அந்த உரையாடலானது
உனக்குப் பாசமில்லையென துவங்கியது

விலகிச் செல்வது பற்றியும்
உறவாடுதல் பற்றியும்
வெகுநேரம் பேசியும் முடிவேதுமில்லை

காற்றில் தவறிய காக்கை கூட்டின்
முள்ளொன்று காலில் ஏறியது போலிருந்தது

நெடுநாள் உறவின் விளக்கத்தின்
ஊடே
அவளின் வெடித்த சிரிப்பு சத்தம்...

வெறுப்பின் உச்சத்தில் விடைபெற
எத்தனிக்கையில் உறவின் கை நீட்டி
உன் கோபம் அறிவேன் என்கிறாள்

தாயொருத்தி குழந்தையை அடித்துவிட்டு
பதறியபடி கொஞ்சுவாளே
அது போலில்லை-அது,

மரம் இழைக்கும் ஒருவனின்
கூரிய கத்தி போலிருந்தது...

பைத்தியக்காரனின் புலம்பல் என
கேளாதபடி
ஒவ்வொரு முறையும் கடந்து செல்
ஏதோ ஒரு இரவின் கடைசிப்பிணமாவாய் நீ!

விரல்கள் நடுங்கியபடியே
சிகரெட் ஒன்றினை பற்றவைத்தாள்
உதடுகள் இணையா அளவிற்கு
வாய் எதையோ உளறிக் கொண்டிருந்தது

எவ்விருக்கையும் அவளுக்கு
ஆசுவாசமாய் இல்லையோ என்னவோ
சுவர் சாய்ந்து தரையிலமர்ந்திருந்தாள்

பொலிவிழந்த முகம்
சிக்குண்ட கூந்தல்
கசங்கிய உடை

மேசையில் தவறிய மதுக்கோப்பை
சில்லுகளை பொறுக்கி
தரையெங்கும் இரத்தச் சுவடாக்கியிருந்தவள்

புகைக்காமல் கரைந்து போன
சிகெரெட் சுடு சாம்பலை
மணிக்கட்டில் அறுத்து தட்டிக் கொண்டிருந்தாள்!

அந்திப் பொழுதில்
ஈரம் படர்ந்த சாலையின் வழியே
பூனை பாதம் வைத்தொருவள் கடந்து போகிறாள்

சன்னல் கம்பிகளுக்கடியில் தொக்கி நிற்கும்
மழைப் பொட்டுகளை
விரல்களால் உடைத்தபடி ரசிக்கத் தொடங்குகிறேன்

சுருட்டிய குடையின் கைப்பிடி கையிற்றுக்குள்
கை நுழைத்து
கை ஆட்டி ஆட்டி முணுமுணுத்தபடி நடக்கிறாள்

இலைகள் உதிர்த்த துளிகளை
மேனியில் வாங்கிக் கொண்டவள்
கணுக்கால் கொலுசு தெரிய மான் ஆகிறாள்

முழுவதுமாய் கடந்தவளிடமிருந்து
தவறிய உடலசைவுகளும் பூவற்ற கூந்தலும்
அறை மெழுகின் ஒளியில் நடனமாட,

அவள் தரிசன நிமிடங்கள் எண்ணி
அனுதினமும்
நிரம்பி வழிகிறது வெற்றுக் கோப்பை!

நாய்

Wednesday, July 18, 2012 | 0 comments »

கண்கள் முழுக்க விரக்தியாகவே தெரிந்தது
ஏதோ ஒரு சூழ்நிலையில் சபிக்கப்பட்டிருக்கலாம்
வாலாட்ட கூட இயலவில்லை

இரவு முழுக்க தூங்காமல் அழுதிருக்கலாம்
கண்ணீர் கோடுகளும்
பூளை வடிந்த தடமிருந்தது

தன்னை கடந்து போகும் கால்களையும்
தேனீர் கடையையும்
கழுத்தினை தூக்கியவாரு பார்த்துக் கொண்டிருந்தது

தன் தாயையோ தந்தையையோ
தேடும் அறிவு இருப்பதாய் தெரியவில்லை
தனக்கு ஜோடி கிடைக்கும் என்ற நம்பிக்கையும்
அது இழந்திருக்கலாம்

நாய்கள் ஜாக்கிரதை
என்றொரு கதவு திறக்கவும்
வேறொரு நிழல் தேடி நடக்கத்துவங்கியது

உங்களுக்குத் தெரியுமா?
அந்த தெரு நாய்க்கு
முன்னங்கால்கள் மட்டுமே இருந்தது!

கானல் ஓடை

Wednesday, July 18, 2012 | 0 comments »

என் இரவினை நகர்த்தும்
அதிகாரம் வரம்பு மீறல்
யார் கொடுத்தது உனக்கு?

துயர் கூட்டுதல் மகிழ்வூட்டுதல்
இவ்விரண்டையும் கூட
சுயமாய் தீர்மானிக்க அனுமதிப்பதில்லை

மழை இரவு வெப்பப் பொழிவு
பருவ மாற்றத்தில் கூட-நீ
கண்ணயர்வதேயில்லை

வனமொன்றில் பற்றிய தீயில்
வெடித்து அலறும் மூங்கிலினை-நீ
இசை என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

உனக்கு பிடித்தவைகள் யாதெனில்
மயான அமைதி
சடலம் எரியும் வாசனை
வீதியில் சிதறிய பூக்களென பட்டியல் நீட்டுகிறாய்

தூசி தட்டிய புத்தகமொன்றின்
வியர்வை படிந்த வாசனை நுகர்ந்தபடி
எச்சில் ஒழுக வாசிக்கிறாய்

நெருங்க நெருங்க விலகுகிறாய்
மனமென்பது குரங்கு என்றால்
நான் கானல் என்பேன்!

நுரை தப்பிய கரையிலமர்ந்து
தன் பாதம் சுற்றி
கோடு கிழிக்கத்துவங்கினாள் சந்தியா

காற்றிலாடும் துப்பட்டாவின்
முனை பிடித்து முன்னினைத்து முடிச்சிட்டு
மணலில் இதயம் வரைந்தாள்

காலம் சுழலும் வேகத்தினை
விட்டுச் சென்ற தடங்களை தடயங்களை
அடுக்கிக் கொண்டிருந்தவள்

நீண்ட பெருமூச்சுக்குப் பின்
நலம் விசாரிக்கத்துவங்கினாள்
உன் மனைவி நலமா?

அடிக்கடி வானில் வந்து போயின
வெள்ளை நிற மின்னல் கோடுகள்

வருமிடம் கனிக்க முடியாததாகவும்
வளைவு நெளிவுகளோடுமிருந்தன

ஈரக்காற்றில்
உப்புக்காற்று மறந்து கண் நோக்க

பச்சை பூசிய வெள்ளை நிற
தெருவிளக்குகள் சாலையெங்கும்
வரிசை கட்டி நின்றிருந்தன

பால்யம் பேசும் வயதானவர்கள்
காதல் பேசும் இளவட்டங்கள்
தனிமை ருசிக்கும் தனியொருவன்

பிள்ளைகளோடு வந்த பெற்றோர்கள்
ரோட்டோரம் துயிலும் இருந்தும் இல்லாதவர்கள்
கூட்டம் கூட்டமாய் நரிகுறவர்கள்

குடிகாரனின் புலம்பல்
கார்களில் இருந்து எழும் ஒலி
உணவுக் கடைகள்

விலை மகள் விலைமகன்
திருநங்கை ஓரினச்சேர்கையாளர்கள் என
அவர் அவர் விருப்பபடி அவர் அவர்

வெட்டிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகள்
துளிகளாய் துளிகளாய் பெரு மழையாய்
பொழியத் துவங்கியது....

கடலுக்கு
அலையின் கீதம் கேட்க துவங்கிற்று!

தூக்கம் கலைந்த இரவில்
கனவில் சொல்லிக் கொண்டிருந்த
கவிதையொன்றினை
தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

அக்கவிதை எழுதப்பட்ட கனத்தில்
நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கலாம்
வாசிக்கையில் மட்டும்
கனவில் வந்து நிற்கிறது

அதன் எழுத்து நடை
இது வரை எழுதிடாததாய் இருப்பினும்
கையெழுத்து என்னுடையதெனவும்
கவிதை எனதென்றும் சொல்கிறது

அந்த நெடுங்கவிதையில் புள்ளியோ
ஆச்சரிய குறியீடோ எதுவுமோ
இடம் பெற்றிருக்கவில்லை
இடைவெளியும் இல்லை

வீரியம் நிறைந்த
சொற்களின் கலவையினை
வேகமாய் பருகியபடி விழிக்கிறேன்

வானில் கேட்கும் அசரீரி போல
குரலொன்று சொல்லிச் செல்கிறது
கனவிலும் விழித்திரு!

