Pin It

Widgets

மழை

Monday, October 29, 2012 | 0 comments »

தரைவிரிப்பில் கால் தேய்த்து
முணுமுணுத்தாள்
மழை

சேலை நனைத்த

மழையுதறி,
விடும் நீள்மூச்சு
மழை!

சாளரம் ஒதுக்கி
சன்னலில் இடம்பிடித்தாள்
மழை

பருகாத கோப்பையின்
ஆவியின் வெதுவெதுப்பு
ரசித்தாள் மழை

முடிந்துவைத்த கூந்தலை
தோள்பரப்பி விட்டிருக்கிறாள்
மழை

உலர் உதட்டினை
இதழால் ஒத்தடமிடுகிறாள்
மழை

கொடி நனையும்
துணியெடுக்க சிட்டாகிறாள்
மழை

சன்னல் கம்பியின்
அடிவருடுகிறாள்
மழை

யாருக்கோ
முத்தமிடுகிறாள்
மழை

கரடி பொம்மையின்
கூந்தல் வருடுகிறாள்
மழை

படிக்காமலே
புத்தகத்தின் பக்கம் புரட்டுகிறாள்
மழை

சட்டென
அழத்துவங்குகிறாள்
மழை

கண்ணாடி பார்த்து
சிரித்துக்கொள்கிறாள்
மழை

அடுப்படியில்
கொரிக்கத்தேடுகிறாள்
மழை!

மெளனம் திரட்டி
மனதிற்குள் இசைக்கிறாள்
மழை

கழுத்து சங்கலியை
கடிக்கக் கொடுக்கிறாள்
மழை

கால்மடக்கி
மூட்டுகூட்டி
நாடி பதிக்கிறாள்
மழை

கொலுசின் திருகாணி
கழற்றிவிளையாடுகிறாள்
மழை

அலைபேசி பதிவு எண்களின்
தேடல் தீவிரப்படுத்துகிறாள்
மழை

நனைவதற்கான ஒத்திகையில்
தனையறியாது அழுதுவிடுகிறாள்
மழை

நினைவுகளின் துயரறுத்து
கண்விழிக்கிறாள்
மழை

தெருவிளக்களின் மஞ்சளில்
ஆறுதலடைகிறாள்
மழை

ஒவ்வொரு துளியாய்
உள்ளங்கையில் உடைத்துவிடுகிறாள்
உள்ளுக்குள் உடைந்துவிடுகிறாள்
மழை

ஏமாற்றத்தின்
பிழை அலசுகிறாள்
மழை

மொழியின்
வார்த்தை தொலைக்கிறாள்
மழை

விட்டத்தின்
சிறை உணருகிறாள்
மழை

தெருநாய் ஒன்றின்
அடைக்கலம் கண்டு
விசும்புகிறாள்
மழை

தனித்து நிற்கும்
மதில் பறவையில்
தன் சாயல் காண்கிறாள்
மழை

மழை நனையும் குழந்தையை
தாய் அதட்டும் குரல் கேட்டு
வெடித்து அழுகிறாள்
மழை

அப்பாவின் சட்டையில்
அக்குள் வாசனை தேடுகிறாள்
மழை

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets