Pin It

Widgets

மெல்ல உயிர் அறுக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் பொழுதுக்கு நினைவுகள் என்று பெயரிடச் சொல்லியிருக்கிறாய் நீ. எப்போதெனில் மிச்சமுள்ள வாழ்கையை உன்னை நினைத்தே கடத்தி விடுவேன் என்று நீ பொய் சொன்ன பகலிரவில் தான். கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது என்பதற்கான அர்த்தம் அன்றைக்குத்தான் புரிந்தது. அல்லது புரியும்படியான ஒரு விஷயத்தை நரம்பு தட்டித் தட்டி எடுத்து இன்ஜெக்ட் செய்தாய்.

ஒரு வகைத் திணித்தல் தான். வேறு எப்படி பெயரிட? அவசரகால முத்தம் போல ஓர் பேரிடர் எப்போதும் நிகழ்ந்து விடாதபடிக்கு நீ எப்போதும் செய்தது கண்டு திணறியிருக்கிறேன். பின் அனுபவித்து அனுமதித்திருக்கிறேன். உன் மழைக்கால ஆடை நிறங்களுக்கும் கோடைக்கால ஆடை நிறங்களுக்கும் நீ வகைப்படுத்தி வைத்திருக்கும் காரணங்கள் அதற்கு நீ சொல்லும் விளக்கங்கள் என்பதைவிட, நீ உண்டு பண்ணும் செய்கைகள் அனுமதிக்கும் படியாகவே இருந்திருக்கிறது.

சமரசமின்றி காத்திருக்கும் சந்திப்பின் இடைவெளியில் நீ கலந்து வைத்திருக்கும் கோபத்திற்கும் தவிப்பிற்கும் ஒருபோதும் பெயரிடாதபடிக்கு சூடிக்கொள்ளும் மெளனம், அதன் வாசனை, அதன் ஆயுள், அவரவர் அறைக்குத் திரும்பியதும் நீ கொணரும் மூச்சுக்காற்றின் ஏற்ற இறக்கம் கொண்டு பரிமாறிவிடுவாய் போதுமான அளவிற்கு.

அழுது அரற்றுவதில் உடன்பாடில்லாத ஓர் விசித்திரமான ஜீவன் என, காட்டித் தோற்றத்தில் எந்த குற்ற உணர்ச்சியும், எந்த கேலியும், எந்த ஆறுதலும் கிட்டிவிடப் போவதில்லை தான். இருந்தும் சத்தியங்கள் குறித்தும், வாக்குறுதிகள் குறித்தும் நியாபப்படுத்துதல், சொல்லிக்காட்டுதல் திரும்பதலுக்கான சமிக்கையற்று நாட்களாகிவிட்டது.

சுமத்தலின் பாரம் என்ன என்பதை உன்னுடல் சுமக்காமலே உன்னுடல் சுமக்கும் இந்த பைத்தியக்கார பசிக்கு நீ நினைவுகள் என்றும், நான், நான்
சொல்லத்தெரியவில்லை.

சிந்தனையில் முகாமிட்டிருக்கும், பனிகடந்து வெயில் கூடும் இந்த கால வெளியில் அயர்ந்து தூங்க காமம் ஓர் மருந்தாகிப் போனது பெரும் துயரம் தான்.

விழிப்புத் தட்டுவது பின்னிரவிற்கு பின் என்பதாலோ என்னவோ என்னை மீண்டும் மீண்டும் அந்த நிறம் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. நிறம் என்று எப்படிச்சொல்ல அந்த நிறத்திலான ஆடை..

பயத்தின் உச்சநிலையாய் ஆடையை ஓர் பைக்குள் கண்ணில் பட்டுவிடாதவாறு பத்திரப்படுத்தியாயிற்று. கண்ணில் படாதபடி தொலைக்கலாம் தீயிடலாம் தான். கேட்பதற்கான நீயுமில்லை.

இப்படி வாயில் எச்சில் ஒழுக எழுந்து கனவில் யாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பது மட்டும் நினைவிற்கு திரும்பவேயில்லை.

என்னால அந்த மொத ந்யூடிட்டிய மறக்க முடியல.

நீ சொல்லிச் சென்ற அந்தச்சொல் காமத்தின் மிகுதியில் இறுகும் ஆடைப்போல் சித்திரவதையாய் இருக்கிறது.

There is no past tense in love. Fill the emptiness

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets