அறுவடை

Friday, November 30, 2012 | 0 comments »


என் பால்யத்தில் விதைத்தவைகளை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்
துணை வேண்டிடும் இக்காலத்தில்

உணர்தலின் நிமித்தமாய் அழுதிடும் வேளையில்
மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்
உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று

சிலாகித்து பெருமூச்செடுக்கும் அளவிற்கு
பூங்காவில் அறிமுகமான நபர் ஒருவர்
நெருக்கமாகவே இருக்கிறார் இதயத்திலும்

இழந்து விட்ட மனைவியின் சம பங்கினை
பனி விலகி வெயில் எழும் பொழுதில்-என்
பேரனை நினைவூட்டும் வகையில் சொல்லத்துவங்கினார்

பேத்தி சொல்லிக்கொடுத்தாளென
கம்பிளி பின்னிக்கொண்டிருக்கும் மனைவியை
நாளை அழைத்துச்செல்ல வேண்டுமென,

இவ்விரவும் தூக்கத்தில் மரணம் தாவென
ஒருமுறை கடவுளிடம் வேண்டியாயிற்று
விடியலில் நானிருந்தால் அலலது இருவருமிருந்தால்

சக்கரம் வைத்த தள்ளுவண்டி ஒன்றினை
போனமுறை வருகையில் அடிக்க கை ஓங்கிய
மகனிடம் கேட்க வேண்டும்!

அதே கண்கள்

Friday, November 30, 2012 | 0 comments »


அவளின் பிம்பத்திற்கென
ஒரு அடையாளமும் நிறமும்
பதிவாகியிருந்தது கண்களில்

கோபத்தில் கனன்று நிற்கும் கண்கள்
குறுக்கிப் பார்க்கும் புருவம்
உதட்டசைவு என இவைகளும் அடங்கும்

பழக்கப்பட்ட இடங்களில் எல்லாம்
அவளுக்கென ஒரு நிறமிருக்கும்-அது
சுடிதார் நகச்சாயமென வேறுபடும்

காமம் தலைதூக்கும் வேளையில்
கண்மை தோள்பட்டை உலர் உதடு
கழுத்துநரம்பு என நிறங்களில் பதிவாகியிருந்தது

விபத்தில் நிகழ்ந்த மரணத்தில் விழி இடம்மாறலில்
தொட்டி மீன்களும் விளையாட்டு பொம்மைகளும்
நிறமாகிக்கொண்டிருந்தது ஒரு குழந்தையின் கண்ணில்!

உன் அருகாமையும்
அரவணைப்பும் வாய்க்காத
என் குழந்தைப்பருவத்தை

நீ மெல்ல மெல்ல மீட்டுகிறாய்

அப்பாவின் சட்டைக்கு அடித்துக்கொள்ளுதல்
சரிசம பங்கில் எனக்கென விட்டுகொடுத்தல்
கூட்டாஞ்சோறு பொங்கிவிளையாடுதலென
எல்லாவற்றிலும் என்னுடன் பிறக்காத உன்னை
பாவடைசட்டையுடுத்தி காட்சியோட்டுகிறேன்

திருவிழாக்காலம் நல்ல நாட்களென
ஏதேனும் ஒன்றில் உன்னையும் நிறுத்திவைக்கிறேன்
நீ கூறிய அறிவுரைகளையெல்லாம்
என் பால்யத்தில் பொருத்திப்பார்த்து ஏங்குகிறேன்

உன் திட்டலுக்காக ஏதேனும்
விளையாட்டாய் பேசிவிட்டு திட்டுவாங்கி
சந்தோசமடையும் மனதை பின்னோக்கி கூட்டிப்போகிறேன்
ஒரு வேளை அப்போது அடித்திருப்பேனோவென்று
பரிதாபப்பட்டு பின்பு சிரித்தும் கொள்கிறேன்

உனக்காக ஊரில் சண்டை போட்டிருப்பேனா
உன்னை கல்லூரியில் விட்டிருப்பேனா என்றெல்லாம்
என் காலச்சக்கரத்தை சுழற்றிக்கொண்டிருக்கிறேன்
என் கற்பனையின் ஊற்றுகள் வார்த்தைகளிலிருந்து தப்பி
கண்ணீருக்கு வழிவகுக்கின்றன

உன் முகமெனக்கு பார்த்த அன்றே அக்காவென
அழைக்கத்தோன்றியது ஏன் என அவ்வப்போது
வினவிக்கொள்வேன் என்னுள்
எங்கேயும் பகிர்ந்திடாதவொன்றை உன்னிடம் உரைக்க
அக்காவின் நிலை தாண்டி தாய் ஆக்கப்பட்டிருந்தாய்

அக்கா என்பவள் யாதெனில்
என்று அன்றைய பொழுதில் ஏங்கவும் வைத்து
உன் வீட்டு உடன் பிறப்பாக்கி திட்டியும்
உன் அருகாமைக்கும் ஏங்கவைத்திருக்கிறாய்

உன் சமையலின் ருசியறியா என் நாவிற்கு
அன்பினால் பசியாற்றியிருக்கிறாய்
உன் வரவு அற்ற வேளையில் பரிதவித்திருக்க
எதுவும் நடக்காதது போல பேச்சோடு பேச்சாய்
பொழுதினை நகர்த்தி சென்றிருக்கிறாய்

காற்றில் எழுதினாலும் தீரா
உன் அன்பின் சுனையை தூய ஆத்மாவை
தினம் தினம் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
சின்ன அதட்டலுடன் போனில் மிரட்டியோ
அன்பினை குழைத்தோ உன் குரலை பதிவு செய்...

இளைப்பாறிக்கொள்கிறேன் உன் பிரியத்தின் பிடியில்!


பிடிமானங்களற்று உழலும்
என் மீதான நம்பிக்கையை
நீ கொடுப்பாயென காத்திருக்கிறேன்

நிழலுக்கு ஏங்கும் என் துயர்கள்
வடிகாலமைத்து மொத்தமாய்
இரவுகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது

எவ்வளவு குடித்தும் நிரம்பாத
உன் நினைவுகளின் குருதியை
கனவுக் குழாய்கள் மேலும் உறிஞ்சுகிறது

என் யூகங்களில் ஆளும்
உன் கணிக்கமுடியாதொரு போக்கினை
மேலும் மேலும் யோசித்து வெதும்புகிறேன்

உன் அனுமதியின்றி உன்னை இம்சிக்கும்
என்னை மணிக்கட்டிலறுத்துவிடு
பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறேன்!

காரணங்கள்

Friday, November 30, 2012 | 0 comments »

அதற்கான காரணங்களை
சொல்லிவிடுவதாய் சொன்ன
உரையாடல்களை நினைவுபடுத்தவேண்டியிருந்தது

எதிர்பார்ப்புகளை தகர்ந்து காய் நகர்த்தும்

வித்தை கற்றவள் போல
என் மீது குற்றம் ஒன்றை சுமத்துகிறாள்

கோபத்தின் வாசல் நெருங்குவதைக்கண்டு
தனக்கு நிகழ்ந்த சோகம் ஒன்றினை
கண்கள் நிறைத்து பேசத்துவங்குகிறாள்

அழுதுவிடுவாளென்ற அச்சத்தில்
ஆறுதலுக்கான சொற்களை பதப்படுத்துகையில்
பிரியமில்லையென குற்றம் சுமத்துகிறாள்

ஒரு கெஞ்சலுக்கு வழி வகுத்தவளாய்
விழி நோக்குகிறாள் உடையும் நீரை
துடைப்பதற்காக நெருங்கும் கை தடுக்கிறாள்

பொழுதுகளை தின்று விட்டதாய்
மன்னிப்பு கேட்டவள் மெலிதாய் புன்னகைத்து
சகஜ நிலைக்கு வந்துவிட்டதை காட்ட மெனக்கிடுறாள்

அதற்கான காரணங்களை
சொல்லிவிடுவதாய் சொன்ன
உரையாடல்களை நினைவுபடுத்தவேண்டியிருந்தது!

கண்களை கண்களால் தின்று
காதோரக்கூந்தலை பாதம்போல பற்றி
மூச்சுக்காற்றினை நுனி மூக்கில் நனைத்து
மூடிய விழிகளில் உள் நுழைந்து
முத்தத்திற்கு முந்தைய நிமிடங்களில்

தளிர்விடும் மூன்றாம் பாலினை
அதன்பின் பகிரும் உணவூட்டலுக்கு
முத்தமென்று பெயரிடு!


காய்த்துக்கிடக்கும் காய்களை
கனிகளாக்கும் யுக்தியை
காய்களின் காம்பு முறிக்காமல்
இலைகள் தவிர்த்து
சருகுகளின் கூடாரத்தில் புதைத்து
கனியக் காத்திருந்தது
மாந்தோப்பும் பால்யமும்!


யூகங்களில் நீர்த்துப்போன
பிரியத்தின் கொடிகளை படரவிட்டு
வேரறுத்ததை புலம்பித்தீர்க்கிறது மனம்

இயலாமையிலும் பிடிவாதத்திலும்
எரிந்த சாம்பலினை
தடயம் தொலைக்க முடியாது திணறுகிறது

என்றோ நின்றுவிட்ட உரையாடல்களை
புரட்டிப்பார்க்க தூண்டுகிறது
நினைவெனும் கையேடும் நாள்காட்டியும்

பிரிவின் ஆற்றாமையை அழுதிட விரும்புகையில்
தொண்டையை கவ்விப்பிடிக்கிறது
விடைபெறுதலின் நிமித்தமாய் நிகழ்ந்த
முத்தக்குறிப்பும் முன்னறிவிப்பும்!


பிறகொருமுறை
அதிசயமாய் அழைத்திருக்கிறாயென
வினவவும் "தோணிச்சி" என்றவன்
சட்டென தொலைபேசியைத் துண்டித்தான்

மன்னிப்பு கேட்க அழைத்திருப்பனோ
திட்டுவதற்கு அழைத்திருப்பனோ
நிச்சயக்கப்பட்டிருக்குமாவென-பட்டியல்
நீண்டது இருவருக்குமான இடைவெளிவரை

தொடர்பு எண்ணை அழித்துவிட்டதாய் சொன்னவன்
எப்படி அழைத்தான்?
நானும் அழைத்துவிட்டதாய் சொன்னது நினைவில்வர
யூகிக்கும் போக்கு கடிவாளமிழந்தது

பின்பு
திருப்பி அழைத்திட வசதியிருந்தும்
மனதிற்கும் அறிவிற்குமான போராட்டத்தில்
இருவருமே வென்றோம்

அவனும் அழைக்கவில்லை
நானும் அழைக்கவில்லை

முன்னமே தீர்மானித்த இடத்திற்கு
கடந்த முறை அவள் திமிறி உடைந்த,
வளையல் துண்டுகளோடு பேசிக்கொண்டிருக்க

இரு இதழின் இணைவின் நடுவிலிருந்து

தவறி விழுந்தது நாணமும்
பிடிவாதமாய் வரவழைத்த கோபமும்

தொடுதலுக்கு அனுமதியா பார்வைவிழ
விரலோ நகநுனியில் உராயத்துவங்கியது
பேசமுடியா மொழிகளை விதைக்கத்துவங்கியது

முத்தத்திற்கு அடிபோடும் எண்ண அசைவுகளை
உதட்டில் விழிகளால் மேயவிட
சூடேறும் மூச்சினால் ஆண்மை சமைக்கிறாள்

சூரியன் சிவக்க சிவக்க பேசித் தீர்க்கையில்
கடலெனும் விழிகள் இலக்கணம் மீறி
அலையடித்தது வலப்பக்கமும் இடப்பக்கமுமாய்

வாடைக்காற்று கூந்தல் கலைக்க
முன்னும் பின்னுமாய் முன்னேறிக்கொண்டிருந்தது
கைகளும் உதடுகளும் அவள் மேனியில்!

உன் வாசனை

Friday, November 30, 2012 | 0 comments »

உன் அனுமதிக்காக காத்திருக்கும்
விழி நீரை உடைத்துவிட மெளனமோ
பெரும்சத்தமோ போதுமானதாகயிருக்கிறது

வருகையை எதிர் நோக்கியிருக்கும்

என் பேராவல்களை-நீ
கண்டுகொள்வதில்லையென அறிந்தும்,

மகள் வயிற்றுப் பிள்ளையின் முத்தத்திற்கு
கன்னம் திருப்பி காத்திருக்கும்
பாட்டியின் எதிர்பார்ப்பு போன்றது அது

கிறுக்கலுக்குத்துணியும் வேளையில்
பெயரெழுதி விளையாடும் கடற்கரையின்
பிசுபிசுப்பு ஞாபகத்தையும் அப்பிவிடுகிறது

எதிர் இருக்கையில் யாரும் வேண்டாமென
தீர்மானித்து ஒதுங்கும் தேநீர் கடையில்
நாசி துளைக்கிறது உன் வாசனை!

