எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நீ மறுக்க மறுக்க நான் பிடிவாதமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. உன் மனதிற்கு ஒருவேளை அந்த பதில் தேவைப்படலாமென்று தான் அன்று பதில் சொல்ல வேண்டியதாயிற்று. எப்படியும் உன் கோபம் தணியும் என்ற நம்பிக்கை தான். தூங்கி எழுகையில் ஒரு தெளிவு இருக்குமே அப்போது அந்த பதிலை உணர்வாய் என்ற நம்பிக்கையில் தான் அந்த பதிலை சொல்ல வேண்டியதாயிற்று. 

எனக்கு அப்படித் தோன்றியது என்பது எனக்குள் இருந்து வெளிவந்தது ஒன்றுமில்லை. நீ கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை எனக்கு இது தான் நீ என வெளிக்காட்டிய பிம்பத்திலிருந்து முளைத்த மல்லிக்கொடி போன்று தரை படர்ந்து கிடக்கிறது. அங்கிருந்து தான் மீண்டும் மீண்டும் தரை படர்ந்து பக்கக்கண் இட்டு முளைக்கிறேன்.

நீ ஒவ்வொரு முறையும் பதில்களை நிராகரிப்பதும் பின் அதற்கு வருந்துவதும் அதற்கான கால இடைவெளி மட்டும் மாறிக்கொண்டு வருகிறதே தவிர, பதில்களற்ற சண்டையல்ல. எனக்கு எதையாவது நினைவூட்டவேண்டும் போலிருக்கிறது. எதையாவது என்றால் எதையாவது ஓர் நள்ளிரவில், விடிகாலையில், “எத்தன தடவ சொல்லிருக்கேன் டேட்டா ஆப் பண்ணிட்டு தூங்குனு” எதையாவது தோன்றியதை எனக்கு அனுப்பிவிட்டு அது டபுள் டிக் ஆகும் பட்சத்தில் நான் விழித்துவிடுவேனோ என்று மறுநாள் நீ திட்டித் தீர்க்கும் கொஞ்சல்கள் போன்று எனக்கும் எதையாவது நினைத்துப்பார்க்க, கொஞ்சம் சிரித்துக்கொள்ள உடல் தேடா காமம் கொள்ள, இன்னும் சொல்லத் தெரியா என்னென்னவோ.

இடைவேளைக்குக் கூட எழுந்து செல்லாமல் இருக்கையிலேயே இருந்துவிட்டு படம் முடிந்து எரியும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் நகர்ந்து உடலோடு ஒட்டிக்கொண்ட உன் உள்ளாடையின் பிடிப்பை தளர்த்தி விட்டது என்னை சில்லிட வைக்கிறது.

சில்லிட என்றால் சூடு தணிந்து இதமாய் கிளம்பும் நீராவி போல இதமாய் சில்லிடலாய்.

பென்சில் கொண்டு எப்படி உள்ளங்கையில் எழுத முடியும்? உனக்கொரு நிழல் படர்ந்த இருக்கை கிடைத்துவிடக்கூடாது கூர்மையாய் முனை நகர்வதை கவனித்தாலும் பிடிபடாதபடிக்கு எதையோ எழுதி எதையோ வரைந்து சிரிக்கும் சிரிப்பை இழை அருந்த என் அரை பல்பில் நுழைத்து ஓட்டிவிடலாமென்று பார்க்கிறேன்.

“நான் வேணா தூக்கட்டுமா” என்று கேட்டது, அந்த குரல் சன்னல் திறந்திருந்தும் வெளியேற மறுக்கிறது.

முத்தம்

Saturday, March 21, 2015 | 0 comments »

எனக்கு பயமாய் இருக்கிறது. திரும்புவதற்குள் பெற்றுவிடத் துடிக்கும் அந்த முத்தத்தை அறையிலிருந்து சுமந்து வருகிறேன் நீ என்னிடமிருந்து பெற்றுவிடாதபடிக்கு. பிடிவாதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு ஒரு விளையாட்டு அப்படித்தான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உன் சொற்களின் ஊடு விளையாட்டை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அங்கு தான் தவறி(ற)விடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

ஒரு முறையேனும் எனை அனுமதிப்பாய் என்றுதான் நம்பி வருகிறேன். எப்படி நான் ஜெயித்துக் கொள்கிறேன் என்று உன்னிடமே வேண்டுவது. சொற்களின் ஊடு விளையாட்டில் நீ போடும் கொக்கியில் நேரிடையாகவே மீனாகித் தொலைகிறேன். புழுவாய் உருக்கொண்டு உணவாகிறது முத்தம். இத்தனையும் பேசிவிட்டு, முற்றிலுமாய் நிராகரித்துவிடவா முடியும்?

நீயும் அப்படியே தான் கேட்டும் தொலைப்பாய். என்னமோ வேண்டாத மாதிரி ஹ்ம்ம்” உன் புருவம் உயர்த்துதலை வெறுமனே புருவம் உயர்த்துதலென்று ஒருபோதும் சொல்லிவிடமுடியாதொரு தருணத்தில் தான் இந்த சில்லறை சேட்டையை தொடங்கி வைப்பாய்.

அது ஒரு விடுபடல்
அது ஒரு அழைப்பு
அது ஒரு வேண்டுதல்
அது ஒரு அனுமதி

என் பிடியில் இல்லாமல் நழுவி வேடிக்கை பார்த்தலின் சுகம் என்னைப் போலவே உனக்கும் தெரியுமென்பதால் சுகத்தின் ஊடாகவே தொடரும் அவஸ்தையை நான் சீண்டிப்பார்க்க விரும்பவில்லை. அது தோல்வியன்று தோல்வியின் வெற்றி. இருவருமே தோற்பதற்கு தயாராக இருக்கும் களம் அப்படி. போ ஹேட் யூ.

எனக்கு மறுபடியும் பயமாய் இருக்கிறது. முத்தத்தை கொடுத்து விடுவேனோ என்று. உன் செய்கைகள் என் கண்ணாடி முன் நின்றாடும் போதேல்லாம் அதட்டி வென்று விடுவேன்.

இனி உனக்கொரு மாஸ்க் மாட்டிவிடலாம் என்றிருக்கிறேன். அப்படியும் ஒரு பயம் துரத்திக்கொண்டே வருகிறது பாரேன். நீ ஒரு மாதிரி தலை சாய்த்து குரல் மாற்றி குழைவாயே. என் கையை நானே பின் கட்டிக்கொள்ள வேண்டும்.

போ... அதுவும் முடியாது. நான் நெட்டி முறிக்கையில் நீ பார்த்தது.

கெட் லாஸ்ட் பரம் மை தாட்ஸ்

ப்ளீஸ் கிஸ் மீ.

உனக்கு, மேகம் கலைந்து பளிச்சிட்ட நிலா காட்டியவது போல எளிதல்ல நீ பரிசளித்த வடுக்களை காட்டுவது. இன்னும் ஓர் இரவை உன்னிடமிருந்து தான் கடன் எடுக்க விரும்புகிறேன். எனக்கான இரவென்றாலும் நீ தின்று கொழுத்த இரவு அது. நீ என்பதைவிட நாம என்று சொல்லிக்கொள்வதில் எந்த தயக்கமும் வெட்கமும் இல்லைதான். இருப்பினும். இந்த காலகட்டங்கள் நான் அனுமதிக்காத இரவு. நான் விரும்பாத இரவு..

மயானங்கள் சூடிக்கொள்ளும் அமைதி போன்றதொரு உதட்டை நீ சமீபமாய் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறாய். பிடித்த பாடலை முனுமுனுக்க மறுக்கும் உதடுகள் அது. உன்னைப்போல கைமீறி போய்விட்டதாய் எப்படி உடலோடு ஒட்டிக்கொண்ட உதட்டை விடுத்து இருப்பது.

முனை மழுங்கிய பற்கள் நிறைந்த வாள் ஒன்றின் துணை கொண்டு அறுத்து விடலாமென்றிருக்கிறது. உன் உடல் கண்டு பழக்கப்பட்ட கண்ணாடி அதையும் அபகரித்து கொல்கிறது. தசை கிழிய குருதி வழியும் உன் நினைவினை வெறுமனே எப்படி அறுத்தெறிவது?

