பயன்படுத்தப்படாத
அந்த வீட்டின் அருகே
தன் துணையோடு
புணர்ந்து கொண்டிருந்தது நாய்

தற்செயலான நிகழ்வு இல்லை
எனினும்,
நிலைமை புரிகிறது
இரவுக் காவலாளிக்கு

பிரித்திடாமலும் விரட்டிடாமலும்
அதன் விருப்பத்திற்கு விட்டுவிட்டு
அம்முதியவர் மிச்சம் வைத்த சுருட்டினை
புகைத்த படி,

தெருவோரம் கடந்து செல்பவர்
முகம் கோணாதிருக்கவும்,

சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும்
அணாதைச் சிறுவன் காணாதிருக்கவும்
அணைத்து வருகிறார் தெருவிளக்கை

மங்கிய வெளிச்சத்தில் கடற்கரை காற்றில்
காமுகர்களின் கவிச்சியை நுகர்ந்த
அவன்

முன்னமே விலை மாதுவால்
நிராகரிக்கப்பட்ட
சிறுவனாக கூட இருக்கலாம்!


குறிப்பிடத்தக்க சொற்கள்
கீழ் விழாமல் நாவினில்
அடுக்கி வைத்த வார்த்தைகளானது

மழைக்கு ஒதுங்கிய
குருவி கண்டதும்
வார்த்தை ஒன்று விழுகிறது

சாரல் ஒன்று தேகத்தில்
சில்லென நனைக்கவும்
மற்றுமொரு வார்த்தை தவறுகிறது

தற்செயலாய்
தேனிர் கடையில் ஒலித்த பாடலில்
முன்னமே விழுந்த வார்த்தை ஒன்று
முனுமுனுக்கிறது

பரிட்சையமற்றவர் போன்றதொரு
உருவம் கடந்து போகையில்
பின்னுமொரு வார்த்தை தடுக்கி விழுகிறது

நல்ல வேளை யார் கண்களிலும் படவில்லை
காதுகளிலும் விழவில்லை
நீங்களும் இது போல் பேசிப்பாருங்கள்! 


ஏனோ அவனுக்கு
கல்லரைத் தோட்டம் மீது
அவ்வளவு பிரியம்

அங்கே, தான் தனக்கு  
என்றோரு எண்ணம்
வருவதே இல்லை

மனிதம் அடர்ந்த தோட்டத்தில்
இளைப்பாருதல் என்பது
தன்னிலை மறந்த கனவு

நெடுநேரம் அமர்ந்த்திருப்பான்
கற்களால் ஆன
கல்லறையில் தலை சாய்ப்பான்

தனித்து விடப்பட்ட
அதன் தன்மை தனிமை
படுக்கையறையிலும் நுகர்ந்திடாத ஒன்று

கோபத்தின் வீரியம்
இயலாமையின் இழப்பு
அறியாமையின் ஆவல்
என நீளும் பட்டியல்

மெளனத்தினால் பிழியப்பட்டு
விழியின் வழியே வழியும்
கண்ணீர் சாற்றின் சுவையினை

புசித்து மருந்தாற்றிய
அக்கல்லறைத் தோட்டத்திற்கு
அடுத்தமுறை கவிதை
சமைத்துத் தருவதாக சொல்லியிருக்கிறான்!


வளைத்து வளைத்து
கோடுகளாக எழுதிப்பார்த்தும்
எச்சில் நனைத்தும்

தலைகீழ் பிடித்து உதறியும்
உள்ளங்கையில் உருட்டி உருட்டி
சூடேற்றியும்

முனை கழற்றி விரல் பொத்தி
உட் செலுத்திய மூச்சிக்காற்றில்
பாடம் படிக்கிறது காகிதம்

பேனா ஒன்று
எழுத கற்றுக் கொள்கிறது
அந்த சிறுமியிடம்!


மேசையிலிருந்து
தவறி உடைந்த கண்ணாடியில்
தனது நூற்றுக்கணக்கான
முகங்களை ரசித்துக் கொண்டிருந்தது
குழந்தை

பதறியபடி படுக்கையிலிருந்து
எழ முடியாமல்
செருமிக் காட்டும் தாத்தா

அங்க என்னனு பாருங்க
என்றபடி அடுப்படியில்
சமைத்துக் கொண்டிருக்கும்
அம்மா

கிழவனுக்கு இப்ப என்ன வேணுமாம்
என்றபடி வராண்டாவில்
காற்று வாங்கும் பாட்டி

உன் புருசனுக்கு மருந்து கொடுத்தியா
என்றபடி
வாசலிலிருந்து வண்டி கழுவும்
அப்பா

அம்மா, பாப்பா
கண்ணாடிய உடச்சிட்டாவென
போட்டு கொடுக்கும் அண்ணன்

காயமேதும் இல்லையென
நிம்மதி மூச்சு கொள்ளும்
குடும்பம்!

Blogger Wordpress Gadgets