Pin It

Widgets

அப்பா

Monday, October 29, 2012 | 0 comments »

இஸ்திரி போட்டுத்தரும் வரை
அப்பாவின் கால்பற்றி நிற்கும் காலை
இக்காலையில் இல்லை!

மகளுக்கு மீசை வரையும்

தந்தையும்
மகனுக்கு பூ வைக்கும்
தாயும்
இல்லாத வீடேது!

சைக்கிளின் பின்னமர்ந்தபடியே
அப்பாவிற்கும் குடைபிடிக்கும்
மழைக்காலமும் பால்யமும்
நினைவின் கண்களில்!

அம்மாவின் கதகதப்பும்
அப்பாவின் சட்டையும்
பால்ய காய்ச்சலுக்கு மருந்து!

அம்மாவின் ஒரு வாய் சோறும்
அப்பாவின் எச்சில்தட்டு சோறும்
ஆயுள் அமிர்தம்!

அப்பாவிற்கென
வைத்திருக்கும் தட்டில்
அம்மா சாப்பாடு வைக்கையில்
தெரிகிறது நமக்கான பொறுப்புணர்வு!

கீழும் மேலுமாய்
மாட்டிய சட்டை பட்டனை
அப்பா சரி செய்திடாத
பள்ளி பருவம் ஏது?

அப்பாவிடம் கொட்டு வாங்காமல்
சைக்கிள் பழகிய
பால்யம் ஏது?

தூரத்தில் எழும்
சைக்கிள் கறிச் சத்தம்
பால்ய கசப்பு
இன்று அப்பாவின் நினைப்பு!

மடித்து கட்டிய லுங்கி
இறுகிய பாதம்
உள்ளங்கை சொரரப்பு
தீராக்காதல் அப்பா!

அரிவாள் கைப்பிடியில்
மண்வெட்டி கைப்பிடியில்
ஒட்டிக் கொள்கிறது
அப்பாவுடனான பருவக்காதல்!

சைக்கிள் பயணத்தில்
சக்கரத்தில் கால் நுழைக்காத
குழந்தையில்லை
கலங்கிடாதா அப்பாயில்லை!

அப்பாவின் கைகளில்
நீச்சல் பழகியவர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

லுங்கி கட்டி பழகிடும்
மகன் பார்க்கையில்
அப்பாவும் அசைபோடுகிறார்
பால்யத்தை!

எண்ணையுற்றி வளர்க்கும்
மீசையில் வளருகிறது
அப்பாவின்மேல் காதலும்!

சொல்லப்படாத காதலில்
அப்பாவும் மகனும்!

நிழல் தொடரும்
குழந்தை
வெய்யில் காயும்
அப்பா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets