Pin It

Widgets

நீரிரைச்சல் கேட்டு எத்தனை இரவுகள்
எத்தனை பகல் கடந்து விட்டது
எங்கள் ஊர் பாலத்திற்கும் எங்களுக்கும்

சாக்கடையென அறிந்தும்
அது ஓடையாகியிருக்கும்
மழைக்கால கப்பல் பயணங்களில்

பொத்தென விழும் ஓட்டு வீட்டு மழை
கீற்றில் சரசரக்கும் கூரை வேய்ந்த மழை
மரங்களில் பொசபொசக்கும் மழை

சொளவினை குடையாக்கி
அடுப்பு மூட ஓடும் அம்மா
நஞ்சை மூழ்கி விடாக்கூடாதென
வரப்புவெட்டிவிட ஓடும் அப்பா

கோவில் வராண்டாவில்
கலைத்து ஆடும் சீட்டுக்கட்டுகள்
தாத்தாவின் சுருட்டு வாசம்

தன் பையனை பார்த்திங்களாவென
மழைக்காலங்களில் தேடியலையும்
ஏதோ ஒரு அக்காவின் குரல்

தெருவெங்கும் கைவிரித்து
அங்குமிங்குமாய் சிறகடித்து அலையும்
வாண்டுகளும் சிறுவர்களும்

எதையும் காணவிடாது
சுட்டெறிக்கும் இந்த சூரியனில்
கண் விழித்தாலென எரிந்தாலென்ன?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets