ஒரு இரவிற்கு முன்னரே
அவன் வருகையினை
வீதியெங்கும்
உமிழ்ந்துச் சென்றான்..,

யார் யார் என்னவெல்லாம்
"படி" செலுத்தலாம் என
தீர்மானிக்கும் கூட்டம்
நிகழ்ந்தவாறு இருக்க,

எவள் வீட்டு முன் நின்று
எந்த திசையிலிருந்து
மாப்பிள்ளை வருவான்,
குறி சொல்வது கேட்டு
தெரிந்து கொள்ள

கன்னியர்கள் சிலர்
இரவு விழித்திருக்க
ஆயத்தம் ஆகினர்..,

நிறை மாத கர்ப்பிணி
பெண்ணொருத்தி
பிள்ளை என்னவாய்
இருக்குமென
ஆவலாகிறாள்

மாமியார் நினைத்து
அச்சம் பூணுகிறாள்
கள்ளிப் பால் பூமி!

தெருக்களில்
விளையாடித் திரியும்
சிறார்கள் அனைவரும்
கருக்கலிலே
வீடடைக்கப் பட்டனர்..,

தன் ஆயுட்காலம்
முடிவினை அறியவும்,
திண்ணைக் கிழம் ஒன்று
காது கூர்மையாக்குகிறது!

கோடங்கி வீற்றிருக்கும்
வீதியில்
சாவுக் குருவி ஒன்று
பாடிச் சென்றதாம்..,

புலம் பெயர்ந்து
கொண்டிருக்கிறான்
இவர்கள் உறக்கம் தொலைத்து
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்..,

இன்னும் வருவதாயில்லை
இவர்கள் மேல் நம்பிக்கை
இவர்களுக்கு!

என்னையும் அறியாது
உன் புகைப்படம்
கையிலேந்தி அமருகிறேன்..,


என் விரல்கள்
புரட்டும் பக்கங்கள் நின்று,
கண்ணில் காட்சிகளாகி


வரிசையாய்
கோர்க்கப்பட்ட
நிகழ்வுகள் யாவும்


தனித்தனிச் சுவடுகளை
முன்னிறுத்திக் கொள்கிறது..,
எனை கொல்கிறது!


இரத்த நாளங்கள்
கண்களை பிளந்து
நீரென தெறித்து விழ


கண்ணாடித் திரையில்
விழும் பிம்பம் ஒன்று
கதறி அழுவது கண்டு,


யாரும் பார்த்திடா
வண்ணம் எனதறை
தாழிட்டுக் கொண்டேன்!


இரவின் நிசப்தத்தில்
என் அழுகுரல்
கேளாதிருக்க-என்
கை கடித்திருந்தேன்..,


எவனோ ஒருவன்
கதவு தட்டி நிற்க
திறக்க முயன்று
தோற்றுப் போகிறேன்
என் புன்னகையிடம்!

தத்தி தத்தி
அம்மா என்றும் என்றும்
அப்பா, அத்தை என்றும்
அழைக்க துவங்கிய
குழந்தைகள்-இன்று


அம்மி(மம்மி) என்றும்
தாடி (டாடி) என்றும்
மழலை பள்ளியிலே!


கரும்பலகையின் மேலே
மூலையில்
மொத்த எண்ணிக்கையும்
இன்றைய வருகையும்
பதியப் படுகிறது..,


குறிப்பெடுக்க தவறிய
வீட்டு பாடங்கள்
அலைபேசி வாயிலாகவோ
சக மானவணிடமிருந்தும்
குறிக்கப் படுகிறது..,


முன்பு போல் இன்றி
அடிக்கும் கம்புகள் குறைத்து
புத்தகம் ஏற்றப் பட்டுள்ளது..,


கூலி வேலைக்கு
செல்லும் ஆட்கள் போன்று
வேனில் ஏற்றியும்
பின் இறக்கியும்
விடப் படுகின்றனர்..,


அப்பாவின் தோள் பிடித்தோ
அம்மாவின் கைபிடித்தோ
செல்ல முடியாமல்!


விளையாடும் இடங்களும்
கணினி என்றாகி விட
கண்களுக்கு கண்ணாடி..,


ஒரு சுழலுக்குப்  பின்


தாய் மளிகை சாமான்
எழுதுடா என்றால்
தமிழ் பேசத் தெரியும்
எழுதத் தெரியாது என்கிறது
தமிழ் பிள்ளை!

வெற்று குழி

Thursday, September 15, 2011 | 0 comments »

குவியல் குவியலாய்
நீண்டு கிடக்கும்
மணல் மேடுகளில்

கற்றாளை செடிகள்
முட்கள் நீட்டியும்,
பாம்பென நீளும்
சில கொடிகளும்
படர்ந்து கிடக்க..,

ஒவ்வொரு நீள்
குவியல் நோக்கி
ஒற்றையடி பாதையும்
பயணிக்கின்றன..,

இறுதியாய் உடைக்கப்பட்ட
கலசத்தின் துண்டுகளும்
பூக்கள் உதிர்ந்த
நார்களும்
எஞ்சியிருக்க,

வருடத்தின் ஒருநாள்
சிறு மெழுகுவர்த்தியோ
ஒரு மாலையோ
வைத்துவிட்டு
செல்கின்றனர்..,

கரையான்
அரித்து விட்டு போன
அந்த வெற்று குழியில்!

கோயில் கல்லமர்ந்து
ஊர் நியாயம் பேசும்
பெருசுகள்
தகப்பனார் பெயர் சொல்லி
இன்னாரு மகன்
இறந்துவிட்டான் என்றும்,

திண்ணை பேச்சி நடத்தும்
கிழவிகள் கூட்டம்
தாயின் பெயர் சொல்லி
அவ மகன்
இறந்துவிட்டான் என்றும்,

தெரு கூடி
நின்று பேசும்
நடுத்தர வயசுகாரிகள்
அவளுக்க புருஷன்
இறந்துவிட்டான் என்றும்,

வயசு பெண்கள்
அவளுக்க அண்ணன்
இறந்துவிட்டான் என்றும்,

சிறார்கள் எல்லாம்
அவனுக்க அப்பா
இறந்துட்டார் என்றும்
பேசி திரிய

இதயம்
கனக்கச் செய்யும்
ஒரு தாயின் அழுகுரல்...,

பட்டமரம் நானிருக்க
பச்சை மரம் நீயின்றி

ஆலமரம் நானிருக்க
அதில் விழுது நீயின்றி

கருவில் சுமந்தவள்
நானிருக்க
கல்லறை வரை சுமக்க
நீயின்றி...,

தொட்டில் போட்டவள்
நானிருக்க
வாய்க்கரிசி போட
நீயின்றி..,

தோளில் போட்டு
தாலாட்டிய-உன்
தகப்பனிருக்க
கொள்ளிகுடம் தூக்க
நீயின்றி..,

நீ தொட்டு பொட்டு
வைத்தவள் தனித்திருக்க
அவள் துணைக்கு
நீயின்றி,

ஊர் போற்ற
வாழுவாய் என்றல்லவா
நானிருந்தேன்..,

ஊர் போட்ட
மாலையிலே
நீ உறங்க,

ஏதுமறியா
உன் பிள்ளை இந்நாளில்
"ஈ" ஆடாது உன் முகம்
விசிறி நிற்க,

பின்னாளில் தேடுவானே
நீயின்றி வாடுவானே
என்ன சொல்லி
நான் தேற்ற....

(__________________)

Tuesday, September 13, 2011 | 0 comments »

நீயும் நானும்
தனித்திருப்பதையும்,
நீயின்றி-நான்
தவித்திருப்பதையும்,
யாரோ ஒருவனால்
ரசிக்கப்பட்டுக்
கொண்டு தான்
இருக்கிறது-அது
என் அறையில்
தொங்கி கொண்டிருக்கும்
ஒட்டடையாகவோ-இல்லை
வலை பின்னி வாழும்
சிலந்தியாகவோ இருக்கலாம்!

ஒரு நத்தையென
நினைவுகளை
சுமந்துகொண்டு
நடக்கலானேன்..,


அதிகாலை காட்சிகள்
அவ்வளவு எளிதாய்
எதையும் கடக்க
அனுமதிக்கவில்லை!


பாதங்கள் வழியே
செம்மண் புழுதிச்
சாரல்கள் என்
உடலேறி ஆரவாரம்
செய்தன!


கதிரவன் வெளிச்சம்
துணை வாங்கி
மலர்ந்து நிற்கும்
கள்ளி பூக்கள்
ரசித்து நடக்க,


தட்டான்கள்
ராஜா, ராணி
ஆன கதையும்
என்னில் இன்று
நினைவில் தான்!


வெள்ளை சிகப்பு நிற
அரளி பூக்களும்
பூப்பறிக்கும்
சிறுவர் சிறுமிகள்
சிலாகித்தலும் கண்டு


இன்னுமொரு முறை
டவுசர் சட்டை போட்டு பார்க்க
ஆசையும்
வந்ததெனக்கு!


பனை ஓலைப் பட்டை
பிடித்து
நான் பருகிய
பதநீரும்
மாங்காய் துண்டுகளும,


இன்றும் அதே
பனைமர காட்டில்
எனக்காய் காத்திருப்பதாய்
தொலை பேசி
அழைப்பிருக்கு!


இதோ இந்த
ஒற்றை கால்
கொக்கின் தவத்தினை போல்
ஒத்திருக்கிறது
எனது இன்னுமொரு கனவு!

சிறிது சிறிதாய்
குச்சிகளும்
தேங்காய் நார்களும்
காற்றில் வெடித்து சிதறிய
இலவம் பஞ்சிகளினாலும்
வடிவமைத்தேன்...,


இன்று
கேட்பாரற்று கிடக்கும்
கூட்டினில்
சில குயில்களும்
வாழ்ந்து சென்றதை
என் குஞ்சிகள்
அறிய வாய்ப்பில்லை!

Blogger Wordpress Gadgets