தாளிட்ட கதவிடுக்கின்
ஒளிவழியே கடப்பவர்கள்
கதவை தட்டிவிடுவார்களோவென

விழியற்றவன் வழி தப்பியதுபோல
பயமும் கோபமும் சோகமும்
ஒருசேர அச்சுறுத்துகிறது

ஆளரவமற்ற இடமொன்றில்
தொலைந்துவிடலாமென்றால்
வெளியேறும் பயணநேரத்தில்

எதிரே எனை பார்த்து
புன்னகைத்துவிடுவீர்களோவென்று
பயமாய் இருக்கிறது!


பசித்தலையும் யாசகனின்
பார்வையை ஒத்திருக்கிறது
காலத்தின் கண்கள்

என்னைத்தின்று
என் சுயம்தின்று
நினைவுதின்று

பசியடங்காது
மணிக்கட்டிலறுத்து குருதியோ
தூக்கிலிட்டு உடலையோ தாவென

இரவு நேரத்தில் இறைஞ்சுகிறது
எனக்கு
பார்ப்பதற்கு பாவமாயிருக்கிறது!


என் வனாந்தரத்தில்
தீ வைத்து விளையாடுகிறது
எதை நினைப்பதறியாது நினைவுகள்

எதற்காக வருந்துவதென
தெரியாது நீளும் பட்டியலில்
சிம்மாசனமிட்டிருக்கிறது விழிப்பு

தனக்குத்தானே நிராகரித்து
புறந்தள்ளும் சுய இருப்பில்
புழுக்களாய் நெளிகிறது நிமிடங்கள்

தலைமுடியின் பாரம் தாளாது
பியித்து வழிந்திடும் குருதியை
நக்கிச்சுவைக்கிறது காலம்!


தன் நலன்மீது யாருக்கேனும்
அக்கரை இருக்குமென மனது
ஓயாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறது

தான் நேசிப்பவர்களும்
தன்னை நேசிப்பவர்களும் மறப்பதற்கு
முயன்றிட முயன்றிட விம்முகிறது

அழுதிட துடித்திடும் தருணத்தில்
முதியவரின் கையூசி தையல் போல
நடுக்கத்தோடு நகருகிறது பொழுது

தீர்க்கமாய் இதுவே முடிவென
துணிகையில் யாரோ ஒருவரின்
நலம் விசாரிப்பில் திடிர் அழைப்பில்

போலியாய் உதிர்க்கும் புன்னகையாலும்
பொய்களில் நீளும் நிமிடங்களிலும்
தள்ளிப்போகிறது ஒரு தற்கொலை கனவு!

நேரமும் நாளும் முன்னமே
நிர்ணயிக்கப்பட்டிருந்தது
அதுவே கடைசி சந்திப்பென

இடைவேளைக் காலங்களில்
நிரம்ப மறுத்த கோப்பைகள்
இடைவிடாது வழிந்து கொண்டிருக்கின்றன

பருகுவதற்கு வாயற்றுக் கிடக்கும்
கன்னங்களிரண்டிலும் ஒளிந்து கிடக்கிறது
கரைந்த கருவிழிக்கொத்துக்களிரண்டு

இரவின் அடர்த்தியில் பசைகளற்ற
உதட்டின் வெடிப்புகளில்
நடனமாடுகின்றன நினைவுக்காந்தல்

கனவுகளுடைத்த காலத்தின் வாசலில்
முத்தமிட்டு வரவேற்க
ஈரமின்றி முறுக்கேறுகிறது கயிறு!

புளியம்பூக்கள்
நிறைந்து கிடக்கும் தோப்பில்
கிழவியும் குமரியும் சிறுமியும்

எப்போதும் சாடைபோட்டு
திட்டிக்கொண்டிருக்கும் பாட்டி
கோபத்தை காட்டுவதற்கு
ஒரு காரணியாக பூக்கள்

வெயில் தின்ற மரத்தின்
நிழல்படரும் இடமெங்கும்
கால் பதிக்கும் குமரிக்கு
இதழ்பட்டு பிரியும் பூக்கள்

மணல்வீடும் அடுப்பும்
தயாரகிவிட
குழம்பிற்கும் பூஜைக்கும்
சிறுமி கையேறுகிறது பூக்கள்

பூ குப்பையாகப் படுகிறது
பூ ரசனையாகப் படுகிறது
பூ பூவாகிறது!

முத்தம்

Friday, February 08, 2013 | 0 comments »

நீ
கடிந்து கொண்டதும்
முத்தத்தில் தான்
பணிந்து போவதும்
முத்தத்தில் தான்!

எதற்கோ கூப்பிட்டு
ஒன்றுமில்லையென
நீயும், ஆமாம் ஒன்று மட்டும்
இல்லையென நானும்!

நூறு குறுஞ்செய்தியில்
தொண்ணுற்றி ஒன்பது
கேள்விகளும்
ஒரு முத்தமும்!

முதலில் கேட்பது
யாரென்ற தயக்கத்தில்
விடுபட்ட முத்தத்தின்
எண்ணிக்கை
எண்களில் இல்லை!

நீ சண்டையிடுவது
முத்தத்திற்கும்
நான் சண்டையிடுவது
அதன் தொடர்சிக்கும்!

நீ முதன் முதலாய்
சிணுங்கியது
கன்னத்திலிருந்து
உதட்டிற்கு
முன்னேறும்போது தான்!

உனக்கு நிறமில்லா
உதட்டுச்சாயம்
நான்!

ஊறுகாய்க்கு
ஒப்பானது உதடு
சப்புக்கொட்டுவதில்!

நெருங்கும் போது
குட்டு வைத்தும்
நெருப்பானதும்
வருடிக்கொடுத்தும்
நீள்கிறது முத்தம்!

ச்சீ போடா
என்று சொல்ல
ஒரு முத்தத்திற்கு
அடிபோடுகிறாள் கள்ளி!


உன் அருகாமையற்ற
பொழுதுகளில் விழியெங்கும்
மணலாய் வியர்த்துக் கிடக்கிறது

இழவு வீட்டில் எழும் ஓலங்களை
குறிப்பெடுத்தது போல
நாய்கள் குரைக்கும் நள்ளிரவில்

விசும்பி அழுவது போன்ற ஓசை
அழுகிறாயா என்பது தெரியாது
அழுவது போன்று கேட்கிறது

நீயில்லா உனக்கான இரவுகளில்
கள்ளிச்செடியில் படரும் கொடிபோல
அனுமதியின்றி நுழையும் நினைவுகளோடு

பால்படிந்த வெற்றுக்கிண்ணத்தை
பூனை நக்குவதுபோல
ஏங்கித் தவிக்கிறேன் நான்!

உன்னுடனான
கல்லூரிவளாக நடைபயணத்தில்
உனக்கு எட்டாத
வேப்பங்கொழுந்தினை
வேண்டுமென கெஞ்சுகிறாய்

எட்டிப் பறித்துக் கொடுத்ததும்
எச்சில்படாது உதட்டில்
உலவ விடும்
அந்த அழகிய காலையில்

இறுதியாய் கெஞ்சிக்கேட்டிட
"எப்டியோ போவென"
என்னிடம் விடுத்து
உன் வகுப்புக்கு வேகமெடுக்கிறாய்

வேப்பம்பூக்கள் உதிரத்துவங்குகின்றன!

காதல்

Friday, February 08, 2013 | 0 comments »


உன் அருகாமையில்
முளைத்திருப்பது
உனக்கு புற்களாகவும்
எனக்கு நானாகவும்!

நீ சிணுங்கி முடிக்கும்
கால இடைவெளியில்
எனக்கு காமத்துப்பாலும்
உன் பார்வையில்
கள்ளிப்பாலும்!

அதிகமாய்
உன் பெயர்
என் கைகளிலும்
பார்வை-உன்
விழியோரத்திலும்!

விரலிடுக்குகளில்
வியர்வையும்-என்
விரல்களும்!

துப்பட்டா
நுனி சுருட்டலில்
விரலும் கொஞ்சம்
நாணமும்!

புத்தக மடிப்பில்
இதழ்கரையும்-என்
முதல் எழுத்தும்!

கைக்குட்டை
கிறுக்கல்களில்
நான் உன்னையும்
நீ என்னையும்!

பேனாவில்-உன்
கூந்தல் வாசனையும்
எச்சில் அமிர்தமும்!

சீப்பில் மிஞ்சிய
கற்றைக்குழலில்
மோதிர விளையாட்டு!

நகப்பூச்சுக்கு முன்னதாக
விரல் நகங்களில்
நானும் நீயும்!

கோப சமிக்ஞைகள்
"ம்"களும்
கண்களும்!

நிலா பார்க்கச்சொல்லும்
குறுஞ்செய்தியில்
உன் முகம்!

உன் ஏய்
என்ற குரலுக்கு
எழுதலாம்
ஓர் அகராதி!

மீசைக்கு
ஜடமாட்டியும்
தலைக்கு
விரல் கோதலும்!

துப்பட்டாவில் மறைத்து
கடிக்காத மிட்டாய்
உதடு!

மல்லிகைப்பூ மடியில்
உதிரும் காலம்
பயண நேரம்!

நீ மீசையும்
நான் விழிகளும்
அலைபேசி உரையாடலில்
காகிதமெங்கும் ஓவியம்!

போடா என்பதில்
செல்லமும்
போயிடு என்பதில்
செல்லக் கோபமும்!



ரேகைக்கோடுகளில்
நகங்களால் கோடுகிழிக்கும்
அந்திக்கால பொழுதில்

கை மடியமர்த்தி
கதைகளினூடே
நிகழும் அவ்விளையாட்டு

இடம் வலம் மேல் கீழென
படரும் ஆமைவேக நகர்தலில்
முயலென வேகமெடுக்கும் காமம்

இதழெட்டும் தூரத்திலிருக்கும்
கன்னமும் இதழும்
களம் அமைக்கும் ஓர் யுத்தத்திற்கு

போர்க்கால வேகத்தில்
கன்னமிட்டு பிரிந்த இதழுக்கு
காயம் நேர்ந்ததாய்

முடிந்த பேச்சினைத்தொடங்க
வீடு சென்றதும் சொல்வாள்
தாடி குத்தியதென்று...

மொழிபெயர்க்க முடியா
முத்தத்தோடு
பட்டியலிலேரும் நாணமும்!

ஆறுதலாய்...

Friday, February 08, 2013 | 0 comments »


பைத்தியக்காரத்தனமாய்
இருக்கிறதென கோபம் கொள்கிறாள்
அவளைப்பார்கையில் எழும் புன்னகையை

தூரத்தில் என்னைக் கண்டதும்
சைகை செய்கிறாள் சிரிக்காதேவென
அதட்டலுமாய் கெஞ்சலுமாய்

ஒரு புன்னகையை நிராகரிப்பவளிடம்
நமக்கென்ன உறவென
முன் தயாரிப்போடு நெருங்குகையில்

தன் தகப்பனின் சாயலிருப்பதாய்
அழுபவளைக் கண்டு மெளனித்திருப்பதே
ஆறுதலாய் இருக்கிறது எனக்கும்!

யூகம்

Friday, February 08, 2013 | 0 comments »

மீண்டும் ஒருமுறை சொல்லச்சொல்லி
கேட்டுக்கொண்டிருந்தாய்
வெகுநேரமாய்

குழந்தையின் அடம்பிடிப்பினை
நச்சரிப்பென நினைக்காத தாயாய்
நீயுமாகி நானுமாகியிருந்தேன்

சொல்லை அதன் உச்சரிப்பை
உதட்டு விரிப்பிலிருந்தும் கண்களிலும்
தீவிரமாய் கவனித்துக்கொண்டிருந்தாய்

உண்மை தப்பவிடும் எச்சில் விழுங்களில்
கோபித்திருப்பாயா மறைத்திருப்பாயா
என்ற மனநிலை அவ்விரவை வதைக்க

பின்னிரவின் அழைப்பில் தூக்கமில்லையென்றாய்
கேள்வி உனதல்லாதிருந்திருக்கலாம்
எனதில்லா பதிலைப்போல!

இப்படிக்கு

Friday, February 08, 2013 | 0 comments »

முடிச்சுகளோடு துவங்கி
அவிழ்த்திட்ட முந்தானையில்
உன் மகள் துயில்கிறாள்

நீ ஒரு பக்கம்
நான் ஒரு பக்கம்
இருப்பிலும் இருத்தலிலும்

உன் குரலெங்கும்
வியாபித்துக்கிடக்கும்
சம்பிரதாய கடமைகள்

உன் முகம் தேடியழும்
மகளின் முகம் கண்டு
மனம் பொறுமை கொள்கிறது

சுதந்திரமென்பதை
நீ உனக்கும் நான் எனக்கும்
எடுத்துக்கொள்ளச் சொன்னதில்

நமக்கான சுதந்திரம்
மரித்துப்போனதை நீ
அறியாது போனதை அறிவேன்

தேவை இன்னதென கேட்டும்
தேவை என்னதென கேட்டும்
சலித்திட்டன பொழுதுகள்

உன்னை மீட்டெடுப்பதிலும்
இழந்து போன சுயத்தையும்
என்னை உன்னிலிருந்து

மீட்டெடுப்பாயென
காத்திருந்து தோற்றுப்போனேன்
வருட விடுமுறை வருகையிலும்

விதைத்தவன் நீ எனினும்
வளர்த்தவள் நான்
பயிரோடு வெளியேருவேன்

என்றாவது ஒருநாள்!

பாட்டி

Friday, February 08, 2013 | 0 comments »

ஊர்த்திருவிழாவில்
பொங்க வைக்கும் போதும்

சமஞ்ச வீட்டில்
தண்ணீர் ஊற்றும் போதும்

இழவு வீட்டில்
ஒப்பாரி வைக்கும் போதும்

சன்னமாய் ஒலிக்கும்
அந்தக் குரல் எல்லா இடத்திலும்

கொலவ சத்தமாய் இருக்கட்டும்
ஒப்பாரியாய் இருக்கட்டும்

அந்த ஏரியாவில் பெயர் போனவள்
தெய்வபழம் பாட்டி

சமீபமாய்
கீழத்தெருவும் இணைந்து கொண்டது

அது

தெய்வபழம் மாடு முட்டி செத்தது
இந்தத்தெருவில் தானே என்பது!


அணில்களும் மைனாக்களும்
வளர்க்காமலே நிறைந்திருக்கும் வீடு
சஹானா வீடு

சஹானாவின் வகுப்பு முடிந்து
வகுப்பெடுக்கத் துவங்கிவிடுவாள்
சுவற்றை கரும்பலகை ஆக்குவாள்

மொழிகளறியாது சைகையிலும்
தலையசைப்பிலும் அன்பிலும்
கதை பேசி மகிழும் மாலைப்பொழுது

விளையாடுவதற்காய் குரும்பல்களை
அணில்களும் நிழலுக்காய் விதைகளை
மைனாக்கள் விதைக்கொண்டிருக்க

தொட்டிலுக்குள் விழிகள் நீந்தவிடுவும்
மடியினில் செல்லம் கொஞ்சிடவும்
மணல்வீடு கட்டி விளையாடவும்

தாயிடம்
காது வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்
ஆம் சஹானா அக்கா ஆகிறாள்!

மனது

Friday, February 08, 2013 | 0 comments »


வெயில் மங்கிய பொழுதில்
அச்சத்தையும் நடுக்கத்தையும்
தேகமெங்கும் தெளிக்கிறது

பயணப்படாத பாதையில்
எழுதப்படாத வரிகளோடு
தொலைந்துவிட வேண்டுகிறது

உலர்ந்து வெடிக்கும்
உதட்டுக் குருதியை
உணவாய் கொடுக்கத் துணிகிறது

உருவமில்லாது ஏறும்
மன எடையும் தலைச்சுமையும்
நகக்கண்களை பியித்தெறியத் தூண்டுகிறது

தேகமெங்கும் கொழுவிக்கிடக்கும்
சிந்தனை முட்களைக் கண்டு
பயந்து அலறுகிறது மனது

ஒலியற்ற மொழியற்ற இடமொன்றில்
இளைப்பாறிவிட்டு வருகிறேன்
சற்று பயமாய் இருக்கிறது!


பாரம்சுமக்க பழகிக் கொண்டிருக்கிறது
நினைவுச் சந்தைக்கு நடுவில் வாழும்
எனக்கற்றதோர் இதயம்...

அபிமானங்களற்று உழலும் சுயம்
கோப்பையின் இறுதிச் சொட்டுகளாய்
மரித்துக்கொண்டிருக்கிறது

நான் என்பதன் அடையாளம்
தீர்ந்து போகும் தருவாயில்
மலர் கொத்தோ கண்ணீரோ

உங்களின் என் மீதான மதீப்பீட்டில்
செலவிட நேரிடலாம்
கொஞ்சம் அமைதியாய் இருங்கள்!


எல்லோருக்கும் எதோ ஒரு சூழலில்
கிடைத்துவிடுகிறது
கொலை செய்வதற்கான காரணங்கள்

நான் என்னை மாய்த்துக் கொள்வதற்கான
சூட்சமங்களும் காரணங்களும்
ஏராளமாய் குவிந்து கிடக்கின்றன

நீங்கள் எல்லோரும் தற்கொலையென
ஏளனம் செய்வீர்களோவென்று
வெட்கமாய் இருக்கிறது...