சாயல்

Friday, November 30, 2012 | 0 comments »

அவன் அவளுக்காக விசும்பும் பொழுதெல்லாம்
நான் என்னிடமிருந்து தப்பி
அவனுக்காக அழுது தொலைக்கிறேன்

ஒவ்வொரு நரம்புகளாய் செயலிழக்க

வார்த்தை நகங்களால் கீறிடுகிறாள்-அது
அவனுக்கும் பிடித்தமானதாய் இருக்கிறது

அடைக்கோழியின் முனகல் போல
நினைவுகள் மென்மையாய் இசைக்கிறது
பின்பு அணுஅணுவாய் இம்சிக்கிறது

செவியிழந்து வீதி அலையும்
சுயமிழந்த ஆன்மாவைப்போல
பாதையறியாது வீதி அலைகிறான்

நான்கு பக்கமும் கண்ணாடி பதித்த
துணிக்கடையொன்றின் தூண் கடக்கையில்
எனையறியாது வேகமாய் கடக்கிறேன்

அவன் என் சாயலில் இருப்பதால்!


அவளுக்குத் தெரிந்திருக்கலாம்
நேரத்திற்கு வீடு திரும்பமுடியாதென்று
கையில் பனிக்காலத்து சொட்டருடன் வந்திருக்கிறாள்

அவள் வீட்டு பூனைக்குட்டிகளின்
தலைவருடல்கள் நினைவில் வருகிறது
கைப்பையில் தொங்கும் நாய்குட்டி பார்க்கையில்

தன் காதலை அதன் முறிவை
முறையாக விடைபெற்றுச்சென்றதை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாள்

காயும் உதட்டினை நாவால் நனைத்தவாறு
பீறிட்டு எழும் விசும்பல்களை
உதடு கடித்து நிறுத்த எத்தனிக்கிறாள்

இரவுகளின் ஓலத்தை தனிமையின் கூடாரத்தை
வேண்டுதல் போல ஒப்புவிக்கிறாள்
தேவாலையத்தில் நிகழும் மன்றாட்டுகள் போல

ஒற்றை ரோஜாவும் வாழ்த்துமடலும் தருபவள்
இம்முறை பூங்கொத்து வைத்துச்ச்செல்கிறாள்
என் கல்லறையில்!

கால்களுக்குள் தவழ்ந்து
முகம் பார்க்கையில் ஏமாறும்
குழந்தையென கழிகிறது பொழுது


ஒரு பரிதவிப்பும் காத்திருத்தலும்
இன்னதென யூகிக்க முடியாத
இத்தருணத்தில் வெறுமையாள்கிறது

இருத்தலில் இருப்பு கொள்ளாமல்
உந்தித்தள்ளும் மெளனவலையில்
சிக்கிய எண்ணங்கள் நீட்சியாக

ஒரு ஊமையின் சொற்களை
கை தேர்ந்தவன் போல மொழிபெயர்க்கிறேன்
யாவும் பிழைகளாகிப்போக

ஒரு கவிதைக்கரு சிதைகிறது
மேலுள்ள வரிகளைப்போல
வலிகளைப்போல!


இரவெல்லாம் விரவிக்கிடக்கும்
பனிக்காற்றில் அவளின்
மூச்சுக்காற்று அதற்கு எதிர்பதம்

அறையெங்கும் பரவிய நினைவு விளக்கில்
தேகம் ஒட்டிய ஆடைகள்
இடைஞ்சல்களாகவும் இம்சைகளாகவும்

ததும்பும் கோப்பையின் நீரானது
தொண்டைவழி வழியாமல்
குடிப்பதற்கு பாவனை செய்கிறாள்

மேலும் கீழுமாய் போய்வரும்
தலையசைப்போடு அங்குமிங்குமாய்
பார்த்துப் பார்த்து விசும்புகிறாள்

தலையணை ஏந்திய தலையிடையே
கைமடித்து சுவற்றினில்
துவாரமிடுகிறாள் காது வழியே

எப்போதும் போல குறட்டையொலியெழ
புகைப்பட கோப்புகளை கையிலேந்தி
அழத்துவங்குகிறாள்!


வலிக்கிறது என்பதைவிட
அடியே வலிக்கிறது என்பதில்
கூடுதலாய் ஒரு முத்தம்!

நீ வேலை செய்ய கொஞ்சுவதும்
நான் திமிருவதும்
ஒரு முத்ததிற்குத்தானென
தெரிந்தே வைத்திருக்கிறது காலம்!

ரிமோட்டை கை மாற்றுவதற்கு-அவள்
பயன்படுத்தும் சாமர்த்தியத்தின் பெயர்
முத்தம்!

சமையலறைக்கும் பூஜையறைக்கும்
செல்லும் வழியில் ஒன்று கொடுப்பாயே
மறந்துவிட்டேன் என்றால்
ஹ்ம்ம்ம் என முத்தமிடுவாள்!

அதிகாலை தூக்கத்தில்
முத்தமிடுகையில் ஒரு கெட்டவார்த்தை
சொல்வாயேன பகல்பொழுதில் கேட்டால்
சிணுங்கித் தொலைக்கிறாள்!

உனக்கொரு வாய் எனக்கொரு வாய் என
ஊட்டிக்கொள்வதில்
கைகளுக்கு ஓய்வு!

அடிபோடியென அலுத்துப்போகையில் எல்லாம்
பின்னங்கழுத்திலிருந்து கைபோட்டு
முத்தமிடுவாயே
அது கவிதை!

முகம் முழுக்க பயிறு பூசியிருக்கிறாயே
எங்கே முத்தமிடுவதென்றால்
இதழை இரண்டாய் பிரித்து
சமமாய் பங்கிடச்சொல்கிறாள்!

அவசரமாய் வெளியில் செல்கையில்
குளித்துக்கொண்டிருப்பவளை அழைத்தால்
உதட்டளவு கதவு திறந்து வழியனுப்புகிறாள்!

மிளகாயை கடித்துவிட்டதாய்
தண்ணீர் கோப்பையை தவிர்த்து
இதழ்குடிப்பது அவளின்
ஊடலுக்கு பின்னதான வழக்கம்!

அப்படி என்னடி
பரணில் தேடுகிறாய் என்றேன்
எப்பவும் நீ காலையில் கொடுக்கும்
முத்தத்தை என்கிறாள்!

சேலை தலைப்பை உதட்டில்
கடித்தபடி ஊக்கு மாட்டுகையில்
முத்தமிட தோன்றுகிறதே ஏன் என்றேன்
பதிலை கண்ணாடியில் காட்டுகிறாள்!

விபத்து

Friday, November 30, 2012 | 0 comments »

தாடி குத்துகிறது என்று முத்தமிடாது
திமிறிய மகளை இன்று பார்க்கையில்
அழுகையாகத்தான் வருகிறது எனக்கு

ஈக்கள் ஆடும் சடலத்தில்

கருமமே கண்ணாய்
எவனோ ஒருவன் விசிறிக்கொண்டிருக்கிறான்

தலைக்குப்பின்னால் புகையும்
ஊதுபத்தி தீரும் போதெல்லாம் குரலொன்று
ஒலிப்பதும் கொழுத்தி வைப்பதும் தொடர்கிறது

கடைசிப்பேருந்தென தவறவிட்டவர்களெல்லாம்
நடுஇரவிலும் அழுது தூக்கத்தை,
அகால மரணத்தை விசாரிக்கின்றனர்

விடியும்வரை பொறுத்திருந்து நீராட்டி
காரியங்கள் செய்து புத்தாடையுடுத்தி
மீண்டும் அழச்சொல்லி கிடத்தியிருக்கின்றனர்

கடைசியாய் முகம் பார்ப்பவர்களையும்
வாய்க்கரிசி போடுபவர்களையும்
வெட்டியான் அழைக்க மகளுக்கு புரிந்துவிட்டது போல

ஈரம் வற்றிய என் உதட்டில்
கன்னத்தை ஒத்தி ஒத்தி எடுக்கிறாள்
எனக்கு மீண்டும் அழுகையாய் வருகிறது!


அவளுக்கான என் முதல் சட்டையும்
எனக்கான அவள் முதல் சுடிதாரையும்
அணிந்து வருவதென்பது தீர்மானிக்கப்பட்டிருந்தது

பரிச்சயமான இரயில் நிலையத்தில்
இருவரும் சிரித்து மகிழ்ந்த பொழுதினை
நினைவிலாட அவ்விடம் வேண்டுமென்றாள்

அவளோ நானோ அழுவது கூடாதென்றும்
தொட்டுப்பேசுதல் வேண்டாமென்ற
ஒத்திகையும் நிகழ்ந்திருந்தது அலைபேசியில்

கண்களைப் பார்த்தால் தன்னையிழந்துவிடுவதாய்,
இரவில் சந்திப்பதென நேரம் கூறியிருந்தாள்
ஞாபகமாய் ஏதேனும் வேண்டுமென வேண்டியிருந்தாள்

பரிமாறிக்கொண்டவைகள் யாவற்றையும்
தடம் தெரியாது தொலைத்துவிடச்சொல்லி
மூச்சுக்கொருமுறை சொல்லிக்கொண்டாள்

பயணத்தின் வழியெங்கும் கொஞ்சிப்பேசிய
எனது குறுஞ்செய்திகள் யாவையும் அனுப்பியபடி
கண்ணீர் பொம்மையை கூட இணைத்திருந்தாள்

திட்டமிடுதலில் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தேர
முன்னறிவிப்பில்லாது கலந்துவிட்ட காதலை
சபித்தபடி மடியில் சாய்ந்து கொண்டாள்

நெடுந்தூர பயணமோ கை கோர்த்தலோ
கனவுகளின் நிகழ்வுகளோ மடிந்து கொண்டிருக்கிறது
ஆதலால் முத்தமிடு என்றாள்...

இருவரின் இதழ்களிலும் நஞ்சுவாசனை!

பிணங்கள் எரியும் காட்டில்
அதன் வாடை நுகர்ந்து
குளிர்காய அழைத்துச்செல்கிறாள் நடுநிசியில்

சிதையூட்டப்பட்ட உடல்

மழையில் நனையாதிருக்க
மோடு போல போர்த்தியிருந்தது ஓடு

ஏற்கனவே சொருகி வைத்திருந்த
கொண்டையூசி எடுத்து
விரல் கிழித்து இரத்தம் பீச்சுகிறாள்

சில்லுகளாய் உடைக்கப்பட்டிருந்த
கலையத்துண்டுகள் சேகரித்து
ஒவ்வொரு சொட்டுகளிட்டு அடுக்குகிறாள்

நிசப்தம் உடைத்து
பேசச் சொல்லி கட்டளையிடுகிறாள்
நான் ஊமையென்றான் செய்கையில்

நிலவின் ஒளியில் மிளிரும்
கள்ளிப்பூவினை சூடச்சொல்லி
ஈரக்கூந்தலை காட்டி திரும்புகிறாள்

நடுங்கும் கைகளால் கேசம் தொட
மனைவியோ பதறியெழுகிறாள்
கழுத்தை இருக்கிய கைகளை பிரித்து!

நாய் அதன் குட்டிகளை
வேறிடத்திற்கு கடத்திக்கொண்டிருந்தது
மழைக்காலப் பொழுதொன்றில்


வீதியெங்கும் பிசுபிசுக்கும்
குப்பைகளும் அதன் வாடையும் மறந்து
மின்னலாய் ஈர்க்கின்றன ஈன்றகுட்டிகள்

காம்புகளை சுவைக்க எத்தனிக்கும்
கருப்பு வெள்ளை நிற குட்டியின்
துள்ளல்கள் பசியின் வெளிப்பாடு

தார் சாலைகளாலான மண் வீதியில்
இரு வீட்டுக்கான இடைவெளியோ
கதகதப்பான சூழலோ இல்லாத நெடுந்தூர நடை

கடை வாசலெல்லாம் ஆதிக்க கால்களும்
அத்துமீறல்களும் ஆக்கிரமிக்க
மனித இனத்தின் அனாதை ஆசிரமங்களும்

சிக்னலில் கையேந்தி நிற்கும் சிறுமியும்
கைக்குழந்தையின் எச்சில் வற்றிய விழுங்கலும்
நாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!


அவளுக்கான தேடலில் என்னையொரு
காரணியாக்கி சித்திரவதை செய்கிறாள்
மின்சார கம்பியில் விழுந்த பறவை போல

வீதியெங்கும் புணர்ந்துகிடக்கும்
பிம்பங்களை காணச்செய்து
இமை முடியில் கல் கட்டுகிறாள்

அவசரமென விரையச்சொல்லி
விழும் வியர்வை வாசனை பிடிக்கிறாள்
வெட்டியான் பிடியிலிருந்து தப்பிய நாய் போல

ஒரு ஓலத்தை கொண்டாடச்சொல்லி
வெடித்து சிரிப்பவள்-பின்பு
தானாய் கதறியழ துவங்குகிறாள்

தன்னை புணர்ந்தவர்களை அடையாளம் சொல்லி
கொலை செய்ய வேண்டுகிறாள்-அவளுக்கு
பார்வையில்லாதது எத்தனை செளகரியம்!

உமிழும் வார்த்தையெல்லாம்
திட்டுவதும் சாபமிடுவதும் தான்
எதிர் கேள்வியோ எதிராளியோ யாருமில்லை

அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களோ
காலை கொஞ்சம் மாலை கொஞ்சம் நேரம்
எவர் வார்த்தைக்கும் செவிமடுக்காத சுதந்திர நேரமது

ஒரு பரிதாமமோ முகசுழிப்போ
வசைபாடுதலோ இல்லாத பொழுதில்லை
இல்லத்திலோ இல்லாள் இருக்க வாய்ப்பில்லை

வெளுத்துப்போன முகத்தாடியும்
தேகப்புழுக்கம் நிறைந்த ஆடைகளும்
தனியொரு அடையாளம்

பாதையும் புலம்பலும் பழக்கப்பட்டுவிட
எல்லா காலமும் போல இன்றும்
தேநீர் இருக்கைகள் சொல்லிக்கொண்டிருந்தன

ஒரு காலத்தில் நன்று வாழ்ந்தவன்!


பின்னங்கழுத்தில் வழிந்தோடும்
நுரையோடு தவழும் சோப்பில்
அவளுக்கான அவனின் முகம்

தேகம் சுமக்கும் எலும்பில்
தொட்டுத்தொடாமல் நழுவும்
மென்விரல்களில் துரோக ஊசி

மழையென தூவும் செயற்கை
நீர் பிரிதலில் தலைதூக்கி
அவனென நினைத்து நனைகிறாள்

உதட்டில் தொட்டுவிழும்
நீர்துளிகளுக்கு சாபம் ஊற்றி
நீரை உறைநீராக்க எத்தனிக்கிறாள்

தொட்டியின் நீர் தீர்ந்தும்
நகராமல் காத்திருக்கிறாள்
முதலிரவின் கலவி முடிந்து,

தொலைத்த காதலனை நினைத்து!


பேருந்தின் பின்னிருக்கையில்
சொற்குவியலுக்கு நடுவே
லாவகமாய் தீட்டப்பட்டிருந்தது இதயம்

அதன் நெளிவுகளை உள்ளடக்கிய
வடிவமைப்பில்
எந்தவொரு கீறலும் இல்லாமலிருந்தது

கத்தியின் துணையால்
நிகழ்ந்திருக்கும் காதல் வரைவும்
ஒருசேர்ந்த தடித்த கோடும் வியப்பு

மேடு பள்ளங்கள், திடிர் நிறுத்தம்
இறங்க வேண்டிய இடம், கூட்ட நெரிசல்
நடத்துனரின் கண் தப்புதலென

ஒரு மெனக்கெடலின் தீவிரத்தை
அதீதக் காதலை தன்னை மறத்தலை
காயத்தை வெளிப்படுத்த போராடியிருக்கலாம்

அல்லது
அதன் கிழிப்புகள் நேற்றைய கொலையின்
ஒத்திகையாகக்கூட இருக்கலாம்!

ஒத்திகை-3

Friday, November 30, 2012 | 0 comments »


யாரோ ஒருவன் நிர்ணயிக்கும்
நேரத்தை அலைபேசியில்
குறித்து வைத்துக்கொண்டாள்

வலுக்கட்டாயமாய் நிகழும் விழிமூடலை
வலுக்கட்டாயமாய் கிழிக்கும்
முன்னமே பதிந்த நேரக்குறிப்பு

விழிமூடல் மட்டுமே இரவென
பாவித்துக்கொள்பவள்-தன்
பசியின் அலறலை, அவலத்தை

யாதொருவரும் கேட்டிடாதிருக்க
சாலையின் ஒரம் நிற்கும் ஓட்டுனர்
எழுப்பும் ஒலியில் ஒழித்து வைத்தாள்

மென்று துப்புவாள், கழிவில் மறப்பாள்
பேச வேண்டிய வார்த்தைகளையும்
கதறியழவேண்டிய தருணங்களையும்

படபடப்பாய் வந்தமர்ந்து
யாரென அறியாதவனோடு சிரித்து
நீளும் அப்பயணத்தில்

நேற்றைய வேலையின் முடிவினையும்
இன்றைய வேலையின் பதற்றங்களையும்
முன்னிறுத்தி முன்னேற,

மனிதம் தொலைதத கார்பரேட் உலகில்
தானும் ஒரு பிறவியாய் உயிர்ப்பிணமாய்
பத்தோடு பதினொன்றாய் BPO பெண்ணாய்!


தானும் பூப்பறிக்க வருவதாய்
அடம்பிடித்த தம்பியை
இடுப்பிலெடுத்துக்கொண்டாள் அக்கா

தட்டான்களுக்கும்
கள்ளிப்பூக்களுக்கும் அதன் பழங்களுக்கும்
மசியாத தம்பி அழுதுகொண்டேயிருந்தான்

ஆட்டுக்குட்டியின் முதுகிலமர்த்தி
கூட்டிப்போக
ரோமங்கள் உரசி மீண்டும் அழத்துவங்கினான்

தரையிறக்கி நடந்துவாவென்றால்
முள்குத்துமென
பிடிவாதம் பிடித்தான் தம்பி

ஒவ்வொரு மடியாய் பறித்துப்போட்ட
மல்லிப்பூவினை
பிய்த்து விளையாடத்துவங்கினான் தம்பி

தோட்டக்காரனின் அடிக்கும்
அன்றைய கூலியின் இழப்புக்கும் பயந்து
தேம்பி தேம்பி அழத்துவங்கினாள் அக்கா!

கானலின் நீர்குடிக்க ஓடும்
வெயில் மழையில்
இளைப்பாருதலாய்
உன் விழிகள்!

மின் வேலியில்
உயிர்துறந்த பறவையின்
இறகினையொத்த வாழ்வை
மீட்டெடுக்கும் உன் விழிகள்

விரைந்தோடும் கால்களை
நிலை நிறுத்தும்
கொடூரத்தின் எதிர்ச்சொல்
உன் விழிகள்

கடந்துவிட கடத்தப்படும்
விழிகளின்று குவியலாக
காரணம் உன் விழிகள்

எனது குறிப்புகளின்
பின்னதான புள்ளிகளில்
தொக்கி நிற்கும்
கவிதையோடு உன் விழிகள்

சன்னல்வழி
ஒளிபட்டெழும்
கைதி போல நான்
சூரியன் போல விழிகள்

நாளொருமுறை
உயிர்த்தெழும் பாக்கியத்தை
தந்திருக்கிறது-உன்
விழிகள்


எழுதுவதற்கு ஏதுமில்லா
மழைப்பொழுதில்
தூரத்திலொரு ஒப்பாரி
வேண்டுகிறது மனது!

மின் கம்பத்திலொரு
பாட்டுக்குழாயும்
தப்புச்சத்தமும் வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது!

சாலையெங்கும் பூக்களும்
புகையும் ஊதுபத்தியும்
வாடையும் வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

கலயம் உடைத்தலும்
மண்மூடுதலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

பாம்படமும்
சட்டையில்லா சேலைமூடலும்
பாட்டியின் க்தறலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

நீர் மாலையும்
சங்கு சத்தமும் சண்டிமணியும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

பச்சையோலை பந்தலும்
சவ்வாது வாசமும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

கால்கட்டும்
நெற்றித்துட்டும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

குளிப்பாட்டலும்
மயிரு எடுத்தலும்
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது

காட்சிகள் யாவும்
நான் பிணமாகி காண
வேண்டிட
இம்மழையை
ரசிக்க மறுக்கிறது மனது!

மழை

Friday, November 30, 2012 | 0 comments »


ஓலைக்குடிசையும்
ஈன்ற நாயும்
வரப்பும் மண்வெட்டியும்
பனைமரமும் கசிந்த நீரும்
ஓடையும் இரைச்சலும்
சாக்கடையும் தவளையும்
கப்பலும் நனைதலும்
வீடு ஒழுகுதலும் காபியும்
மலையும் விழும் அருவியும்
வேலிப்பூக்களும் செம்மண்ணும்
புளியமரமும் தேங்கியநீரும்
குளமும் கூப்பாடும்
கிணறும் திருட்டு மாங்காவும்
இளநீரும் கெட்டவார்த்தைகளும்
பாத்திரத்தில் விழும் மழையோசையும்
ஓட்டு சட்டத்தில் கேட்கும் எலி சத்தமும்
ஓடிப்போய் அடுப்பு மூடிவரும் அம்மாவும்
தொப்பலாய் நனைந்து வரும் அப்பாவும்

இன்னும் என்னென்னவோ இப்படியாய்
இம்சிக்கிறது என் பொழுதுகளை மழை!

Blogger Wordpress Gadgets