதழ் நோக்கி
புகார் செய்திருந்தேன்...

பரிசீலனை செய்வதாய்
சொன்னவள் தினம் தினம்
பேசித்தீர்ந்த களைப்பில்
கிண்டலாய் ஏதேனும் சொல்லி
வழியனுப்புவாள்

நடுநிசியில் கண்டதாகவும்
இம்சிப்பதாகவும்
இருக்குமிடம் தெரியாதெனவும்
என்னிடமே என்னைப்பற்றி
மறுபுகார் அளித்திருந்தாள்

அனிச்சையாய் நிகழ்ந்த
இருவருக்குமான இடைவெளியில்
கண்டு கொண்டதாக
விடியற்காலையில்
செய்தி சொல்லியிருந்தாள்

நாளொன்றிற்கு
நூறு முத்தம் கேட்பதாகவும்
நெஞ்சுக்குழிக்கு இடது பக்கம்
ஒளிந்திருப்பதாகவும்
காட்டிக்கொடுத்தாள் காதலை!



மொத்தமாய் நனையாது
ஒதுங்கி நின்று உள் வாங்கும்
சாரல் போல
பொழிந்துகொண்டிருக்கிறாள்

பொருத்தப்படாத விளக்கில்
திரியேற்ற காத்திருக்கும்
விழிகள் போல
பிரகாசமாய் ஒளிர்கிறாள்

படுக்கை எழாது தொடரும்
அலைபேசி உரையாடலின்
நீள் மூச்சுபோல
காதுமடல் பரவுகிறாள்

மிதியடியற்ற பாதம்போல
நிறம் கலந்து நிறம் பிரியாது
இரட்டை நிற ரோஜாபோல
காதல் காமம் ஏற்றுகிறாள்

பொட்டுவைக்க
கண்ணாடியில் குவியும்
விழிகள் போல
கண்கள் உற்று நோக்குகிறாள்

காற்றில் அலையும்
முகிலினங்கள் கூடுவதுபோல
தேகம் தொடுவதறியாது
முத்தமிட்டு விலகுகிறாள்

எழுதுவதற்கு எதுமற்று
உள்ளங்கையில் வரைந்துமுடித்த
நாற்சுவர்க்குள் குளித்த தேகத்தை
முத்தமிட பதறுகிறாள்

மொழிக்கு பசியாற
மெளனத்தை விழிவழியூட்ட
எம்மொழியிலும் அல்லாது
உளியிலும் நில்லாது

ஈரம் படர்ந்த மணலில்
நாணல் வளைத்து நாணம் நிமிர்த்து
காதல் எழுதுகையில்
அழகி பேரழகி ஆகிறாள்!

கோணம்

Monday, March 11, 2013 | 0 comments »

அவ்வளவு நெருக்கமாய்
கடந்து சென்றது
அந்த கொலுசொலி

முந்தானை சொருகலும்
வாயில் மென்னுவதும் எவரையும்
சட்டை செய்யாதது போலிருந்தது

இரயில் பெட்டிகளின்
நீளம்வரை அளந்துமுடிந்த
கண்களும் காதுகளும்

இரயிலில் வந்திறங்கி
கடந்து போகிறவர்களோடு
அந்த ஒலியும் திரும்பி விட்டது

தற்காலிகமாய்
அவளின் பூக்கூடையை
பார்த்துக்கொண்டிருந்த பாட்டி

அவளுக்காக
கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள்!

சக்கரத்தடங்கள்
பதியாத அந்தச்சாலையில்
குழந்தையின் கைத்தடங்கள்!

கிளைகள் ஒடித்து
விழும் நிலா நிழலில்
ஒரு வாய் சோறு

அணில் குட்டிகள்
துளையிட்ட பால் புட்டியோடு
கண்ணீர்த்துளிகள்

இரண்டு மரங்களை
இணைக்கும் கயிற்றில்
துணி மாட்டிகளும் குருவிகளும்

மரங்களுக்குப்பின்
ஒளிந்து கொள்ள
தேடுவதுபோல் அம்மா!

தென்னங்கீற்று மடலிசையோடு
குயிலின் ராகமும்
குழந்தையின் அழுகையும்

இலைகள் சருகாகும்
கூடு முட்களாகும்
குயில்கள் வானமாகும்

சட்டங்களற்ற வீட்டின்
தொட்டில்
மரக்கிளையில்!

கைத்தடிகளும்
வேப்பம்பூக்களும்
சிரிப்பு சத்தமும்!

இலையுதிர்கால மரத்து நிழலை
வரைந்து பழகுகிறது
தார்ச்சாலை!


அமைதி கொள்வதற்கென
ஓயாது இசைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னுடனான நம் உரையாடல்களை

அனுமதி மறுக்கப்பட்டு திரும்பும்
எதிர் பதிலற்ற
உன்னைப்பற்றிய நினைவுகளை

மூர்க்கமாய் அறுத்தெரிகிறேன்
தரையெங்கும் பரவிக்கிடக்கும்
உன்னோடு படர்ந்த புல்வெளிகளை

இறுதியாக
பறவைகளின் ஒலி தவிர்க்க
மரம் ஒன்றினையும் வெட்டியாகிவிட்டது

இனி
அம்மரத்தினாலான சட்டத்தில்
தூக்கில் தொங்குவது மட்டும் தான் பாக்கி!


தாடி குத்துகிறதென நிராகரித்த
மகளுக்கான முத்தத்தை

இரயில் பயணத்தில் வாங்கிய
காற்றடைத்த தலையணைக்குள்

மகள் இட்டு வைத்த
ஓட்டைகளின் வழியே நிரப்புகிறேன்

தூக்கம் கலைந்து நிகழும்
இந்த நினைவுகளை

முதல் நாளென உறங்கும் மனைவியை
அணைத்து உறங்கலாமென்றால்

"கலவி முடிவில் வாய்க்காத முத்தம்"
என்ற கவிதைத் தலைப்பு

அவளின் டைரிக்குறிப்புகளில் கண்டது
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது!

"சரி சரி நேரமாச்சி"
என நான் நேரம் குறைத்து வைத்திருப்பது
அறிந்தும் என் கைக்கடிகாரம்
பார்ப்பாயே அடிக்கள்ளி
அது கவிதை!

"கேடி பையன்டா நீ"
என நீ அறியாது எடுத்த
ஸ்டிக்கர் பொட்டினை
காட்டியதும் சினுங்குவாயே
அது கவிதை!

"நீயும் வேணும்னா அடிச்சிக்கோ"
என கன்னம் காட்டி கண்னடிப்பாயே
அது கவிதை!

"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை"
என வாங்கிக்கொடுத்த
சாக்லேட் கடித்து
எனக்கும் கொடுப்பாயே
அது கவிதை!

"போ போ"
என பொய்யாய்
போகச்சொல்லி
என் நடவடிக்கை
கவனிப்பாயே
அது கவிதை!

"வெவெவெவெ"
என நான் மன்னிப்பு கேட்டதும்
சத்தமாய் சிரிப்பாயே
அது கவிதை!

"இப்ப மட்டும் கொஞ்சுவியே"
என கோபிக்கத் தெரியாமல்
திணறும் உன் விழிகளுக்குள்
பெருக்கெடுக்குமே ஆனந்தம்
அது கவிதை!

"பொய் சொல்லாதடா"
என ஒரு உண்மைக்கு
ஓராயிரம் கேள்வியும்
எதுவுமில்லையென
நீ எடுக்கும் பெருமூச்சும்
அது கவிதை!

"ஏன் நீ என்ன பண்ண போற"
என் கேட்கும் உன் மிரட்டல் தொனியில்
நீ காத்திருப்பதை
சொல்லாமல் சொல்லுவாயே
அது கவிதை!

"குட் நைட் சொன்னதும் தூங்கிடுவியா"
என காலையில் முதல் வேலையாய்
வம்பிழுத்து கொஞ்சலுக்கு ஏங்குவாயே
அது கவிதை!

அடிக்கடி உச்சரிக்கும்
உன் ஹ்ம்ம்களில்
நீ ஒளித்து வைத்திருப்பாயே
முத்தம்
அது கவிதை!

"போ நீ ஒன்னும் பேச வேணாம்"
என சொல்லி வரிசையாய்
அனுப்பும் வெற்றுக் குறுஞ்செய்தியில்
அரங்கேறும் உன் தவிப்பு
அது கவிதை!

"என் நீங்களா பேச மாட்டிங்களோ?
என சண்டைக்குப்பின் ஆரம்பிக்கும்
உன் பொறுமை உடைதலில்
தெறிக்கும் மென் காதல்
அது கவிதை!

"எப்ப பாரு இதே நெனைப்பு"
என போலியாய் கோபித்தும்
சீண்டலாய் புன்னகைத்தும்
பேச்சை மாற்றுவாயே
அது கவிதை!

"கடிச்சி வச்சிருவேன் போயிரு"
என்பது கட்டிப்பிடித்தலுக்கும்
அனிச்சையாய் நிகழும்
முத்தத்திற்கும் தானென
நீ காட்டிக்கொள்ளாதது
அது கவிதை!

சந்திக்க தீர்மானித்து
தாமதமாகும் வேளையிலெல்லாம்
"ஹ்ம்க்கும்" என முகம்
திருப்பிக்கொள்ளும் உன்னை
கெஞ்சலாய் கொஞ்சலாய்
மலர் கொய்வது போல்
உன் தாடை வருடி
சமாதானப்படுத்தும் வேளையில்
போதும் போதுமென
என் கை தட்டிவிட்டு
கோபமாய் புன்னகைப்பாயே
அது கவிதை!

"அழுதுட்டேன் தெரியுமா"
போ பேசாதே என தோள் சாய்ந்து
மெளனித்து இருப்பாயே
அது கவிதை!

"ஐயோடா ரொம்பத்தான்"
என நீ அலட்டிக்கொள்ளும்
அழகே
கவிதை தானடி!


நாணத்தில் கூச்சலிடும்
காந்தக்கண்களை
கடலின் தேகத்தில்
கிடத்தியிருக்கிறாள்
எனை வரவழைத்துக்கொண்டு

மோகத்தில் நெளியும்
அலைகளை காலில் உடுத்தி
சடசடவென ஓடுகிறாள்
தேகம் தொடவிடாது
கெக்கலிக்கிறாள்

பின்னப்படாத கூந்தலில்
எண்ணபடாத காற்றினை
மிச்சமின்றி முகமெங்கும்
முத்தமின்றி படரவிடுகிறாள்
மென்மையாய் மெல்லினமாய்

சத்தமின்றி
விரலிடைகோர்த்து
மணல் பதித்த அழுத்தத்தில்
பிரியமறுத்து ஒட்டிக்கொண்ட
ஈரமணலோடு

எட்டி நின்று அருகில் அழைத்து
தொட்டு நின்று காற்று வாங்க
நாசிஎங்கும் வாசம் கலவா
வாசமொன்று தேகம் திங்க
தூண்டுதென்று சொல்லிவிட

தள்ளிநின்று தோளிலடித்து
காது கேளாது முணுமுணுத்து
மீண்டும் ஒட்டி நின்று
பார்வை திருப்பி நிற்பவளை
கன்னம் நெருங்கி விரல்மீட்டு

ஆப்பிள் கடிக்காமல்
தேகம் பசிக்கிறது என்றேன்
நீ ஆதாம் நான் ஏவாளா என்றாள்?
ஆம் என்றேன்
ஒரு முத்தம் பதிவாகியது
காமனின் ஏட்டில்!


சன்னல் சட்டத்தின் வெளியெங்கும் சுற்றி
இரண்டு கட்டங்களென மனதில்
குறிப்பெடுத்துக் கொள்கிறாள் சஹானா

அங்குமிங்குமாய் நெளிந்தோடும்
கம்பிகளின் போக்கில் சென்றவள்
சின்ன சின்ன கட்டங்களென மனதிலேற்றுகிறாள்

குறிப்புகளின் தொடர்ச்சி விடுபட்டுப்போக
மீண்டும் ஒருமுறை எண்ணத்துவங்குகிறாள்
அங்கு இரு பூந்தொட்டி காணுகிறாள்

நாற்காலி ஒன்றின் உதவியில்
கிளை படர்ந்து நான்கு பூக்கள் கண்டு
சந்தோசத்தில் புன்னகைத்தவள்

அப்பாவிடம் வேண்டுகிறாள்
அப்பா சன்னல் பூவுக்கு
வேறு நிறம் மாற்றுங்கள்!



மொழி கைவராமல்
யோசித்தலையும் வேளையில்
குரல் ஊமையாகி

இதயம்
பிரசவிக்கத்தொடங்குகிறது
விளிம்புநிலை வாழ்தலை

பாரமாகிப்போன
நிர்ணயிக்கப்படாத
உடலும் உயிரும்

இசைக்கும் இசையாது
விட்டு விலகவும் விரும்பாது
பேயாட்டம் போடுகிறது

உழன்றாடும் கற்பனையை
குறிப்பெடுக்க
கை நடுங்கத்துவங்குகிறது

காகிதமின்றி
பேனாயின்றி
வெட்டியெழுத குருதியின்றி!

Blogger Wordpress Gadgets