அவள்
எச்சில் தெறிக்கும்
கன்னத்து முத்தம் தொடங்கி

கலைந்திட்ட போர்வையினை
கரைதள்ளி
மார்பினை தலையணையாக்கி

இடை சேர்ந்த விரல் பிரித்து
கேசத்தில் நுழைத்து
தேகத்திலொரு பயணம்...

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
குவித்திட்ட முத்தத்தத்தில்
தாழ் திறந்த தாமரையால்

நீட்டித்த நரம்புகளை
ஆழத்தில்
திணித்திட முயலுகிறது ஒரு வேகம்

தாகத்தில் உதிர்ந்திட்ட
தாளத்தில் அறை தொட்ட
ராகத்தின் முடிவில்

உயிர் கொண்டு திரளும்
வெள்ளை மேகத்திற்கு
அவளெனும் நிலவே துணை!


வெகு நேர காத்திருப்புக்கு பின்
படுக்கையறைக்கு சென்றான்
அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்

வழக்கமாய் எரியவிடும்
இரவு விளக்கினை
அணைத்து விட்டிருந்தாள்

சரி,
போர்வை போர்த்திவிட எத்தனிக்க
தலை கால் தெரியாத அளவிற்கு
இறுக மூடியிருந்தாள்...

ஊடல் நாட்களில் கூட
அவள் உறங்கியதாய் நினைத்து
அவனோ
அவன் உறங்கியதாய் நினைத்து
அவளோ

கொடுத்து உறங்கும்
உச்சந்தலை முத்தம் கூட
கொடுக்கப்படவில்லை..

வேலை களைப்பில் உறங்குவாளென
கால் பிடித்துவிட கட்டில் நெருங்குகையில்
உள்ளங்கை வியர்க்க துவங்கிய அவனுக்கு,

அழ வேண்டும் போலிருந்தது
அழுதான் தலையணை கடித்து அழுதான்
அவளுக்கு கேட்டிடாதபடி
அறையின் வெளியே தாழிட்டு அழுதான்

அவளுக்கான விரிப்புகளும்
ஒரு குவளை நீரும்
எல்லா பொழுதுகளிலும்
அப்படியே தான் இருந்தது!

அவன் மனதிற்குள்ளிருந்து
அவள் எழவே இல்லை!

என் ஆத்தாளுக்கு அப்புறமா
நெத்தியில திருநீரு வச்சிவிட்டவளே
ஒரு அசைவு இல்லாம கெடக்குறியே

நீ போற வர இடமெல்லாம்
சொல்லிட்டு போவியே-இன்னைக்கு
சொல்லாம தவிக்க விட்டுட்டு போயிட்டியே

ஆத்தாக்காரி இல்லனா
கூப்பிட்டு வச்சி சோறு போடுவியே
வீடு தேடி வந்திருக்கேன்
வான்னு சொல்ல நீயில்லையே

திருவிழா நல்ல நாளுன்னு வந்துட்டா
சேத்து வச்ச காசுல துணி எடுத்து தருவியே
இப்படி கோடி துணி போட வச்சிட்டியே

கம்மா கரை கெணத்தடி
தெருநல்லி பீடிகடைனு
காவல் நின்னேனே
இப்படி கால்கட்டி கெடத்திருக்கே

கோவத்துல சண்ட போட்டு போனாலும்
என் தெருக்காரிகிட்ட கொடுத்தனுப்பும்
கொழுக்கட்டை இனி யாரு கொடுப்பா?

முதுகு தேய்க்க வரட்டுமானு
கேக்கையில
கல்யாணத்துக்கு அப்புறம்னு கண்ணடிப்பியே
கண்மூடி கெடக்குறியே

மருதாணி வச்சக்கை செவந்திருக்கானு
முகம் சிவக்க வந்து கேப்பியே
மரக்கட்டைக்கு இரையாகி போனியே

கொடுக்காபுளி நவாபழம்
சீசனுக்கு கேட்டு வாங்கிப்பியே
இனிமேல்
யாருகிட்ட கொண்டு கொடுப்பேன்

தீட்டுதுணி வாங்கிவான்னு
சொன்ன மொத ஆம்புள
நீ தானு சொல்லுவியே
மொத்தமா போய் சேந்துட்டியே

உன் அப்பன் கூட போகையில
பின்னாடி வராதேனு
வாய்க்குள்ள முணுமுணுப்பியே
வாய்க்கரிசி போட வச்சிட்டியே


பாவாடை ரவிக்கை துணி
என் கையால வாங்கி கட்டினியே
பாடையில போறதுக்க்கா
பாவிமக நான் என்ன செய்வேன்

பொங்கலுன்னு வந்துட்டா
நான் உரிச்ச கரும்பு வாங்கி கடிப்பியே
பொசுக்குனு போய் சேந்துட்டியே

