சோகம் இன்னதென
சொல்லி விடுவதில்
அவ்வளவு இயலாமை எனக்கு

மெளனத்திற்கான சொற்கள்

படைக்கப்படாத இவ்வுலகில் அதனை
வெளிப்படுத்துதல் இயலாதொன்று

மெளனத்திற்கான உருவத்தினை
கண்ணீரிலோ பிதற்றலிலோ
காட்டிவிட முடியா காலச் சூழ்நிலை

கை காட்டும் திசையெங்கும் பார்க்கும்
கைக்குழந்தை போல
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
ஆறுதலென்று எவரும் இல்லை

உறவுகளின் நடமாட்டமும்
கேலி பேச்சுகளிலும் எழும்
கூச்சலின் ஊடே

பசி மறந்த வயிற்றோடு
பிசு பிசுத்த உடலோடு
வற்றி போன தொண்டையோடு
அறை நோக்கி நகர்கிறேன்

கணங்கள் கனமாய்
கடக்கும் அந்த முதலிரவில்
பாய் போட்டு காத்திருக்கும் கணவனுக்கு
முதலில் எதை பரிமாறுவது?

முந்தானை தரை விரித்து
அதில் தலை சாய்த்து ஒருத்தி
இரயில் நிலையத்தில் படுத்திருந்தாள் 

ஜனங்களின் நடமாட்டத்தில் 
எழும் பேச்சு சத்தம் அறிவிப்பு சத்தம்
எதற்கும் செவி மடுக்காமல் கடந்து போகும்
கால்களை கவனித்திருந்தாள்

சிறுமியின் பிஞ்சு கால்கள்
வயது பெண்ணின் அன்ன நடை
குடும்ப பெண்ணின் பாதவைப்பு
நடு நடுவே காவல் அதிகாரியென
எத்தனையோ கால்கள் கடந்திருந்தன

இன்று வரை கையிலிருக்கும்
ஒற்றைகால் கொலுசு தேடி யாருமே
அந்த பாதையில் வரவில்லை

இவள் காலிலும் கொலுசு
அது வேறொரு வடிவ 
ஒற்றை கால் கொலுசு!

தொடர்ந்து அழைத்தாலும்
கைபேசியில்
பதில் சொல்ல மறுத்தாய்
இல்லையேல் அணைத்து வைத்தாய்

என்னோடு கூடிய
பேருந்து பயணத்தில்-நான்
பேசுவதை கவனிக்காதது போல
அலட்சியபடுத்தினாய்

பொழுதுகள் யாவும் என்னை
குழந்தையென தாங்கிய நீ
ஏனோ முழுவதுமாய் தவிர்த்தாய்

எனது புத்தகங்களில் ஆங்காங்கே
உன் பெயர் எழுதி வந்த நீ
என் பெயர் எழுத துவங்கினாய்

எனது கைக்குட்டை மடிப்பில்
உனது வியர்வை வாசனை
படியாது பார்த்துக்கொண்டாய்

நேரடி சந்திப்புகள் தவிர்த்தாய்
நெஞ்சோர ஈரம் மறைத்தாய்
அன்பை தவிர்த்தாய் தர மறுத்தாய்

நீ
இன்று சமாதானம் பேச வந்தாயாவென
பூச்செண்டு வைக்கும் போது
புரண்டு படுத்திருக்கலாம் கல்லறையில்!

கூர் தீட்டிய
பென்சில் முனையோடு
கோடு கிழிக்க துவங்கினேன்
கோடுகளற்ற காகிதத்தில்

நிசப்தம் நிறைந்த
அந்த மொட்டை மாடி இரவில்
காற்றின் சலசலப்பு
ஏதுமில்லாதிருந்தது..

தூரத்தில் புணர்ந்து கொண்டிருந்த
பண்பலையின் ஒரு பாடல்
அந்த ஓவியத்திற்கான
முதல் கவனச் சிதறல்

புருவங்கள் மட்டுமே
தீட்டப்பட்டிருந்த அக்காகிதத்தில்,

மெழுகு உருகிடவும்
நிலவு வருடிடவும்
அவள் கவிதையாகிறாள்
நான் கவிஞன் ஆகிறேன்!

