அவள் உறங்கிவிட்டாளா
உறங்கிக்கொண்டு தான் இருக்கிறாளா என
தனது பார்வையை
இடது பக்கம் கிடத்தியிருக்கிறாள்...

தொடர்ச்சியாக வரும்
வாடிக்கையாளர்களில் சிலர்,
மின் விளக்கு வேண்டும் வேளையில்
தவிர்த்திட முடியாது தோற்க,

இவள் நாசி துடிதுடிக்க
அவள் விழி திறக்க கூடாதென
வேண்டிக் கொள்கிறாள்...

கண்ணீர் வழிய வழிய
கழற்றி எறியும்
ஒவ்வொரு ஆணுறைக்குப் பின்னாலும்,

புதுத் துணிக்கும் புத்தகப் பைக்கும்
நோட்டுப் புத்தகங்களும்,
பள்ளிக் கட்டணங்களுக்கும்
மூன்று வேளை சாப்பாட்டிற்கும்

இவளையே
நம்பி உறங்கிக் கொண்டிருக்கும்
அவள் மகளுக்காக என்பதை,

இவர்கள் எவரும்
அறிய முற்படுவதில்லை
அதை உணர்ந்து உதவுபவன்
புணர்வதில்லை!

யாருக்கும் தெரியாமல்
என் கைக்குள் திணித்து அனுப்பும்
ரெண்டு நாலணாவும்
ஒரு ஐம்பது பைசாவையும்
இன்று காணுகையில்
கண் முன் வந்து போகிறாள்
என் பாட்டி!

குணங்கள்

Sunday, December 11, 2011 | 0 comments »

தன் காலில்
அடி பட்டிருக்கிறது என்பது
அதற்கு தெரியாது...
நடக்கும் போது வலிக்கிறது
என்று மட்டும் தெரியும்..

தன்னை கல் கொண்டு தான்
எறிந்தான் என்பது அதற்கு தெரியாது
எறிந்தது நான் தான்
என்பது அதற்கு நன்றாகவே தெரியும்!

எனது தெருவோர நண்பர்களில்
சிலாகித்தலின் போது-அது
என்னை கடந்து செல்லுகையில்
பயந்து போகிறதென கேலியாய்
சிரித்துப் போனதுண்டு....

என் ஆழ் மனதின் பயம்
அது அறிந்ததால் தான்
என்னை விட்டுச் சென்றிருக்கிறது
என்று பின்பொரு நாள்
புத்தகம் வாசித்தலின் வாயிலாய்
தெரிந்து கொண்டேன்!

அந்த குயிலுக்கு
நன்றாகவே தெரியும்
கருவேப்பிலை மரத்தில்
பூத்து காய்க்கும் காய்கள்
எப்பொழுது கனியும் என்று....

இரும்பு கம்பிகள் வளைத்து
நரம்பு பின்னி, கண்ணி செய்து
அதில் ஒரு
கோவப் பழம் வைத்து அதே
கருவேப்பிலை மரத்தில் வைத்தாலும்,

குயில் திண்ண வரும் என்று
அந்த குயிலின் மாமிசத்துக்காய்
காத்திருக்கும் அந்த வேடனுக்குத் தெரியும்

மேற் சொன்ன வேடனைப் பற்றிய
விசயங்கள் யாவும்
அந்த குயிலுக்குத் தெரியாது

துரோகி இப்படித் தான் கழுத்தருப்பான்
என்பது எனக்கும் தெரியாது

அவளுக்கான பதில்கள்
இன்னும் தீர்மானிக்கப் படவில்லை
அதற்கான கேள்வியும்
அவளிடமிருந்து இருந்து எழ வில்லை
கலவியின் முடிவில்
கனவுகள் இரண்டும்
இரு வேறு திசை நோக்க
மெளனம் மட்டும் இறைந்து கிடக்கிறது...

நீ என்னை
ஆட்டுவிக்கிறாய் என்றும்
நான் உன்னை
ஆட்டம் காட்டுகிறேன் என்றும்,
சிறுவன் பிடியில் சிக்கிய நூலும்
காற்றில் ஆடும் பட்டமும்
அறுந்தோடிய  சந்தோசமும்
ஒரு மாலை வேளையில்
காலம் என்னவென
உணர்த்துகிறது எனக்கு!

மோர் முளகாய் கண்ணு காரி
மாங்கா ஊறுகாய் எடுத்து தாடி
கூழுக்கு உப்பு பத்தல
உன் அழகுக்கு வேட்டி நிக்கல

கடத்தெருவு கண்ண பாரு
கத்தரிக்காய் தொக்கு பாரு
பிரியாணிக்கு காரம் பத்தல
உன் அழகுக்கு தெருவிளக்கு நிக்கல

எடுத்து சொருகும் கொசுவம் பாரு
இடுப்பில் வழியும் வியர்வை பாரு
சாரயத்துல போதை இல்லையே
சிரிச்சிபுட்டா ரொம்ப தொல்லையே

இடுப்பில் ஏறும் தண்ணிக் குடம்
தலை கோதும் முழங்கை நிறம்
கண்ணுக்குள்ள தீய மூட்டுற
கை தொட்டா தண்ணி காட்டுற

ஆத்தங்கர கெண்ட மீனு
துள்ளி குதிக்கும் அயிர மீனு
தூண்டில் போட்டும் சிக்க வில்லையே
நீ தூண்டில் போட்டும் சிக்க வில்லையே

கலவிய பின்

Sunday, December 11, 2011 | 0 comments »

அடை மழைக் குளிரானாலும்
அனல் கக்கிய இரவானாலும்
உன் பசியறிந்து
பாய் விரிக்கிறேன்...

நான் விழி மூடி
என் கனவோடு
உனை எதிர் நோக்க
ஆடை கழற்ற துவங்குகிறாய்

கதை பேசி
விரல்கள் சீண்டி
மோகம் கொளுத்தி
குளிர் காய்ந்து

என் தாகம் புரிந்து
விளையாடுவாயென
இந்த இரவும் தவமிருக்கிறேன்...

என் பாதங்கள் வருடி
தலைக் கோதி
நக கோடுகள் நீட்டுவாயென
கனவும் உண்டெனக்கு!

என் காதுமடல்கள்
உன் மூச்சிக் காற்றில்
சிவந்த இரவுகள் எல்லாம்
கானல் இரவு!

இருவர் மேனியில்
உதிரும் வெப்பச் சிதறல்கள்
வியர்வையாய் பொழிய
உன்னிலிருந்து
தனித்து விடப்படுகிறேன்....

நீ உண்ட மிச்சத்தில்
நான் பசியாற
காத்திருக்கிறேன்
பரிமாற நீ
தயாரில்லை என்கிறாய்!

உனது உச்சத்தில்
உடைந்து போகிறது
எனது கனவுகள்
தொடர்ந்து ஏமாறுவது
என் ஆசைகள்....

நிர்வாண அறையில் எனது
முனங்கள்களற்று
நாற்புரமாய் சுவர்கள்
திரும்பி விட்டது
கலவி முடித்த
உன்னைப் போல...

உன்னையே
சுற்றிச்சுற்றி வருகிறேன்
கடிகார முட்கள் போல!

வாடி இவள வாடி இவள
கண் காட்டி வித்தைக்காரி காத்து கிடக்குறேன்
உன் கட்டழகு மேனியா கேட்டேன்
ஆயிசுக்கும் உன் காதல்தான கேட்டேன்
தொட்டுப் பார்க்க ஆசையில்லை
தொடும் அளவிற்கு உம்மேல காமம் இல்லை
வாடி இவள வாடி இவள

உன் அப்பன்கிட்ட பேச வரேன்

உன் ஆத்தா புடவை ஒன்னு கட்டியிரு
சாதி வேணாம் மதமும் வேணாம்
நீ சமஞ்சிருந்தா மட்டும் போதும்
வாடி இவள வாடி இவள

ஊரறிய பந்தல் போட்டு கை பிடிக்க நான் ரெடி

ஊரோரமா உன்பேருல ஒரு காணி நிலமும் ரெடி
ஆவணியில கழுத்துக்கு தாலியும் ரெடி
பெத்துக்கிற புள்ளைக்கு பேரும் ரெடி
வாடி இவள வாடி இவள

மத்தியான வேலையில முந்தான காத்து போதும்

வயக்காட்டு வாளி கஞ்சி ஊத்தி கொடுக்க
நீ பொண்டாட்டியா வந்தா போதும்
வாடி இவள வாடி இவள வாடாம பாத்துக்குறேன்
வாடி இவள வாடி இவள


வரப்போரம் வழுக்காம வசமாத்தான் தூக்கிகிறேன்.

மாசம் ரெண்டு ரவிக்கைத்துணி தெச்சுத்தாரேன்.
கல்லுருண்டை கடிச்சி தரேன்
கணுக்காலு கொலுசு தாரேன்
வாடி இவள வாடி இவள

பல்லு போன காலத்துல உன்

கைப்பிடியா நானிருப்பேன்
கட்டையில போகும் வர
உன் காத்தாடியா நானிருப்பேன்
மண்ணுக்குள்ள போனாலும் கூட வரேன்
வாடி இவள வாடி இவள

தனிமையில் இருக்கிறேன் என்று
என்னை உணரவிடுவதே இல்லை
அந்த அளவிற்கு நீ என்னை
வசியம் செய்திருக்கிறாய் என்று,
உன்மேல் குற்றம் சொல்லவும் மனமில்லை

சிலர் என்னை
நாலு காலில் நடக்கிறான் என்றும்
சிலர் எட்டு காலில் நடக்கிறான் என்றும்
வீதியில் பேசிக் கேட்டிருக்கிறேன்
வீடு மட்டும் மாறிச் செல்லாது
பார்த்துக் கொள்கிறேன்...

நீ என்னைத் தேடுவது இல்லை
என்பது அறிந்தும்
உன்னை ஒதுக்கி வைக்க விரும்பாது

சில நேரங்களில் நண்பர்களோடு
சில நேரம் தனிமையோடு என,
எதோ ஒரு வகையில்
உள்ளங்கைக்குள் ஏற்றிக் கொள்கிறேன்...

யாரும் அறியாத வண்ணம்
எனக்கென ரகசியங்கள்
சிலவற்றை சேகரித்து வைக்கிறேன்..

அது என்னவென உள்சென்று
அறிந்து கொள்ள உனக்கு வாய்ப்பளிக்கிறேன்
என்னையும் அறியாது கூட்டத்தில்
புலம்பல்களாகவோ இல்லை
பகிர்தலாகவோ உமிழ்ந்த்து செல்கிறேன்

எப்பொழுதுமே நமக்குள்
அளவினை நிர்ணயித்துக் கொள்கிறேன்
தவறாமல் தவறி விடுகிறேன்...

தூக்கமில்லை, நிம்மதியில்லை
இப்படி எத்தனை எத்தனையோ
காரணங்கள் கண்டுபிடித்து உன்னை
அருகில் அணைத்துக் கொள்கிறேன்...

சமீப காலமாய் வார இறுதி எனவும்
இவ்வளவு தான் அளவு எனவும்
தீர்மானித்து உன்னை என் வீட்டிற்குள்
வைத்து அழகு பார்க்கிறேன்...

இருந்தும் நான் வாங்கியிருக்கும்
பட்டம் என்னவோ
குடிகாரன் என்பதனால்
நாளை முதல் குடிக்க மாட்டேன்
என்றொரு தீர்மானத்தோடு,

உன்னை நிறுத்துவதா இல்லை
என்னைத் திருத்துவதா?
செய்வதறியாது ஒரு கோப்பை
மதுவோடு இந்த இரவினைக் கழிக்கிறேன்!

எனது சிந்தை இவற்றை தான்
அதிகம் விரும்புமென தீர்மானித்து
அலைபேசியில்

காதல் காமம் சோகம்
என பிரித்து
பாடல்களை பதிவு செய்திருந்தேன்

அந்த இரவு சோகம் தவிர்த்து
மிச்சம் இரண்டையும்
ஒரு சேர வேண்டுமென்றதால்,

அதிலொன்று இதிலொன்று
என எண்ண செவிகளை
சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்...

எதற்கும் அடைபடாது மீள்வதால்
சோகமென தீர்மானித்து
சோகப் பாடல்கள் கேட்கிறேன்

ஒரு வரையறைக்குள் சுழல விரும்பாத
மனது
இதைத் தாண்டி வேறெதுவோ
விரும்புவதாய் அனுமானித்து,

பண்பலையில் அலை வரிசை
அலைவரிசையாய் தேடுகிறேன்
அனைத்து வகைப் பாடல் இசைத்தும்
ஒரு முடிவிற்கு வந்தபாடில்லை...

இறுதியில்
தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டிருந்த
விளம்பரம் கேட்டு கண்ணயர்ந்து போகிறேன்
குரங்கு மனிதனடா நீயென்று!

யாதென
கணிக்க முடியாதொரிடத்தில்
பருவ மங்கை ஒருத்தி
வானம் பார்த்த படி
படுத்திருந்தாள்....

அவளின் ஆடைகள் கூட
வானம் சூழ்ந்த மேகம் போல
வெண்ணிறம் பூண்டிருந்தது...

அங்கே கூடியிருந்த
பொது சனங்கள் யாவரும்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கிறார்களே தவிர,

உதவுவது போன்று
எந்த பிம்ப அலையும்
நிகழ்வதாய் தெரியவில்லை
என் கண்களுக்கு!

ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்கிறார்கள்-அவள்
இறப்பிற்கான காரணம்
இவர்களே தீர்மானிக்கின்றார்கள்...

எவருக்கும் பயமற்றவனாய்
யாருடைய உதவியும் கேளாமல்
நான் மட்டும் உதவ முற்படுகிறேன்

ஒருவேளை இது
கனவாய் இல்லாதிருந்தால்
அந்தக் கூட்டத்தில் நானும்
ஒருவனாய் நின்றிருக்க கூடும்!

இப்பொழுதெல்லாம்
என் அறையின்
மேற்கூறைகள் என்னிடம்
கோபித்துக் கொள்வதில்லை...

அறையில் வர்ணம்
நிரப்பும்
மெழுகுவர்த்தி ஏற்றப்படாமல்
மேசையில் விழுந்து கிடக்கிறது...

எனது வெறுமையின்
வாசனை வாங்கி
மூலைக்கு மூலை
ஒட்டடைகள் கடை
விரித்துக் கொண்டது...

என் கோலம் கண்டு
கடிகார முற்களும்
காலம் காட்டாமல்
நின்று விட்டது...

நான் விட்டம் பார்த்து
விழித்திருக்க
சுழலாத மின்விசிறியில்
தொக்கி நிற்கிறது
நான் எழுத நினைத்த
சிறுகதை ஒன்று...

தலைகீழ் கவிழ்ந்திருக்கும்
புத்தகத்தின் நடுவே
என் பேனா ஒன்று
வார்த்தைகளற்று தனித்திருக்க,

என் பாதத் தடங்கள்
தாங்கி நிற்கும் சுவற்றில்
நான் தேடும் ஏதோ ஒன்று
மறைந்து கொள்கிறது...

நான் பருகி வைத்த
தேனீர் கோப்பையின்
வட்ட வட்டப் படிமங்களும்,

நான் புகைத்து அணைத்த
சிகரெட்டின் கரைகளும்
என் தனிமையின்
அடையாளங்களாகிப் போக

என்னுடல் தாங்கி நிற்கும்
உயிர் காண தவமிருக்கிறேன்
ஒரு கானல் போல!

அவளுக்கான பதிலையும்
எனக்குள் தீர்மானித்து
கேள்விகளைத் தொடுக்கிறேன்...

நான் யூகித்திடாத பதிலை
என் முன் நிறுத்துகிறாள்
என் கோபம் கண்டு
சிரிக்கிறாள்...

அவள் பேசுவதை
ரசிக்கிறேன் என்றாலும்,
என் வார்த்தைகளில்
குற்றம் கானுகிறாள்...

என் கோபங்கள்
வார்த்தைகளாய்
கொப்பளிக்கையில்
கேலி செய்கிறாள்...

இருந்தும் தவறாது
என் காதுகளில்
மையம் கொள்கிறாள்...

இவையெல்லாம்
அவளுக்கு எடுத்துரைக்க
மெளனம் பேசுகிறாள்...

அங்கே இருவரின்
ஆறுதலும் காலத்தின்
கையில் திணிக்கப்பட

அவள்
அவளாகத் தான் இருக்கிறாள்
நான் எதிர் பார்ப்பவள்
எவளாகவோ இருக்கிறாள்!

பைத்தியமானவள் ஒருத்தி
வீதியெங்கும் நடந்தபடி
தனக்குள் எதையோ
முனங்கிக் கொண்டு செல்கிறாள்...

அவள் பேசித் திரியும்
வார்த்தை இன்னதென
அங்கே கடந்து போகும்
வாலிபர்களும் வயோதிகர்களும்
கண்டுகொள்வதாய் இல்லை

கீறல்களும் வடுக்களும்
இரத்தக் காயங்களும்
இது என்னவாய் இருக்குமென
சுற்றித் திரியும் யாருக்கும்
அனுமானிக்க இயலவில்லை போலும்...

இவள் பைத்தியக்காரியாகவோ
நல்ல மன நிலையாகவோ
இருக்கையில்
கற்பிழந்திருக்கக் கூடும்
என்று கடந்து செல்கிறாள்

இவளைப் போல் பாதிக்கப்பட்டு
பழக்கப்பட்டுப் போன
பரத்தை ஒருத்தி!

தற்கொலை

Sunday, October 30, 2011 | 0 comments »

நிலவற்ற இரவில்
என் மேனியெங்கும்
வெறுமை பிசுபிசுக்க
கடற்கரையில்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்..

என் கண்ணீரின் சாயல்
இந்தக் கடல் என,
வெகு நேரமாய் என் அன்பினை
இதய வடிவில் விரல்களால் தீட்டி
ஆறுதல் சொல்லிப் பார்கிறேன்...

அலைகள் ஒவ்வொரு முறையும்
என் அன்பினை ஏற்கிறதா
இல்லை வெறுப்புற்று
அழித்துச் செல்கிறதா
என அறியாது மீண்டும் மீண்டும்
இதய ஓவியம் நீட்டுகிறேன்..

எங்களுக்குள் புரிதல்கள்
நிகழ்ந்தபாடில்லை...

நான் அன்பு
செலுத்தி தோற்றதாகவே
இருக்கட்டுமென
என் உயிரினைத் தருவதாய்
உள் இறங்குகிறேன்!

அலைகள் ஒவ்வொன்றும்
உள் இழுப்பதும் வெளியில்
தள்ளுவதுமாய் என் உயிரினை
ஊஞ்சலாக்கி அலைக்கழிக்கின்றன

நான் விழுந்து எழும் வேளையில்
என் முகத்தினில் உமிழ்ந்து
ஆனந்த கூச்சல் செய்கின்றன...

இவைகள் என்னை
உதாசினப்படுத்துகின்றன
என்பதறிந்தும்
மனம் ஒப்பவில்லை....

எப்படியும் என் உயிர் குடித்து
சதைப் பிண்டத்தை
வெளியேற்றுவாய்
என்ற நம்பிக்கையில்
இதோ என் உயிர் மாய்க்கிறேன்!

பகலென்றும் இரவென்றும்
யூகிக்க முடியாமலும்,
அது ஒரு அறை என்றும்
இல்லை வீதி என்றும்
சரிவர சொல்ல முடியாமலும்
ஓவியம் ஒன்று
என் விழிகள் இரண்டையும்
ஆட்படுத்தியிருந்தன...

அதனருகே சிதறிக் கிடந்த
இன்னபிற ஓவியங்களையும்
இவைகள் இன்னதென்று
எதனுடனும் ஒப்பீடும்
செய்திட இயலவில்லை...

என்னால் ஈர்க்கப்பட்ட
அந்த ஓவியமும்
மனிதனின் சாயல் என்பது தவிர
வேறெதையும் என் சிந்தனைக்கு
உணர்த்தவில்லை!

என்னையும் அறியாது
நான் சுற்றி சுற்றி வர
வரைந்தவன் பார்வையற்றவன்
என்று எண்ணச் சொல்கிறது மனது

அவ்வழியாய் வந்தவர்கள்
ஓவியன் இறந்து விட்டதாய்
எங்கோ இழுத்துச்செல்ல
யாவரும் இருளில்
மறைந்து  போகின்றனர்...

மீண்டும் ஓவியத்தை
உற்று நோக்க
அவன் இழுத்துச் செல்லப்பட்ட
இடத்தில்
உள்ளங்கையில் தாங்கும் அளவிற்கு

வெட்டப்படாத
தொப்புள் கொடியோடும்
பனிக் குடம் உடைந்து
நீர்கறையாகவும்
ஓவியத்தில்
சிசுக்களாய் நிறைத்து கிடக்கின்றன.

ஒருவேளை அந்த ஓவியம்
யாருக்கும் புலப்படாத
ஆதாம் என்றால்

இரத்தமும் சதையுமாய்
சிதறிக் கிடக்கும்
சிசுக்களை வீசிச்சென்ற
ஏவாள் எங்கே?

குருடன் என்று
எண்ணத் தோன்றிய
ஓவியன் யார்?

அன்றொரு நாள்
இவளும் இப்படித்தான்
அழுது கொண்டிருந்தாளாம்...,

வார்த்தைகளோ இல்லை
ஆறுதல் சொல்வதோ
மருந்து இல்லை என்பது
அவளும் அறிந்த ஒன்று தான்!

இருந்தும் நான் அழுவது கண்டு
ஆறுதல் சொல்ல
என்னை அவள் மடியில்
சாய்த்துக் கொண்டாள்!

கசிந்து கொண்டிருக்கும்
என் குருதியின் வாடை

அருகில் துயிலில் இருந்த
யாருடைய நாசியும்
துளைக்கவில்லை போலும்...

இரவின் நிர்வாணம்
அப்படி இவர்களை
பழக்கப் படுத்தியிருக்கலாம்!

என்னை அவள் தேற்ற
முயல்கிறாள் முடியாமல்
வார்த்தையில் உடைகிறாள்...

சிறிது மெளனம் திண்று
அவள் சோகம் தொடர்ந்தவள்
இரவு என்பதனால்
தன் அடிவயிற்றில் வலி கொடுத்தவன்

மனிதன் என்பது தவிர
அடையாளம் ஏதும்
தெரியவில்லை என்றாள்...

அவன் விட்டு சென்ற
தடயம் ஏதேனும்
இருக்கிறதா என்றால்
என்னை கை நீட்டுகிறாள்
என் தாய்!

தூரத்திலிருந்து கைகாட்ட கூட
அவன் முகம்
அவளும் அறியவில்லை...

இப்பொழுது என்னிடமும்
அடி வயிற்றில் வலி தவிர
வேறொன்றும் இல்லை!

சருகு!

Sunday, October 16, 2011 | 0 comments »

இவைகள் இவைகளாக
இருந்தது இல்லை

வெளீர் பச்சை
நிறம் சொருகி
அதிகாலை சூரியனுக்கு
தன்னை படையல் வைக்கிறது

அவ்வழியாய் கடத்து போகும்
ஒரு புகைப்படக்காரன்
தன் நிழற்படக் கருவியில்
அடைத்துச் செல்கிறான்...

அவன் மாட்டி வைத்த
கண்ணாடி குடுவை வழியாய்
சிலர் கண்களை

ஈர்த்துச் செல்கிறது
அந்த இளந்தளிர்!

பொழுதுகள் புரள புரள
துளிர் விட்டு
வளர துவங்குகிறது...

வளரும் காலங்களில்
சில வெட்டுக்கிளிகள்
இலைகளை கூர் பார்க்கிறது

பறவைகளின் எச்சில் படுகிறது
காய்கனிகளுக்கிடையே
கல்லடியும் படுகிறது....

திடுமென ஒருநாள்
இவ்விலைகள் எல்லாம்
சிலருக்கு நிழலாய்
உட்புகுத்தப்படுகிறது!

இவைகள் பழுப்பு நிறம்
கடக்கும் பொழுது
துளிர்கள் எல்லாம்
இலைகளாக மாற

அப்பழுப்பிலைகள்
உதிரத் துவங்குகிறன...

சிற்சில காற்றில
அலைகிறது...

சிற்சில மரத்தினடியில்
மவுனித்து கிடக்கிறது....

சிற்சில
மண்ணில் உரமாகிறது...

சிற்சில
தீயினில் சாம்பலாகிறது...

இப்படித் தான் மனித
வாழ்க்கையும்!

உனது இடது கை
எழுதும் பழக்கம்
எனக்கும் கற்று கொடு...

உன்னை அதிகமுறை
கேலி செய்திருக்கிறேன்
என்பதற்காய்
மறுத்து விடாதே!