வழியனுப்ப கை காட்டுவதை ஒவ்வொரு விரலாய் மடக்கி நிமிரத்தும் நொடிகளின் இடைவெளி மயிலிறகென வருடுகிறது மூடிய விழிகளுக்குள். இந்த வருடலை வருடலென கடந்துவிட முடியுமென்று நம்புகிறாயா? உனக்கு ஒருபோதும் சொல்லப்படாத, வேண்டாமென நிராகரித்த விழுங்களின் எண்ணிக்கை தெரியுமா? அது சம்பிரதயாமில்லை தவிர்த்தல் என்பது விழுங்கல்களின் மூலமாவது அறிந்து கொண்டிருந்தாயா? அறிந்தும் தவிர்த்திருந்தாயா?

வெகு நீண்ட உரையாடலின் நா சுவைக்காத உலர் உதடு கொண்டு உதடுகள் பிரிக்காமல் உதட்டிலிட்ட முத்தத்தின், ஈரம் இப்போது எங்கு சுரக்கிறது தெரியுமா உனக்கு?

முத்தமிடு
முத்தமிடு
முத்தமிடு
நீ
குறுக்கு வெட்டாக
சிலுவையின் வடிவில்
சுவைத்த இதழில்
முத்தமிட்டதைப்போல
முத்தமிடு...

ஒரேயொருமுறை ஒரேயொருமுறை

மெல்ல உயிர் அறுக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் பொழுதுக்கு நினைவுகள் என்று பெயரிடச் சொல்லியிருக்கிறாய் நீ. எப்போதெனில் மிச்சமுள்ள வாழ்கையை உன்னை நினைத்தே கடத்தி விடுவேன் என்று நீ பொய் சொன்ன பகலிரவில் தான். கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது என்பதற்கான அர்த்தம் அன்றைக்குத்தான் புரிந்தது. அல்லது புரியும்படியான ஒரு விஷயத்தை நரம்பு தட்டித் தட்டி எடுத்து இன்ஜெக்ட் செய்தாய்.

ஒரு வகைத் திணித்தல் தான். வேறு எப்படி பெயரிட? அவசரகால முத்தம் போல ஓர் பேரிடர் எப்போதும் நிகழ்ந்து விடாதபடிக்கு நீ எப்போதும் செய்தது கண்டு திணறியிருக்கிறேன். பின் அனுபவித்து அனுமதித்திருக்கிறேன். உன் மழைக்கால ஆடை நிறங்களுக்கும் கோடைக்கால ஆடை நிறங்களுக்கும் நீ வகைப்படுத்தி வைத்திருக்கும் காரணங்கள் அதற்கு நீ சொல்லும் விளக்கங்கள் என்பதைவிட, நீ உண்டு பண்ணும் செய்கைகள் அனுமதிக்கும் படியாகவே இருந்திருக்கிறது.

சமரசமின்றி காத்திருக்கும் சந்திப்பின் இடைவெளியில் நீ கலந்து வைத்திருக்கும் கோபத்திற்கும் தவிப்பிற்கும் ஒருபோதும் பெயரிடாதபடிக்கு சூடிக்கொள்ளும் மெளனம், அதன் வாசனை, அதன் ஆயுள், அவரவர் அறைக்குத் திரும்பியதும் நீ கொணரும் மூச்சுக்காற்றின் ஏற்ற இறக்கம் கொண்டு பரிமாறிவிடுவாய் போதுமான அளவிற்கு.

அழுது அரற்றுவதில் உடன்பாடில்லாத ஓர் விசித்திரமான ஜீவன் என, காட்டித் தோற்றத்தில் எந்த குற்ற உணர்ச்சியும், எந்த கேலியும், எந்த ஆறுதலும் கிட்டிவிடப் போவதில்லை தான். இருந்தும் சத்தியங்கள் குறித்தும், வாக்குறுதிகள் குறித்தும் நியாபப்படுத்துதல், சொல்லிக்காட்டுதல் திரும்பதலுக்கான சமிக்கையற்று நாட்களாகிவிட்டது.

சுமத்தலின் பாரம் என்ன என்பதை உன்னுடல் சுமக்காமலே உன்னுடல் சுமக்கும் இந்த பைத்தியக்கார பசிக்கு நீ நினைவுகள் என்றும், நான், நான்
சொல்லத்தெரியவில்லை.

சிந்தனையில் முகாமிட்டிருக்கும், பனிகடந்து வெயில் கூடும் இந்த கால வெளியில் அயர்ந்து தூங்க காமம் ஓர் மருந்தாகிப் போனது பெரும் துயரம் தான்.

விழிப்புத் தட்டுவது பின்னிரவிற்கு பின் என்பதாலோ என்னவோ என்னை மீண்டும் மீண்டும் அந்த நிறம் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. நிறம் என்று எப்படிச்சொல்ல அந்த நிறத்திலான ஆடை..

பயத்தின் உச்சநிலையாய் ஆடையை ஓர் பைக்குள் கண்ணில் பட்டுவிடாதவாறு பத்திரப்படுத்தியாயிற்று. கண்ணில் படாதபடி தொலைக்கலாம் தீயிடலாம் தான். கேட்பதற்கான நீயுமில்லை.

இப்படி வாயில் எச்சில் ஒழுக எழுந்து கனவில் யாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பது மட்டும் நினைவிற்கு திரும்பவேயில்லை.

என்னால அந்த மொத ந்யூடிட்டிய மறக்க முடியல.

நீ சொல்லிச் சென்ற அந்தச்சொல் காமத்தின் மிகுதியில் இறுகும் ஆடைப்போல் சித்திரவதையாய் இருக்கிறது.

There is no past tense in love. Fill the emptiness

அடுத்து அடுத்து. என சுற்றிக் கொண்டே வரும் பண்பலை வரிசையில்  எந்தப் பாடலில் நீ நிறுத்துவாய், விரும்புவாய் என நான் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறேன். அதிக நேரம் வரிகளில் நின்றிருக்கிறாய். அந்த வரிகளை மிக மெல்லிய குரலில் சொல்லி சிலாகித்திருக்கிறாய். பேச முடியாத சூழலில் குறுஞ்செய்தி உரையாடலில் நடுவே ஏதோ ஒரு பாடலின் வரியைச சொல்லி, பின் அந்தப் பாடலை என் லேப்-டாப்பில் இருக்கிறதா என்று தேட விட்டிருக்கிறாய். இதையெல்லாம் நீ வேலை சென்று திரும்பிய அந்தியில் சொன்ன நாளில் வீடு திரும்பி பதில் அளித்ததை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

இத்தனைக் காதலையும், இத்தனை நினைவுகளையும் சுமந்து கொண்டு பறக்கும் உன்னால் இரண்டு மாடியும் லிப்டில் செல்லாமல் படி வழியாக என்னைத் தூக்கிச்செல்ல முடியுமா? இது தான் சிக்னலில் வைத்து நீ கேட்டக் கேள்வி

சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் இங்கிருந்து நான் நடக்கிறேன் ஆனால் நான் திகட்டாத அளவிற்கு, நான் ஓடியாமல் மடியும் அளவிற்கு நீ காதல் செய்ய வேண்டுமென்று முதல் மாடியின் திருப்பத்தில் வைத்து சொன்ன கேள்வி.

அது. உன் காதல் விளையாட்டு மாதத்தில் இருமுறையாவது இப்படி ரசனை மிகுந்ததாய் அமைந்து விடும். நீ எங்கு கொண்டு நிறுத்துவாய் உன் ஆளுமை என்னவாக இருக்குமென்று தெரிந்தும் தோற்கும் அந்தப் பேரானந்தம் நீ கற்றுக் கொடுத்தது தான்.

வெள்ளரிப் பிஞ்சுகள் கழுவி முன் பல்லால் ஒடிக்கையில் வளையும் உந்தன் உதட்டில் சீசா ஆட உதட்டை நெருங்குகையில் நொறுங்கிய கன்னாடிச் சில்லுகளை, அங்கிருந்தே அப்படியே அசைய விடாமல் டீ-ஷர்ட் கழற்றி நனைத்து ஒற்றியெடுத்த ஞாயிறு மதியம் இப்போதும் வைக்கிறது.
பொட்டல் காட்டில் தூரத்தில் மிதக்கும் கானல் நீரென.

நிர்வாணம் காமத்திலிருந்து தப்பி காதலுக்கு வாக்கப்பட்டது அன்றைய மதியத்திலிருந்து தான்.