எனது வீதியில்
விடுபட்டுப்போன கனவொன்றினை
விளையாட விட்டிருக்கிறேன்

அதற்கு தோதுவாயிருக்க
மூங்கில் கிழித்து செய்திட்ட
புல்லாங்குழல் ஒன்றினை கொடுத்திருக்கிறேன்

தன்னைமீறி அலற தோன்றலாம்
அல்லது
உற்சாகமாய் சத்தமிட தோன்றலாம்

வார்த்தைகள்
வெளிவர மறுக்கும் அவ்வேளையில்

குரல்வளையில் சிக்கித் தவிக்கும்
உள்ளுணர்வுகளை
தொண்டையில் குத்தி வெளியேற்ற
சொல்லிக் கொடுத்திருக்கிறேன்

வீதியெங்கும் வழிந்தோடும்
புலம்பல்கள் உன் உருவில்
ஆங்காங்கே அமர்ந்திருக்க

நினைவுகளை
என்ன செய்வதென்று கேட்கிறது
எப்போதும் போல!

நதி

Wednesday, July 18, 2012 | 0 comments »

இந்த இரவில்
நதியின் துவக்கம் அறிய
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

மலை வழியாகவோ
மழை வழியாகவோ
உருவாகிடாத நதி அது

அதன் இரைச்சல்கள்
நான் கேட்டிடாதவை
காதில் கேட்கவும் இல்லை

நான் தொலைந்து
நானும் தொலைந்து
மண்டியிட்ட இரவு அது

பதியம் வைத்து காத்திருந்த குமரி போல
பிணையம் வைத்து
மீட்டெடுக்க குழந்தைக்கு காத்திருப்பது போல

அதன் நிமிடங்களை
அதில் எழும் மனதின் படபடப்பினை
விட்டம் விழித்தபடி
மன்றாடிய அந்த இரவின்

உளறல்களும் பிதற்றல்களும்
யாதென அறிய சுவர் தாண்டியும்
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...

இன்று போய் நாளை வா!

சூன்ய இரவு

Wednesday, July 18, 2012 | 0 comments »

இரவுகள்
மிகவும் சூன்யம் நிறைந்தவை

நட்சத்திரங்களை
எப்படி எண்ண வேண்டுமென
சொல்லிக்கொடுத்தவள் நினைவில் வர

அவள் சார்ந்த நிகழ்வுகளையும்
அவள் சார்ந்த நினைவுகளையும்
படியேறி கூட்டிப் போகிறேன்

தூரத்திலொரு புகைபோக்கியின் வழியே
மேலேறும் புகையை கிழித்து
தானும் இருப்பதாய் காட்டிக் கொள்கிறது நிலா

பாசி படிந்து காய்ந்து போன
மீன் தொட்டியோன்றின்
கடந்த காலத்தை அலசுகிறேன்

நிலவு நகருகிறது
மேகம் நகருகிறது
இரவு நகருகிறது

நட்சத்திரங்கள் விடுத்து
வானமெங்கும் ஒளிர்கிறது
கடைசியாய் நான் மூடிய
அவளின் விழிகள் மட்டும்!

என்ன இருக்கு?

சாப்பாடு
சிக்கன் ரைஸ்
பரோட்டா
தக்காளி சாதம்
எலுமிச்சை சாதம்
சாம்பார் சாதம்

எல்லாம் எவ்வளவு?

சாப்பாடு-45
சிக்கன் ரைஸ்-50
பரோட்டா ஒன்னு-10
வெரைட்டி ரைஸ் எல்லாம்-25

இவ்வளவு தான் தருவிங்களா
என கேட்டபடி சாம்பார் சாதம்
சாப்பிட ஆரம்பித்தார் அந்த முதியவர்!

ஏல இன்னைக்கு
புட்டான் புடிக்க வா

என்று சொல்லியபடி
தெரு கடக்கிறான் தோழன்

யாருலாம்ல வருவா?
என்றவனை நிறுத்த

நம்ம பயலுவ எல்லாரும்
ஒந்தம்பியும் கூட்டிட்டு வா
என்று கடந்து போகிறான்

விறுவிறுவென சாப்பிட்டு
ஆடை மாற்றி

காய்ந்த முட்கள் நிறைந்த
வேலிக்கு செல்லவும்

ஏலே மாக்க நீ மேலகரையில
இருக்க புட்டான புடி என்கிறான்

நடக்க சத்தம் கேக்கமா புடில
என என்னொருவன் சொல்கிறான்

கையில் சிக்கிய புட்டானின்
இறக்கைகள் கசங்க

புதிதாய் பட்டாம் பூச்சி
நெஞ்சுக்குள் பறக்க துவங்குகியது

எனக்கு அந்த சோப்பு கலர்
ராணி புட்டான் புடிச்சி தால

முதன்முறையாய் என்னிடம்
பேசினாள் காதல் தேவதை!

வைத்த புள்ளிகள்
எதும் கோலமாகவில்லை

போட்டு வைத்த கோடுகள்
எதுவும் ஓவியமாகவில்லை

குவித்த மணல் குவியல்கள்
எதுவும் சிற்பமாகவில்லை

என் நதியோடும் பாதை
என் கட்டுப்பாட்டிலில்லை

என் இருளில் எழும் பிம்பம்
நானாக தீர்மானிப்பதில்லை

தூரத்தில் கேட்கும் அலறல் சத்தம்
ஏன் என் குரல் என பிடிபடவில்லை

காலத்தின் பிணக்கில்
என்னையெனக்கு அடையாளம் தெரியவில்லை

கதறி அழுதிடவோ கடந்து செல்லவோ
என் பிடியில் நானில்லை

காலப்பெருவெளியில்
இக்கால இடைவெளியில்

என் வனம் எரிந்தது
என் மனம் எரிந்தது
என் திறன் எரிந்தது
புல்லாங்குழல் கிழிந்தது
குரல்வளை வற்றியது
இதயம் கனத்தது
இருள் திண்றது

மூச்சுத்திணறலை மையாக்கி
காகிதத்தால் சுவாசித்தேன்

எதை எதையோ எழுதியவன் நான்தான்
எனினும்
இன்னும் கொஞ்சம் ஆசுவாசம் வேண்டுகிறேன்

சிறிய இடைவேளைக்குப்பிறகு
மீண்டு(ம்) வருகிறேன்

இறுதியாக
ஒரு உரிமையில் கேட்கிறேன்
என்னை மன்னிப்பாயா?

இதழ் சூழ்ந்த செதில்கள் தனை
சுள்ளென சுட்டுவிட
காற்றில் முனகல் தொலைத்து

காம்பினை முட்டி மேலேறுகிறது
இரத்த ரோஜா

சிதறி விழுந்த பனித்துளிகளை
ரசித்து ரசித்து
காற்றில் உடலசைத்து உடலசைத்து

உள் வாங்குகிறது
ஒற்றை ரோஜா

வானம் நிறமாற நிறமாற
வனப்பு ஏறும்
அந்தவொரு ஒற்றை ரோஜா

எவளோ ஒருவளின் கூந்தலில்
எவனோ ஒருவன் தூண்டிலில்!

விழி உருட்டியபடி
சிந்தும் ஓரப்பார்வை
கசியும் புன்னகை

என்னைப்பற்றி விசாரிக்கும்
அவள் அக்கறை
ராசி நட்சத்திரம் அறிய
என் தங்கையிடம் பழகியது

என் வீடு கடக்கையில்
அவள் தோழிகள் சத்தமாய் சிரிப்பது
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
மிட்டாய் தாள்

அவள் டைரியில் இருக்கும்
என் மையிலிறகு
அவள் கைக்குட்டையிலிருக்கும்
என் பெயரின் முதலெழுத்து

இதையெல்லாம் காதலென நம்பி
அவளுக்கு
பூ கொடுத்து
கடிதங்கள் எழுதி
செய்கை செய்வதில் உடன்பாடில்லை

நேற்று ஜன்னலின் வழி
வைத்த வெற்றுக் காகிதத்தில்
பிரிக்காமலே முத்தம் கொடுத்ததாய்
அவளிடம் டீயூசன் படிக்கும்
சிறுமியொருத்தி சொல்லிப் போகிறாள்!

கடற்கரை செல்லும்போதெல்லாம்
கையை அழுந்தப்பற்றி நடப்பதில்
அலாதி பிரியம் அவளுக்கு

காதோர கூந்தல் எடுத்துவிடும் அழகில் தெரியும்
உப்புக்காற்றில் நனைய விரும்பும்
அவளின் குழந்தை மனது

வெகுநேர பேச்சுக்கு பின்
"ம்" என்ன? என
முதலில் இருந்து கதை கேட்பாள்

பூவோ கடலையோ வாங்க மறுப்பவள்
தவறாமல்
சிறுவர்களின் பெயர் கேட்டுவிடுவாள்

ஒரு மாலையில் பெயர் கேட்டதும்
ஈரம் கசிந்த புன்னகை உதிர்த்தவளிடம்
காரணம் வினவ-தன்
காதல் கதையை சொல்ல துவங்கியிருக்கிறாள்

இனி
என் மனைவிக்கு
தகப்பனாகவும் வாழவேண்டும்!

பெறுநர் முகவரி
இன்னதென அறியாமலிருந்தும்
உனக்கு கடிதமெழுத அமருகிறேன்

நேரம் கடந்து கொண்டிருக்க
காகிதத்தின் வலது ஓரத்தில் கிறுக்கியது
உன் பெயரின் முதலெழுத்தாகியிருந்தது

எவ்வளவு நேரம் தான்
எழுதாத பேனாவில் எழுதுவாய் என
அறை கடந்து போகிறாள் தாய்

நாளை உங்களுக்கு இப்படியொரு
தலைப்பு செய்தி வாசிக்க நேரிடலாம்
அச்சு தாளின் அடியிலொரு
தற்கொலைக்குறிப்பு!

மழை

Wednesday, July 18, 2012 | 0 comments »

முந்தானை குடை விரிக்க
அவள் இல்லை
வேடிக்கை பார்க்கிறேன் மழையை!

மழை நீர் சுடுமென்பததை
அவள் தேகம் தொட்டு
பாதம் கடப்பதில்
அறிந்து கொள்கிறேன் நான்!

அவள் உதடு தொட்டு
வழியும் நீரினை கண்டு
எச்சில் விழுங்குகிறேன்
இனித்து கிடக்கிறது தொண்டை!

நீ
கெண்டைக்கால் தெரிய
சாலை கடக்கிறாய்
வெள்ளத்தின் அளவு மேலேறுகிறது!

அவள் மட்டும்
மழைக்கு ஒதுங்காமலிருந்திருந்தால்
சாரல் என்றொன்று
கிட்டாமலே போயிருக்கும்!

மழையை திட்டிக் கொண்டே
சாலை கடக்கிறாய்
உன்னை பின் தொடர்ந்து
வளைந்து கிடக்கிறது
ஏழு வர்ணங்கள்!

கைகுட்டையில்
கூந்தல் மறைக்கிறாய்
ஒவ்வொன்றாய் மலருகின்றது
மொட்டுகள்!

அவசர அவசரமாய்
குடை விரிக்கிறாய்
அதற்குள் நனைந்து விடுகிறது
மழை!

ஒரு பள்ளிக் குழந்தைக்கும்
சேர்த்து குடை பிடிக்கிறாய்
தூரலில் மின்னும் வானவில் போல
நீயும் அக்குழந்தையும் பேரழகு!

அவசரமாய்
போக வேண்டியவள் போல
மழை கண்டு உதடு சுளிக்கிறாய்
குடையாகிப் போகிறது என் இதயம்!

உன் வீட்டு மொட்டை மாடியில்
இரு கை விரித்து சுற்றுகிறாய்
மயிலென்று மழை வேகம் கூடுகிறது

தேநீர் கோப்பையோடு
வாசலில் நின்று
சாலை ரசிக்கிறாய்
ஆவி பறக்க பொழிகிறது
மழை!

விறுவிறுவென
ஓடி ஒதுங்குகிறாய்
வியர்த்து கொட்டுகிறது வானம்!

இரு கைகளால்
மழையடித்து விளையாடுகிறாய்
சாலையெங்கும் காதல் வாசம்!

மழையின் குளிரில்
தேகம்
ஒளித்து வைக்கிறாய்
குளிர் காய்கிறது போர்வை!

கொடியில் காயும்
துணியெடுக்க விரைகிறாய்
நீ வரும் வரை
காத்திருக்கிறது மழை!

உன் வீட்டு கூரையில்
வழியும் மழை நீரை
உள்ளங்கையில் ஏந்துகிறாய்
ஏனோ பொங்குகிறது பாற்கடல்

மழைக்காலங்களில்
மட்டும் வேண்டிக்கொள்கிறேன்
நீ அணைத்து தூங்கும்
கரடி பொம்பை
நானாக வேண்டுமென்று!

நீ
பூப்பெய்து சல்லடையில்
நீராட்டுவதைப் பார்த்தே
வானம் பொழியத்துவங்கியதாய்
ஒரு மழை ஆய்வு!

மொத்தத்தில்
நீ தேவதையாகவே
விண்ணில் இருந்திருக்கலாம்
உன் பாதம் தொட புற்கள்
தேகம் நனைக்க மழை!


நீரோடும் வரப்பில்
பாய் போல்
முந்தானை தரைவிரித்து

நிலவின் மஞ்சள் திருடிய
கடலைப் பூக்கள்
காற்றில் தலையசைக்க
பாடல் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்

கண்ணுக்கெட்டும் தூரத்தில்
பனையிலேரும் உடும்பினை காணவும்
மார்பில் முகம் பதித்தாள்
நகம் கிழித்தாள்

வேலியில் மின்னும்
மின்மினிகளுக்கு போட்டியாய்
கண்கள் மின்னியபடி
படபடவென பட்டாம்பூச்சியாக

காது நுழையும் ஊசிக் காற்றினை
மூச்சால் சூடேற்றி
இதழால் இதழ் மாற்ற

மெது மெதுவாய் நிலா மேலேற
மொட்டவிழ்த்து பனியிறங்கும் தருணம்
நிலவுக்கு விருந்து!

நூலளவு இரவினை திருடி
அறை நிரப்பியிருந்த
ஒரு கோடைப் பொழுதில்

விழி உருளும் திசையெங்கும்
காற்றில் நீந்திக் கொண்டிருந்தது
திரவ வடிவ பிம்பமொன்று

அலையலையாய் நீந்தும்
அப்பிம்பத்தினை
உள்ளங்கை அழுந்த கசக்கியதில்

அத்திரவ உருவம் இரண்டாய் பிரிந்ததன்
அழகினை ரசிக்க துணிந்து
வாசலில் பார்வை திருப்ப

தாழிட்ட கதவின் இடுக்கின் வழியே
தெரிந்து கொண்டிருந்த நிழலொன்று
கதவை தட்டியதா? தெரியாது

ஒருவேளை இரண்டாய் பிரிந்து
புணர்ந்து கொண்டிருந்த
தனிமையின் ஓசையை
கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம்!

பின்பு
அவள் கெஞ்சியபடியே
கன்னத்தில் முத்தமிட்டாள்

எனக்கும் முத்தமிட தோன்றியது
கொஞ்சமாய் சிரித்தபடி
அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்தேன்

தென்னங் கீற்றின் வழியே வழியும்
மழைநீர் போல அவள் கண்ணீர்
மெல்லிய கோடு போல்
கன்னம் வடிந்து கொண்டிருந்தது

என் கைக்குட்டை வாங்கியவள்
எதற்கெடுத்தாலும் நன்றி சொல்லி பழகியவள்
எதுவுமே சொல்லாமலிருந்தாள்

வீட்டுக்கு போகலாமென்றேன்
கால் நனைத்து விட்டு செல்லலாமென்றாள்
அலையிலாடியபடியே,

உள்ளங்கையில்
விரல்களால் எதையோ எழுதியவள்
அன்றிரவு அலைபேசியில் பேசவேயில்லை!

பாடல்

Wednesday, July 18, 2012 | 0 comments »

பார்வையாலே குத்திக்கொல்லும் பலாப்பழமே
பாசத்திலே தேன் சொட்டும் அதன் சுளையே
வா கண்ணாமூச்சி ஆடலாம்
நீ கண்கட்ட நான் ஒளியலாம்

கொஞ்ச நேரம் கொஞ்சம் தூரம்
காற்றில் உன் கை அலச
காதில் வந்து காதல் சொல்லி
மீண்டும் மறைவேன் எனை உரச
(வா கண்ணாமூச்சி ஆடலாம்)

பருவ மேடு கண்ணில் முட்ட
பருவ பசி எச்சில் கூட்ட
உன் கைக்குள்ளே நான்
இனி கொஞ்சல்கள் தான்