அம்முதியவருக்கான அறையில்
மின்விளக்கு பொருத்திய மேஜை
ஒரு மர நாற்காலியும்
ஜன்னலோரத்தில் இடப்பட்டிருந்தது

கதவின் அசைவுகளில் எழும்
கிரீச் சத்தமும்
புத்தக பக்கம் புரட்டுகையில்
காற்றில் சலசலக்கும் காகித சத்தமும்

தண்ணீர் குவளை, சாப்பிடும் தட்டு
முதியவரின் இருமல் சத்தம் தவிர,
வேறெதுவும் அறியாமலிருந்தது அந்த அறை

சப்த நாடியும், மொத்த சத்தமும்
அடங்கிய பின்பொரு நாளில்
விட்டுப் போனவைகளின் குறிப்புகள்
இருக்குமாவென அப்புத்தகம் புரட்டியதில்

புருவங்களின் ரோமங்கள்
365வது பக்கத்தில்
அதிகமாய் உதிர்ந்திருந்தன!

தேநீர் கடைகளிலும்
பேருந்து நிலையங்களிலும்
மழைக்கு ஒதுங்குகையில்,
நண்பனோடு
சட்டையை குடையாக்கி நின்ற
குளக்கரை நாவல் மரம்
இன்றும் பசுமையாய்!

தன்னை மறந்து பகிர்நத
உதட்டு முத்தத்தில்
சட்டென இதழ் பிரித்து
அவள் அப்படி கேட்டிருக்க கூடாது

பின்னொரு இரவில்
நெருங்கி வருகையில்
ஏன் அப்படி கேட்டாய் என
அவளிடம் கேட்டிருக்க கூடாது

வெயில் நிறைந்த பொழுதில்
அன்று நான் அப்படி பேசிருக்க கூடாதென
ஞாபகத் தணலில் வெந்து வெந்து-இன்று
அவள் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது

இன்னும் அதை  நினைத்து வருந்துகிறாயா என
அவளின் மன்னிப்பினை
உதாசினப்படுத்தியிருக்க கூடாது

நீங்களும் என்னவென கேட்டு
ஆறுதல் சொல்ல வந்து விடாதீர்கள்
நானும் இதை
உங்களிடம் சொல்லியிருக்க கூடாது!

இறந்தவன் உடலுக்கு
விரகேற்றி தீயிட்டு
புகைத்து மிஞ்சிய
சுருட்டினை பற்ற வைத்தபடி

தனது படுக்கைக்கும்
எரியும் சடலத்துக்குமான
இடைவெளியில்

அன்றைய பகல் பொழுதின்
கதறல்களையும்
வந்து போனவனின்
முகபாவனையையும்  காட்சியோட்டி

நண்பன், எதிரி
உற்றவன், உண்மையானவன்
பகைவன், சதிகாரன் என

கால் கடக்கும் இடைவெளியில்
இறந்தவன் வாழ்ந்த வாழ்வினை

காற்றிடம் சொல்லிப்போகும்
இவன்
நம் பார்வையில் வெட்டியான்!

மூன்று முறை மட்டுமே
மழிக்கப்பட்ட பிளேடோடு
அறை தாளிட்டு விளக்கணைத்து

அலைபேசியின் மங்கிய வெளிச்சத்தில்
தன் இடது கையில்
மேலிருந்து கீழாக கோடு ஒன்று
வரைந்து பார்க்கிறான்

அருகருகே தொடர்ச்சியாய்
கோடுகிழித்து பார்க்கிறான்
எதிலுமே திருப்தியில்லை அவனுக்கு

அறியாமையின் சாயலும்
தவறவிட்ட காலங்களின் பிம்பங்களும்
கசிந்து கிடந்த இரத்தத்தில் கண்டு

மகிழ்ச்சியுற்றான் மயக்கமுற்றான்
இறந்து போனான்-இனி
நீங்கள் அவனுக்கு
கோழை என்று பட்டம் சூட்டி மகிழலாம்!

Blogger Wordpress Gadgets