தேதிகள் ஞாபகத்தில் இருப்பதைவிட வேறெதுவும் இந்த நிகழ்காலத்தில் கொடூரமாய் இருந்துவிடப்போவதில்லை என்பதை தீர்க்கமாய் நம்புகிறேன். அலுவலகத்தில் யாரேனும் தேதி கேட்டு விட்டால் மொத்தமாய் சிதைகிறேன். பகல் இரவு என மாறிமாறி வருவது மிகுந்த அச்சுறுத்தலாய் இருக்கிறது. மழு இரவோ முழு பகலோ வாய்க்கும் ஓர் நாளில் பயணத்தைத் தொடங்க வேண்டும் நீ காட்டிய திசையின் எதிர் தசை நோக்கி.

தெருவில் எங்கோ எப்போதோ ஒருமுறை கண்ட பைத்தியத்தின் தளர்ந்த ஆடையும் அதன் நிறமும், அதன் முக பாவனையும், சாலை அளக்கும் நடையும், கலைந்த கூந்தலும், நீள் நகங்களும், இருள் அப்பிக் கிடக்கும் என் அறையில் எனக்கருகே படுத்திருக்கிறது. யாவும் நீ தான், உன் வினை தான், உன் விளையாட்டு தான், உன் பொழுதுபோக்கு தான். ஆனால் இப்படியெல்லாம் உன்னை கை காட்டிவிட முடியாது. தெரியும் தானே?

மின் விசிறியின் அதிர்வில் படுகிடையாக எனக்கருகே ஆடிக்கொண்டிருக்கும் நூலாம்படை உன்னை இன்னும் இன்னும் நெருக்கமாக கிடத்துகிறது. அல்லது உன்போல் மடியில் அமர்ந்து கொள்கிறது. பயமாய் இருக்கிறது என்றால் நம்புவாயா? பயம் தான் உன் மேல் அல்ல என்மேல். இதை துன்புறுத்துதல் என்று மேலும் மேலும் குற்றம் சாட்ட மனது விடாது மறுக்கிறது. ஒருவகை துன்புறுத்தல் தான். அது உனக்கானதோ உன்னாலானதோ இல்லை என்பதை உனக்கு மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன். அது எதற்குள்ளும் அடங்காதொரு பசி.

இந்த விழிகள் ஏன் மூட மறுக்கிறது என, சதா கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்குள். இந்த இருள் பிடித்திருக்கிறது. இந்த இருள் நீ அறிமுகப்படுத்தியது. உனக்கும் எனக்குமான போர்வைக்குள் பிறந்த இருள் இது. புலம்பலென நிராகரித்துவிடுவாய் தெரியும். இருந்தும் உள்ளூருவதை அப்படியே முன் வைப்பது உனக்கு புலம்பல் எனக்கு விடுபடல். அல்லது மீண்டும் சிறை. இருந்துவிட்டுப் போகட்டும்.

விரும்பி வாங்கிய கீறல்களும் தழும்புகளும் என்னென்னவோ தூண்டுகிறது.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க நினைப்பது எவ்வளவு அபத்தம். நீ என்னைப் போல எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருப்பாய் என்பது தான் ஒருவகையில் எனக்கான ஆறுதலும் கூட. என்றாவது ஒரு நாள் நிகழ்வதற்கு சாத்தியமானால் அழைப்பில் குரல் மறந்து யாரென கேட்கும் நாளன்று முடிவுக்கு வரலாம் யாவும். ஆமாம் யாவும் தான். அதற்குள் என்னவெல்லாம் பொதிந்து வைக்க? தெரியாது.

விட்டம முழுக்க அலைபேசியிலிருந்து படர்ந்து கிடந்த மங்கலான அந்த ஹாலோஜின் பல்பு போல மிளிரும் வெள்ளை ஒளி, நினைவுகளை கூசச் செய்கிறது. பக்கவாட்டில் திரும்பிப் படுக்கிறேன்.

சன்னல் கதவின் கீறல் வழியே உன் சீப்புக்குள் அகப்படும் கூந்தலின் அடர்த்தியளவுக்கு மஞ்சள் ஒளியை ஒழுக விடுகிறது. அது தன் வாடிக்கையாளனுக்காக ஆடையகற்றி மலர்ந்து கிடக்கும் பரத்தை என எல்லா இரவும் தவறாது காத்திருக்கிறது.

Blogger Wordpress Gadgets