உனக்கு நியாபகம்
இருக்கிறதா?
மேசையில் வைத்து
எழுதும் போது

நீ கையை
தட்டி விடுவதாய்
டீச்சரிடம்
அடி வாங்கி கொடுத்திருக்கிறேன்

சாப்பிடும் போது உன்னை
நொட்டாங்கையன் என்று
உன் மனதை
காயப்படுத்தியிருக்கிறேன்

மன்னித்துவிடு நண்பா
உனது இடது கை
எழுதும் பழக்கம்
எனக்கும் கற்று கொடு...

நேற்று அப்பாவிற்கு
பீடி பற்றவைக்க
தீப்பட்டி எடுத்துக்
கொடுக்கவில்லை என்று

குடி போதையில்
இதோ பார்
என் கையில்
சூடு வைத்து விட்டார்

தீபாவளி

Tuesday, October 11, 2011 | 2 comments »

இதுவரை வராத அழைப்பும்
கேட்டிராத குரலும்
நேற்று என் அலைபேசியில்...,

சம்பிரதாய நலன்
விசாரிப்புகளுக்குப் பின்
பேசிட வார்த்தைகள் ஒன்றும்
கிடைப்பதாய் இல்லை
இருவருக்கும்!

தமயனுக்கே
உரிய தொனியில்
ஒரு அதட்டலும்
அறிவுரைகளும் கூறி முடிக்க

தனது தேவை 
என்னவென்று
முதன் முறையாக
வினவுகிறான் தம்பி ..,

தனது அன்றாட பொழுதுகள்
கழியும் விதம் பகிர்வதும்
எனக்கும் நியாயமாய் படவில்லை!

தம்பியும் பெரிதாய் ஒன்றும்
கேட்டுவிடவில்லை..,

அண்ணா தீபாவளிக்கு
எனக்கு ஒரு பண்ட்
ஒரு சட்டை!

பாவாடை சட்டையில்
இருந்த தங்கையோ
இம்முறை
சுடிதார் கேட்டிருக்கிறாள்..

இதோ இந்த சென்னையில்
இன்று காலை
பற்பசையின்றி
வேப்பமர குச்சி தேடி அலைந்த

என்னை போன்ற
அண்ணன் மார்களின்
நிலைமை தம்பி, தங்கை
அறிய வாய்ப்பில்லை,
சொல்வதும் நாகரீகம் இல்லை!

அறை எண்___

Sunday, October 09, 2011 | 0 comments »


தூண்டப்படாத
விளக்கொன்றில்
குடியிருக்கும் அறையில்

அவனும் அவனுமாகிய
தனிமையும்

விசும்பல் வெளியே
கேளாதிருக்க-தன்
மெளனத்தினால்

சத்தமாய்
இரைந்து கொண்டிருந்தான்
மனதில்!

மனித உருவம்
பொரித்த வியர்வை
வரைபடம் ஒன்று

முதுகின் கீழ்
கால்கள் ஒடுக்கி
படுத்திருக்க

அவன்
தனித்திருப்பது அறிந்து
ஒற்றை சன்னலும்
தாழிட்டுக் கொண்டது

ஏமாற்றத்தின்
பிம்பங்கள் யாவும்
கருப்பு வெள்ளைக்
காட்சிகளாய்

அவன் கன்னத்தில்
பிரதிபலிக்கும்
கண்ணீர் ஒவியங்களாய்

தூரிகையின்றி
வரையப்படும்
இரவுக் காகிதங்கள்

இன்றும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது...

அறை எண் மாறினாலும்
நிகழ்வுகள் மாறாமல்!
நினைவுகள் மாறாமல்!

கைபேசி

Monday, October 03, 2011 | 0 comments »

பாதி தூக்கம் கலைத்து
என் காதுகளில்
அமர்ந்து கொள்கிறாய்..,

அனுமதியின்றி
என் விரல்களால்
தீண்டப்படுகிறாய்

எவனோ ஒருவன்
தூக்கம் தொலைக்கிறான்
என் தூக்கம் கலைக்க
தூது போகிறாய்..,

என் மார்பினிலே அதிக
நேரம் தவழ்கிறாய்
என் முதுகினில்
மாட்டிக் கொண்டு
தவிக்கிறாய்!

