உள்ளங்கையில் மத்தெனும்
முழங்கையால் பருப்பு கடைந்து
சோறூட்டி

கைவிரல் நகங்களுக்கு
சாயம் பூசிவிடும்
ஒரு மாலையில்

பாதத்தில் விரல்களால்
நடந்து நடந்து
நண்டூருது நரியூருது விளையாட

சாடை செய்வாள்
கால்கள் இரண்டையும்
என் மடியில் கிடத்தியபடி!

அவளை தேற்ற நினைப்பதென்பது
பழக்கமில்லா குழந்தையை
கையிலெடுக்க முனைவது போன்றது

நகரும் முள்ளிற்காக
கடிகாரம் பார்த்துக் கொண்டிருக்கும்
பச்சிளம் போல காத்திருக்க வேண்டும்

பட்டுத்தெறிக்கும் மழைத்துளியென
விருட்டென ஒட்டிக்கொள்வாள்
தோள் பற்றிக் கொள்வாள்

காத்திருக்க வேண்டும்
காதலோடிருக்க வேண்டும்
காமமற்றிருக்க வேண்டும்

கற்றாழையிலிருந்து வடியும்
கசப்பற்ற மழை நீர் போன்றதுதான்
அற்ப்ப நிமிட கோபமும்

திண்ணையில் அமர்ந்திருக்கும்
பூனை போன்றவள்
காலுக்குள் உழல்வதில் பிரியமவளுக்கு

முரண்டு பிடிப்பாள்
அழுது தீர்ப்பாள்
ஆறுதல் தேடுவாள்

மார்பின் இளம் சூட்டிலோ
அக்குள் விரியும் கையிலோ
தலை சாய்ப்பவளுக்கு அன்பினை குழைத்து

தூங்கும் வரை அவளை
துயில விட்டால் போதும்
அந்த மூன்று நாட்களில்!

கடைசியாய்
கலயம் உடைக்கும் சத்தமும்
நீள் பெருமூச்சும், கட்டுப்படுத்திய
அழுகை சத்தமும் கேட்டது

தேடிய தனிமை கிட்டியதாய்
உதிர்த்த ஆனந்த கண்ணீரினால்
புற்களும், யாரோ நட்டுவைத்த
கற்றாழையொன்றும் முளை விட்டது

பாம்பு ஊரும் சத்தமும்
மணல் கிண்டும்
பறவைகளின் கால்கள் சத்தமும்
உரையாடலுக்கு இடையூறு

அமைதி வேண்டி
கடவுளிடம் மன்றாடினேன்
பொறுத்திருக்கச் சொன்னான்

சாத்தானிடம் மன்றாடினேன்
வா
உலகம் அழித்துவிடலாமென்றான்

யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என் கல்லறையின் மீது விளையாடும்
மழலை மொழி கேட்டபடி!

வீதி இறங்கும்முன்
கடைசியாய் ஒருமுறை
உடை சரி செய்துகொள்கிறாள்
விடுதி மாணவி ஒருத்தி

இசையால் மூடிய
இரு காதுகளை ஒட்டிக் கசிந்த
வியர்வையினை
கைக்குட்டையில் உறிஞ்சியபடி

சாலையில் விரைந்தோடும்
வாகனங்களை கை மறித்து
விறுவிறுவென
கைப்பை பற்றி கடக்கிறாள்

சிலநேரக் காத்திருப்பில்
கைவிட்டு கைமாறும்
அலைபேசியும் கைக்குட்டையும்
வாய்விட்டு கத்தமுடியாத பொறுமை

நெரிசல் மிகுந்த பேருந்தில்
முகம் சுளித்து முன்னேறுகிறாள்
அலுவலகம் செல்லும் முன்
ஆறு மாத குழந்தைக்கு பாலூட்ட!

-------------------

Wednesday, August 08, 2012 | 0 comments »

மலையிடுக்கின் வழியே
சுனையொன்று
வழி தேடி வழியத்துவங்க

மதிலென தாங்கிய
மூங்கிலின் ஊடே
உயிர்க் குளம் சூழ

வியர்வையில்
நனைந்து கிடக்கிறது
புற்கள்!

இரயிலின் தடதடவென
காது அதிரும் சத்தம் தவிர்த்து
கீறிச்சிடும் ஓசை கண்முன்னிறுத்துவது

மிஞ்சிய பூவூடன் கூன்கிழவி
காற்று வாங்கும் இரயில் இருக்கைகள்
அவரவர் கூடு போகும் காதலர்கள்

எல்லா இரவுகளிலும்
வாசிக்கத் துவங்குவதும் அவனறியாது
அவனுள்ளிருந்து கடந்து போவதும்

வேலியோற ஓணான் கன்னியில்
தலைவிட்டு தலையெடுப்பது போலிருக்கும்
சன்னலுக்கும் இருக்குக்கைக்கும் நகருவது

பனிக்குடம் உடைந்தவள் போல
கதறியழுது கண்ணீர் ஒழுக சிரித்து
டைரியில் முகம் பார்க்கையில்

தோள் சட்டை பற்றியிழுத்து
முத்தமிட்டு கலைந்து போனது
அவனும் அவளும் தான்!