தேக்கு கட்டில் கூச்சல் போட
தேக்கு தேகம் கூச்சம் ஓட
கச்சிதமாய பசியாரலாம்
மூச்சிறைக்க முத்தம் ஊட்டலாம்

இங்கே இதனை
விட்டுவிட வேண்டுமெனவும்,
அங்கே அதனை
காட்டிக்கொள்ள கூடாதெனவும்,

சாலையின் நடுவே பயணிக்கும்
வெள்ளை கோடினை போலவே
பாதை வகுத்து பயணிக்கிறேன்

வழி நெடுவே தனி ஒருவனாய்
எனக்கான முகமுடியை
நெய்து கொண்டு செல்கிறேன்

இச்சமுகத்தில் என்னை
அடையாளம் காட்ட...

முகத்தில் ஏமாற்றத்தின் பிசுருகளும்
துவண்டு போன சுருக்கங்களும்
போராட்டத்தின் தழும்புகளும்
காணக்கிடக்க,

அதற்கான முகச் சாயம்
எங்கும் விற்கப்படவிலை...

கூட்ட நெரிசலில் விழுந்து போன
ஆசைகள் என் மிதியடி பட்டே
மீளாமல் கிடக்கிறது

மீட்டெடுக்க ஒரு கோப்பை
விஷம் ஊற்றி கொடுங்கள்
நஞ்சு நிறைந்த இவ்வுடலில்
நஞ்சு முறிந்து போகட்டும்!

என் இரவின் இசை
எப்படி கேட்கிறது தெரியுமா?

பற்றி எரியும் தேகத்தின் சூட்டில்
கதறும் ஊமையின் குரல் போன்றது அது

என் இரவின் வாசனை
எப்படி நாசி துளைக்கிறது தெரியுமா?

பற்களின் ஈறுகளில் கசியும்
குருதியின் வாடை போன்றது அது

என் இரவின் எண்ணங்கள்
எப்படி எனையாளுகிறது தெரியுமா?

நேசத்தின் கரங்களில்லாத
திண்ணை கிழவனின் பெருமூச்சு போன்றது அது

என் இரவின் வார்த்தைகள்
எப்படி உளறுகிறது தெரியுமா?

வெடித்த சிரிப்புடன் அழும்
பிரியத்தின் பிதற்றல்கள் போன்றது அது

என் இரவின் காட்சிகள்
எப்படி ஒளிருகிறது தெரியுமா?

முகமேதும் தெரியாமல் ஓரிரு கைகள் மட்டும்
என் பிணத்தில்
மண்ணள்ளி போடுவது போன்றது அது

அதுவரை புகைத்து பழகிடாதவன்
சிகரெட் ஒன்றினை பற்றவைத்து
கையில் சூடுவைத்துக்கொண்டான்

கானல் துறந்து மேகம் திரண்ட
யாமத்தின் இடுக்குகளில் சிதறிய
விரக்தியின் முட்கள் சூழ

பிஞ்சுக்குழந்தையின் புட்டத்தில்
விட்டெடுத்த ஊசியின் வலி தாங்காது
அழுமே அதுபோல வீறிட்டு அழத்துவங்கினான்

இரவின் நிசப்தங்கள்
அவன் காதுகளில் ஏதேதோ கொண்டு சேர்க்க
அறையின் கதவை தாழிட சென்றவன்

தெருவிளக்கிற்கு துணையாய் நின்றிருந்த
அவ்விரவின் கடைசி சந்தையிலும் விலைபோகாத
விலைமாதுவை அழைத்துச்சென்றான்

அவளுடனான அறிமுகத்தில் கவிஞன் எனவும்
தன் இடது தொடையில் ஒரு கவிதையும்
வலது தோளில் ஒரு கவிதையும்
எழுதி வாங்கி விடைபெற்று சென்றாள்!

ஏமாற்றம்

Wednesday, July 18, 2012 | 0 comments »

முந்தைய இரவில்
புகைத்து மீதமான சுருட்டினை
பற்ற வைத்தபடி

விடியற்காலையில்
நிழற்குடையில்லா
பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்

வெயிலில் நனைய நனைய
வியர்வை துடைத்து துடைத்து
கடைசிப் பேருந்தும் கடந்த பின்

அந்திப் பொழுதில் கால் முழுக்க அப்பிய
புழுதிக் காற்றினை மட்டும்
வழக்கம் போல வீடு கூட்டி வந்தார்!

Blogger Wordpress Gadgets