உன் பிரியத்தின் கரங்கள்
நழுவிடுவதாய் உணருகையில்
காயத்திற்கு அலைகிறது மனது

பார்வை மறைக்கும் நீர் தேக்கங்கள்
உடைந்திடும் தருணத்தில்
இரவின் கசப்பு இரவாது நீள்கிறது

குறியீடுகளோடு சுமந்துத்திரியும்
ஞாபக அடுக்குகள்
குமைந்து மூச்சுத்திணற வைக்கிறது

நான் அறியாது பிரசவித்த
நேசக்குழந்தை நீ அறியாது
உன்னோடு வளர்ந்துகொண்டிருக்க

உன் மீதான என் பிரியங்களிலும்
பிரிய மறுக்கும் நினைவுகளிலும்
பலவீனமெனும் குளவி கொட்டுகிறது...

இரவுகளால் சபிக்கப்படும் வேளையில்
கடல் சிந்தும் உப்புக்காற்றிலிருப்பது
ஆசிர்வதிப்பது போலிருக்கிறது என்னை

அலைகள் எழுப்பும் சாரல்களில்
நினைவுகளால் முளைத்த தேகக்கொப்பளிப்புகளை
மிருதுவாக்க ஈரமணல் பதிக்கிறேன்

சிறுமி ஒருத்தி சிந்தும் பருக்கைகள் போல
தேடல்களும் தொலைத்தவைகளும்
என்னை சுற்றி ஆக்கிரமித்துகொண்டிருக்க

வேண்டாத கோயிலில்லை
பார்க்காத மருத்துவமில்லை
என்றோரு குரல் காது கடக்கையில்

அறையின் தரையெங்கும்
பரவிக்கிடக்கும் முதுகு ரேகைகள்
தனிமையின் ஆயுளை நீட்டுகின்றன!



என் வழியெங்கும்
என்னோடு பயணித்துக்கொண்டிருக்கிறது
நானின்றி எனக்குள் வாழும் நான்...

மரணம் தப்பிய விபத்தொன்றில்
கால்கள் இழுத்தோடும் நாய்குரல்போல
பரிதாபமாய் இருக்கிறது அக்குரல்

ஒரு விலைமாதுவுக்கு சுரக்கும்
காதல் சுனையை பகிர ஆளின்றி
நீர்த்துப்போகும் கண்ணீர்த்துளிகள் போல

நானின்றி வாழும் என்னை கொல்வதற்கோ
எனக்குச்சாதகமாய் வாழ வைப்பதற்கோ
வழியின்றி தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன்

மெளனமாய் அழவும் உங்களோடு சிரிக்கவும்
கற்றுக்கொடுத்த காலத்தின் குளத்தில்
நீர் தப்பிய மீனாய் வாழ்கிறேன் நான்

ஆறுதல் சொல்ல யாரும் எத்தனிக்காதிர்கள்
எனக்கோ அழ வேண்டும் போலிருக்கிறது
சத்தமாய் சத்தமாய் சத்தமாய்!


ஒருவனின் அறியாமையில்
கிட்டும் வாய்ப்பானது
சுயநலமாக்கி அழகு பார்க்கிறது

காத்திருப்பில் கூடும் பசியில்
ஒருங்கேறும் சிந்தனை வாள்
தலைக்கு காத்துக்கொண்டிருக்கிறது

கண்ணியில் தானாய் தலைகொடுக்கும்
ஓணானின் மரணமோ வாழ்வோ
அனிச்சையாய் நிகழும் நிகழ்வைப்போல

துரோகத்திற்கு காத்திருப்பவன்
கண்ணியாவதும், ஓணான் ஆவதும்
மூன்றாமவனிடம் உள்ளது!

இரண்டு பாகங்களாய் கொண்ட கதவில்
கீழ்கதவு தாழிடப்படும் வேளையிலெல்லாம்
வந்தமர்ந்து கொள்ளும் பூனை

பூனைமுடி ஆடையில் ஒட்டிக்கொள்ளும்,
வாய்க்குள் சென்றுவிடுமென அம்மா
எப்போதும் எச்சரித்துக்கொண்டிருப்பாள்

அதற்கொரு பால்படிந்த கிண்ணம்
காய்ந்த பருக்கை அடுக்களை நிலையை
தாங்கியபடி வைத்திருப்பாள்

ஓடுகள் போர்த்திய சட்டத்தில்
எலிகளின் கூச்சல்கள் எழும் வேளையில்
பூனையை தேடியபடி திட்டிக்கொள்வாள்

இரத்தம் படிந்த கரையோடு
ஈன்ற குட்டிகளை இடம் கடத்துகையில்
முகம் காணாத அப்பாவிற்கு கண்ணீர் சிந்தினாள்!

Blogger Wordpress Gadgets