ஆமென்...

Monday, June 10, 2013 | 0 comments »

முடிந்து விட்டதாக உணரப்பட்ட
ஊடல் தெருவின்
இடப்பக்கத்தில் இரவு பகலென
எரிந்து கொண்டிருக்கிறது
விளக்கு ஒன்று...

விழிகளால் மட்டுமே
சாத்தியமான மனக்கண்ணின்
பார்வை சீழ்வடிந்தபடி
மங்கிய உருவமொன்றை
முன்னிறுத்துகிறது

பதற்றத்தில்
விரல்நகம் கடிக்கும்
உந்தன் பழக்கம்
அந்த மங்கிய உருவத்தோடு
ஒத்துப்போகிறது

சற்று இறுகப்பற்றியதில்
செவிக்கு இடையூறான
துடிப்பு நின்றிருப்பது
ஆறுதலாய் இருக்கிறது
ஆமென்...

நேரம் கடந்த இரவிலும்
இன்னும் யாருக்காகவோ
காத்திருக்கிறாள் அவள்

தொய்விழந்த விலைமாதுவோ
ஊடல் கலைக்க கணவனோ
காதலிக்கான கூடலுக்கோ

யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கும்
இரயிலடி கிழவியின்

பூக்கூடையில் நரையும்,
தெளித்து வைத்த
உலையிலேறாத நீரும்...

யாருமற்ற ஓர் கடர்கரையில்,
செருப்பில்லாது

பாதச்சுவடுகள் பதித்து
அலையேதும் ஏறிவிடாது

விரல் கோர்த்தபடி
உரையடலேதுமின்றி

பின்னப்படாத கூந்தல்
காற்றில் வருடியபடி

கால்கள் சோர்வடையும்
இடமமர்ந்து

தோள்பற்றி
தோள் சாய்த்து

வெண்பாதம்
உள்ளங்கைப்பற்றி

கால்விரலிடுக்குகள்
மண் அகற்றி

கண்பார்த்து
தலை மோதி

செல்லமாய்
அடித்து விளையாடி

மீண்டுமொரு
மெளனம் தின்று

மூச்சுக்காற்றில்
நேரம் கடத்தி

கணுக்கால்
அலையடிக்க நனைந்து

விரல் நகம்
உராய்ந்து

காதல் கொழுத்தி
மோகம் எரிந்து

தேகத்தணலெடுத்து
கட்டில் பரப்பி

வியர்வையில் தணிய
வா!

பிரிதொரு இரவில்
கால்மேல் கால்போட்டு
துயில விரும்புகையில்

கசங்கிய படுக்கை விரிப்பில்
தலையணையில் பதிந்த
எண்ணெய் சுவட்டில்

ஒருபோர்வை பகிர்தலில்
கால்முடி உராய்வில்
விழிப்புத்தட்டி

அனிச்சையாய்
அணைக்க நேருகையில்
பின்னந்தலை வியர்த்து

அழுவதற்கு தோதுவாகலாம்
நீ பேழைக்குள் அடைபட்ட
நாளை நினைத்து!

அந்த பரிவு
அந்த தவிப்பு
அந்த தேற்றுதல்

புளியமர நிழலில்
சாலையின் திருப்பத்தில்
நிகழ்ந்தேறியது

இளைப்பாருதலுக்கென
முத்தமும் அணைப்பும்
நீ வேண்டித் தேற்றுவது

அப்பாவுடனான
சைக்கிள் பயணத்தில் சக்கரத்தில்
கால் நுழைத்தது நினைவிலேறுகிறது!

மடி வாய்க்காத
நெருஞ்சிமுள் படுக்கையில்
எதனைக்கொண்டு தேற்றுவது

தனிமையென்று ஒன்று
இல்லையென தீர்மானித்த பொழுதில்
சுமத்தலின் எடை அறிந்திருக்கவில்லை

தடயங்களற்று
வாங்கிக்கொள்ளும் காயம்
உடலில் தழும்புகளிட தூண்டுகிறது

யாருக்கேனும் பதில்சொல்ல நேரும்
இந்த வாழ்தல் காலங்களில்
இறத்தல் குறித்த உந்துதல்

எல்லா சூழலிலும் தோற்றுவிட
தற்கொலைக்கு துணிந்து வெல்பவன்
எத்தனை பாக்கியசாலி...

காதல் அணை

Monday, June 10, 2013 | 0 comments »

எங்கும் நதி போல
பாயும் நினைவு நீரை
அது கட்டியாடும்
சலசலப்பினை
மனதின் சஞ்சலங்களை

இரவின் கூட்டில்
ஒரு கம்பியில் கோர்த்து
நீ பருக வேண்டி
காத்திருக்கிறேன்
பின்னிரவு வரை

மனப்பற்களில்
சிக்கிக்கொண்டு
துள்ளலெடுக்கும்
காதலையும் காமத்தையும்
அதன் சிதறல்களையும்

எச்சில் சூட்டோடு
இதழ் கவ்விடாத
முத்தம் போல
ஒத்தடமிட்டு ஒத்தடமிட்டு
பற்றிக்கொள்வது கண்டு

நீ சிணுங்கும் சிணுங்களில்
தூண்டில், வலையாகிப்போக
மொத்தமாய் கவிழும்
நீயும்
நானும்

கரைசேரவோ கை சேரவோ
தத்தளிக்கும் விடியலில்
யாருக்கு யார்
யாருடையதை யார்
மூச்செடுத்து கரை சேர்வதெனும்

போராட்டத்தில்
கிழ் வானச்சிவப்பில்
மயங்கிச்சரியும் கூந்தலில்
தலையணையடியில் நம்மை
தேக்கி வைப்போம் வா!

தினம் ஒருமுறையாவது
ஆம்புலன்ஸ் ஓசை கேட்கும்
சாலையையொட்டி எனதறை

இரவின் மங்கிய வெளிச்சத்தில்
ஒளிரும் நீலம் மற்றும் சிவப்பு
அதனூடான அந்த இரைச்சல்

கண்ணாடிப்பேழைக்குள்
சுழலும் ஒளி மற்றும் ஒலி
மொட்டை மாடிக்கு இழுக்கிறது

சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒளியை
திறந்து விட வேண்டும் போலிருக்கிறது
தலைக்கு மேல் கேட்க வேண்டும் போலிருக்கிறது

என்ன செய்ய செய்யலாம்?
மாடியிலிருந்து குதித்து விடலாம் தான்
கவிதையை யார் முடிப்பது?

மூங்கில் காட்டில்
சருகுகளின் அதிர்வில்
ஓடையின் சலசலப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கானாதொரு கனவின்
நிகழ்வு!

மணல் மறைந்த
புல் தரையில்
பனியிரங்கும்
சாமத்தில்
நீ
நான்
நிலவு
மற்றும்
பருகப்படாத
ஒரு கோப்பை
மூச்சுக்காற்று!

சன்னல் சாரலில்
அணையவிடா
மெழுகின் ஒளியில்
நீ
நான்
மற்றும்
பொழியாத வியர்வை

வாழைமடல்
நிழலொதுங்க
பூக்களின்
அழகு ரசித்து
நீ
நான்
நிலவு
மற்றும்
முதுகிலொட்டாத
மண் துகள்கள்

கேந்திப்பூக்களின்
நீரோட்டப்பாதையில்
தென்னையோலை விரிப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
மலராத மொட்டு

நெடுக வளர்ந்த
பாக்குத் தோப்பில்
தரையோட்டி
கிளைவிரித்த
மாமரத்தினடியில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கைக்கெட்டும் தூரத்தில்
தேன் கூடு

வரப்பிலோடும்
நீரில் உடல் சாய்த்து
மின்மினிகளோடு
நீ
நான்
நிலா
மற்றும்
தாகம்!

மல்லிக்கொடிகள்
கிளைவிரித்த
செம்மன் விரிப்பில்
நீ
நான்
நிலா
மற்றும்
நுகராதொரு வாசனை!

ஆயில் மோட்டரின்
புகை வாசனையும்
கீற்று கொட்டகையின்
இடுக்குகளில் விழும்
நிலவொளியோடு
நீ
நான்
மற்றும்
ஈரம் வாடும் சேலை

வீசியடிக்கும் மழையில்
ஒற்றைப்பனைமர ஒதுக்கில்
நீ
நான்
மின்னல்
மற்றும்
வகிட்டு குங்குமம் வடிந்த
கூர் மூக்கு!

பொழுதுகள் அறியா கூடலில்
மயங்கிச்சரியும் விழியில்
கானல் வறட்சி

இளைப்பாற நிழலின்றி
வெடித்துக்கிடக்கும்
எச்சில் பாயாத உதடு

பனியிரவில் நிலம் உழும்
உந்தன் விரலற்று
பருக்களான தேகம்

செவியில்லா சுவர்களும்
எதிர் பார்வையில்லா விட்டமும்
எனை சூழ்ந்திருக்க

இருக்கையின் சாய்வில்
சரிய மறுக்கிறது-உன்
ரேகைகள் பதிந்த முதுகு!

ஒரு போதும் கேட்பதில்லை
ஒப்பாரிகள்
சம்பந்தப்பட்டவனுக்கு

குரல் கேட்க தோணிச்சி என்றும்
பார்க்கனும் போல இருக்கு என்றம்
அழைப்பினை பெற்றவரா நீங்கள்?

தென்னம்பூக்கள் உதிரும் காலத்தில்
அணில்களின் பரவசம்போல
சுதந்திரமாய் சந்தோசமாய் இருங்கள்

உயிராய் இருந்தாலும் சரி
பொருளாய் இருந்தாலும் சரி
தோன்றியதெனில் முத்தமிட்டு வையுங்கள்

அன்பின் கோரப்பிடிக்கான வெளிப்பாடுதான்
உங்களுக்கான ஒப்பாரியை
நீங்களே நிகழ்த்திக்கொள்ளுங்கள்

ஏனெனில்
நிரந்தரமல்ல எதுவும்
எப்போதும்!

தோல் சீவினால் தான்
உண்ணுவாளென அடம்பிடிக்கும்
குழந்தைக்கு தாய் அவள்

இரண்டாய் பிளக்கப்பட்ட
ஆப்பிளில் படிந்த கத்திக்கறையால்
வேண்டினாள் மற்றுமொரு ஆப்பிள்

தொண்டைக்குழியில்
சிக்கிவிடக்கூடாதென தூர எரிந்த
விதைகளுக்கு நீருற்றும் மகளைப்போல

பனிக்குடம் உடையும் நாளுக்காக
காத்திருக்கும் தாய் அவள்
குழந்தை போன்றவள்!

விதை

Monday, June 10, 2013 | 0 comments »

மழைவரை பொறுத்திருந்து
நீரில் கரையொதுங்கி
படர்ந்திருந்த மரமானது

பறவைகள் அடித்துக்கொண்ட
வனாந்தர வானிலிருந்து
தவறிய உணவானது

சுடும் மழை வாங்கி
பிளந்து கிடக்கும்
ஆற்றுப்படுகை நிலத்தில்

அலகினில் சிக்கிடாது
இடுக்குகளில் விழுந்திருந்தது
விதை தாங்கிய பழம்!

படர்ந்த கண்ணில் விழுந்து
அகன்ற நெற்றியில் தவழ்ந்து
கருங்கூந்தலில் நீந்தி

காதுமடல் பற்றி
கூர்நாசி உராய்ந்து
உதட்டில் தேனேடுத்து

திமிரிய தோளில் சாய்ந்து
கழுத்து நரம்பில் நழுவி
நெஞ்சுக்குழியில் மூழ்கி

கொங்கைகள் பற்றி எழுந்து
இடையினில் மூச்சு வாங்கி
மடிச்சூட்டில் குளிர் காய்ந்து

நித்தமும்
முத்தெடுத்திட வேண்டும்
உன்னுடனான உயிர் கூடலில்!

குறிப்புகளுணர்ந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
நேற்றைய நிகழ்வுகள்

திருத்தம் செய்யமுடியாத
அந்த நினைவுகளை
"அப்படியிருந்தால்" எனும் பதத்தில்

தனக்குச்சாதகமாய்
மாறிக்கொண்டிருக்கிறது
இன்றைய கடிகாரமுள் கடந்தும்

புளியமுத்து உராய்ந்து
தாயம் விளையாடும் ஒரு
கிராமத்து சிறுமி போல

கரைபடிந்த இடத்தினில்
வீரிட்டு மறைகிறது
பருவக்கனவுகள்!

நமதந்த கடந்த காலங்கள்
பிறந்து கொண்டுதான் இருக்கின்றன
பேசித்தீராது பின் நோக்குகையில்

நீ நான்
உனது எனது
நமது என

நீட்டி முடித்த பட்டியலின்
இடைவெளியில் பரிமாறும்
மூச்சுக்காற்றின் நொடிகளில்

அழுக்கேறிக்கிடக்கும்
தசைகளின் துவாரங்கள் போல
நிரம்ப முயல்கிறது காமம்!

மேற் சொன்ன எதுவும்
உன்னை
சமாதானப் படுத்திவிடாதென தெரியும்

நீ என்பதன் பொருளடக்கம்
எந்த இரவிலும் எந்த பகலிலும்
உணர்ந்துவிடமுடியா ஒன்று

இருந்தும் அறிந்து வைத்தவைகள்
சொல்லி வைத்தவைகள் சரியென
புலனாகிக்கொண்டுதான் வருகிறது

இருப்பினும்
நத்தையோட்டில் விழுந்து நழுவும்
ஒற்றை மழைத்துளி போல

காக்கை கூட்டில் தவறிய
காய்ந்த முள்ளொடித்து
கிழித்துக்கொண்ட உதட்டுக் குருதியில்

உன் பெயரெழுதிப் பார்ப்பதில்
கொஞ்சம் ஆறுதலாய் தான் இருக்கிறது
துவங்கப்படாத கவிதையொன்றிற்கு!

மரித்துவிடுதல் குறித்தான
மனநிலையை
இரவுகளில் அலசுகிறேன்

அதில் கண்களும் உறைந்த
இரத்தத் துண்டுகளும்
பிடிபட்டிருக்கிருக்கின்றன...

காண்பவை யாவும்
கொலையா
தற்கொலையா?

எதற்கும் பகல்வரை
பொருத்திருக்கலாம்
உயிர் இருக்கும் பட்சத்தில்

எதையோ சுமந்து கொண்டிருக்கிறேன்
நான்
அறியமுடியா கொடிய எடையை

உயிர் பிரிதலின் நிமித்தமாய்
ஒரு பெரும் அலறல் சத்தத்தில்
அமைதி பெருகிறது கூடு

நம்மை போல ஒரு ஜீவன்
தொண்டை வலிக்க கதறுகிறது
என்பதே ஆறுதலாய் இருக்க

நெற்றி பரப்பின் குறுக்கு வெட்டில்
குத்துயிராய் கிடக்கிறது
கடைசி நம்பிக்கை...

உடைமரக்காடுகளில்
நிலம் ஒதுக்கி

எருக்கம் இலைதனில்
படையல் வைத்து

அதன் கம்புகளுடைத்து
பந்தல் செய்து

இலைகள் மடித்துடைத்து
பால்துளி ஊற்றி

அம்மா பீடிதட்டில்
நூல் திருடி

எருக்கம்பூவில்
மாலை கட்டி

உன்னை மணமுடிக்கையில்
நமக்கு நாமே குழந்தைகளாய்!

மரணங்கள் குறித்து நீ
விவாதிக்கொண்டிருக்கிறாய்
தொடர்ச்சியாக

முடிந்த வரையில்
சுவரொட்டியில் காண்பவைகளை
சிலாகித்துவிடுகிறேன்

கண்ணீர் அஞ்சலி
அகால மரணம்

இரண்டின் கூறுகளையும்
இரவுகளில் நிறுத்தி
அகால மரணத்திற்கு அடிபோடுகிறாய்

தற்காலிகமாய் உன்னைவிட்டு
தள்ளிப்போதலே நலமெனில்
காத்திருத்தல் அத்தனை அமைதியில்லை

ஏனெனில்
நீ என்பது நானின்றி
பிரிதொருவர் இல்லை!

மரணங்கள் குறித்து நீ
விவாதிக்கொண்டிருக்கிறாய்
தொடர்ச்சியாக

முடிந்த வரையில்
சுவரொட்டியில் காண்பவைகளை
சிலாகித்துவிடுகிறேன்

கண்ணீர் அஞ்சலி
அகால மரணம்

இரண்டின் கூறுகளையும்
இரவுகளில் நிறுத்தி
அகால மரணத்திற்கு அடிபோடுகிறாய்

தற்காலிகமாய் உன்னைவிட்டு
தள்ளிப்போதலே நலமெனில்
காத்திருத்தல் அத்தனை அமைதியில்லை

ஏனெனில்
நீ என்பது நானின்றி
பிரிதொருவர் இல்லை!

நொடிக்கொருமுறை
பார்த்துவிடுகிறேன்-உன்
வருகையின் வாசலை

மதிலெங்கும் பூத்துக்கிடக்கும்
தொட்டிச்செடி பூக்கள்
கருப்பு வெள்ளையாக...

காதுக்குள் கசிந்தபடி
இடைவெளியின் தூரத்தை
குறைத்துக்கொண்டே வருகிறாய்

பிடிமானங்களற்று நழுவும்
காதலும் காமமும் உன்னில்விழ
போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது

எதற்கும் கொஞ்சம் தள்ளியே இரு!

காயங்கள்

Monday, June 10, 2013 | 0 comments »

சட்டை ஒன்றிற்கு
பட்டன் வைப்பது போலிருக்கிறது
காயங்கள்

மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
அது முன்னேறிக்கொண்டிருக்கிறது

துயர சம்பவங்கள் யாவும்
நூல் போல தொடர்ந்தும்
நூல் போல இறுகியும்

அனுதாபத்தோடு செல்லாதீர்கள்
ஆறுதல் மொழி கேட்க
தழும்புகள் கிடையாது!

தூண்டு

Monday, June 10, 2013 | 0 comments »

விழிமூடும் உள் தசையில்
கற்றாழை வடிவில் கிடக்கிறது
உன்னுடனான நம் பிம்பங்கள்

இருபக்கமும் கொழுவிக்கிடக்கும்
இளம் முற்கள் சீராய் வளர
கண்ணீரமும், இரத்தமும் கொடுக்கிறேன்

தற்போதைக்கு பார்வை மட்டுமே
விழுந்திருக்கிறது
தெளிவாய் மிகத்தெளிவாய் மனக்கண்

உனக்கென்ன?
எளிதாய் சொல்லிவிட்டாய்
முகத்தில் விழிக்காதெவென்று...

ஒரு புள்ளியும் இடதோர முனையும்
மடிக்கப்பட்டிருந்தது
ஒரு வருடம் பிந்தைய டைரியில்

மடிக்கப்பட்ட நாட்காட்டியானது
அவளுக்கு
எத்தனை முக்கியமானதோ?

கடந்த நாட்களில்
கடந்த நிகழ்வுகளில்
எதுவென யோசித்துக்கொண்டிருக்கிறேன்

முதன் முதலாய் காமம் கொண்டது
முதன் முதலாய் பிரிவை உணர்ந்தது
எதுவாகவும் இருக்கட்டுமே

காத்திருக்கிறேன்...
மரணக்குறிப்பாய் இருந்தாலும் எழுதட்டும்
இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள்

எனக்குள்!

?

Monday, June 10, 2013 | 0 comments »

உனக்கும் எனக்கும்
வட்ட வடிவ மேசை இடைவெளியில்
அது அமர்ந்திருக்கிறது

எதிரெதிரே பார்க்கத் துணியா
விழிகளுக்குள் ததும்பும்
கேள்விகள் கேட்பதாயில்லை

மெழுகு வர்த்தியை
சீண்டி விளையாடுவது கண்டு
திட்டிக்கொண்டிருக்கிறாய்

தெரியாமல் தான் கேட்கிறேன்?

ஒரு முத்தத்தை எப்படி
சேமித்து வைக்கமுடியுமென்று
நினைக்கிறாய்?

நுரை ததும்பிய
தேகத்தின்
பளபளப்புகளில்

எஞ்சிய
நீர் முத்துகள்
தனித்தீவு

பூத்துவாலைக்குள்
சிறைபடாத துளிகள்
நழுவி வழிவதில்

உயிர் உசுப்பும்
கழுத்தில் நெளியும்
நீள நரம்பு,

ஆடுதொடையின்
தசையிறுக்கம் கண்டு
பற்றிய தீயில்

பளிங்கு கற்களில்
பதித்துப்போகும்
பாதச்சுவடுகள்

விட்டுப்போகும்
நீர் அச்சுகளில்
பற்றிய தீ சூடேறும்

திரைமறைத்து
மாட்டிடும் ஊக்கின்
நெளிவில்

மயங்கி சரிகிறது
பின்னிடையாடும்
கூந்தல் காடு!

இயலாமை

Monday, June 10, 2013 | 0 comments »

வாழும் கனவுகள்
கொளுத்த எல்லைக்கோடுகள்
கொண்ட தேசமிது

வேள்விகள் தடுக்க
இன வேலிகள் சூழ்ந்த
தேசமிது

பச்சைகள் கருகி
வெந்த தேகம் மண் புதைத்த
தேசமிது

கைகள் உயருவதற்கோ
உயர்த்துவதற்கோ வாழ்வுரிமை
வழங்கா தேசமிது

ஒருபிடிச்சோற்றிற்கும்
கண்ணீர் பரிசளிக்க வேண்டிய
தேசமிது

வறண்ட தொண்டைகளும்
வலுவில்லா தேகமும்
கொண்ட தேசமிது

விலா எழும்புகள் உடைத்து
மார்புகளறுத்து இன்புறும்
தேசமிது

அழு குரல்கள் யாரெதுவென
அறியமுடியா கூக்குரல் நிறைந்த
தேசமிது

தாய்ப்பால் புகட்ட
திண்ணையில் அமரமுடியா
தேசமிது

மூச்சுக்காற்றிற்கும்
எல்லைவகுத்து மனவுறுதி
குடிக்கும் தேசமிது

கை கோர்த்து துணிந்திடுங்களென
கை நீட்ட, கைகொடுக்கும்
தேசமெது?

நீங்கள் கைகள் பிசைந்தபடி
உச்சுக்கொட்டுவதில் உடைந்துவிடுவதில்லை
மேற் சொன்ன எதுவும்...

வேறென்ன? கடவுள்களையும்
மனிதாபிமானமில்லாதவனையும்
சபித்துக்கொள்ளுங்கள்

இயலாமையை மறைத்துக்கொள்ள
இதைவிட சிறந்த ஆயுதம்
கிடைத்துவிடப்போவதில்லை

தேற்றுவது குறித்தான கவலைகள்
பறிக்கப்படாத கள்ளிப்பூக்கள்போல
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

யாசகம் வேண்டுபவனின்
கை சுருக்கங்களை ஒத்திருக்கிறது
உன் சம்பிரதாய புன்னகை

முன்னமே தெரிந்திருக்கிறது
சந்திப்பு நிகழ்ந்தே தீருமென்று
தீர்க்கமாய் புன்னகைத்துவிட்டாய்

கை குலுக்கல் நிகழா வண்ணம்
பார்த்துக்கொண்ட உனதிந்த லாவகம்
ஆறுதலாயிருக்கிறது எனக்கு

இருந்தும் கணவனில்லாதவளென எழும்
ஏளன பேச்சுகள் புதிதாய் பூத்திருக்கிறது
எந்நிலையிலும் வாழும் கள்ளிச்செடி மனதில்!

இன்னும் வழங்கப்படாத முத்தமும்
எடுக்கப்படாத முத்தமும் மீதமிருப்பதாய்
உதடு கோர்க்க அழைக்கிறாய்

வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை
பொருட்படுத்தாது கடைசியென,
பதில் தவிர்த்து நெருங்குகிறாய்

கையிரண்டின் பக்கவாட்டில்
இறுகப்பற்றிய கைபிரித்து
இடது மார்பில் அழுத்தி முகம் பார்க்கிறாய்

தேம்பிய விழிகள் கண்டு விலகியவள்
மழைக்கால ஈசல் போல
சட்டென மனதில் பிறந்து இறக்கிறாய்

ஒவ்வொரு மாலையும் கடக்கும்
அந்தத் தெருவில் பூக்காத பூக்கள் உதிர
விழிகளுக்குள் வந்து போகும் பிம்பத்தில்

இருவரின் விரல்களும் துண்டிக்கப்பட்டிருக்கிறது!

