காலை 4:37

Monday, September 28, 2015 | 0 comments »

பூனை தன் குட்டிகளை உண்பது பற்றி
விடியற்காலை 4:37–க்கு
அழைத்துக் கேட்கிறாய்

புணர்ச்சி வேகத்தில் கட்டிலிலிருந்து
புரண்டு விழுந்ததாய் கனவு

காதலை ஏற்றுக் கொண்டதும்
அடிநாவில் ஊற்றெடுத்த எச்சிலென
தேவை இருப்பதில்லை என்றேன்

“அந்த நிறம் தான் க்யூட்” என்று
வாங்கி வரச்சொன்ன
குறுஞ்செய்தியை நினைவு படுத்தி

கனவிலிருந்து தொடருகிறாய்...

வரிகள் மறந்துவிடாதிருக்க 
திரும்பத் திரும்ப 
சொல்லிக் கொண்டு வருகிறேன்
சைதாப்பேட்டை
கோடம்பாக்கம்
நுங்கம்பாக்கம் நோக்கி...

"இது யார்னு பாரு" என்கிறான்
என்ன கேள்வியோ? எதிர் குரலுக்கு 
"ரமேஷ் மாமா கூடத்தான் இருக்கு"
என்கிறாள்...

வர்ணத்தைப் பழக்கும் வித்தையை 
இருவரில் ஒருவர் மல்லாந்து,
அல்லது
இருவரில் ஒருவர் ஒருக்களித்துப்
படுக்கக் கூடிய கட்டிலில்
விழிகளுக்கு மிக நெருக்கமாய்
கொண்டு நிறுத்தித் தொடங்கினாய்...

தூக்கக் கலக்கத்தில்
உடல்களின் நடுவே ஒட்டிக் கொள்ளும்
இரத்த நிறப் போர்வை பிரித்து
இடைவெளி நிரப்பும் சூட்டிலிருந்து தான்
ஆவியாகிப் பொழியத் தொடங்கியது

கேள்வியினோடே சொல்லிக் கொண்ட
அன்றைய பதிலைப்போல இல்லை
உள் எழும் கேள்விகளுக்கு
பதில்கள்...

Blogger Wordpress Gadgets