வாடி இவள வாடி இவள
கண் காட்டி வித்தைக்காரி காத்து கிடக்குறேன்
உன் கட்டழகு மேனியா கேட்டேன்
ஆயிசுக்கும் உன் காதல்தான கேட்டேன்
தொட்டுப் பார்க்க ஆசையில்லை
தொடும் அளவிற்கு உம்மேல காமம் இல்லை
வாடி இவள வாடி இவள

உன் அப்பன்கிட்ட பேச வரேன்

உன் ஆத்தா புடவை ஒன்னு கட்டியிரு
சாதி வேணாம் மதமும் வேணாம்
நீ சமஞ்சிருந்தா மட்டும் போதும்
வாடி இவள வாடி இவள

ஊரறிய பந்தல் போட்டு கை பிடிக்க நான் ரெடி

ஊரோரமா உன்பேருல ஒரு காணி நிலமும் ரெடி
ஆவணியில கழுத்துக்கு தாலியும் ரெடி
பெத்துக்கிற புள்ளைக்கு பேரும் ரெடி
வாடி இவள வாடி இவள

மத்தியான வேலையில முந்தான காத்து போதும்

வயக்காட்டு வாளி கஞ்சி ஊத்தி கொடுக்க
நீ பொண்டாட்டியா வந்தா போதும்
வாடி இவள வாடி இவள வாடாம பாத்துக்குறேன்
வாடி இவள வாடி இவள


வரப்போரம் வழுக்காம வசமாத்தான் தூக்கிகிறேன்.

மாசம் ரெண்டு ரவிக்கைத்துணி தெச்சுத்தாரேன்.
கல்லுருண்டை கடிச்சி தரேன்
கணுக்காலு கொலுசு தாரேன்
வாடி இவள வாடி இவள

பல்லு போன காலத்துல உன்

கைப்பிடியா நானிருப்பேன்
கட்டையில போகும் வர
உன் காத்தாடியா நானிருப்பேன்
மண்ணுக்குள்ள போனாலும் கூட வரேன்
வாடி இவள வாடி இவள

தனிமையில் இருக்கிறேன் என்று
என்னை உணரவிடுவதே இல்லை
அந்த அளவிற்கு நீ என்னை
வசியம் செய்திருக்கிறாய் என்று,
உன்மேல் குற்றம் சொல்லவும் மனமில்லை

சிலர் என்னை
நாலு காலில் நடக்கிறான் என்றும்
சிலர் எட்டு காலில் நடக்கிறான் என்றும்
வீதியில் பேசிக் கேட்டிருக்கிறேன்
வீடு மட்டும் மாறிச் செல்லாது
பார்த்துக் கொள்கிறேன்...

நீ என்னைத் தேடுவது இல்லை
என்பது அறிந்தும்
உன்னை ஒதுக்கி வைக்க விரும்பாது

சில நேரங்களில் நண்பர்களோடு
சில நேரம் தனிமையோடு என,
எதோ ஒரு வகையில்
உள்ளங்கைக்குள் ஏற்றிக் கொள்கிறேன்...

யாரும் அறியாத வண்ணம்
எனக்கென ரகசியங்கள்
சிலவற்றை சேகரித்து வைக்கிறேன்..

அது என்னவென உள்சென்று
அறிந்து கொள்ள உனக்கு வாய்ப்பளிக்கிறேன்
என்னையும் அறியாது கூட்டத்தில்
புலம்பல்களாகவோ இல்லை
பகிர்தலாகவோ உமிழ்ந்த்து செல்கிறேன்

எப்பொழுதுமே நமக்குள்
அளவினை நிர்ணயித்துக் கொள்கிறேன்
தவறாமல் தவறி விடுகிறேன்...

தூக்கமில்லை, நிம்மதியில்லை
இப்படி எத்தனை எத்தனையோ
காரணங்கள் கண்டுபிடித்து உன்னை
அருகில் அணைத்துக் கொள்கிறேன்...

சமீப காலமாய் வார இறுதி எனவும்
இவ்வளவு தான் அளவு எனவும்
தீர்மானித்து உன்னை என் வீட்டிற்குள்
வைத்து அழகு பார்க்கிறேன்...

இருந்தும் நான் வாங்கியிருக்கும்
பட்டம் என்னவோ
குடிகாரன் என்பதனால்
நாளை முதல் குடிக்க மாட்டேன்
என்றொரு தீர்மானத்தோடு,

உன்னை நிறுத்துவதா இல்லை
என்னைத் திருத்துவதா?
செய்வதறியாது ஒரு கோப்பை
மதுவோடு இந்த இரவினைக் கழிக்கிறேன்!

எனது சிந்தை இவற்றை தான்
அதிகம் விரும்புமென தீர்மானித்து
அலைபேசியில்

காதல் காமம் சோகம்
என பிரித்து
பாடல்களை பதிவு செய்திருந்தேன்

அந்த இரவு சோகம் தவிர்த்து
மிச்சம் இரண்டையும்
ஒரு சேர வேண்டுமென்றதால்,

அதிலொன்று இதிலொன்று
என எண்ண செவிகளை
சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்...

எதற்கும் அடைபடாது மீள்வதால்
சோகமென தீர்மானித்து
சோகப் பாடல்கள் கேட்கிறேன்

ஒரு வரையறைக்குள் சுழல விரும்பாத
மனது
இதைத் தாண்டி வேறெதுவோ
விரும்புவதாய் அனுமானித்து,

பண்பலையில் அலை வரிசை
அலைவரிசையாய் தேடுகிறேன்
அனைத்து வகைப் பாடல் இசைத்தும்
ஒரு முடிவிற்கு வந்தபாடில்லை...

இறுதியில்
தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டிருந்த
விளம்பரம் கேட்டு கண்ணயர்ந்து போகிறேன்
குரங்கு மனிதனடா நீயென்று!

யாதென
கணிக்க முடியாதொரிடத்தில்
பருவ மங்கை ஒருத்தி
வானம் பார்த்த படி
படுத்திருந்தாள்....

அவளின் ஆடைகள் கூட
வானம் சூழ்ந்த மேகம் போல
வெண்ணிறம் பூண்டிருந்தது...

அங்கே கூடியிருந்த
பொது சனங்கள் யாவரும்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கிறார்களே தவிர,

உதவுவது போன்று
எந்த பிம்ப அலையும்
நிகழ்வதாய் தெரியவில்லை
என் கண்களுக்கு!

ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்கிறார்கள்-அவள்
இறப்பிற்கான காரணம்
இவர்களே தீர்மானிக்கின்றார்கள்...

எவருக்கும் பயமற்றவனாய்
யாருடைய உதவியும் கேளாமல்
நான் மட்டும் உதவ முற்படுகிறேன்

ஒருவேளை இது
கனவாய் இல்லாதிருந்தால்
அந்தக் கூட்டத்தில் நானும்
ஒருவனாய் நின்றிருக்க கூடும்!

இப்பொழுதெல்லாம்
என் அறையின்
மேற்கூறைகள் என்னிடம்
கோபித்துக் கொள்வதில்லை...

அறையில் வர்ணம்
நிரப்பும்
மெழுகுவர்த்தி ஏற்றப்படாமல்
மேசையில் விழுந்து கிடக்கிறது...

எனது வெறுமையின்
வாசனை வாங்கி
மூலைக்கு மூலை
ஒட்டடைகள் கடை
விரித்துக் கொண்டது...

என் கோலம் கண்டு
கடிகார முற்களும்
காலம் காட்டாமல்
நின்று விட்டது...

நான் விட்டம் பார்த்து
விழித்திருக்க
சுழலாத மின்விசிறியில்
தொக்கி நிற்கிறது
நான் எழுத நினைத்த
சிறுகதை ஒன்று...

தலைகீழ் கவிழ்ந்திருக்கும்
புத்தகத்தின் நடுவே
என் பேனா ஒன்று
வார்த்தைகளற்று தனித்திருக்க,

என் பாதத் தடங்கள்
தாங்கி நிற்கும் சுவற்றில்
நான் தேடும் ஏதோ ஒன்று
மறைந்து கொள்கிறது...

நான் பருகி வைத்த
தேனீர் கோப்பையின்
வட்ட வட்டப் படிமங்களும்,

நான் புகைத்து அணைத்த
சிகரெட்டின் கரைகளும்
என் தனிமையின்
அடையாளங்களாகிப் போக

என்னுடல் தாங்கி நிற்கும்
உயிர் காண தவமிருக்கிறேன்
ஒரு கானல் போல!

அவளுக்கான பதிலையும்
எனக்குள் தீர்மானித்து
கேள்விகளைத் தொடுக்கிறேன்...

நான் யூகித்திடாத பதிலை
என் முன் நிறுத்துகிறாள்
என் கோபம் கண்டு
சிரிக்கிறாள்...

அவள் பேசுவதை
ரசிக்கிறேன் என்றாலும்,
என் வார்த்தைகளில்
குற்றம் கானுகிறாள்...

என் கோபங்கள்
வார்த்தைகளாய்
கொப்பளிக்கையில்
கேலி செய்கிறாள்...

இருந்தும் தவறாது
என் காதுகளில்
மையம் கொள்கிறாள்...

இவையெல்லாம்
அவளுக்கு எடுத்துரைக்க
மெளனம் பேசுகிறாள்...

அங்கே இருவரின்
ஆறுதலும் காலத்தின்
கையில் திணிக்கப்பட

அவள்
அவளாகத் தான் இருக்கிறாள்
நான் எதிர் பார்ப்பவள்
எவளாகவோ இருக்கிறாள்!

பைத்தியமானவள் ஒருத்தி
வீதியெங்கும் நடந்தபடி
தனக்குள் எதையோ
முனங்கிக் கொண்டு செல்கிறாள்...

அவள் பேசித் திரியும்
வார்த்தை இன்னதென
அங்கே கடந்து போகும்
வாலிபர்களும் வயோதிகர்களும்
கண்டுகொள்வதாய் இல்லை

கீறல்களும் வடுக்களும்
இரத்தக் காயங்களும்
இது என்னவாய் இருக்குமென
சுற்றித் திரியும் யாருக்கும்
அனுமானிக்க இயலவில்லை போலும்...

இவள் பைத்தியக்காரியாகவோ
நல்ல மன நிலையாகவோ
இருக்கையில்
கற்பிழந்திருக்கக் கூடும்
என்று கடந்து செல்கிறாள்

இவளைப் போல் பாதிக்கப்பட்டு
பழக்கப்பட்டுப் போன
பரத்தை ஒருத்தி!

Blogger Wordpress Gadgets