இடக்கையில் மணிக்கட்டினைப் பற்றி
நடுவிரல் முன்னிழுத்து சொடுக்கெடுத்து
உள்ளங்கையில் விரலால் கோடுகிழி

சட்டென விடுபடுபவளின்
ஏதேனும் ஒருவிரல் பற்றி
நகம் கடி

கோபம் கொண்டவாளாய் முகம் திருப்ப
மூச்சுக் காற்றால்
காதோரக்கூந்தல் பறக்கச்செய்

இடம் விட்டு இடம் நகருகையில்
இடையினை மெல்லத்திருகி
கோபமூட்டு

புருவம் குறுக்கிய பார்வை வீச
கண்கள் கொண்டு கண்கள் விழுங்கி
கொஞ்சத்துவங்கு

புன்னகை மறைத்து
கோபம் கூட்ட முயலுகையில்

பட்டாம் பூச்சியின் சிறகைப் போல
கீழுதட்டினை பிடித்தசைத்து
பின் விடுதலை செய்

அத்தருணத்தில் அவள் விடுக்கும்
வார்த்தைகளனைத்தையும்
மெளனமாய் ரசி

பேசி தீர்த்த்திட்ட உதடுகளை
கண்களால் விழுங்கி
கேசத்தில் விரல் நுழை

அவள் மயங்கும் வார்த்தையொன்றினை
உச்சாடனம் செய்தபடி
நுனி மூக்குரசு

மெல்லமாய் தலை சாய்த்து
இதழ் ஒத்தடமிடு
பின்பு கவ்விப் பிடி!

சந்தன பொட்டிட்டு
கூர் பார்வை தீட்டி
கிளி கூண்டு போல கம்மலிட்டு

காதோரம் சுருண்டமுடி
சலசலக்கும் கொலுசு சூடி

மேகத்தின் நிற சேலையுடுத்தி
வானின் நிற பூக்கள் தூவி
முகமெங்கும் புன்னகை நிரப்பி

அலைபேசியில் எழும் ஒளியில்
தன் முகம் காட்டி செல்கிறாள்
மாலையில் ஒரு யுவதி!

இவ்விரவில்
ஒவ்வொரு வரிகளுக்கிடையே
வந்து வந்து போகும்

பென்சில் கோடுகளூம்
மருதானி பூசிய இருவிரல்களும்
இருள் தின்று இம்சிக்கின்றது

முனை பிடித்து தலையில் அடிப்பாள்
அல்லது
விரல் மொளியில் அடிப்பாள்

கவனிக்காத தருணங்களிலும்
பென்சிலை கடிக்கையிலும்
மேசையில் கிறுக்கும் வேலையிலும்...

தன் நெஞ்சோரம்
வாய்ப்பாட்டு புத்தகத்தை சாய்த்துவிட்டு
சொல் என்பாள் சொல் சொல் என்பாள்

ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்கி
கடத்தும் நேரத்தில்-அவள்
வாய்க்குள் ஊறிய பென்சிலை

அவள் கண் மறைத்து
ஈரம் உலர்வதற்கு முன்னே
சட்டென வாய் நுழைக்க

"ஐய்ய எச்சி" என்பாள்
எச்சில் வடிய துயிலும்
அவள் பெயர் கொண்ட என் மகளைப் போல!

தாய்மை

Wednesday, August 08, 2012 | 0 comments »

சற்று கை அகல விரித்து
வண்ணமயமான வளையல்கள்
எழும் உரசல்களின் ஓசை அதனை

வீதியில் தெளித்தபடி
எட்டு வைத்துப் போகிறாள்
நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி

சாமிக்கு தரிசனம் கொடுக்க
சென்றிருக்கலாம்...
பூவும் பழமும் சிதறிய குங்குமமும்
அந்த மாலையில் சாட்சி

மஞ்சள் படர்ந்த திசை நோக்கி
ஈருயிர் கூட்டி
சாலை கடக்க எத்தனிக்கையில்

தன்னை தூக்கச் சொல்லி
முன் மறிக்கும் முதல் பிள்ளையை
இடுப்பில் ஏற்றி கடக்கிறாள்

ஒவ்வொருவர் நாசியிலும்
தாய்மையின் நுகர்வு
தாயின் நினைவு!

வலப்பக்கமாய் சிறிது தலை சாய்த்து
வரட்டுமா என்பாய்

எதாவது ஒரு விரல் பிடித்து
இரத்த ஓட்டம் கூட்டுவாய்

பேசாத இதழ் கண்டும்
ஏதாவது சொன்னாயா என்பாய்

கன்னம் தட்டுவாய்
விழிகள் நிறைப்பாய்

ஒவ்வொரு முறையும்
சந்தித்து பிரியும் பொழுதும்!

ஊரெங்கும் உடைந்தோடும்
குளத்து நீரில்
வேரோடு பிடுங்கப்பட்ட

வாழை மரத்தில்
கனைக்க மறந்தபடி
தவளை ஒன்று பயனம்

சுண்ணாம்பு சுவற்றில்
கரைந்து வடியும் செம்மண்கோடுகள்
பார்வையில் ஓவியமாக

கேசத்திலிருந்து பூச்சியெடுத்த
சவரி முடியினை அரிக்கேனிலேற்றி
வெளிச்சம் மறைத்து போட்டிருந்தாள்

பட்டென வெட்டிய மின்னல் ஒளி
சன்னல் வழி ஊடுருவ
நான்கு கால்கள் வியர்த்துக் கிடந்தது!

வானின் கூரையில் ஒழுகுதல் நில்லாது
கூட்டுப் பறவைகள் இறக்கை சத்தம் தீராது
நதியின் சலசலப்பு வற்றாது

எக்கணமும் பச்சையுடுத்தி
மூலிகை நறுமணம் தெளித்து
கதிர்களுக்காக காத்திருக்கும் குளமும்

கிழத்தி அள்ளி முடியும்
கொண்டை ஊசி வளைவு தாங்கி
மலரில் மலரும் பனித்துளி பரப்பி

பருவப்பெண்ணின் அகன்ற தோளில்
அவிழ்ந்த கூந்தல் போல
வனமெங்கும் இயற்கை எழிலாட

சருகுகள் சூழ்ந்த
இரயில் நிலையத்திலிருந்து

மாதவிடாய் காலத்து
உதிரப்போக்கின் வலி தாளாது
ஓர் அலறல் சத்தம்!

பின்னெப்பொழுதாவது
முத்தமிட தோன்றுமாயின்
பெருவிரலால் கன்னம் தடவிக் கொடு

வறண்டு போன
இரு உதட்டினையும்
காமம் அற்று உற்று நோக்கு

நீ உடைத்து விட்ட
பருவின் தழும்பு கண்டு
மென் புன்னகை செய்

இமை பீலிகை
உதிரும் அளவிற்கு
கண்களை கூர்ந்து பார்

அடிக்கடி காதில் சொல்வதை
சலனமேதுமின்றி
உச்சாடனம் செய்

பின்பு
புகைப்படத்தினை
கவிழ்த்து விட்டு தூங்க செல்!

குமரி ஒருத்தி மளிகை சாமான்
வாங்கச் சொல்லி அனுப்பும்
சிறுவனைப் போல திரும்ப திரும்ப
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்

கொலை செய்ய வேண்டும்
கொலை செய்ய வேண்டும்
கொலை செய்ய வேண்டும்

எவரிடமும் பேச்சு கொடுக்காமல்
தனிமை சுவைக்க வேண்டும்
தொண்டை வறண்டு போகும் வரை

கண்களுக்கு வேறேதும்
காட்சிகள் காண அனுமதியாது
கொலை செய்யும் ஆயுதத்தை
முன்னிறுத்த வேண்டும்

அதிகமுறை மனத்திரையில்
திரையிட்டுக் கொண்டே
இரத்தக் கரை, அலறல் சத்தம் என
கொடுரமாய் காட்சியோட்ட வேண்டும்

மேற் சொன்ன யாவும்
சாத்தியமெனில்
தற்கொலை செய்துகொள்வதும் சாத்தியமே!

தோள் சாய்ந்தபடி
திரை நோக்கியவளின்
கன்னத்தில் உள்ளங்கை பதித்து
அவள் முகம் காணுகிறேன்
திரையிருள் நேரத்தில்
இதழ் ஒத்தடம்!

காகித கோப்பையில்
பருகி வைத்த குளிர் பானம்
பருகியதில் துவங்கியது
அவள் அனுமதியோடு
எச்சில் திருட்டு!

திரைப்பட நுழைவுச் சீட்டினை
யார் சேமித்து வைப்பதென்பதில்
துவங்கியது காதல் ஆதிக்கம்!

அங்க இல்லைடி
இங்க என சொல்லி
முதலில் தொட்டது
அவளின் மேலுதடு!

என் மடியில் அவள் கைப்பை
போட்டு விட்டு எதையோ
தேடுவது போல தேடுகிறாள்
கன்னத்தில் முத்தம்!

கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருக்கிறாள்-என்
கைக்குள் சுழல்கிறது
அவளின் கால் கொலுசு!

இடை இடையே விரல் கடிப்பு
அவளுக்கு பாப்கார்ன்
ஊட்டும் பொழுது!

அவள் துப்பட்டாவில்
என் விரல் கட்டிவைக்கிறாள்
பின்பு
தோளில் போட்டுக் கொள்கிறாள்!

அவள் ஞாபகமாய்
எடுத்த ஸ்டிக்கர் பொட்டினை
சட்டைப்பையில் தேடுகிறாள்
நடனமாடுகிறது நெஞ்சின் ரோமங்கள்!

கடைசி பேருந்தும்
தவறி விட-அவள்
வீடு வரை கைகோர்ப்பு!

Blogger Wordpress Gadgets