Pin It

Widgets

தெருவில் எங்கோ எப்போதோ ஒருமுறை கண்ட பைத்தியத்தின் தளர்ந்த ஆடையும் அதன் நிறமும், அதன் முக பாவனையும், சாலை அளக்கும் நடையும், கலைந்த கூந்தலும், நீள் நகங்களும், இருள் அப்பிக் கிடக்கும் என் அறையில் எனக்கருகே படுத்திருக்கிறது. யாவும் நீ தான், உன் வினை தான், உன் விளையாட்டு தான், உன் பொழுதுபோக்கு தான். ஆனால் இப்படியெல்லாம் உன்னை கை காட்டிவிட முடியாது. தெரியும் தானே?

மின் விசிறியின் அதிர்வில் படுகிடையாக எனக்கருகே ஆடிக்கொண்டிருக்கும் நூலாம்படை உன்னை இன்னும் இன்னும் நெருக்கமாக கிடத்துகிறது. அல்லது உன்போல் மடியில் அமர்ந்து கொள்கிறது. பயமாய் இருக்கிறது என்றால் நம்புவாயா? பயம் தான் உன் மேல் அல்ல என்மேல். இதை துன்புறுத்துதல் என்று மேலும் மேலும் குற்றம் சாட்ட மனது விடாது மறுக்கிறது. ஒருவகை துன்புறுத்தல் தான். அது உனக்கானதோ உன்னாலானதோ இல்லை என்பதை உனக்கு மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன். அது எதற்குள்ளும் அடங்காதொரு பசி.

இந்த விழிகள் ஏன் மூட மறுக்கிறது என, சதா கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்குள். இந்த இருள் பிடித்திருக்கிறது. இந்த இருள் நீ அறிமுகப்படுத்தியது. உனக்கும் எனக்குமான போர்வைக்குள் பிறந்த இருள் இது. புலம்பலென நிராகரித்துவிடுவாய் தெரியும். இருந்தும் உள்ளூருவதை அப்படியே முன் வைப்பது உனக்கு புலம்பல் எனக்கு விடுபடல். அல்லது மீண்டும் சிறை. இருந்துவிட்டுப் போகட்டும்.

விரும்பி வாங்கிய கீறல்களும் தழும்புகளும் என்னென்னவோ தூண்டுகிறது.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க நினைப்பது எவ்வளவு அபத்தம். நீ என்னைப் போல எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருப்பாய் என்பது தான் ஒருவகையில் எனக்கான ஆறுதலும் கூட. என்றாவது ஒரு நாள் நிகழ்வதற்கு சாத்தியமானால் அழைப்பில் குரல் மறந்து யாரென கேட்கும் நாளன்று முடிவுக்கு வரலாம் யாவும். ஆமாம் யாவும் தான். அதற்குள் என்னவெல்லாம் பொதிந்து வைக்க? தெரியாது.

விட்டம முழுக்க அலைபேசியிலிருந்து படர்ந்து கிடந்த மங்கலான அந்த ஹாலோஜின் பல்பு போல மிளிரும் வெள்ளை ஒளி, நினைவுகளை கூசச் செய்கிறது. பக்கவாட்டில் திரும்பிப் படுக்கிறேன்.

சன்னல் கதவின் கீறல் வழியே உன் சீப்புக்குள் அகப்படும் கூந்தலின் அடர்த்தியளவுக்கு மஞ்சள் ஒளியை ஒழுக விடுகிறது. அது தன் வாடிக்கையாளனுக்காக ஆடையகற்றி மலர்ந்து கிடக்கும் பரத்தை என எல்லா இரவும் தவறாது காத்திருக்கிறது.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets