Pin It

Widgets

அடுத்து அடுத்து. என சுற்றிக் கொண்டே வரும் பண்பலை வரிசையில்  எந்தப் பாடலில் நீ நிறுத்துவாய், விரும்புவாய் என நான் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறேன். அதிக நேரம் வரிகளில் நின்றிருக்கிறாய். அந்த வரிகளை மிக மெல்லிய குரலில் சொல்லி சிலாகித்திருக்கிறாய். பேச முடியாத சூழலில் குறுஞ்செய்தி உரையாடலில் நடுவே ஏதோ ஒரு பாடலின் வரியைச சொல்லி, பின் அந்தப் பாடலை என் லேப்-டாப்பில் இருக்கிறதா என்று தேட விட்டிருக்கிறாய். இதையெல்லாம் நீ வேலை சென்று திரும்பிய அந்தியில் சொன்ன நாளில் வீடு திரும்பி பதில் அளித்ததை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

இத்தனைக் காதலையும், இத்தனை நினைவுகளையும் சுமந்து கொண்டு பறக்கும் உன்னால் இரண்டு மாடியும் லிப்டில் செல்லாமல் படி வழியாக என்னைத் தூக்கிச்செல்ல முடியுமா? இது தான் சிக்னலில் வைத்து நீ கேட்டக் கேள்வி

சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் இங்கிருந்து நான் நடக்கிறேன் ஆனால் நான் திகட்டாத அளவிற்கு, நான் ஓடியாமல் மடியும் அளவிற்கு நீ காதல் செய்ய வேண்டுமென்று முதல் மாடியின் திருப்பத்தில் வைத்து சொன்ன கேள்வி.

அது. உன் காதல் விளையாட்டு மாதத்தில் இருமுறையாவது இப்படி ரசனை மிகுந்ததாய் அமைந்து விடும். நீ எங்கு கொண்டு நிறுத்துவாய் உன் ஆளுமை என்னவாக இருக்குமென்று தெரிந்தும் தோற்கும் அந்தப் பேரானந்தம் நீ கற்றுக் கொடுத்தது தான்.

வெள்ளரிப் பிஞ்சுகள் கழுவி முன் பல்லால் ஒடிக்கையில் வளையும் உந்தன் உதட்டில் சீசா ஆட உதட்டை நெருங்குகையில் நொறுங்கிய கன்னாடிச் சில்லுகளை, அங்கிருந்தே அப்படியே அசைய விடாமல் டீ-ஷர்ட் கழற்றி நனைத்து ஒற்றியெடுத்த ஞாயிறு மதியம் இப்போதும் வைக்கிறது.
பொட்டல் காட்டில் தூரத்தில் மிதக்கும் கானல் நீரென.

நிர்வாணம் காமத்திலிருந்து தப்பி காதலுக்கு வாக்கப்பட்டது அன்றைய மதியத்திலிருந்து தான்.


தேதிகள் ஞாபகத்தில் இருப்பதைவிட வேறெதுவும் இந்த நிகழ்காலத்தில் கொடூரமாய் இருந்துவிடப்போவதில்லை என்பதை தீர்க்கமாய் நம்புகிறேன். அலுவலகத்தில் யாரேனும் தேதி கேட்டு விட்டால் மொத்தமாய் சிதைகிறேன். பகல் இரவு என மாறிமாறி வருவது மிகுந்த அச்சுறுத்தலாய் இருக்கிறது. மழு இரவோ முழு பகலோ வாய்க்கும் ஓர் நாளில் பயணத்தைத் தொடங்க வேண்டும் நீ காட்டிய திசையின் எதிர் தசை நோக்கி.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets