ஆமென்

Friday, December 14, 2012 | 0 comments »


சந்தேகத்தின் பெயரில் தொடரும்
தொடர் துரோகங்கள் என்னை
யார் என எனக்கு அறிமுகம் செய்கிறது

புறம் தள்ளுதலில் நிகழும் அகத்தின்
வெறுமையில் நெருங்கும் ப்ரியத்தின் கைகள்
தூக்கு கையிறுகளாய் பாவிக்கின்றன

இயலாமையின் கோபம் தனிப்பதற்காக
உங்கள் கரிசனத்தில் எரிச்சலுறும்
பொழுதுகளில் திட்டிக் கொள்கிறேன்

தன்னைத்தானே அமைதி படுத்துதல்
உங்களுடனான அனுசரித்தல்
சுயத்தின் நேசம் தேடுதல் என

வாழ்தல் பற்றி தெளிவுறாத
புரிதலற்ற வாழ்வு எனது என்பதை
நீங்களும் அறிந்து கொள்வீராக!

ஆமென்


பேசுவதற்கான காரணங்கள் தேடுகையில்
புன்னகையொன்றினை உதிர்த்து
எடுப்புக் குழந்தைபோல விழி வைத்திருக்கிறாய்

இருவருக்குமான மெளனம் உடைபடுவது
ஒரே நேரத்திலிருக்க வாய் விட்டு சிரிக்கிறாய்
மீண்டும் மெளனம் உடுத்திக்கொள்கிறாய்

உனக்கும் எனக்குமான அறிமுகங்களை
மீண்டும் சிலாகிக்கத் துவங்குகையில்
மணி பார்த்து தலை நிமிர்கிறாய்

வெளிநாட்டு சாக்லெட் என கொடுத்து
அதன் கதை சொல்லியபடியே
நீயே பேசுவதற்கான முடிச்சவிழ்கிறாய்

காதலை சொல்லுவதற்கான யுக்தியும்
சொற்களும் வாய்க்கபெறா பொழுதொன்றில்
இதயக்குறியீடு அனுப்புவாயென காத்திருக்கிறேன்!


ஒரு பாதசாரியின் மனஉறுதி போல
புதிதாய் தடம் பதிக்கிறேன்
நீ இல்லாத உனை கூட்டிக்கொண்டு

இலைகளற்ற மரங்களின் கிளைகளில்
காய்ந்து போன சதைத்துண்டுளின்
வாடை வீசியபடி பயணிக்கிறது பாதை

பயமற்ற பைத்தியக்காரனைப்போல
உனை முன்னிறுத்தி உன் மொழிபேசி
இதயத்துடிப்பின் ஓசையில் நடக்கிறேன்

எனை முந்திப்போன உன் பிம்பத்தின்
சீழ்வடிந்த வாடைக்கொண்டு
உன் இருப்பின் அடையாளம் காண்கிறேன்

அங்கே
என்னைபோல் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான்!


மெளனத்தில் உள்ளூறும்
மரணம் பற்றியதான எண்ணங்களில்
அகால மரணமா கண்ணீர் அஞ்சலியாவென

நொடிக்கொருமுறை மூச்சுத்திணறத் திணற
என் மிதான பிடிமானங்கள் உடையுமளவிற்கு
கேட்டுக்கொள்கிறேன் நான் என்னிடம்

சுமத்தலின் பாரம் அடுத்தவர் அறியாத
மனச்சுமையோடு கேள்விக்கனைகள் எழுப்பி
விடையறியாது உழல்கிறேன் உமிழமுடியாமல்

ஒரு பாவ மன்னிப்பிற்கோ பாவத்திற்கோ
துணிந்திடாத வாடகை உடலுக்கு
தினம் ஒரு காயமென பரிசளிப்பதைவிட

உயிர் கொடுத்தவனிடம் உயிரை
திருப்பிக்கொடுக்கும் வழியும் கால அவகாசமும்
எவ்வளவு என்று கேட்டுவருகிறேன்!


காகங்களின் இறக்கைகளும் கண்ணாடியும்
நீண்ட கம்பில் வெள்ளைத் துணிகளும்
நூல்களும் காற்றிலாடிக்கொண்டிருந்தன

புறாக்களுக்கும் காக்கைகளுக்கும்
எச்சரிக்கையென ஐந்து வயது மகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தாள் தாய்

நெல்மணிகளும் கடலைகளும் காயும்
அந்த மொட்டைமாடியில்
கேள்விகளால் படிக்கட்டு செய்தாள் மகள்

ஒவ்வொரு கேள்விகளிலும்
உதிரும் விடைகளும் எழும் எதிர் கேள்விகளும்
முன்பொறுமுறை சொன்ன கதையினையும்

நினைவூகூர்ந்தவள் பொய்யாவென கேட்க
தாயின் மெளனத்தால் மகளிடம் மனிதம் பிறந்து
கடவுள் கேள்விக் குறியானார் மனதில்!

டைரி

Friday, December 14, 2012 | 0 comments »

நூல் நுழைய முடியாதவாரு
துருவேறியிருந்த ஊசியின் துளை வழியே
கடந்த காலத்தை காதலித்துக்கொண்டிருந்தாள்

பழுப்பேறி முனைமடங்கி பனிக்காலத்து

ஈரம் பாய்ந்து புத்தகத்திற்கான வாசமும்
வியர்வை வாடையும் வீசிக்கொண்டிருந்தது டைரி

நடுக்கங்கள் தீராதிருந்தாலும்
பொடிய மூடிய கண்கள் அகல விரித்து
விரல் வருடியபடி வாசித்துக்கொண்டிருந்தாள்

கையின் அழுத்தம் பதிந்து
வியர்வையின் நிறம் ஏறியிருந்த
ஒரு பக்கத்தில் ஊசியின் கதையெழுதியிருந்தது

ஒரு சொட்டு கண்ணீரும்
தாளமுடியாத துக்கமும் வெட்கமும் சூழ
உடைந்த குரலில் வாசிக்கத்துவங்கினாள்

திட்டுக்களோடும் சிணுங்கல்களோடும்
தானேயறுத்த ரவிக்கையின்
ஊக்குகளை வைத்துக்கொடுத்த நாள் இதுவென்று!

தளிர்

Friday, December 14, 2012 | 0 comments »


இன்னொருவரின் விழிகளில் புரண்டு
தெருவோர புத்தகக்கடைக்கு மறுவிலைக்கு வரும்
புத்தகங்கள் வாங்க அவளும் வந்திருந்தாள்

நாவெங்கும் ஆங்கிலம் குதப்பி
மிதவேகமாய் துப்பிக்கொண்டிருந்தாள்
சற்றுமுன் தோழியாகிய ஒருவளிடம்

தன்னைப்பற்றிய அறிமுகங்களும்
எதிர்பாராது நிகழ்ந்த அப்பாவின்
மாறுதல்களென சொல்லிக்கொண்டிருந்தாள்

பயணத்தில் காதல் பறவைகளை கொண்டுவர
மிகுந்த சிரமமுற்றதாகவும் பின் ஆசுவாசமானதாகவும்
இரை விற்கும் கடையினை வினவிக்கொண்டிருந்தாள்

நான் வசிக்கும் அதே தெருவில் இடது பக்கமாய்
நான்கு வீடுகள் தள்ளி அவள் வசிப்பதது அறிந்ததும்
பூனை வளர்த்திடும் ஆசை மேலோங்கியது

ஏனெனில்
எனக்கு அவளை காதலிக்கவேண்டும் போலிருக்கிறது!


இருவருக்குமான விவாதங்களுக்குப்பின்
விலகுதல் பற்றி பேசத்துவங்கினாய்
வரி வரியாய் வழியும் வலியாய்

உடலின் பசி மறைத்து
பேச்சினில் மூழ்கிடும் வேளையில்
ஒரு முத்தத்திற்கு அடிபோடுவதையும்

யாருமில்லையென உணரும் பொழுதில்
மிரளும் கண்களுக்கும் திமிறும் கைகளுக்கும்
தற்செயலாய் சண்டையிட்டு நிறுத்தி வைப்பதையும்

நீண்ட பயணத்தில் தயக்கத்துடன்
முதல் நாள் தோள் சாய்ந்ததையும்
நினைவுகூற, சட்டென முகம் சுழித்தாய்

பிரிதல் பற்றிய உன் புரிதல்களை
நானும் புரிந்து கொள்ள வேண்டுமென
என் குரலுக்கு செவி சாய்க்காது பேசினாய்

உன் அருகாமையின் வேண்டுதலை வேண்டிட
நிராகரிப்பின் நியாயம் பேசி
விடைபெறுதலின் நிமித்தமாய் முத்தமிட்டாய்

உன் எச்சில் தின்ற என் நெற்றி பரப்பினை
கண்ணாடியில் காணுகையில் உயிரறுக்கிறது
இதற்கும் நீயே முடிவொன்றை சொல்லிச்செல்?

மணமகளை அழைத்துவரச்சொல்லிக்கொண்டிருக்கின்றனர்


அந்தரத்தில் சுழலும் விசிறியின்
வேகத்தினை வியந்தபடி சஹானா
தலை தாளாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்

மனித ராசிகள் ரசித்திடாத
சாம்பல் நிறப் பட்டாம்பூச்சியின்
இறக்கையடிப்பிற்குப் போட்டியாய்

டியூப் லைட்டிற்கும் அதன் பட்டைக்குமான
இடைவெளியில் பூச்சிகளை உண்டபடி
வாலசைத்துக்கொண்டிருந்தது பல்லி ஒன்று

கெளளி சத்தத்தில் தலை திருப்பி
கிளுகிளுப்பை சத்தம் தாண்டி
ஓசை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தாள்

பஞ்சாங்கத்து வரியின் வழிப்படி பல்லியை
துடப்பத்திற்கு இரையாக்கினாள் அம்மா
மெல்ல அழத்துவங்கினாள் சஹானா!

நினைவுகள்

Friday, December 14, 2012 | 0 comments »


மனதோடு உடலையும்
தளர்வடையச்செய்கிறது
உன் நினைவுகள்!

விழி மூடவும் அனுமதியாது
விழி திறக்கவும் அனுமதியாது
கருவிழியில் சம்மணமிட்டிருக்கிறது
உன் நினைவுகள்!

வேடிக்கை பார்க்க வைத்து
என் தூக்கத்தோடு
விளையாடிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்!

என்
விரல் நடுக்கங்களில்
தாளமிடுகிறது
உன் நினைவுகள்!

நாவிருந்தும்
என் மொழியறுத்து
சுவைக்கிறது
உன் நினைவுகள்!

புருவங்களின் இடைவெளியில்
நாட்டியமாடுகிறது
உன் நினைவுகள்!

விழியெங்கும் பூத்துக்கிடக்கும்
பூக்களை அனுமதியின்றி
பறித்துச் செல்கிறது
உன் நினைவுகள்!

பாலையெனவும்
பெருமழையெனவும்
என் விழிகளை தீர்மானிக்கிறது
உன் நினைவுகள்!

உடலை சுமந்துத்திரியும்
உயிருக்கு ஓய்வு குடுக்க
போராடுகிறது
உன் நினைவுகள்!

தூண்டில் புழுவாகவும்
புழு விழுங்கும் மீனாகவும்
எனையாக்கி மகிழ்கிறது
உன் நினைவுகள்!


கனவுகளுடைத்து விளையாடும்
உன் விழிகளின் அதிர்வுகளால்
மீளா துயரத்தில் கிடத்தியிருக்கிறாய்

எதிர் திசையிலிருந்து சிதறவிட்டுப்போகும்
உன் உமிழ்தலையும் கேலிச்சிரிப்பும்
எனக்கானதென உறுதிப்படுத்தியிருக்கிறாய்

விரைந்தோடும் ஓடையில்
மேலெழுந்து நீரடையும் மீனைப்போல
உனைக்கண்டு மேலெழுந்து உடைகிறேன்

புறக்கணிப்பின் போக்கினை அறிந்தும்
படுக்கையில் விசிறிக்கிடக்கும் முதியவர் போல
போக்கிடமின்றி உனை சுற்றியலைகிறேன்

அலை தப்பி கரையேறிய கிளிஞ்சல்கள்
காட்சிப் பொருளாகிப்போவது போல-உன்
இருப்பிலிருந்து இல்லாது செய்திருக்கிறாய்

என்ன ஒன்று மரண ஓலத்திலோ
துக்கவிசாரிப்பிலோ காட்சிப் பிழையாவேனென்ற
வருத்தம் மட்டும் உண்டெனெக்கு!


கோடையில் கூடிப்பிரிந்த வேளையில்
வெயில்படர முதுகு காட்டி காதலி
தனக்குள்ளே விசும்பிக்கொண்டிருந்தாள்

உலர்ந்து கொண்டிருக்கும் வியர்வை மிஞ்சிய
தண்டுவடத்தில் சிலிர்த்திட்டிருந்தது
பூனைமுடிகளும் பூத்திருந்த துளிகளும்

அஸ்திவார மண்குவியல்களில்
புரண்டு ஒட்டிய மணல்போக இடது தோளில்
கவியொன்று எழுதியிருந்தான் காதலன்

அழித்திட மனமில்லையென்றும்
வீட்டிற்கு செல்ல வழியில்லையென்றும்
செல்லக் கோபமுமாய் முனகலுமாயிருந்தாள்

தன் உடலெங்கும் வியாபித்துக்கிடக்கும்
உன் முத்த வடுக்களை
என்ன செய்வதாய் உத்தேசம் என கேட்க

மார்பிடையில் கவியெழுதி வாங்கி
முத்தத்தின் எச்சில் தொட்டு
அழித்துக்கொண்டிருந்தாள் முந்தைய கவிதையை!


அகாலமாய் சொல்லொன்றை உமிழ்ந்து
பரிகாசத்தால் கட்டத்துவங்கியிருக்கிறாய்
உனக்கும் எனக்குமான விரிசல் பாலத்தை

உணர்வுக்குஞ்சுகளை சுமக்கும் இதயக்கூட்டில்
தாய்ப்பறவையில்லையென அறிந்து வார்தையெனும்
நெல்மணிகளை உணவெனத் தூவுகிறாய்

சொற்கள் சிக்குண்டு உயிரான
உயிரே உயிர் பிரியுமென தெரிந்தும்
உயிர் வைத்த உயிரே உயிர் பிரிக்கிறாய்

கூடிக்கிடக்கும் கோயில் புறாக்களை
ஆலயமணியோசை கலைப்பது போல
நீயும் நானுமாயிருக்க நீயே கலை(க்)கிறாய்

வார்த்தைகளில் உடைபடும் ஆன்மாவின்
ஓசை விரும்பும் உன் மென் காதுகளுக்கு
இனியும் தீனி போட திராணியில்லை...

ஆதலால் விடைபெறுகிறேன்!


வீதியெங்கும் தேங்கிக்கிடக்கும் மழை நீரில்
புதுப்பாவடை சட்டையை பார்த்துப்பார்த்து
ரசித்து கடந்து கொண்டிருந்தாள் சஹானா

அம்மா தொடுத்து வைத்துவிட்ட பூக்கள் உதிர்த்து
தேங்கிய பள்ளங்களுக்கு ஒன்றென
நார் மட்டும் மிச்சம் வைத்திருக்கிறாள்

கலைந்திட்ட கூந்தல் முன்னெற்றியில்
அவள் ஆடிய நடனத்தை அரங்கேற்ற
அம்மாவுடனான பாடலை தனியே பாடுகிறாள்

கருவிழிக்கு போட்டியாய் மேகம் போட்டியிட
முன்னமே அறுந்திட்ட பாசியின் முத்துக்களை
சட்டையில் மடித்தவளாய் நடை போடுகிறாள்

அருந்த பாசியின் உதிர்ந்து தொலைந்தது போக
மிதமிருந்தது கண்டு அம்மா திட்டவும்
அழுது கொண்டு சஹனா சொல்கிறாள்

உன் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவுக்கு
சின்னதாய் பாசி கோர்த்து போடலாம்மா என்று!

இப்படியாய்

Friday, December 14, 2012 | 0 comments »

இலையுதிர் கால சருகுகள் பாதம்சூழ
எதோ சத்தம் கேட்டவள் போல
பக்கவாட்டில் விழியுருட்டி
நடந்து சென்று கொண்டிருக்கிறாள்

அருகிலோடும் நீரோடையில்
நீர் கிழிக்கும் பாம்பொன்றின் வேகத்தை
அம்பெய்து வெளியேறும் வில்லின்
மடிப்பு அளவிற்கொரு பார்வை குறுக்கி

நரம்புகளென பின்னலிட்டுக் கிடக்கும்
இலையற்ற கிளைகளில் கூடுஒன்று கண்டு
பரிதாபப்படும் அன்பின் மொழியை
விழிகளால் முத்தமிட்டுச் செல்கிறாள்

வாடைக்காற்றில் சில்லிட்ட கைகளை
உள்ளங்கை உரசி கன்னத்தில் ஒத்தடமிட்டு
பனியென உருகியவளாய்
காதல் குழைத்து பார்வையை நழுவவிடுகிறாள்

இப்படியாக
வேண்டுமென்றே மறுத்திடும் அவளின்
முத்தத்திற்கான முகபாவனையை
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் ஓவியமாக!


யாருமற்றதாய் உணரும் காலங்களிலெல்லாம்
உனக்கொரு கடிதம் எழுதிட
மனம் முயன்று பின்பு தவிர்த்துவிடுகிறேன்

எதெற்கென கனிக்கமுடியாமல்,
மனம் சுமக்கும் உருவமில்லா சுமையோடு
அந்திப்பொழுதுகளில் பற்றி எரிகிறேன்

காடுகள் அழிந்து கூடுகளற்று
மணலற்ற பூமியில் முட்டையிட்டு
முட்டையுடைந்து அழியப்போகும் பறவைகள் போல

உன் அன்பின் கருவில் என்னுள் விளையும்
துளிகளையும் ஏனைய சொற்களையும்
அழித்துக்கொள்ளப்போகிறேன், கொல்லப்போகிறேன்

என் வனாந்தரத்தில் முளைத்திருக்கும்
ஒற்றை ஆலமரமாய் அதில்-நீ மட்டும்
சொற்களின் விழுதூன்றி நிரந்தரமாகியிருக்கிறாய்

நானென நீ அறியாத வண்ணம்
உதிர்ந்து கொண்டிருப்பேன்
ஒவ்வொரு இலையாய் ஒவ்வொரு இலையாய்!


உனக்கும் எனக்குமான உரையாடல்களை
நாளொன்றில் நொடிப்பொழுதின்
வார்ததையென பக்கங்களின் எண்ணிக்கை
காற்றில் பிடிபடாமல் உலவுகிறது

பிணக்குகளற்று பிரிவுக்கு ஆயத்தமான
உன் சொல்லென்றின் முனைபிடித்து
இதயத்தில் கோர்த்திருக்கிறேன்
உள்ளிறங்கி கோடுகிழித்துக்கொண்டிருக்கிறது

இருவருமாய் பின்னலிட்ட
சிலந்திவலையில்
பதிமூன்றாவது அடுக்கில் நானும்
இருபத்தியேழாவது அடுக்கில் நீயும்

நமக்கான பயணத்தில்
நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்
நீ கீழறங்கிக்கொண்டிருகிறாய்!

சில புள்ளிகளும் அதனைச்சுற்றிய
நெளிவுகளும் வாய்க்கும் வேளையில்
புறக்கணிப்பின் அடையாளமாய்-உன்
வீட்டு வாசலில் சுண்ணாம்பில் கோலமிடு
என் நினைவெறும்புகள் வழிதப்பி அலையட்டும்!
பாலை நிலமென
வெடித்துக்கிடக்கும் உதட்டின்
தசையறுத்து ஈரம் வாங்கிச்செல்கிறாள்
விடைபெறுதலும் கூடவே
ஒரு வழியனுப்புதலும்!

அறுவடை

Friday, November 30, 2012 | 0 comments »


என் பால்யத்தில் விதைத்தவைகளை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்
துணை வேண்டிடும் இக்காலத்தில்

உணர்தலின் நிமித்தமாய் அழுதிடும் வேளையில்
மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்
உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று

சிலாகித்து பெருமூச்செடுக்கும் அளவிற்கு
பூங்காவில் அறிமுகமான நபர் ஒருவர்
நெருக்கமாகவே இருக்கிறார் இதயத்திலும்

இழந்து விட்ட மனைவியின் சம பங்கினை
பனி விலகி வெயில் எழும் பொழுதில்-என்
பேரனை நினைவூட்டும் வகையில் சொல்லத்துவங்கினார்

பேத்தி சொல்லிக்கொடுத்தாளென
கம்பிளி பின்னிக்கொண்டிருக்கும் மனைவியை
நாளை அழைத்துச்செல்ல வேண்டுமென,

இவ்விரவும் தூக்கத்தில் மரணம் தாவென
ஒருமுறை கடவுளிடம் வேண்டியாயிற்று
விடியலில் நானிருந்தால் அலலது இருவருமிருந்தால்

சக்கரம் வைத்த தள்ளுவண்டி ஒன்றினை
போனமுறை வருகையில் அடிக்க கை ஓங்கிய
மகனிடம் கேட்க வேண்டும்!

அதே கண்கள்

Friday, November 30, 2012 | 0 comments »


அவளின் பிம்பத்திற்கென
ஒரு அடையாளமும் நிறமும்
பதிவாகியிருந்தது கண்களில்

கோபத்தில் கனன்று நிற்கும் கண்கள்
குறுக்கிப் பார்க்கும் புருவம்
உதட்டசைவு என இவைகளும் அடங்கும்

பழக்கப்பட்ட இடங்களில் எல்லாம்
அவளுக்கென ஒரு நிறமிருக்கும்-அது
சுடிதார் நகச்சாயமென வேறுபடும்

காமம் தலைதூக்கும் வேளையில்
கண்மை தோள்பட்டை உலர் உதடு
கழுத்துநரம்பு என நிறங்களில் பதிவாகியிருந்தது

விபத்தில் நிகழ்ந்த மரணத்தில் விழி இடம்மாறலில்
தொட்டி மீன்களும் விளையாட்டு பொம்மைகளும்
நிறமாகிக்கொண்டிருந்தது ஒரு குழந்தையின் கண்ணில்!

உன் அருகாமையும்
அரவணைப்பும் வாய்க்காத
என் குழந்தைப்பருவத்தை

நீ மெல்ல மெல்ல மீட்டுகிறாய்

அப்பாவின் சட்டைக்கு அடித்துக்கொள்ளுதல்
சரிசம பங்கில் எனக்கென விட்டுகொடுத்தல்
கூட்டாஞ்சோறு பொங்கிவிளையாடுதலென
எல்லாவற்றிலும் என்னுடன் பிறக்காத உன்னை
பாவடைசட்டையுடுத்தி காட்சியோட்டுகிறேன்

திருவிழாக்காலம் நல்ல நாட்களென
ஏதேனும் ஒன்றில் உன்னையும் நிறுத்திவைக்கிறேன்
நீ கூறிய அறிவுரைகளையெல்லாம்
என் பால்யத்தில் பொருத்திப்பார்த்து ஏங்குகிறேன்

உன் திட்டலுக்காக ஏதேனும்
விளையாட்டாய் பேசிவிட்டு திட்டுவாங்கி
சந்தோசமடையும் மனதை பின்னோக்கி கூட்டிப்போகிறேன்
ஒரு வேளை அப்போது அடித்திருப்பேனோவென்று
பரிதாபப்பட்டு பின்பு சிரித்தும் கொள்கிறேன்

உனக்காக ஊரில் சண்டை போட்டிருப்பேனா
உன்னை கல்லூரியில் விட்டிருப்பேனா என்றெல்லாம்
என் காலச்சக்கரத்தை சுழற்றிக்கொண்டிருக்கிறேன்
என் கற்பனையின் ஊற்றுகள் வார்த்தைகளிலிருந்து தப்பி
கண்ணீருக்கு வழிவகுக்கின்றன

உன் முகமெனக்கு பார்த்த அன்றே அக்காவென
அழைக்கத்தோன்றியது ஏன் என அவ்வப்போது
வினவிக்கொள்வேன் என்னுள்
எங்கேயும் பகிர்ந்திடாதவொன்றை உன்னிடம் உரைக்க
அக்காவின் நிலை தாண்டி தாய் ஆக்கப்பட்டிருந்தாய்

அக்கா என்பவள் யாதெனில்
என்று அன்றைய பொழுதில் ஏங்கவும் வைத்து
உன் வீட்டு உடன் பிறப்பாக்கி திட்டியும்
உன் அருகாமைக்கும் ஏங்கவைத்திருக்கிறாய்

உன் சமையலின் ருசியறியா என் நாவிற்கு
அன்பினால் பசியாற்றியிருக்கிறாய்
உன் வரவு அற்ற வேளையில் பரிதவித்திருக்க
எதுவும் நடக்காதது போல பேச்சோடு பேச்சாய்
பொழுதினை நகர்த்தி சென்றிருக்கிறாய்

காற்றில் எழுதினாலும் தீரா
உன் அன்பின் சுனையை தூய ஆத்மாவை
தினம் தினம் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
சின்ன அதட்டலுடன் போனில் மிரட்டியோ
அன்பினை குழைத்தோ உன் குரலை பதிவு செய்...

இளைப்பாறிக்கொள்கிறேன் உன் பிரியத்தின் பிடியில்!


பிடிமானங்களற்று உழலும்
என் மீதான நம்பிக்கையை
நீ கொடுப்பாயென காத்திருக்கிறேன்

நிழலுக்கு ஏங்கும் என் துயர்கள்
வடிகாலமைத்து மொத்தமாய்
இரவுகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது

எவ்வளவு குடித்தும் நிரம்பாத
உன் நினைவுகளின் குருதியை
கனவுக் குழாய்கள் மேலும் உறிஞ்சுகிறது

என் யூகங்களில் ஆளும்
உன் கணிக்கமுடியாதொரு போக்கினை
மேலும் மேலும் யோசித்து வெதும்புகிறேன்

உன் அனுமதியின்றி உன்னை இம்சிக்கும்
என்னை மணிக்கட்டிலறுத்துவிடு
பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறேன்!

காரணங்கள்

Friday, November 30, 2012 | 0 comments »

அதற்கான காரணங்களை
சொல்லிவிடுவதாய் சொன்ன
உரையாடல்களை நினைவுபடுத்தவேண்டியிருந்தது

எதிர்பார்ப்புகளை தகர்ந்து காய் நகர்த்தும்

வித்தை கற்றவள் போல
என் மீது குற்றம் ஒன்றை சுமத்துகிறாள்

கோபத்தின் வாசல் நெருங்குவதைக்கண்டு
தனக்கு நிகழ்ந்த சோகம் ஒன்றினை
கண்கள் நிறைத்து பேசத்துவங்குகிறாள்

அழுதுவிடுவாளென்ற அச்சத்தில்
ஆறுதலுக்கான சொற்களை பதப்படுத்துகையில்
பிரியமில்லையென குற்றம் சுமத்துகிறாள்

ஒரு கெஞ்சலுக்கு வழி வகுத்தவளாய்
விழி நோக்குகிறாள் உடையும் நீரை
துடைப்பதற்காக நெருங்கும் கை தடுக்கிறாள்

பொழுதுகளை தின்று விட்டதாய்
மன்னிப்பு கேட்டவள் மெலிதாய் புன்னகைத்து
சகஜ நிலைக்கு வந்துவிட்டதை காட்ட மெனக்கிடுறாள்

அதற்கான காரணங்களை
சொல்லிவிடுவதாய் சொன்ன
உரையாடல்களை நினைவுபடுத்தவேண்டியிருந்தது!

கண்களை கண்களால் தின்று
காதோரக்கூந்தலை பாதம்போல பற்றி
மூச்சுக்காற்றினை நுனி மூக்கில் நனைத்து
மூடிய விழிகளில் உள் நுழைந்து
முத்தத்திற்கு முந்தைய நிமிடங்களில்

தளிர்விடும் மூன்றாம் பாலினை
அதன்பின் பகிரும் உணவூட்டலுக்கு
முத்தமென்று பெயரிடு!


காய்த்துக்கிடக்கும் காய்களை
கனிகளாக்கும் யுக்தியை
காய்களின் காம்பு முறிக்காமல்
இலைகள் தவிர்த்து
சருகுகளின் கூடாரத்தில் புதைத்து
கனியக் காத்திருந்தது
மாந்தோப்பும் பால்யமும்!


யூகங்களில் நீர்த்துப்போன
பிரியத்தின் கொடிகளை படரவிட்டு
வேரறுத்ததை புலம்பித்தீர்க்கிறது மனம்

இயலாமையிலும் பிடிவாதத்திலும்
எரிந்த சாம்பலினை
தடயம் தொலைக்க முடியாது திணறுகிறது

என்றோ நின்றுவிட்ட உரையாடல்களை
புரட்டிப்பார்க்க தூண்டுகிறது
நினைவெனும் கையேடும் நாள்காட்டியும்

பிரிவின் ஆற்றாமையை அழுதிட விரும்புகையில்
தொண்டையை கவ்விப்பிடிக்கிறது
விடைபெறுதலின் நிமித்தமாய் நிகழ்ந்த
முத்தக்குறிப்பும் முன்னறிவிப்பும்!


பிறகொருமுறை
அதிசயமாய் அழைத்திருக்கிறாயென
வினவவும் "தோணிச்சி" என்றவன்
சட்டென தொலைபேசியைத் துண்டித்தான்

மன்னிப்பு கேட்க அழைத்திருப்பனோ
திட்டுவதற்கு அழைத்திருப்பனோ
நிச்சயக்கப்பட்டிருக்குமாவென-பட்டியல்
நீண்டது இருவருக்குமான இடைவெளிவரை

தொடர்பு எண்ணை அழித்துவிட்டதாய் சொன்னவன்
எப்படி அழைத்தான்?
நானும் அழைத்துவிட்டதாய் சொன்னது நினைவில்வர
யூகிக்கும் போக்கு கடிவாளமிழந்தது

பின்பு
திருப்பி அழைத்திட வசதியிருந்தும்
மனதிற்கும் அறிவிற்குமான போராட்டத்தில்
இருவருமே வென்றோம்

அவனும் அழைக்கவில்லை
நானும் அழைக்கவில்லை

முன்னமே தீர்மானித்த இடத்திற்கு
கடந்த முறை அவள் திமிறி உடைந்த,
வளையல் துண்டுகளோடு பேசிக்கொண்டிருக்க

இரு இதழின் இணைவின் நடுவிலிருந்து

தவறி விழுந்தது நாணமும்
பிடிவாதமாய் வரவழைத்த கோபமும்

தொடுதலுக்கு அனுமதியா பார்வைவிழ
விரலோ நகநுனியில் உராயத்துவங்கியது
பேசமுடியா மொழிகளை விதைக்கத்துவங்கியது

முத்தத்திற்கு அடிபோடும் எண்ண அசைவுகளை
உதட்டில் விழிகளால் மேயவிட
சூடேறும் மூச்சினால் ஆண்மை சமைக்கிறாள்

சூரியன் சிவக்க சிவக்க பேசித் தீர்க்கையில்
கடலெனும் விழிகள் இலக்கணம் மீறி
அலையடித்தது வலப்பக்கமும் இடப்பக்கமுமாய்

வாடைக்காற்று கூந்தல் கலைக்க
முன்னும் பின்னுமாய் முன்னேறிக்கொண்டிருந்தது
கைகளும் உதடுகளும் அவள் மேனியில்!

உன் வாசனை

Friday, November 30, 2012 | 0 comments »

உன் அனுமதிக்காக காத்திருக்கும்
விழி நீரை உடைத்துவிட மெளனமோ
பெரும்சத்தமோ போதுமானதாகயிருக்கிறது

வருகையை எதிர் நோக்கியிருக்கும்

என் பேராவல்களை-நீ
கண்டுகொள்வதில்லையென அறிந்தும்,

மகள் வயிற்றுப் பிள்ளையின் முத்தத்திற்கு
கன்னம் திருப்பி காத்திருக்கும்
பாட்டியின் எதிர்பார்ப்பு போன்றது அது

கிறுக்கலுக்குத்துணியும் வேளையில்
பெயரெழுதி விளையாடும் கடற்கரையின்
பிசுபிசுப்பு ஞாபகத்தையும் அப்பிவிடுகிறது

எதிர் இருக்கையில் யாரும் வேண்டாமென
தீர்மானித்து ஒதுங்கும் தேநீர் கடையில்
நாசி துளைக்கிறது உன் வாசனை!

சாயல்

Friday, November 30, 2012 | 0 comments »

அவன் அவளுக்காக விசும்பும் பொழுதெல்லாம்
நான் என்னிடமிருந்து தப்பி
அவனுக்காக அழுது தொலைக்கிறேன்

ஒவ்வொரு நரம்புகளாய் செயலிழக்க

வார்த்தை நகங்களால் கீறிடுகிறாள்-அது
அவனுக்கும் பிடித்தமானதாய் இருக்கிறது

அடைக்கோழியின் முனகல் போல
நினைவுகள் மென்மையாய் இசைக்கிறது
பின்பு அணுஅணுவாய் இம்சிக்கிறது

செவியிழந்து வீதி அலையும்
சுயமிழந்த ஆன்மாவைப்போல
பாதையறியாது வீதி அலைகிறான்

நான்கு பக்கமும் கண்ணாடி பதித்த
துணிக்கடையொன்றின் தூண் கடக்கையில்
எனையறியாது வேகமாய் கடக்கிறேன்

அவன் என் சாயலில் இருப்பதால்!


அவளுக்குத் தெரிந்திருக்கலாம்
நேரத்திற்கு வீடு திரும்பமுடியாதென்று
கையில் பனிக்காலத்து சொட்டருடன் வந்திருக்கிறாள்

அவள் வீட்டு பூனைக்குட்டிகளின்
தலைவருடல்கள் நினைவில் வருகிறது
கைப்பையில் தொங்கும் நாய்குட்டி பார்க்கையில்

தன் காதலை அதன் முறிவை
முறையாக விடைபெற்றுச்சென்றதை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாள்

காயும் உதட்டினை நாவால் நனைத்தவாறு
பீறிட்டு எழும் விசும்பல்களை
உதடு கடித்து நிறுத்த எத்தனிக்கிறாள்

இரவுகளின் ஓலத்தை தனிமையின் கூடாரத்தை
வேண்டுதல் போல ஒப்புவிக்கிறாள்
தேவாலையத்தில் நிகழும் மன்றாட்டுகள் போல

ஒற்றை ரோஜாவும் வாழ்த்துமடலும் தருபவள்
இம்முறை பூங்கொத்து வைத்துச்ச்செல்கிறாள்
என் கல்லறையில்!

கால்களுக்குள் தவழ்ந்து
முகம் பார்க்கையில் ஏமாறும்
குழந்தையென கழிகிறது பொழுது


ஒரு பரிதவிப்பும் காத்திருத்தலும்
இன்னதென யூகிக்க முடியாத
இத்தருணத்தில் வெறுமையாள்கிறது

இருத்தலில் இருப்பு கொள்ளாமல்
உந்தித்தள்ளும் மெளனவலையில்
சிக்கிய எண்ணங்கள் நீட்சியாக

ஒரு ஊமையின் சொற்களை
கை தேர்ந்தவன் போல மொழிபெயர்க்கிறேன்
யாவும் பிழைகளாகிப்போக

ஒரு கவிதைக்கரு சிதைகிறது
மேலுள்ள வரிகளைப்போல
வலிகளைப்போல!


இரவெல்லாம் விரவிக்கிடக்கும்
பனிக்காற்றில் அவளின்
மூச்சுக்காற்று அதற்கு எதிர்பதம்

அறையெங்கும் பரவிய நினைவு விளக்கில்
தேகம் ஒட்டிய ஆடைகள்
இடைஞ்சல்களாகவும் இம்சைகளாகவும்

ததும்பும் கோப்பையின் நீரானது
தொண்டைவழி வழியாமல்
குடிப்பதற்கு பாவனை செய்கிறாள்

மேலும் கீழுமாய் போய்வரும்
தலையசைப்போடு அங்குமிங்குமாய்
பார்த்துப் பார்த்து விசும்புகிறாள்

தலையணை ஏந்திய தலையிடையே
கைமடித்து சுவற்றினில்
துவாரமிடுகிறாள் காது வழியே

எப்போதும் போல குறட்டையொலியெழ
புகைப்பட கோப்புகளை கையிலேந்தி
அழத்துவங்குகிறாள்!


வலிக்கிறது என்பதைவிட
அடியே வலிக்கிறது என்பதில்
கூடுதலாய் ஒரு முத்தம்!

நீ வேலை செய்ய கொஞ்சுவதும்
நான் திமிருவதும்
ஒரு முத்ததிற்குத்தானென
தெரிந்தே வைத்திருக்கிறது காலம்!

ரிமோட்டை கை மாற்றுவதற்கு-அவள்
பயன்படுத்தும் சாமர்த்தியத்தின் பெயர்
முத்தம்!

சமையலறைக்கும் பூஜையறைக்கும்
செல்லும் வழியில் ஒன்று கொடுப்பாயே
மறந்துவிட்டேன் என்றால்
ஹ்ம்ம்ம் என முத்தமிடுவாள்!

அதிகாலை தூக்கத்தில்
முத்தமிடுகையில் ஒரு கெட்டவார்த்தை
சொல்வாயேன பகல்பொழுதில் கேட்டால்
சிணுங்கித் தொலைக்கிறாள்!

உனக்கொரு வாய் எனக்கொரு வாய் என
ஊட்டிக்கொள்வதில்
கைகளுக்கு ஓய்வு!

அடிபோடியென அலுத்துப்போகையில் எல்லாம்
பின்னங்கழுத்திலிருந்து கைபோட்டு
முத்தமிடுவாயே
அது கவிதை!

முகம் முழுக்க பயிறு பூசியிருக்கிறாயே
எங்கே முத்தமிடுவதென்றால்
இதழை இரண்டாய் பிரித்து
சமமாய் பங்கிடச்சொல்கிறாள்!

அவசரமாய் வெளியில் செல்கையில்
குளித்துக்கொண்டிருப்பவளை அழைத்தால்
உதட்டளவு கதவு திறந்து வழியனுப்புகிறாள்!

மிளகாயை கடித்துவிட்டதாய்
தண்ணீர் கோப்பையை தவிர்த்து
இதழ்குடிப்பது அவளின்
ஊடலுக்கு பின்னதான வழக்கம்!

அப்படி என்னடி
பரணில் தேடுகிறாய் என்றேன்
எப்பவும் நீ காலையில் கொடுக்கும்
முத்தத்தை என்கிறாள்!

சேலை தலைப்பை உதட்டில்
கடித்தபடி ஊக்கு மாட்டுகையில்
முத்தமிட தோன்றுகிறதே ஏன் என்றேன்
பதிலை கண்ணாடியில் காட்டுகிறாள்!

விபத்து

Friday, November 30, 2012 | 0 comments »

தாடி குத்துகிறது என்று முத்தமிடாது
திமிறிய மகளை இன்று பார்க்கையில்
அழுகையாகத்தான் வருகிறது எனக்கு

ஈக்கள் ஆடும் சடலத்தில்

கருமமே கண்ணாய்
எவனோ ஒருவன் விசிறிக்கொண்டிருக்கிறான்

தலைக்குப்பின்னால் புகையும்
ஊதுபத்தி தீரும் போதெல்லாம் குரலொன்று
ஒலிப்பதும் கொழுத்தி வைப்பதும் தொடர்கிறது

கடைசிப்பேருந்தென தவறவிட்டவர்களெல்லாம்
நடுஇரவிலும் அழுது தூக்கத்தை,
அகால மரணத்தை விசாரிக்கின்றனர்

விடியும்வரை பொறுத்திருந்து நீராட்டி
காரியங்கள் செய்து புத்தாடையுடுத்தி
மீண்டும் அழச்சொல்லி கிடத்தியிருக்கின்றனர்

கடைசியாய் முகம் பார்ப்பவர்களையும்
வாய்க்கரிசி போடுபவர்களையும்
வெட்டியான் அழைக்க மகளுக்கு புரிந்துவிட்டது போல

ஈரம் வற்றிய என் உதட்டில்
கன்னத்தை ஒத்தி ஒத்தி எடுக்கிறாள்
எனக்கு மீண்டும் அழுகையாய் வருகிறது!


அவளுக்கான என் முதல் சட்டையும்
எனக்கான அவள் முதல் சுடிதாரையும்
அணிந்து வருவதென்பது தீர்மானிக்கப்பட்டிருந்தது

பரிச்சயமான இரயில் நிலையத்தில்
இருவரும் சிரித்து மகிழ்ந்த பொழுதினை
நினைவிலாட அவ்விடம் வேண்டுமென்றாள்

அவளோ நானோ அழுவது கூடாதென்றும்
தொட்டுப்பேசுதல் வேண்டாமென்ற
ஒத்திகையும் நிகழ்ந்திருந்தது அலைபேசியில்

கண்களைப் பார்த்தால் தன்னையிழந்துவிடுவதாய்,
இரவில் சந்திப்பதென நேரம் கூறியிருந்தாள்
ஞாபகமாய் ஏதேனும் வேண்டுமென வேண்டியிருந்தாள்

பரிமாறிக்கொண்டவைகள் யாவற்றையும்
தடம் தெரியாது தொலைத்துவிடச்சொல்லி
மூச்சுக்கொருமுறை சொல்லிக்கொண்டாள்

பயணத்தின் வழியெங்கும் கொஞ்சிப்பேசிய
எனது குறுஞ்செய்திகள் யாவையும் அனுப்பியபடி
கண்ணீர் பொம்மையை கூட இணைத்திருந்தாள்

திட்டமிடுதலில் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தேர
முன்னறிவிப்பில்லாது கலந்துவிட்ட காதலை
சபித்தபடி மடியில் சாய்ந்து கொண்டாள்

நெடுந்தூர பயணமோ கை கோர்த்தலோ
கனவுகளின் நிகழ்வுகளோ மடிந்து கொண்டிருக்கிறது
ஆதலால் முத்தமிடு என்றாள்...

இருவரின் இதழ்களிலும் நஞ்சுவாசனை!

பிணங்கள் எரியும் காட்டில்
அதன் வாடை நுகர்ந்து
குளிர்காய அழைத்துச்செல்கிறாள் நடுநிசியில்

சிதையூட்டப்பட்ட உடல்

மழையில் நனையாதிருக்க
மோடு போல போர்த்தியிருந்தது ஓடு

ஏற்கனவே சொருகி வைத்திருந்த
கொண்டையூசி எடுத்து
விரல் கிழித்து இரத்தம் பீச்சுகிறாள்

சில்லுகளாய் உடைக்கப்பட்டிருந்த
கலையத்துண்டுகள் சேகரித்து
ஒவ்வொரு சொட்டுகளிட்டு அடுக்குகிறாள்

நிசப்தம் உடைத்து
பேசச் சொல்லி கட்டளையிடுகிறாள்
நான் ஊமையென்றான் செய்கையில்

நிலவின் ஒளியில் மிளிரும்
கள்ளிப்பூவினை சூடச்சொல்லி
ஈரக்கூந்தலை காட்டி திரும்புகிறாள்

நடுங்கும் கைகளால் கேசம் தொட
மனைவியோ பதறியெழுகிறாள்
கழுத்தை இருக்கிய கைகளை பிரித்து!

நாய் அதன் குட்டிகளை
வேறிடத்திற்கு கடத்திக்கொண்டிருந்தது
மழைக்காலப் பொழுதொன்றில்


வீதியெங்கும் பிசுபிசுக்கும்
குப்பைகளும் அதன் வாடையும் மறந்து
மின்னலாய் ஈர்க்கின்றன ஈன்றகுட்டிகள்

காம்புகளை சுவைக்க எத்தனிக்கும்
கருப்பு வெள்ளை நிற குட்டியின்
துள்ளல்கள் பசியின் வெளிப்பாடு

தார் சாலைகளாலான மண் வீதியில்
இரு வீட்டுக்கான இடைவெளியோ
கதகதப்பான சூழலோ இல்லாத நெடுந்தூர நடை

கடை வாசலெல்லாம் ஆதிக்க கால்களும்
அத்துமீறல்களும் ஆக்கிரமிக்க
மனித இனத்தின் அனாதை ஆசிரமங்களும்

சிக்னலில் கையேந்தி நிற்கும் சிறுமியும்
கைக்குழந்தையின் எச்சில் வற்றிய விழுங்கலும்
நாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!


அவளுக்கான தேடலில் என்னையொரு
காரணியாக்கி சித்திரவதை செய்கிறாள்
மின்சார கம்பியில் விழுந்த பறவை போல

வீதியெங்கும் புணர்ந்துகிடக்கும்
பிம்பங்களை காணச்செய்து
இமை முடியில் கல் கட்டுகிறாள்

அவசரமென விரையச்சொல்லி
விழும் வியர்வை வாசனை பிடிக்கிறாள்
வெட்டியான் பிடியிலிருந்து தப்பிய நாய் போல

ஒரு ஓலத்தை கொண்டாடச்சொல்லி
வெடித்து சிரிப்பவள்-பின்பு
தானாய் கதறியழ துவங்குகிறாள்

தன்னை புணர்ந்தவர்களை அடையாளம் சொல்லி
கொலை செய்ய வேண்டுகிறாள்-அவளுக்கு
பார்வையில்லாதது எத்தனை செளகரியம்!

உமிழும் வார்த்தையெல்லாம்
திட்டுவதும் சாபமிடுவதும் தான்
எதிர் கேள்வியோ எதிராளியோ யாருமில்லை

அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களோ
காலை கொஞ்சம் மாலை கொஞ்சம் நேரம்
எவர் வார்த்தைக்கும் செவிமடுக்காத சுதந்திர நேரமது

ஒரு பரிதாமமோ முகசுழிப்போ
வசைபாடுதலோ இல்லாத பொழுதில்லை
இல்லத்திலோ இல்லாள் இருக்க வாய்ப்பில்லை

வெளுத்துப்போன முகத்தாடியும்
தேகப்புழுக்கம் நிறைந்த ஆடைகளும்
தனியொரு அடையாளம்

பாதையும் புலம்பலும் பழக்கப்பட்டுவிட
எல்லா காலமும் போல இன்றும்
தேநீர் இருக்கைகள் சொல்லிக்கொண்டிருந்தன

ஒரு காலத்தில் நன்று வாழ்ந்தவன்!


பின்னங்கழுத்தில் வழிந்தோடும்
நுரையோடு தவழும் சோப்பில்
அவளுக்கான அவனின் முகம்

தேகம் சுமக்கும் எலும்பில்
தொட்டுத்தொடாமல் நழுவும்
மென்விரல்களில் துரோக ஊசி

மழையென தூவும் செயற்கை
நீர் பிரிதலில் தலைதூக்கி
அவனென நினைத்து நனைகிறாள்

உதட்டில் தொட்டுவிழும்
நீர்துளிகளுக்கு சாபம் ஊற்றி
நீரை உறைநீராக்க எத்தனிக்கிறாள்

தொட்டியின் நீர் தீர்ந்தும்
நகராமல் காத்திருக்கிறாள்
முதலிரவின் கலவி முடிந்து,

தொலைத்த காதலனை நினைத்து!


பேருந்தின் பின்னிருக்கையில்
சொற்குவியலுக்கு நடுவே
லாவகமாய் தீட்டப்பட்டிருந்தது இதயம்

அதன் நெளிவுகளை உள்ளடக்கிய
வடிவமைப்பில்
எந்தவொரு கீறலும் இல்லாமலிருந்தது

கத்தியின் துணையால்
நிகழ்ந்திருக்கும் காதல் வரைவும்
ஒருசேர்ந்த தடித்த கோடும் வியப்பு

மேடு பள்ளங்கள், திடிர் நிறுத்தம்
இறங்க வேண்டிய இடம், கூட்ட நெரிசல்
நடத்துனரின் கண் தப்புதலென

ஒரு மெனக்கெடலின் தீவிரத்தை
அதீதக் காதலை தன்னை மறத்தலை
காயத்தை வெளிப்படுத்த போராடியிருக்கலாம்

அல்லது
அதன் கிழிப்புகள் நேற்றைய கொலையின்
ஒத்திகையாகக்கூட இருக்கலாம்!

ஒத்திகை-3

Friday, November 30, 2012 | 0 comments »


யாரோ ஒருவன் நிர்ணயிக்கும்
நேரத்தை அலைபேசியில்
குறித்து வைத்துக்கொண்டாள்

வலுக்கட்டாயமாய் நிகழும் விழிமூடலை
வலுக்கட்டாயமாய் கிழிக்கும்
முன்னமே பதிந்த நேரக்குறிப்பு

விழிமூடல் மட்டுமே இரவென
பாவித்துக்கொள்பவள்-தன்
பசியின் அலறலை, அவலத்தை

யாதொருவரும் கேட்டிடாதிருக்க
சாலையின் ஒரம் நிற்கும் ஓட்டுனர்
எழுப்பும் ஒலியில் ஒழித்து வைத்தாள்

மென்று துப்புவாள், கழிவில் மறப்பாள்
பேச வேண்டிய வார்த்தைகளையும்
கதறியழவேண்டிய தருணங்களையும்

படபடப்பாய் வந்தமர்ந்து
யாரென அறியாதவனோடு சிரித்து
நீளும் அப்பயணத்தில்

நேற்றைய வேலையின் முடிவினையும்
இன்றைய வேலையின் பதற்றங்களையும்
முன்னிறுத்தி முன்னேற,

மனிதம் தொலைதத கார்பரேட் உலகில்
தானும் ஒரு பிறவியாய் உயிர்ப்பிணமாய்
பத்தோடு பதினொன்றாய் BPO பெண்ணாய்!


தானும் பூப்பறிக்க வருவதாய்
அடம்பிடித்த தம்பியை
இடுப்பிலெடுத்துக்கொண்டாள் அக்கா

தட்டான்களுக்கும்
கள்ளிப்பூக்களுக்கும் அதன் பழங்களுக்கும்
மசியாத தம்பி அழுதுகொண்டேயிருந்தான்

ஆட்டுக்குட்டியின் முதுகிலமர்த்தி
கூட்டிப்போக
ரோமங்கள் உரசி மீண்டும் அழத்துவங்கினான்

தரையிறக்கி நடந்துவாவென்றால்
முள்குத்துமென
பிடிவாதம் பிடித்தான் தம்பி

ஒவ்வொரு மடியாய் பறித்துப்போட்ட
மல்லிப்பூவினை
பிய்த்து விளையாடத்துவங்கினான் தம்பி

தோட்டக்காரனின் அடிக்கும்
அன்றைய கூலியின் இழப்புக்கும் பயந்து
தேம்பி தேம்பி அழத்துவங்கினாள் அக்கா!

கானலின் நீர்குடிக்க ஓடும்
வெயில் மழையில்
இளைப்பாருதலாய்
உன் விழிகள்!

மின் வேலியில்
உயிர்துறந்த பறவையின்
இறகினையொத்த வாழ்வை
மீட்டெடுக்கும் உன் விழிகள்

விரைந்தோடும் கால்களை
நிலை நிறுத்தும்
கொடூரத்தின் எதிர்ச்சொல்
உன் விழிகள்

கடந்துவிட கடத்தப்படும்
விழிகளின்று குவியலாக
காரணம் உன் விழிகள்

எனது குறிப்புகளின்
பின்னதான புள்ளிகளில்
தொக்கி நிற்கும்
கவிதையோடு உன் விழிகள்

சன்னல்வழி
ஒளிபட்டெழும்
கைதி போல நான்
சூரியன் போல விழிகள்

நாளொருமுறை
உயிர்த்தெழும் பாக்கியத்தை
தந்திருக்கிறது-உன்
விழிகள்


எழுதுவதற்கு ஏதுமில்லா
மழைப்பொழுதில்
தூரத்திலொரு ஒப்பாரி
வேண்டுகிறது மனது!

மின் கம்பத்திலொரு
பாட்டுக்குழாயும்
தப்புச்சத்தமும் வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது!

சாலையெங்கும் பூக்களும்
புகையும் ஊதுபத்தியும்
வாடையும் வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

கலயம் உடைத்தலும்
மண்மூடுதலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

பாம்படமும்
சட்டையில்லா சேலைமூடலும்
பாட்டியின் க்தறலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

நீர் மாலையும்
சங்கு சத்தமும் சண்டிமணியும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

பச்சையோலை பந்தலும்
சவ்வாது வாசமும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

கால்கட்டும்
நெற்றித்துட்டும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

குளிப்பாட்டலும்
மயிரு எடுத்தலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

காட்சிகள் யாவும்
நான் பிணமாகி காண
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது!

மழை

Friday, November 30, 2012 | 0 comments »


ஓலைக்குடிசையும்
ஈன்ற நாயும்
வரப்பும் மண்வெட்டியும்
பனைமரமும் கசிந்த நீரும்
ஓடையும் இரைச்சலும்
சாக்கடையும் தவளையும்
கப்பலும் நனைதலும்
வீடு ஒழுகுதலும் காபியும்
மலையும் விழும் அருவியும்
வேலிப்பூக்களும் செம்மண்ணும்
புளியமரமும் தேங்கியநீரும்
குளமும் கூப்பாடும்
கிணறும் திருட்டு மாங்காவும்
இளநீரும் கெட்டவார்த்தைகளும்
பாத்திரத்தில் விழும் மழையோசையும்
ஓட்டு சட்டத்தில் கேட்கும் எலி சத்தமும்
ஓடிப்போய் அடுப்பு மூடிவரும் அம்மாவும்
தொப்பலாய் நனைந்து வரும் அப்பாவும்

இன்னும் என்னென்னவோ இப்படியாய்
இம்சிக்கிறது என் பொழுதுகளை மழை!


விடைபெறுதலின் ஞாபகார்த்தமாய்
முத்தமொன்றும்
முடிவுறா கவிதையொன்றும் கேட்டாள்

மல்லிகைப்பூவின் இதழொத்த
கரத்தினை சற்று இறுக்கிப்பிடிக்க
இதழசுழித்து பறித்துக்கொண்டாள்

பிரிதலின் நிமித்தமாய்
கொஞ்ச நேரம் பேசியிருக்க அழைக்கையில்
அழுதுவிடுவேன் என நழுவினாள்

தலை தாழ்த்தியே கிடக்கும்
முகத்தினை என்னைப்பாரென கேட்க
உடைந்து கிடந்த கண்ணீரைத் துடைக்கிறாள்

பின்னெப்பொழுதாவது அலைபேசியில்
பேசுவதற்கு சம்மதிப்பாயவென கேட்க
என்னை விட்டுடாவென கெஞ்சத்துவங்கினாள்

காத்திருப்பின் இடைவெளிகள் தீர்ந்துவிட,
வந்து சென்றவளின் ஒருவரிக்கவிதை
அவள் என்பவள் எண்ணத்தில் அடங்காதவள்!

மழை!

Monday, October 29, 2012 | 0 comments »

விளக்கொளியில்
மழை அழகு

ஓலைக்குடிசையில்
விழுந்தோடும் மழையோசை

மெல்லிசை!

வேலியோர செடிகொடிகள்
நின்றாடும் மழையில்
அழகு!

சடசடவென கலையும்
பறவைகளின் இறக்கையடிப்பு
மழையின் பின்னணி இசை!

துணிகாயும் கயிற்றில்
அவிழ்க்காத வெள்ளை ரிப்பன்
மழையில் அழகு!

ஈக்களால் இம்சிக்க
தலையசைக்கும்
மாட்டின் மணியோசை
மழையில் அழகு!

தாய்க்கோழியின்
இறக்கை கதகதப்பில்
குஞ்சுகளின் முணுமுணுப்பு
மழையில் மழலை மொழி!

இலைகள்
தேக்கி வைத்திருக்கும்
மழைப்பூக்கள்
உதிர்க்கையில் அழகு!

கருவேப்பிலை மரத்தில்
நனையும் குயிலின்
சிகப்பு கண்கள் அழகு!

நீ வருவதாய் சொல்லியிருந்த
தேதியினை நாட்குறிப்பின்
பக்கங்களில் தேடுகிறேன்

சின்ன சின்ன கட்டங்களாய்

கட்டங்களுக்குள் குறிப்புகளாய்
மாதத்திற்கு ஒரு பக்கம் கொண்ட

நாட்குறிப்பு அது! அதில்
உன் வருகைக்கான அடையாளமானது
இதயவடிவில் குறிக்கப்பட்டிருக்கிறது

இதயமோ
வெவ்வேறு வடிவங்களை கொண்டதாய்
மனநிலையை சித்தரிப்பதாய் இருக்கிறது

அம்பு தோய்த்து, அம்பு இல்லாமல்
குருதி வடிந்து, இதய அளவில் கிழித்து
ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு மனநிலை

கண்கள் தீட்டப்பட்டிருக்கிறது
உதடுகள் வரையப்பட்டிருக்கிறது
ஒற்றைக்காதும் கூந்தலும் வரையப்பட்டிருக்கிறது

அழுக்கேறிய
கைரேகைகளின் அழுத்தம் தெரிகிறது
துளித்துளியாய் நீர்பட்டு தன்மையிழந்திருக்கிறது

நல்லவேளை நீ வரவில்லை...


வார்த்தைகளற்ற பொழுதுகளில்
புறக்கணிப்பில் இழந்த சுயத்தை
மீட்பதற்கு தயார் படுத்துகிறேன்

நெஞ்சோரம் கூடுகட்டி நகம்கீறி
வலியுணர்த்தும் நேசப்பறவைகளின்
எண்ணிக்கை கூடுவது கண்டு

வற்றிய குளத்தில் விழும் ஒளியால்
செதில் செதிலாய் பிளப்பது போல
பிம்பங்கள் பட்டுப்பட்டு வெடிக்கிறேன்

கானலின் நீர் குடித்து தாகம் தீர்த்திட
அலையும் பாலைவன தேகத்தை
குளிக்க தயார் படுத்துகிறேன்

புள்ளிகளாய் விழும் துளிகளின் துவாரங்கள்
கள்ளிச்செடியின் கூரிய முட்களாய்
உடல் தொட்டு உயிர்குடிக்க

இயலாமையின் அறியாமை கண்டு
தடுமாறும் உதடுகள் வார்த்தை உதிர்க்காமல்
புன்னகையால் தையலிடுகிறேன்!


எப்போதும் சிரித்துக்கிடக்கும்
உதட்டின் ஈரப்பசையை அதன் நேசத்தை
புகைப்பட கோப்புகளுக்குள் தேடுகிறேன்

எதிலும் அடைபடாத நிகழ்வுகளை,
நினைவுகளை, அடுப்படியிலிருந்து
அழைக்கும் குரலோசையை கேட்கிறேன்

உணவருந்தலில் வாங்கிச்செல்லும்
கடைசி வாய் சோற்றில் மிஞ்சிய
விரலின் சுவை வேண்டுகிறேன்

தாமதத்தின் நிமிடங்களில்
போர்தொடுக்கும்
விழிகளை வருடிக்கொடுக்கிறேன்

ஒவ்வொரு மழையிலும்
நனைய அழைக்கையில் வைத்துக்கொள்ளும்
முகபாவனையை சுவர்களில் காண்கிறேன்

கடந்து வந்த நாட்களிலெல்லாம்
ஒன்றாய் வாழ்ந்துப்போன
கடந்த காலத்தில் குடியிருக்கிறேன்

எச்சில் பதியாதொரு முத்தத்தை
ஊர்கூடி கிடத்தியிருக்க,
அனுமதியின்றி எடுத்த நாளின்றில்

புறக்கணிப்புகளிலிருந்து வெளியேர
நிகழ்காலம் அறியாதிருக்க,
உன்னுடனான வாழ்வு வேண்டி மண்டியிடுகிறேன்!


தொட்டில் விழிமூடலின்
இரண்டாம் ரசிகை

சம்மணமிட்ட காலில்
சுமக்கும் கருவறை

அன்பின்
முத்தமொழி

திண்ணையின் நுனியில்
நிற்கும் காவல் தெய்வம்

தூக்கி சுமக்கும்
இடை தாங்கி

தத்தி தத்தி நடப்பவனுக்கு
நடைபயிற்சி

பசியறிந்து
உணவூட்டுபவள்

சேமிப்பின்
அர்த்தம் விளக்குபவள்

தவறுகளின்
மன்னிப்பு

தேவைகளின்
தூதுவர்

காதலின்
முதல் பகிர்வு

இச்சையின் அபத்தம்
உணர்த்துபவள்

சட்டை பையின்
ரூபாய் நுழைப்பு!

தாயின்
இரண்டாம் மூச்சு

தன் சிறகு அறியாத
இரு கூட்டுப்பறவை!

மழை...

Monday, October 29, 2012 | 0 comments »


நீ
காக்காகடி கடிக்கவும்
ஒரு மழை
தேவைப்பட்டிருக்கிறது....
ஒரு சாக்லேட் இரண்டு துண்டுகளாய்

நீயோ மழை நிற்காதாவென
புலம்பினாய்
மழை நின்றுவிடக்கூடாதென
வேண்டினேன்
நல்லவேளை மழை நின்றும்
என் கைவிடவில்லை நீ!

சுடிதார் நனைவதாய்
தோள்பற்றி பின்சென்றாய்
உன் தேகச்சூட்டினை
பொழிந்தது மழை!

நனைந்துவிடாமலிருக்க
என்னிடம் விட்டுசென்ற
நோட்டினை
இரவுமுழுவதும் புரட்டிவிட்டேன்
பக்கமெல்லாம் நீ!

நனைந்திடவும்
மழை கண்டு ஒதுங்கிடவும்
துணைக்கு நீ வேண்டும்
நாய் தன் குட்டிகளை காப்பதுபோல!

நேரம் கடந்துவிட்டதாய்
நகம் கடித்துக்கொண்டிருக்கிறாய்
பிறை நிலாக்களே
மழையானதாய் எண்ணமெனக்கு!

இனி எப்போதும் நனைவதிற்கில்லை
உன் துப்பட்டா துவட்டலில்லா
மழைத்துளிகள் பாரமெனக்கு!

கடைசியாய் விட்டுச்சென்ற
முத்த சத்தத்தை தேடியலைகிறேன்
மழையின் ஓசையில்

நனையலாமா என்று கேட்ட
உன் அனுமதியில்
பெய்யத்துவங்கியது காதல்!


இருளை மட்டுமே யாசிக்கும்
என் விழிகளை
என்ன செய்வதாய் உத்தேசம்...

கேட்கும்திறன் தொலைக்க விரும்பும்
என் காதுகளை
என்ன செய்வதாய் இருக்கிறாய்...

ஓ நினைவுகளே!

காலை
மாலை
இரவு
என்ற கூட்டிற்குள்ளிருந்து

நக இடுக்கில் ஊசி நுழைத்து
தசையறுத்து
மெது மெதுவாய் வலி பழக்கி

தேன் கூட்டினில் நூல் நுழைத்து
தேன் எடுப்பது போல
எனையறியாது எனையிழக்கசெய்தாய்

வரமும் சாபமுமாயிருந்த
பசி மறக்க செய்தாய்
தூக்கம் மறக்க செய்தாய்

திரளும் மேக உருவம்
மழையின் கருணை
அணைப்பின் வெதுவெதுப்பு

யாவற்றையும் தின்றுகுவித்து
கண்களின் வழியே
எல்லா பொழுதிலும் ஜீரணிக்க செய்தாய்

வாழ்தலுக்கான நிர்பந்தமின்றி
சுமந்துத்திரியும் உயிருக்கான உடலோ
உடலுக்கான உயிரோ

என் பிடிமானத்திலில்லா
என்னை, உன்னிடம்
மண்டியிட தயாராகயிருக்கிறேன்

கொன்றுவிடு
அல்லது
தற்கொலைக்கு பயிற்சிகொடு!

மழை

Monday, October 29, 2012 | 0 comments »

தரைவிரிப்பில் கால் தேய்த்து
முணுமுணுத்தாள்
மழை

சேலை நனைத்த

மழையுதறி,
விடும் நீள்மூச்சு
மழை!

சாளரம் ஒதுக்கி
சன்னலில் இடம்பிடித்தாள்
மழை

பருகாத கோப்பையின்
ஆவியின் வெதுவெதுப்பு
ரசித்தாள் மழை

முடிந்துவைத்த கூந்தலை
தோள்பரப்பி விட்டிருக்கிறாள்
மழை

உலர் உதட்டினை
இதழால் ஒத்தடமிடுகிறாள்
மழை

கொடி நனையும்
துணியெடுக்க சிட்டாகிறாள்
மழை

சன்னல் கம்பியின்
அடிவருடுகிறாள்
மழை

யாருக்கோ
முத்தமிடுகிறாள்
மழை

கரடி பொம்மையின்
கூந்தல் வருடுகிறாள்
மழை

படிக்காமலே
புத்தகத்தின் பக்கம் புரட்டுகிறாள்
மழை

சட்டென
அழத்துவங்குகிறாள்
மழை

கண்ணாடி பார்த்து
சிரித்துக்கொள்கிறாள்
மழை

அடுப்படியில்
கொரிக்கத்தேடுகிறாள்
மழை!

மெளனம் திரட்டி
மனதிற்குள் இசைக்கிறாள்
மழை

கழுத்து சங்கலியை
கடிக்கக் கொடுக்கிறாள்
மழை

கால்மடக்கி
மூட்டுகூட்டி
நாடி பதிக்கிறாள்
மழை

கொலுசின் திருகாணி
கழற்றிவிளையாடுகிறாள்
மழை

அலைபேசி பதிவு எண்களின்
தேடல் தீவிரப்படுத்துகிறாள்
மழை

நனைவதற்கான ஒத்திகையில்
தனையறியாது அழுதுவிடுகிறாள்
மழை

நினைவுகளின் துயரறுத்து
கண்விழிக்கிறாள்
மழை

தெருவிளக்களின் மஞ்சளில்
ஆறுதலடைகிறாள்
மழை

ஒவ்வொரு துளியாய்
உள்ளங்கையில் உடைத்துவிடுகிறாள்
உள்ளுக்குள் உடைந்துவிடுகிறாள்
மழை

ஏமாற்றத்தின்
பிழை அலசுகிறாள்
மழை

மொழியின்
வார்த்தை தொலைக்கிறாள்
மழை

விட்டத்தின்
சிறை உணருகிறாள்
மழை

தெருநாய் ஒன்றின்
அடைக்கலம் கண்டு
விசும்புகிறாள்
மழை

தனித்து நிற்கும்
மதில் பறவையில்
தன் சாயல் காண்கிறாள்
மழை

மழை நனையும் குழந்தையை
தாய் அதட்டும் குரல் கேட்டு
வெடித்து அழுகிறாள்
மழை

அப்பாவின் சட்டையில்
அக்குள் வாசனை தேடுகிறாள்
மழை

நீ...

Monday, October 29, 2012 | 0 comments »

எழுதப்படாத
கவிதை
நீ

முடிவில் தொடரும்

காற்புள்ளி
நீ

சொல்ல மறுக்கும்
காதல்
நீ

வாக்கியத்திற்குள் அடங்கா
அகராதி
நீ

சொற்கள் தேடும்
கற்பனை
நீ

விளக்கிடமுடியா
பொருள்
நீ

மழையாடும் மழலையின்
புன்னகை
நீ

கவிஞன் எழுத மறுக்கும்
கவிதை
நீ

கேள்வி கேட்கத்தூண்டும்
விளக்கவுரை
நீ

முகவரி மறக்க செய்யும்
தேடல்
நீ

மடல்கள் தீர்ந்தும்
முடியா சொற்றொடர்
நீ

யுத்தமிட தூண்டும்
போர்களம்
நீ

மெளனம் கலைக்கும்
வெண்புரவி
நீ

படிக்கட்டுகளின்
காத்திருப்பு
நீ

கைக்குள் அடங்கிடாத
அழகிய திமிர்
நீ

சாபம்

Monday, October 29, 2012 | 0 comments »

ஏதுமற்றதாய்
உணரும் தருணங்களில்
தீர்ந்துபோன பவுடர் டப்பாவிற்குள்

கரைந்துபோன கண்மை

பென்சிலை நுழைத்து
அறையெங்கும் ஒலிக்கச்செய்கிறாள்

சாதகமாய் காட்டி நிற்கும் கன்னம்
உதட்டோடு உதடு முத்தம் என
எதுவும் வாய்க்காத இரவுகளில்

தன் குட்டிகளை தொலைத்த
பூனையாய்
அறைக்குள் உலவுகிறாள்

தலையணையின் நுனி அதனை
விட்டு விட்டு கடித்து இழுத்து
ஏதுமற்றதன் எண்ணம் சுவைக்கிறாள்

அழுகைக்கான காரணமின்றி
எப்படி அழுகிறேனென
கண்ணாடில் பிம்பம் உடைக்கிறாள்

குளத்து மீனை கவ்விச்செல்லும்
பறவை போல
எதிர்பாராத விபத்தொன்றிற்கு காத்திருக்கிறாள்

அது மரணமாகயிருக்கலாம்
சுயநினைவினை தொலைக்கலாம்
எதிர் வீட்டுக்குழந்தையின் முத்தமாகயிருக்கலாம்

அல்லது

நேற்றைய கனவில்
ஒரு வாய் சோறுட்டிப்போனதாய் சொன்ன
பிறக்காத பிள்ளையின் பெயர்சூட்டுவிழாவாகயிருக்கலாம்!


பிறகு எப்பொழுதாவது
மழைக்கான அறிகுறி தெரியும்போதே
தகவல் சொல்லிவிடு

உன்னை வந்தடைவதற்குள்
மேகம் கலைந்து
மழை பொய்த்துவிட நேரிடலாம்

ஒரு கோப்பை தேநீர் கொடு
மெல்லிசை ஒன்றை இசைக்கவிடு
சற்று நேரம் காத்திருக்க வை

காத்திருக்க வைத்ததற்காக வருத்தம் கொள்
பரவாயில்லையென்றதும் புன்னகை செய்
அப்புறமென்று உரையாடல் துவங்கு

ஈரக்கூந்தலை எதிரில் நின்று
நீர் உலர்த்து
சாரலில் நனைந்து கொள்கிறேன்


என் ரேகைகளுக்குள்
ஒளித்து வைத்திருந்தேன்
கனவுகளையும் கற்பனைகளையும்

நிமிடத்தில் நிகழும் விழிப்பேச்சு
நடுநிசிவரை நீளும் உரையாடல்
இருவர் அறியாமலும் உறங்கிப்போதல்

எது எது என்னவென நீண்ட பட்டியலில்
நீ சிறு புள்ளியாகவுமில்லை
புள்ளியில் பிம்பமாகவுமில்லை

வடிவமற்ற என் உணர்வுகளை
அர்த்தமற்ற பல இரவுகளில்
பொருத்தியிருக்கிறேன் நீ இல்லாததால்

உன் வருகைக்குப்பின்னதான
என் கனவுடைத்தலில்
நீ மும்மரமாயிருந்தாய் முனைப்போடிருந்தாய்

உனக்கும் எனக்குமான உறவின் பெயரினை
மாங்கல்யமாய் குங்குமமாய்
ஊராருக்கு காட்டிக்கொண்டாயே அன்றி எனக்கோ

நீ வந்ததில் சந்தோசமுமில்லை
நீ சென்றதில் வருத்தமுமில்லை

அந்தாதி

உரையாடல்

திருட்டு

மொழியில்லா
உரையாடல்

அவசரகால
சிகிச்சை

தற்காப்பு கலை

சண்டைக்குபின்
உடன்படிக்கை

குற்றத்திற்கான
ஒப்புதல் வாக்குமூலம்

புரிந்துணர்வின்
அடுத்தகட்டம்

உடலியல்
ஆராய்ச்சி

இருவருக்குமான
சமபங்கு

கலவிக்கான
வழிகாட்டி

காதல் எனும்
விளக்கு

காமத்தின்
தீபம்

கூடலில்
முதல் பந்தி

விழிப்பூட்டு
இதழ் சாவி

முற்றுப்புள்ளியில்
தொடங்கும் காற்புள்ளி

காரணங்கள்

Monday, October 29, 2012 | 0 comments »


என்னை ஞாபகமிருக்கா
என கேட்பதில் நியாயமில்லை
ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தாள்

அனிச்சையாய் அவள் பார்வை
விழுந்ததாகவேயிருக்கட்டும்
அது எனக்கானதென ஒரு எண்ணம்

எதிர் எதிரிலோ அருகிலோ
இல்லாமல் நிகழ்ந்த பார்வையது
இருப்பினும் கண்களில் விழுந்தது

பார்வையானது எதிர்பார்ப்பையோ
பதற்றத்தையோ கொண்டதாக இல்லை
அது ஒரு குழந்தைக்கு ஒப்பானது

யாரோ அழைத்தது போலவோ
அல்லது-எவரின்
செய்கையோ திரும்ப தூண்டியிருக்கலாம்

இன்றும் அப்படியே நிகழ்ந்திருக்கலாம்
அல்லது மேற் சொன்னகாரணங்கள்
ஏதேனும் பொருந்திப்போகலாம்!

ஒத்திகை-2

Monday, October 29, 2012 | 0 comments »

அன்றைய இரவு ஆட்டத்திற்கான
ஊரினை வந்தடைந்து கடவுளை வணங்கியதும்
ஒருமுறை மேடையை சரிபார்த்தல்


ஊர் தலைவன் விழா நடத்துபவன்
தன் குழுவை அழைத்து வந்தவன்
கோயிலின் சிறப்பு அறிந்துகொள்ளுதல்

கருஞ்சிவப்பில் உதட்டுச்சாயம்
எந்த நிலையிலும் அவிழாத வட்டக்கொண்டை
தற்காலிகமாய் மூடிக்கொள்ள ஒரு சால்வை

மஞ்சள் விளக்கின் சூட்டில்
கலைந்து போகாத முகச்சாயமும் பவுடருமும்
அவர் அவர் தலைக்கு தோதுவான கரகம்

தொப்புளுக்கு கீழே குட்டைப்பாவாடை
மார்பு தூக்கி நிறுத்தும் ரவிக்கை
இரத்தம் கட்டுமளவிற்கு சலங்கைகட்டு

சாராயமும் பணமும் தருவதாய்
இருபெண்களில் ஒருத்தியை ஊரிலொருவன்
இரவிற்கு விலை பேசுபவனை வழியனுப்புதல்

மனைவியாவோ அல்லது தங்கச்சியோ
தன்னோடு ஆடுபவளின்
உறவுமுறையை அவ்விரவிற்கு மரணிக்க செய்தல்

இறுதியாக
கரகாட்டத்திற்கான மேடையேறும் முன்
பூமி சுடும் பெண்களின் கடைசி சொட்டு மூத்திரம்!

மெளனம்

Monday, October 29, 2012 | 0 comments »


தொலைந்து போன
பகல் பொழுதின் நிகழ்வுகளை
துளை மிகுதியான சல்லடையொன்றில்

பருவப்பெண்ணின்
வருடல் போல கனா கண்டபடி
பின்னோக்கிப்போனால்

கனவில் மிதத்தல்
கூட்டத்தில் சத்தமாய் சிரித்தல்
சிந்திப்பது போல் பாவனை செய்தல்

பாடல் ஒன்றினை முணுமுணுத்தல்
அழைப்பிற்கு காத்திருத்தல்
நெருங்கியவரிடம் முகம் சுளித்தல்
சட்டென முகம் வாடிப்போதல்

ஒரு இயந்திரத்திற்கு
ஒப்பீடாய்போன மனதினை
கொன்றொழித்தலோ தீர்வு தேடியலைதலோ

மெளனத்தில்
குழம்பித்தொலைப்பதைவிட
என்ன செய்வதென்று ஏதும் செய்யாமலிருப்பதைவிட

அறியா பிணம் ஒன்றிற்கு
ஈ ஓட்டி நேரத்தை கடத்தலாம்!


முடிந்ததைப்பற்றி
பேசி எதற்கு என்கிறாள்
புருவமிரண்டையும் குறுக்கியபடி

முணுமுணுப்பு அடங்காதவளாய்
கடிந்து கொண்டாள்
கையுதறி நடக்கத்துவங்கினாள்

முத்தமென்பது ஒருவரால்
நிகழ்த்தப்படுவதில்லையென்றேன்
"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை என்கிறாள்"

உதிர்ந்த சோளத்தின்
தட்டை நிறத்திலிருந்தது
கருவிழி மிஞ்சிய பகுதிகள்

எதார்த்தமாகவே

எந்த நேரத்திலும் உடைவதுபோல
தேங்கியே இருந்தது விழிகளில் நீர்

அந்த கண்களுக்கு பேசவோ
சிரிக்கவோ உணர்வுகளை உதிர்க்கவோ
தெரியாதது போலவேயிருந்தது

உணவுக்கு அமரும்
கோயில் மரத்தடியின் குடிநீர்குழாய்
பார்த்தபடி வெறித்திருந்தது கண்கள்

சொட்டு சொட்டாய் நிறையும்
தண்ணீர் பாட்டிலுக்கும்
உணவருந்தும் காலத்திற்கான இடைவெளியில்

அமைதியுற்றிருந்தது அவரின்
ஜவ்வுமிட்டாய் விற்பனைக்கான
சமிக்ஞையொலி!

துரோகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவினை பட்டாம்பூச்சியென
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்
என் மனமெனும் பேரேட்டில்

சன்னலயே சார்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிக்கு சாளரங்களின்
உரசல்கள் ஏனோ பிடிப்பதேயில்லை

சாலையை நோக்கி விழித்தேயிருக்கும்
கண்களில் விழும் பிம்பங்கள்
புழுவென நகர்ந்துகொண்டேயிருக்கின்றன

எச்சில் விழுங்குவதையோ உமிழ்வதையோ
எக்கனமும் விரும்புவதேயில்லை
சிலைபோல பாவித்துக்கொள்கிறது

வெயில் பொழியும் பொழுதில்
துணையிருக்கும் கரடிபொம்மையின்
ப்ருத்தி மயிரை வருடிக்கொண்டேயிருக்கிறது

அறை,உடை, கண்ணாடி,
மாதவிலக்கு துணியென அப்பட்டாம்பூச்சி
சதா இம்சித்துக்கொண்டேயிருக்கின்றது

துரோகம் ததும்பும் வேளையில்
கொன்றுவிடலாமென்றால்
உடலென்பது உடல் மட்டுமில்லையே!

ஒத்திகை

Monday, October 29, 2012 | 0 comments »


விந்துக்களின்
பிசுபிசுப்பினை விரும்பாதவள்
யோனியடர்ந்த மயிரினை நீக்கியிருந்தாள்

இதழ் சுவைப்பதையோ வாய்ப்புணர்ச்சியோ
விரும்பாதள் உதட்டுச்சாயத்தில்
தன் வெறுப்பை ஒழித்துவைத்தாள்

உடலையிறுக்கும் ஆடையினை
பலமுறையுடுத்தி தசைகள் பிதுங்குவதை
ஏற்றுக்கொள்ள ஆயத்தமானாள்

ஒரு கோப்பை மதுவருந்தி
சுயம் தொலைத்து
கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டாள்

ஆளுக்கேற்ற விலை நிர்ணயத்தின்
லாவகம் கற்றதை
மீண்டுமொருமுறை நினைத்துக்கொண்டாள்

பிரம்புகளின் வீச்சில் களிம்பு பூசி
அழுததன் அடையாளம் அறியாதிருக்க
முகம் கழுவி வர்ணம் பூசிக்கொண்டாள்

கடைசியாய் நீளப்படத்தின்
காட்சிகளை விழிகளில் வழியவிட்டு
குடும்பத்தை, தோழிகளை கண்களில் நிறுத்திக்கொண்டாள்

சீறுடை மறந்த சிறுமியவள்
வீதியிறங்கி
தொழிலுக்கு ஆயத்தமானாள்!


சோழியுறுட்ட துவங்கியிருக்கிறாள்
விழிகளாலும் விரல்களாலும்
என் வீட்டுத் திண்ணையில்

கட்டம் கட்டமாக நகரும்
வலையோசையும் சிணுங்கல்களும்
அவளின் உடைந்த வளையல்களும்

என் கோட்டையை கடக்க நேருகையில்
திருவிழாக்கால கோபுரமாகிறது
வளையல்களின் குவியல்கள்

வெட்டுப்பட்டு வெளியேறுகையில்
பற்களுக்கு கடிக்க கொடுக்கும்
கீழுதட்டில் தொக்கி நிற்கும் மீண்டுமொரு தாயம்

விளையாடுவதில் சோர்ந்தவளாய்
பக்கவாட்டில் கால்நீட்டி மடக்கையில்
வந்து போகும் கொலுசும் நெட்டிமுறிப்பும்

அள்ளி முடியும் கூந்தலும்
சட்டென தொடையில் கிள்ளிவைத்தலும்
ஆட்டம் கலைவதற்கான சமிக்ஞைகள்

பாதியில் கலைந்து போறவளை
பந்தயம் என்னவாயிற்று என்றால்
அப்படி அந்த முத்தத்தில் என்னயிருக்கிறது என்கிறாள்!

கோடை நிலவு

Monday, October 29, 2012 | 0 comments »

நீ தனித்துவிடப்பட்டிருப்பதாய்
என் தீவு மூங்கில்கள்
கூட்டமாய் வந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன

ஆடை சூழாதிருக்கும் அங்கத்தினை

குறிப்பெடுத்து சொல்லிப்பார்க்கின்றன
தொழில் பழகும் தையல்காரன் போல

கிளையொடித்து சாறுபிழிந்து
என் இரு கைகளிலும்
குறிப்பெழுதி செல்கின்றன

பறவைகள்கூட உன்னைப்பற்றித்தான்
பாடுகின்றனவென்றும் அதன்மொழி
தங்களுக்கு புரிவதாகவும் இம்சிக்கின்றன

அந்த கடலைப்பார்
உன் மேலுள்ள மோகத்தில்
அங்குமிங்குமாய் அலைகிறது என்கின்றன

மனிதர்களின் மொழியறியா இயற்கைக்கு
எப்படி புரியவைப்பேன்
குளிப்பது கோடை நிலவென!


ஓங்கிய காற்றில்
பசையறுத்து விடுபடும்
இளம் தளிரின் வலி

தூண்டிலில்
சிக்கிக்கொள்ளும்
மீன் தொண்டையின் தவிப்பு

கைவிடப்பட்டு
வேலி தாண்டிய
படர்ந்த வேரின் துயரம்

பலியிடப்படும்
சேவல் தலையறுப்பின்
துடிதுடிப்பு

பாலில்லா மார்பில்
நாக்கு உலரும்
குழந்தையின் பரிதவிப்பு

தெருக்குழாயில்
நீர் உறிஞ்சும்
சிறுவனின் ஏமாற்றம்

குஞ்சோடு
கூட்டைத்தொலைத்த
பறவையின் தேடல்

ஊசிக்காற்றில்
மூடிவிட கைகள் தேடும்
முதியவரின் ஏக்கம்

வற்றிய சேற்றில்
மறிக்கும் தாமரையின்
போக்கின்மை

கருக்கலைந்த
தாயின் மனதளவு
மரண ஒத்திகை!


பிரிவுக்குப்பின் நிகழ்ந்த
நேற்றைய இரவின் கோடுகிழிப்பில்
குருதியெங்கும் உன் வாசனை

அன்றொரு நாள் உனையறியாதெடுத்த
வியர்வை வாசம் நிறைந்த
கைக்குட்டையின் பின்புலத்தினை

விழி நீர் துடைக்கையில்
மார்பினில் விழுந்த
ஒரு சொட்டு இரத்தம் இம்சிக்கிறது

ஒரு முத்தத்திற்காக
நெருங்கித்தோற்ற பேருந்துபயணமன்று
பயணச்சீட்டின் பின் குறிப்பில்

நீ ஒட்டி வைத்த சுயீங்கம்
என் உளறல்களை
தற்காலிகமாய் நிறுத்திக்கொண்டது

இரவுகளில் தொலையத்துவங்கும்
என் மீதான என் பற்று
உன் நினைவுகளில் ஆறுதலடைகிறது

எங்கேனும் உனை காண நேர்ந்தால்
அயல் தேசத்து பறவைப்போல
அருகிலமர வரம் வேண்டுமெனக்கு!


கற்பனையின்
பிம்பமொன்றை
காதலிக்கத்தொடங்கியிருக்கிறேன்

எனக்கான வடிவில்
எனக்கான சுயத்தில்
எனக்கான பொழுதுகளில்

விரோதம் விருப்பம்
இன்பம் துன்பம்
காதல் காமம் என

ஒரு கோப்பை தேநீரோடு
கட்டிலில் தலையணையோடு
குளியலரையில் சோப்போடு

எவனோ ஒருவன்
ஆக்கிரமிக்கத்துவங்கியிருக்கிறான்

வெயிலுக்கான குடைபிடித்தலில்
மழைச்சாரலில்
அடுப்படியில்

அவன் என்னை
திண்ணத்துவங்குகிறான்

முத்தமிடுகிறான்
தவிக்க வைக்கிறான்
புணருகிறான்

தொடு உணர்வு இல்லாமலே
தொந்தரவு செய்கிறான்

அவன் வாசனை தேடுகிறேன்
அவன் மடிக்கு ஏங்குகிறேன்
தரையில் புரள்கிறேன்

இருக்குமிடத்திலிருந்து
கானகம் அலசுகிறேன்
மின்னலின் கீற்றாய் உள் நுழைந்தவனைத்தேடி


அவனை கொலை செய்ய
நெருங்கும் வேளையில்
வெளிப்படும் குரலோசையை

அழுகையில் கெஞ்சும் பொழுது
பயத்தில் அலறும் பொழுது என
முன்னமே யூகித்து வைத்திருந்தேன்

தாக்க துணிந்து கத்துவதையும்
உதவி கேட்டபடி ஓடும் பொழுதும்
எப்படி சிரிக்க வேண்டுமென

நிசப்தம் நிறைந்த பொழுதில்
கண்ணாடி முன்னின்று
சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டேன்

தூக்கம் தொலைந்த
இரக்கமற்ற சாமத்தில்
உயிரற்ற உடலை காண்கிறேன்

அகால மரணமென்ற செய்தியில்
அவன் புகைப்படம் பதித்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்

அவனைக்கொன்றதற்காக
அழுது கொண்டிருக்கிறேன் தூரத்திலொரு
பாதிரியாரின் வாசகம் கேட்டது

கர்த்தரே எங்கள் பாவங்களை மன்னியும்!

என்னை சாகச்சொல்லி
எவனோ ஒருவன் உள்ளிருந்து
தூண்டிக்கொண்டேயிருக்கிறான்

உயிரின் வடிவமானது

இரத்த நிறத்தில் வேண்டுமா
துடிதுடிப்பில் வேண்டுமா என்றால்

நீ சாகவேண்டும்
அவ்வளவே என்கிறான்
நான் மட்டும் கேட்கும் குரலில்

துயர் மிகுந்த பாடலையோ
வரியில்லா இசையோ
அமைதியோ விரும்பவில்லை அவன்

ஒரு குறிப்பெழுதவும்
அனுமதிக்க மறுக்கிறான்
குரல்வளையில் அமர்ந்திருக்கிறான்

எங்கே உடைந்துஅழுது
நான் மீண்டுவிடுவேனோ
என்ற பெரும் அச்சம் அவனுக்கு

இருளை வெறுக்கிறான்
வெளிச்சம் தவிர்க்கிறான்
மின்விளக்கின் சூட்டில் தவிக்கும்

நிறமிழந்த பட்டாம் பூச்சி ஒன்றின்
துடிப்பை அதன் இறக்கை அசைப்பை
சாகும் விதத்தை ரசிக்கிறான்

அறையின் சூட்டில் நனையும்
உடலை நள்ளிரவில் நீர் நனைத்து
கொன்றுவிட துடிக்கிறான்

யாரும் பேச்சு கொடுத்துவிடாதிருக்க
எப்போதும் இனம் புரியா
துயரத்திலமர்த்தி ரசிக்கிறான்

புத்தக திறப்போ கண் மூடலோ
நிகழ்ந்திடாதிருக்க
இரவெல்லாம் கவனமுடன் இருக்கிறான்

இயற்கையை ரசித்துவிடுவேனோவென்று
பெரிதும் அச்சம் கொண்டு
என் கால்களை கட்டிப்போடுகிறான்

கனவுகளின் எண்ணிக்கை கூட்டுகிறான்
அது நிகழ்ந்திடாதிருக்க துன்பமுற
சிந்தனை சித்தரவதை செய்கிறான்

அடிக்கடி பெருவிரல் கட்டு நடனமென
கண்முன்னே நிறுத்துகிறான்
ஒப்பாரி கேட்க செய்கிறான்

பாதையில்லா பயணத்தை
காட்சிகளாக்குகிறான்-நான்
எங்கோ நடப்பது போல காட்டிக்கொல்கிறான்

என் பலவீனம் தேடுகிறான்
விலங்குகள் மீது மட்டும்
இரக்கமுள்ளவனாய் இருக்க செய்கிறான்

கண்ணாடி பிம்பம் உடைத்து
முகத்தை ரசித்திடாதிருக்க
எல்லா காலையும் துயர் ஏற்றுகிறான்

புழுக்கள் நெழியும் உடல்
சிதைந்த மாலை நாறும் ஊதுபத்தி
யாவும் மழையில் வேண்டுமென அலைகிறான்

எதற்கும் இணங்க மறுக்கிறான்
மதுவோ மாதுவோ ஒரு கோப்பையில்
தாகம் தீர்ப்பவன் போலில்லை

அவனுக்கு நான் சாக வேண்டும்
செல்லரித்து செல்லரித்து
தினம் தினம் சாக வேண்டும்


நிலவின் நிறமொத்த-அவள்
பாதம் விளையாடும்
ஞாயிறு பொழுதுகளில்

அறைகளின் பளிங்குகளில்

ஊஞ்சலாடும் கைகளால்
சிதறும வளையலோசைகள்

கால் குவித்து நகர்ந்து நகர்ந்து

ஆடை மேலேறும் கால்கள்
நெற்றியெங்கும் முத்துக்கள்

வட்டத்துண்டுகளை வெட்டியது போன்று

பாவாடையில் வளைவுகளாய் நெளியும்
ஒற்றைத் துண்டு வானவில்

நீர் படர்ந்த தரைகளில்

நழுவிய கற்றை கூந்தலோடு
விழுந்திடும் முகம் அனிச்சமலரழகு

பாதம் படாது அறை கடந்து

அழுக்கெடுத்த கொலுசு மாட்டிட
என் முட்டியிலேறும் அவள் கால்கள்

விரல்கள் ஒவ்வொன்றாய்

சொடுக்கெடுத்து முத்தமிட
மீதம் யாவும் அவர்அவர் கற்பனையில்!

நெருஞ்சிக்காட்டில்
உடல் கிழிபடாமல் புணரும்
பாம்புகளிரண்டு கனவில்

மேலெழும்பி ஆடுவதற்கு

தரையூன்றிய வாலில்
காமத்தின் மொத்த தூண்

முத்தப் பரிமாற்றத்தில்
நழுவிய எச்சில் விசத்தில்
நீலமாகின சங்குப்பூக்கள்

பாம்பின் சாயலில்
நீளும் அதன் கொடியில்
பச்சைநிறத்திலொரு பாம்பு

கால்தடமில்லா
குளத்தின் மற்றுமொரு பாதையில்
நெளியும் இடையோடு

செப்புக்குடம் கொண்டு
தாமரைக்கொடி விலக்கிக்கொண்டிருந்தாள்
முந்தானை சுருங்கிய மார்போடு

செம்மன் உறைந்த முற்றத்தில்
தெளித்த நீர் சிதறலில்
நேற்றைய கனவின் கலவி வாசனை!

இறங்கல்

Monday, October 29, 2012 | 0 comments »


கரையானுக்கு பதிலாய்
எறும்புகள் சில
ஊர்ந்து கொண்டிருந்தது உடலில்

வலி உணரும் வேளையில்
காதினை ஆட்டுவதையோ உடலசைவோ
நிகழட்டுமென நடைவேகம் குறைத்தேன்

எவ்வித அசைவுமில்லாததால்
அலுவலகம் நடக்கலானேன்
பூனை இறந்துவிட்டதென்று!

நீ...

Monday, October 29, 2012 | 0 comments »


என் நதியில்
நீ
இலையா நீரா?

என் பிடியில்
நீ
தளர்வா தவிப்பா?

என் சாலையில்
நீ
நிழலா ஒளியா?

என் பயணத்தில்
நீ
திசைகாட்டியா விழித்திருட்டா?

என் படகில்
நீ
துடுப்பா துளையா?

என் கனவில்
நீ
காட்சியா காட்சிப்பிழையா?

என் வாசிப்பில்
நீ
மொழியா இடையூறா?

என் பார்வையில்
நீ
விடியலா விபத்தா?

என் வெயிலில்
நீ
அனலா கானலா?

என் நினைவில்
நீ
பலமா பலவீனமா?

என் வானில்
நீ
நீலமா நீளமா?

என் தொலைதலில்
நீ
தேடலா தேம்பலா?

என் நனைதலில்
நீ
கண்ணீரா மழையா?

நீ

Monday, October 29, 2012 | 0 comments »

என் குடைபிடிப்பில்
நீ
முந்தானையா முத்தச்சாரலா?

என் குருதியில்

நீ
சிவப்பணுவா வெள்ளையணுவா?

என் காமத்தில்
நீ
தாகமா தண்டனையா?

என் வீணையில்
நீ
நாளமா நாணமா?

என் படுக்கையில்
நீ
அடக்கமா அத்துமீறலா?

என் அணைப்பில்
நீ
கரடி பொம்மையா கற்பனை குதிரையா?

என் அடம்பிடிப்பில்
நீ
கெஞ்சலா கொஞ்சலா?

என் விரல்நுனியில்
நீ
கொய்யாமொட்டா கீறிய சுளையா?

என் உடலில்
நீ
கீறலா வியர்வையா?

என் முனகலில்
நீ
வார்த்தையா வாக்கியமா?

என் கால்பின்னலில்
நீ
ரோமச்சிக்கலா நகக்கீறலா?

என் இயக்கத்தில்
நீ
தாளமா நீள்மூச்சா?

என் அணைப்பில்
நீ
உள்வாங்கலா உணவூட்டலா?

என் தசையிறுக்கத்தில்
நீ
நளினமா நெருக்கமா?

என் வளையலுடைத்தலில்
நீ
உள்வாங்கலா உடலுதறலா?

என் தலையணையில்
நீ
பல்கடிப்பா நகநுழைப்பா?


உப்பு மூட்டை தூக்கவேண்டுமென்று
அடம் பிடித்தாள்
மதியம்கழிந்த பொழுதொன்றில்

தூக்கத்திற்கு அலையும் விழிகளில்
தன் முகத்தினை
பதியம் வைத்து காத்திருந்தாள்

எந்தப்பக்கம் புரண்டு படுத்தாலும்
கெஞ்சத்துவங்கினாள்
மழலை எடுப்புக்கு ஏங்குவது போல

வில்லாய் மடிந்து கழுத்தைக் கட்டியவளை
பின்பக்கம் வாடி என்றால்
கொஞ்சநேரமென கெஞ்சினாள்

அடிபோடி என்று நழுவினால்
காலிலேறி நடவென்று
கண்களால் நடனமாடினாள்

மெத்தையாவது அவளோ நானோ
முத்தத்தில் முந்திக்கொண்டது
முரண்டுபிடித்த உதடு!

உன்
தவிப்புகளின் ஆழம்
இரவினை அசைத்துப்பார்க்கிறது

உன்

தேடல்களின் உளறல்கள்
யாரென யூகிக்க அனுமதிக்கிறது

உன்
குரல்களின் தடுமாற்றம்
இரத்த வேகம் கூட்டுகிறது

உன்
மூச்சுக்காற்றின் வேகம்
சலனமடைய செய்கிறது

உன்
நூற்றாண்டு காதலை
எங்கேனும் குறிப்பெடுத்து வை

என்றாவது ஒருநாள்
உன் கவிதைகாட்டி
மெய்சிலிர்க்கட்டும் என் பிள்ளை!

எல்லா சாலைகளும்
உன் கூந்தல் வளைவுகளை
நினைவூட்டுகின்றன!

சாலை இணைப்புகள்

காணுகையில் எனையறியாது
உன் கைக்கோர்ப்புக்கு
அலைகிறது மனது!

சிக்னல் விளக்குகள்
நீயில்லா இரவை
நிறம் மாறி நிறம் மாறி
பரிகாசிக்கின்றன!

இறக்கமான
ஒரு சாலையில் நடக்கிறேன்
உன் காலடி ஓசை தேடுகிறது
என் காதுகள்!

சாலையோர மைல்கற்கள்
நீ என் கை பிடித்து அமர்ந்ததை
காட்சிப்படுத்துகின்றன!

உன் புன்னகையின் சாயலில்
வானமெங்கும் நட்சத்திரங்கள்
சாலையெங்கும் மின்விளக்குகள்!

நிலவை தொலைத்த
வானம் போல
சாலையில் நானும்!

மிருகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவுகளின் பயணத்தோடு
கூடடைந்த மொழியறியா தேசத்தில்
சன்னல்வழி காட்சிகள் ரசிக்க இயலவில்லை

சாளரங்களின் முகஉரசல்கள்
உன் உலர்ந்த கூந்தலை
முன்னிருத்தி இம்சித்தன

மங்கலான விளக்கு வெளிச்சத்தில்
உன் நெற்றிவியர்வைக்கு அலைந்தது
எல்லை மீறிய கண்கள்

பெண்ணொருத்தி ஆடவனின்
வருகைக்காக காத்திருப்பது போன்ற
ஓவியத்தினை சுவற்றில் கண்டதும்

உன்னிடமிருந்து விடைபெறுகையிலிருந்த
உன் முகபாவனையை அதில் பதித்து,
ஆறுதலடைந்தது என் மிருகம்!

ஆமென்

Monday, October 29, 2012 | 0 comments »


அடர் சோகத்தில் தொடர் ராகமாய்
முந்தைய இரவின் தேடலையும்
இன்றைய இதயக் குமுறல்களையும்

மெளனத்தின் துணையோடு
கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
யாருக்கும் பேச்சுக் கொடுக்காமல்

முன்பொருமுறை சூட்டிய
இதயமற்றவன் பட்டத்தினை
கட்டிக்காக்கிறது கண்கள்

பார்வையில்லா பறவையொன்று
இறக்கைக்கு ஓய்வு வேண்டுவது போல
எனக்கொரு இளைப்பாருதல் வேண்டும்

ஆண்டவரே எனக்கொரு தனிமையும்
அழுவதற்கும் சொல்லித்தாருங்கள்
ஆமென்!

முத்தமொன்று பாக்கியிருப்பதாய்
வெளிச்சம் மங்கிய பொழுதில்
வரச்சொல்லியிருந்தாள் காதலி

சட்டை பேண்ட் நிறமும்

அவளுக்கு பிடித்தமான
சாக்லெட் வாங்கிவரச்சொன்னாள்

சற்றுமுன் தொடுத்த மல்லிகைப்பூவினை
தாமரை இலையிலிட்டு
நீர் தெளித்தது போலிருந்தாள் ஈரக்கூந்தலில்

முத்தமென்றதும் உடனே வந்துவிட்டதாய்
கேலி செய்தவள் சாக்லேட்டினை
மிளகாய் கடிகடித்து ஒரு வாய் கடிக்கக்கொடுத்தாள்

பால்கனிக்கும் எனக்குமான இடைவெளியில்
தவழும் முத்தமொன்றினையும்
அவள் குவியலையும் காட்சியோட்டுகையில்

அருகிலிருந்து விடைபெற்றிருந்தவள்
இப்படியாய்
அலைபேசியில் கடிந்து கொண்டாள்

உன் பைக் கண்ணாடியில்
முகம் பார்த்து தலை கோதுகையில்
முத்தமிடத் தெரியாதாவென்று!

Blogger Wordpress Gadgets