ஒரு கிணற்று
தவளையென
யாரோ ஒருவனின்
வருகையினை


சித்தரிகின்றது
வரிசையாய்
ஊற்றிப் போகும்
பால் துளிகள்!


பின்னலிடப் பட்ட
வலையில் சிக்கிக் கொண்ட
குயிலின் அழுகுரல்
என்னை தவிர
யார் காதுகளிலும்
விழுவதாய் தெரியவில்லை!


தேகம் நிகழ்த்தியிருக்கும்
நார் கட்டிலின்
பள்ளத்தினை கொண்டு


நான் படுக்கையில் கிடந்த
வருடங்களை
அளவீடு செயிகின்றனர்
சுற்றங்கள்!


என் முகத்தின்
நகல்களை
கண்டுவிட்டதால்
அவ்வளவாய் துக்கமில்லை
நான் பெற்ற மக்களுக்கு!


ரேகைகளோடு
ஒன்றி போன
கைத்தடியினையும்
என்னோடு வைத்து
தீயிலிடுவாய்
பேசிக் கொள்கின்றனர்..,


எனக்கென்று ஒதுக்கப்பட்ட
தட்டும் அதனுடனான
தண்ணீர் குவளையும்
என்னாகும்?
நானறியேன்...,


அநேகமாய்
இன்று எனது விலாசம்
ஒரு கோப்பை சாம்பலென
மாற வாய்ப்பிருக்கிறது...,
நாளை?

என் காதுகளில்
இசைந்து கொண்டிருக்கும்
பாடலில்
பல புதிய காட்சிகள்
கண்களுக்குள் ஊடுருவி,

நீர் வேண்டாத
தாகம் ஒன்று நிகழ்த்தி அதன்
வறட்சி விரித்து-என்
எண்ணக் கலப்பை கொண்டு
உழுது கொண்டிருக்கிறது!

கோடுகளாய் கீறலிடப் பட்ட
முகமெங்கும் எங்கும்
அமிலம் தெளித்தது போன்று
பார்க்கும் இடமெல்லாம்
பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது!

உருகி விழும்
ஒரு மெழுகின்
வெப்ப துளிகள்
என் நிர்வாண மேனியை

மெல்ல மெல்ல
சிதைப்பது போன்ற
பிம்பம் ஒன்று
நான் பார்த்திருக்கும் விட்டத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறது

சட்டென கண் மூடுகையில் 
வழி நெடுவே
ஓலமிட்டு வந்த
அக் கண்ணீருக்கு சொந்தகாரியின்

அழுகுரல்
என் அறையில் பட்டு
எதிரொலிப்பதை
என் காதுகளால்
தவிர்க்க இயலவில்லை ..,

அவள் தாயாகவோ
தகப்பனுக்கு பிள்ளையாகவோ
கணவனுக்கு மனைவியாகவோ
இருக்க கூடும்....,

முடிந்தால்
என் கனவுகளையும்
சிறை செய்யுங்கள்..,

பெரும்பாலான
பொழுதுகள்
எனது தற்கொலை
கனவில் தான் தொடர்கிறது!


                        -கவிதை காதலன் 



சொட்டு சொட்டென
பாத்திரத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும்
ஓட்டின்
நீர் சத்தமும்,

சம்மளமிட்டு
அருந்திய
கருப்பட்டி காபியும்
அரிசி பொறியும்,

தெருவில் வழிந்தோடும்
நீரோடையில் நண்பனோடு
பயணித்த
காகித கப்பல்களும்,

கால் சட்டை பையில்
கடலை நிறைத்து
கொறித்து போடும்
ஊர் பாலமும்,

ஆற்றிலோடும் வெள்ளத்தில்
வீசிப் போகும்
சீம உடைக் கம்புகளும்

கையசைத்தபடியே
கடந்து போகும்
ரோட்டோர வாகனங்களும்,

தூரத்து மலை ஒன்றில்
மாலை போல்
கவிழிந்து விழும்
நீர்வீழ்ச்சியும்,

நண்பர்களோடு
சைக்கிளில் சுத்தி வந்த
குளக்கரை
மணல் மேடுகளும

வேலியோர ஓணான்கள்
குருவிகளோடு கதை பேசி
கடந்துவரும் வழியில்,

எதிர் பாராது
பெய்திடும் மழைதனில்
நினைந்து

சட்டையினால்
தலை துவட்டி
பறக்க விட்டபடியே
வீடு வந்தடையும்
அந்த நாட்களை போல்

மீண்டும் ஒருமுறை
வாழ்ந்திட ஆசை பட்டு
நேற்று பொழிந்த மழையில்
தேநீர் கடையோரம் நின்று
ஏமாந்து போனேன்!
               -கவிதை காதலன்

இரவின் நெடி

Wednesday, August 10, 2011 | 0 comments »

என் சன்னல் வழி
நிலவினை
பார்த்த படியே
என் தனிமையினை
கிடத்தியிருந்தேன்!

என்றோ ஒரு நாள்
மிச்சம் வைத்திருந்த
வெறுமை ஒன்று-என்
பின்னந்தலை வழியே
மயிர் பிடரி
நனைந்துக் கொண்டிருந்தது!

இருளின் சூட்சமம்
என்னவென்று
ஒரு சூனியக்காரனாய்
மெளன மொழி ஒன்றில்
வசியம் செய்ய முயன்று
தோற்று போக..,

அதன் எச்சத்தின்
வார்த்தைகள்
சில் இரவுகளில்
விழி வழியே
பிடுங்கப் படுவதும் உண்டு!

என் நாசி துளைத்து
உறங்க விடாமல்
செய்து கொண்டிருக்கும்
அத் தனிமையின் நெடியினை...,

எவனோ ஒருவன்
வெளி நின்று
தாளிட்டதாகவும்,

வெளியில் இருந்தொருவன்
உள்ளே தாளிட்டிருப்பதாகவும்
நினைப்பும் ஒன்று உண்டெனக்கு!


                               
                                        -கவிதை காதலன்



ஆளுயர
கனவு ஒன்று
வானம் பார்த்தபடி
படுத்திருக்க..,

முகம் தொட்டணைத்து
அழ நினைத்த ஆன்மா ஒன்று
கண்ணாடி கூண்டிருக்கு வெளியே
ஒரு கைதியாய்
சேலை நுனி கடித்து
விம்மி நிற்கிறது!

சுற்றத்தார்
கனவிலிருந்து விழித்திட
ஒரு எச்சரிக்கை..,

மேள தாளங்களும்
பட்டாசு சத்தமும்!

இங்கேயும் சில
புகழ்தலும்,இகழ்தலும்
ஒய்ந்த பாடில்லை!
 

காது கடிக்கும்
கிழவிகள் கூட்டம் ஏனோ
காண கிட்டவில்லை!

விதியில் வீசிப் போகும்
பூக்கள் யாருக்கும்
பிடிப்பதில்லை..,
வாசனை
நுகரப் படுவதில்லை!


அமரர் ஊர்தியில்
நகர்ந்து போகும்
இக்கனவினை போல ..,

இனி வரும் கனவுகளுக்கு
தோள் கொடுக்கவும்
தோள் மாற்றவும்
பாக்கியம்
கிடைப்பதாய் தெரியவில்லை!

Blogger Wordpress Gadgets