தேகத் தீண்டலில்
துயில் எழும்
விழிக் காமத்தை

அடையாளம் கண்டு
மூச்சில் வெப்பம் கூட்டி
சிணுங்கித்தொலைக்கிறது குரல்

விளையாடத்துடிக்கும்
விரல்களுக்கு அடங்காத
உன் படர்ந்த முதுகும்

பின்னங்கழுத்து சாய்த்து
இதழ்பருக திமிராது கூடும்
அடர் கூந்தலும்

பிசைந்து எழுப்புகிறது
அறையெங்கும்
காமத்தின் வாசனையை!

மோகம் மீட்டெடுக்க
கால் பெருவிரல் இடுக்குகளில்
விரல் கோர்த்து

பின்னிடை வியர்க்க
இறுகும் பிடியில்
முயங்கித்தொலைக்கும் குரலும்

மூடிய விழியில் உயிர்பெரும்
கனவுகளின் பாதையில்
நகக் கீறல்கள்

சுவற்றோரப் பிடியில்
உருவி விழும் வளையல்கள்
உடைக்கும் மெளனத்தில்

தரை தொடாது பாதம் அள்ளி
நீள விளக்கில் ஒளிரும்
விழி பருகி

கட்டில் சாய்கிறது
ஈருடல் தின்னும்
ஓர் உயிர்...

இந்த பகல் பொழுது
அத்தனை இனிமையாய் இல்லை
பின்னங்கழுத்து வியர்வை வழிய

தனிமைக்கு தீனி போடுகிறேன்
இறுக மூடிய விழிகளுக்குள்
தூக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதாய்

என் அறையின் மின்விசிறியும்
சன்னலில் விழும் வேப்பமர நிழலும்
நம்பிக்கொண்டிருக்கிறது

நீ நடு நிசியில் அழைப்பாயே
எந்தன் பெயர் சொல்லி
சன்னமாய் கேட்கிறது

உன் காதலும் தவிப்பும்
சிரிப்பும் தேடலும் சிணுங்கலும்
மேலும் தேட வைக்கிறது

விரல் கோர்த்து நடக்கவும்
உன்னோடு விளையாடவும்
உன் கூந்தல் வருடவும்

மடி சாய்த்துக்கொள்ளவும்
அருகாமையின் வாசமும்
வேண்டும் வேண்டும் என்கிறது

மூடிய உன் விழிகள் ரசித்தபடி
காதலிக்க வேண்டும்போலிருக்கிறது

என்
அருகில் கொஞ்ச நேரம்
துயில்கிறாயா?

உன்னை காதலிப்பது பற்றியும்
கரம் பிடிப்பது பற்றியும்
பேசியாகிவிட்டது இருந்தும் தொடர்கிறது

ஒரு சொல்லில் ஒரு செயலில்
நீளும் உரையாடல்களில்
தொக்கி நிற்கிறது பகிரப்படாத எதிர்பார்ப்பு

பின்னிரவுகளில் தூக்கம் கலைக்க
தொடங்கும் கொஞ்சல்களும்
காதல் சொல்லப்படாத காலத்தில்

அனிச்சையாய் அரங்கேறிய
காதலும் அதனுடனான அணிவகுப்பும்
உன் கண்ணீரும் உரிமை கொண்டாட வைக்கிறது

அந்த உரிமையில் கேட்கிறேன்
ஒரு முத்தம் தாயேன்...

அழையாதே எனும் உன்
வார்த்தை மீறி உன்னை
அழைத்து விடுவேனோவென்று
பயமாயிருக்கிறது

எண்களென்றால் அது-உன்
அழைபேசி எண்களென்றே
பதியம் வைத்து வளர்த்திருக்கிறது
காதல்

எனையறியாது மனனமானதை
எப்படி மறப்பது? எனக்கு
மீண்டும் பயமாயிருக்கிறது
அழைக்கத்துவங்கி துண்டித்துக்கொண்டிருக்கிறேன்

நீயாவது மனம் மாறிவிடு
நான்கு வழிச்சாலைபோல
நாவை கிழித்து வைத்திருப்பதாய்
மருத்துவர் ஏளனம் செல்கிறார்!

போதுமானதாய்
இருக்குமளவிற்கு இடைவெளி
செய்திருந்தாய் பேருந்து இருக்கையில்

தலை சாய்க்க லாவகமில்லா
சன்னல் கம்பிகளின் அடியில்
மழை நீர் ஊர்ந்து கொண்டிருக்க

நீல விளக்குகள் ஏற்றி
நடத்துநர் இடம் அமர்ந்ததும்
தோள் சாய்ந்து கைபற்றுகிறாய்

கேள்விகள் ததும்ப முகம் பார்த்து
விழி கோர்க்கிறாய் நகம் கொண்டு
உள்ளங்கை கோடுகிழிக்கிறாய்

அனிச்சையாய் முத்தமிட
எச்சில் விழுங்கிய பொட்டகற்றி
மீண்டுமொன்று கேட்கும் உனை

காதலிக்காமல் என்ன செய்வது?

உடல் தின்ன குடியேறியவர்களின்
வருகைகள் குறைந்த
ம்ழைக்கால பொழுதொன்றில்

தாய்ப்பால் கொடுத்தவளும்
யோனி சுரப்பு வாய்க்காதவளும்
வீடு கடந்து வருகிறாள் குடையின்றி

அவர்களோ மிக வேகமாய்
சபித்தபடி தாழிடுகின்றனர்
நாற்பக்க சுவரில்லாதது அறிந்து...

தாழிடத் தவறிய மனப்பிரதேசத்தில்
குடியேறியவன் ஞாபகம் கடத்த
மருத்துவமனை நடக்கிறாள் வாடகைத்தாயாக!

தொடர்வண்டியின்
பிரத்யேக தண்டவாளம் தவிர்த்து
ஒதுங்குகிறாள் அவள்

இரயில் சுமை தாங்கும்
படுகிடை கான்கிரீட் கல்லில்
காலகற்றி அமருகிறாள்

விளக்கொளியும், எஞ்சின் அதிர்வும்
உணரும் வேளையில் கைப்பிடித்து
எழுவோ துணையோ இல்லாது போக

கடைசியாய் உதிரம் நிறுத்தியவனின்
முகமெதுவென அறியாது
அழ நேர்ந்திட

கால் தடுமாறி இடுப்பெழும்புகள்
இயல்பிழக்க பற்கள் இறுகக் கடித்து
தாயின்றி சேய் பிரசவிக்கிறாள்

நிறைமாத கற்பிணி ஒருத்தி!

நீரிரைச்சல் கேட்டு எத்தனை இரவுகள்
எத்தனை பகல் கடந்து விட்டது
எங்கள் ஊர் பாலத்திற்கும் எங்களுக்கும்

சாக்கடையென அறிந்தும்
அது ஓடையாகியிருக்கும்
மழைக்கால கப்பல் பயணங்களில்

பொத்தென விழும் ஓட்டு வீட்டு மழை
கீற்றில் சரசரக்கும் கூரை வேய்ந்த மழை
மரங்களில் பொசபொசக்கும் மழை

சொளவினை குடையாக்கி
அடுப்பு மூட ஓடும் அம்மா
நஞ்சை மூழ்கி விடாக்கூடாதென
வரப்புவெட்டிவிட ஓடும் அப்பா

கோவில் வராண்டாவில்
கலைத்து ஆடும் சீட்டுக்கட்டுகள்
தாத்தாவின் சுருட்டு வாசம்

தன் பையனை பார்த்திங்களாவென
மழைக்காலங்களில் தேடியலையும்
ஏதோ ஒரு அக்காவின் குரல்

தெருவெங்கும் கைவிரித்து
அங்குமிங்குமாய் சிறகடித்து அலையும்
வாண்டுகளும் சிறுவர்களும்

எதையும் காணவிடாது
சுட்டெறிக்கும் இந்த சூரியனில்
கண் விழித்தாலென எரிந்தாலென்ன?

அறுந்த பாசியின்
உலர்ந்த முத்துகளை
முந்தானையில் ஏந்தி

மனதில் அலறல்களை
குமிழ்களாக்குகிறாள்
வீட்டுக்கிணற்றில்

நிலவின் தவம் கலைத்து
பிம்பம் உடைக்கும்
நீர் அலைகளோடு

வந்தடைய துடிக்கும்
விழியுதிரிகள்
உட்சுவற்றில் மோதி

ஈரம் குடிக்க
கிணற்றை சுற்றி
காதலன் வாசமும்

ஒழுகும் நாசி துடைப்பில்
சேலை களைந்த
கணவனின் தாகமும்!

அகன்ற கூந்தல்
அள்ளி முடிவதில்

தவறி முன்விழும்
கற்றை மயிரிழையும்

தாழிடும் கதவின்
ஓசையும்

தொட்டுத் தொடாமல்
ஒட்டி நிற்கும்

இடையேறிய துளிகளும்
முதுகில் முத்துக்களும்

சமிக்ஞை செய்கிறது
இரவென்ன பகலென்னவென்று

முடிந்து கட்டிய
பூத்துவாலையோடு

கூந்தல் அருவி
பின்னங்கழுத்தில் பாய்வதும்

எடுத்து சொருகிய
கொசுவத்தில் மேலேறிய

கணுக்கால் கொலுசும்
வெளிர் பாதமும்

கண்ணாடியில் விழி குவித்து
வைத்திடும் பொட்டும்

கண்கள் சொருக
காதுமடல் துடைப்பதும்

ஈர உடைகள் உலர்த்த
படியேறுகையில்

வில்லென நெளியும்
பின்னிடையும்

மை தீட்டா
கருவிழிகளும்

மூன்றாம்பால்
கடைந்தெடுக்க

முன்னெடுத்து
நரம்புகள் மீட்டுகிறது

வியர்வை சுனையூறும்
உன் தேகக்கடலில்

தீ

Monday, June 10, 2013 | 0 comments »

பாவடையெல்லாம்
இரத்தம் படிந்து விட்டதாகவும்
கொய்யா மூட்டில்

அம்மா வைத்திருப்பதாகவும்
பள்ளிக்கும் வீட்டிற்குமான இடைவெளியில்
வயது வந்ததை சொன்னவள்