துணிதுவைக்க குளத்தங்கரைக்கு போகையிலே
சைக்கிள்ள எங்கூட வருவியே
அனாதையாக்கிட்டு போயிட்டியே

ரெட்ட புள்ள பெத்துக்கனும்
உன் தோள்ள ஒன்னு என் இடுப்புல ஒன்னு
டவுன்ல படிக்க வைக்கனும்னு சொன்னியே

வாங்கி வந்த வளையல் கழற்றி
என்னை போட சொல்லி
வளையல் கூட சேர்ந்து சிரிப்பியே
என் வருங்காலம் என்ன செய்வேன்

உடம்புக்கு நோக்காடுனு வந்துட்டா
விரதம் எல்லாம் இருப்பியே
உசுர விட்டு வெத்து உடம்பா கெடக்குறியே

உன் பொறந்த நாளன்னு
கல்யாணம் வைக்கனும்னு சொல்லுவியே
பொணமா கிடத்திருக்கே

உன் வீட்டு சீதனமா
நான் மட்டும் போதாதான்னு கேப்பியே
மூச்சு நின்னு கெடக்குறியே

அங்க நின்னு இங்க நின்னுன்னு
கண்ணால பேசுவியே
வா வான்னு கூப்டுறனே
உன் காது ரெண்டுலையும் கேக்கலயா?

வார்த்தைக்கு வார்த்தை
என்ன கட்டிப்பியானு கேட்டவளே
இனி யாரு வந்து கேட்டிடுவா
நாதியத்து போனேனே!

அவசர அவசரமாய் எழுந்தவள்
இரவு பாதியில் விட்டுப் போன
துணியை தைக்க துவங்கினாள்

கிழிந்த ஆடையோடு
குழந்தையை உறங்க வைத்தவள்
மிதமான சூட்டில் குளிக்க வைத்து

புதிதாய் தைத்திருந்த ஆடையுடுத்தி
அழகு படுத்தி, ஜடை பின்னி
திருஷ்டி பொட்டிட்டாள் யாழினிக்கு!

அறைக் கதவினை அப்பாவிடம்
தாழிட்டு போகச் சொன்னவள்,

மடியில் கிடத்தி முந்தானை விலக்கி
மார்போடு அணைத்து
தலை வருடி கொண்டிருக்கிறாள்

பாலும் வந்தபாடில்லை
பொம்மை குழந்தையும்
குடித்தபாடில்லை!

நடந்த நிகழ்வுகளின் துயரம் தாளாது
சாளரங்களின் திரை விலக்கி
ஆள் அரவமற்ற சாலை பார்த்து நின்றிருக்க

சாலையாவும் சிதறி கிடக்கும்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்

சிறு குழந்தை ஒன்று
புதைத்துவைத்த விதைகள்
மொத்தமாய் முளைவிடுவது போல

அவளுடன் கழித்திட்ட பொழுதுகள்
காணும் திசையெங்கும்
துளிர்விட்டு நிற்கின்றன

ஞாபகமாய் வைத்திருந்த
மின்னஞ்சல்களின் நகல்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும் வார்த்தைகளிருந்தும்
வாசிக்கமுடியாமல் கண்ணீர் முட்ட,

முன்னமே பதிவு செய்திருந்த
அலைபேசி உரையாடல்களை
தொடர்ச்சியாய் கேட்டபடி
இரவினை கடத்திக்கொண்டிருக்கையில்

உன்னை தவறவிட்டேன் என்றொரு
ஆங்கில சொல்லாக்கத்தின்
குறுஞ்செய்தியோடு விடைபெறுகிறாள்
இன்று அவளுக்கு முதலிரவு!

எனதிந்த இரவை
மெளனமெனும் நூல் கோர்த்து
தனிமையெனும் ஊசியில் தையலிடுகிறேன்

புறக்கணிப்பால்
பிளந்து கிடக்கும் நட்பின் தசைகளை
மிக நெருக்கமாக கோர்த்துப் பார்க்கிறேன்

அதன் தையல்களிலிருந்து
கசியும் குருதியினைப் பார்த்து
ஒருவன் போலி என்கிறான்
மற்றொருவன்
எதுவும் இல்லாதது போல் கடக்கிறான்

கை தேர்ந்த
நாடி வைத்தியன் போல
என் சொற்களின் நடுக்கம் அறிந்தவன்
இன்றதனை நடனம் என்கிறான்

நள்ளிரவு குளியலோடு
கரைத்திட முடியாத உப்பினை
எழுதி தீர்த்திடலாமென்றால்
முனை முறிந்து கிடக்கிறது
என் பேனா!


அன்றைய இரவின்
கடைசி இரயில்
தண்டவாளத்தை உரசி சென்ற பின்

முகிலினங்களின் ஊடே
கிழிந்தொழுகும் நிலவின்
வெளிச்சப்பரவலில் சிறு புள்ளியாய்

தண்டவாளத்தின் நடுவே
புணர்ந்து கொண்டிருந்தோம்
நானும் ஒரு கோப்பை மதுவும்

வண்டினங்களின் இறக்கை
இரைச்சல்களும்
சாமத்தில் கலையும்
காகங்களின் கரையும் சத்தமும்
புணர்தலுக்கான பின்னணி இசை!

விரல் இடுக்கினில் தொக்கி நிற்கும்
ஊறுகாயோடு பிசுபிசுக்கும்
வியர்வையினை நக்கி சுவைத்தபடி
அந்த இரவில் உறங்கிப்போக,

படபடக்கும் குரலில்-எனை
அதிகாலையில் தட்டியெழுப்பியவள்
கைக்குழந்தையோடு சாக வந்தவளாம்
நாளை?

ஒரு ஞாயிறு மாலையில்
முன்னறிவிப்பின்றி
தோழிகளோடு தங்கியிருந்த-உன்
வீடு வந்திருந்தேன்

நீர் நிரம்பிய பாத்திரத்தில்
உன் பாதம் உள்வைத்து
சுத்தம் செய்துகொண்டுருந்தாய்

இதழ்களில் தேங்கி நிற்கும்
பனி துளிகள் சொட்டுவது போல்
அழகாய் சிரித்து வைத்தவள்,

வாவென அழைத்து
கண்களால் எதேதோ பேசினாய்
ஒரு கோப்பை தேனீர் கொடுத்தாய்

தோழிகள் ஒவ்வொருத்தியாய்
ஒரு கை குலுக்கலோடு
அறிமுகம் செய்து வைத்தாய்

நினைவிருக்கிறதா?

இரு கைகளிலும்
மருதாணி ஏந்தி நின்ற
உன் சித்திமகள்
"ஏய் அத்தான்" என்றாள்..!

அன்றிரவு நீயும் என்னை
காதலிப்பதாய்
அறை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்!

ஒரு கனவு

Thursday, April 19, 2012 | 0 comments »

விலகி கிடந்த போர்வையை
போர்த்திவிட்டு அவளை
அணைத்தபடி படுத்திருந்தான்

பின்னங்கழுத்தோர கேசத்தில்
மூச்சுக் காற்று பரவ
சூடேறிய தேகத்தோடு,

தூக்கம் கலைந்தவள்
அவன் மார்பில் முகம் புதைத்து
இதமாய் அணைத்துக் கொண்டாள்

வள்ளுவன் கோர்த்த மூன்றாம் பாலை
வியர்வை முத்துக்களாய் சிதறவிட்டு
முனகியபடி மூச்சிறைத்தவள்

தொப்பென
தரையில் விழுந்தாள்
அது கனவு!

விழுந்தவள் மேலெழும்பி
தலையணை இடைசொறுகி
உறங்கிப் போகிறாள்

அந்த முதிர்கன்னியின்
தாய்
விசும்பி அழுது கொண்டிருக்கிறாள்!

---------------------------

Thursday, April 19, 2012 | 0 comments »

என் மனதிற்குள்
அடிக்கடி இலை விரிக்கும்
ஒரு பகல் கனவினை

தூரத்தில் தெரியும்
கானல்நீர் குளத்தில்
மூழ்கடித்துவிட எண்ணி

பிடிவாதமெனும் படகிலேறி
நானும் எனது இயலாமையும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்

அறியாமையெனும்
வழிப்போக்கன் ஒருவன்
தத்தளிக்க அவனோடு
மூவராய் பயணம்

உயர பறந்த கழுகு ஒன்று
நழுவவிட்ட புறா குஞ்சு ஒன்றில்
ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும்
கட்டி விட்டிருக்கிறேன்

வழியில் எங்கேனும்
அந்த புறாவினை காண நேர்ந்தால்
என் வீடு சேர்த்து விடுங்கள்

தனித்து நிற்கும்
ஒற்றை பனைமரமொன்றில்
கூடு கட்டி வாழும் கழுகிற்கு
பசியாற்ற போகிறேன்!

தாய்

Thursday, April 19, 2012 | 0 comments »

சுடு சோறு வடிச்ச பக்கத்து வீட்ல
அடுப்பில கெடக்கும் தீக்கங்கில்
எக்கோ இந்த கத்தரிக்காய் சுட்டுகிறேன்
என சொல்லி,
கூடவே ரெண்டு வத்தலும் சுட்டுட்டு
கத்தரிக்காய் தோலுரிச்சி
ஒரு கிண்ணத்துல பிசஞ்சி
புளி கரச்ச தண்ணி ஊத்தி
வத்தல பிச்சி போட்டு
சின்ன உள்ளி நறுக்கி உப்பு கொஞ்சம் போட்டு
இந்தா கஞ்சிக்கு கூட்டு
இத குடிச்சிட்டு
காலேஜிக்கு போன்னு சொல்லுவா அம்மா!

Blogger Wordpress Gadgets