வெற்று தீப்பெட்டியில்
மண் குழைத்து
செங்கல் செய்து வீடுகட்டி

அடுக்களை செய்து
சமையல் செய்து
கடவுள் செய்து

உச்சி வெயில் பாராது
உடைமர பூக்கள் தூவி
குடித்தனம் நடத்தியவள்

முத்து வச்ச கொலுசென
கணுக்கால்வரை உயர்த்தி முதலாய்
காமம் கொளுத்தியவள்

ஒவ்வொரு சாணெடுத்து சீராய் மடித்து
கொசுவம் பிடித்து பாட்டி இடையில்
சொருகியது சொல்லி நாணியவள்

இருவருமாய் விரும்பி
நிலவெனும் பாயில்
மதிலோரம் தாவணி விரித்தவள்

மெழுகு உருகும் இரவெல்லாம்
தவறாது வந்து விடுகிறாள்
புணர்ந்த அன்று வழிந்த கண்ணீரோடு

குளத்து நீரில் மூழ்கிய
முள் கிழித்து கொடிசுற்றி
தக்கையாய் மிதந்தவள்

பப்பாளி குழல் ஒடித்து
கோவில் மெழுகு உருக்கி
மெழுகுவர்த்தி செய்தவள்!

மனிதர்களற்ற மந்தையில்
ஈன்ற ஆட்டின் பனிக்குட
பிசுபிசுப்பும் இரத்தமும்

விழாத தொப்புள் கொடியோடு
ஒட்டிய மணலோடு
நிற்பதற்கு முயலுகிறது குட்டிகள்

வேட்டையாடும் நாயொன்று
சருகுகளின் அமைதி கலைத்து
சர்ப்பம் தீண்டி மரித்துப்போக

கூட்டினில் கூச்சலிடும்
குஞ்சுகளின் அலகு நிறைக்க
தாழப்பறக்கிறது கழுகு ஒன்று!

வா!

Monday, June 10, 2013 | 0 comments »

இரு கை குவித்து
ஏந்திய நீர்
முகம் தெளித்து

நெற்றி பரப்பில்
பரவி கூர் நாசி
கிளை பிரித்து

இதழ் மேடை
கடந்தோடும்
நீரலைகளை

கழுத்தின்
பள்ளத்தாக்கில்
ததும்பும் துளி பருக

இன்னும் கொஞ்சம்
வியர்த்தால் தான் என்ன?
வா கூடலாம்...

முன்னெப்பொழுதோ
நீ அவசரமாய் கொடுத்த
முத்தத்தின் அழுத்தத்தை

முகம்பாரா நாட்கள்
அதிகரித்துப்போவதின் நிமித்தம்
ஞாபகப்படுத்தினேன்

ஆமோதிப்பதின் அடையாளமாய்
விரியா இதழ் வாசிக்கும் "ம்"
மற்றும் செல்லக்குழைதலும்

உன் இடம் நோக்கி
நகரத்தூண்டுவதாய் முன்னேற
தடாலென துண்டித்து அழைக்கும்

லாவகத்திற்கு-நீ
நாணமென்றும் நான்
பசலையென்றும் பெயரிட்டிருக்கிறேன்!

முடிவிழந்தலையும்
உன் ஞாபகக் கூந்தல் கொண்டு
யாழ் ஒன்று செய்கிறேன்

விரல்களுக்கு வேலையற்ற
அந்த யாழில்
இமைகளிடிக்க வாசிக்கிறேன்

இரத்தம் சுண்டிப்போகும்
உனைப்பற்றிய குறிப்புகளை
எழுதுவதும் வாசிப்பதும்

முடிவுறா பக்கங்களாய்
கடக்கும் காற்றின்
கால வேகத்திற்கு

ஈடுகொடுத்து மகிழ்கிறது
உன் புறக்கணிப்பின்
பார்வைகளும் சொற்களும்!

இறப்பது குறித்து
உங்களுக்கு ஏதேனும்
அச்சமிருக்கிறதாவென

வீதியெங்கும்
துண்டு பிரசுரங்கள்
பிரசுரிக்கப்பட்டிருக்கின்ற

வீட்டு வாசல்களிலும்
பால்பாக்கெட் போடும்
கூடைகளிலும் கிடக்கிறது

திணிக்கப்பட்ட அதிகாலை
தினசரி செய்தித்தாளின்
பக்கம் நோக்குகையில்

வியர்வை படிந்து கருப்பேறிய
நாற்காலி
கைப்பிடியின் முதிர்ச்சி

தூசிபடிந்த விளக்குபோல
வாசிக்க முடியாது
விழிகள் பரிதவிக்க

இதற்குப்பின் தெரிந்து
என்ன பயனென
தாலியறுத்து வந்த மகளின்

வாசிப்பை இடைமறித்து
நாற்காலியில் சாய்கிறார்
தவறி விழுகிறது துண்டு!

Blogger Wordpress Gadgets