சில நேரம் மென்மையாய்
பாட்டிசைக்கிறாய்..,
நான் சோர்வடைந்தால்
மெளனமாக இரைந்து
சுழலுகிறாய்..,

என்னோடு அதிகமாய்
படுக்கையில்
புரண்டவள் என்பதனால்

சாட்சிக்காக பெருவிரல்
ரேகை வேறு
வாங்கிக் கொள்கிறாய்

சூடாகிறாய்
சூடேற்றிப் பார்கிறாய்
உன் உடல் மீதான தாகம்
எனக்குத் தீர்ந்திருக்குமோ?

இன்னோருவன்
கைத் தீண்டலில் நீ
என்னொருத்தி
உடல் மொழியில் நான்!

ஒரு இரவிற்கு முன்னரே
அவன் வருகையினை
வீதியெங்கும்
உமிழ்ந்துச் சென்றான்..,

யார் யார் என்னவெல்லாம்
"படி" செலுத்தலாம் என
தீர்மானிக்கும் கூட்டம்
நிகழ்ந்தவாறு இருக்க,

எவள் வீட்டு முன் நின்று
எந்த திசையிலிருந்து
மாப்பிள்ளை வருவான்,
குறி சொல்வது கேட்டு
தெரிந்து கொள்ள

கன்னியர்கள் சிலர்
இரவு விழித்திருக்க
ஆயத்தம் ஆகினர்..,

நிறை மாத கர்ப்பிணி
பெண்ணொருத்தி
பிள்ளை என்னவாய்
இருக்குமென
ஆவலாகிறாள்

மாமியார் நினைத்து
அச்சம் பூணுகிறாள்
கள்ளிப் பால் பூமி!

தெருக்களில்
விளையாடித் திரியும்
சிறார்கள் அனைவரும்
கருக்கலிலே
வீடடைக்கப் பட்டனர்..,

தன் ஆயுட்காலம்
முடிவினை அறியவும்,
திண்ணைக் கிழம் ஒன்று
காது கூர்மையாக்குகிறது!

கோடங்கி வீற்றிருக்கும்
வீதியில்
சாவுக் குருவி ஒன்று
பாடிச் சென்றதாம்..,

புலம் பெயர்ந்து
கொண்டிருக்கிறான்
இவர்கள் உறக்கம் தொலைத்து
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்..,

இன்னும் வருவதாயில்லை
இவர்கள் மேல் நம்பிக்கை
இவர்களுக்கு!

என்னையும் அறியாது
உன் புகைப்படம்
கையிலேந்தி அமருகிறேன்..,


என் விரல்கள்
புரட்டும் பக்கங்கள் நின்று,
கண்ணில் காட்சிகளாகி


வரிசையாய்
கோர்க்கப்பட்ட
நிகழ்வுகள் யாவும்


தனித்தனிச் சுவடுகளை
முன்னிறுத்திக் கொள்கிறது..,
எனை கொல்கிறது!


இரத்த நாளங்கள்
கண்களை பிளந்து
நீரென தெறித்து விழ


கண்ணாடித் திரையில்
விழும் பிம்பம் ஒன்று
கதறி அழுவது கண்டு,


யாரும் பார்த்திடா
வண்ணம் எனதறை
தாழிட்டுக் கொண்டேன்!


இரவின் நிசப்தத்தில்
என் அழுகுரல்
கேளாதிருக்க-என்
கை கடித்திருந்தேன்..,


எவனோ ஒருவன்
கதவு தட்டி நிற்க
திறக்க முயன்று
தோற்றுப் போகிறேன்
என் புன்னகையிடம்!

தத்தி தத்தி
அம்மா என்றும் என்றும்
அப்பா, அத்தை என்றும்
அழைக்க துவங்கிய
குழந்தைகள்-இன்று


அம்மி(மம்மி) என்றும்
தாடி (டாடி) என்றும்
மழலை பள்ளியிலே!


கரும்பலகையின் மேலே
மூலையில்
மொத்த எண்ணிக்கையும்
இன்றைய வருகையும்
பதியப் படுகிறது..,


குறிப்பெடுக்க தவறிய
வீட்டு பாடங்கள்
அலைபேசி வாயிலாகவோ
சக மானவணிடமிருந்தும்
குறிக்கப் படுகிறது..,


முன்பு போல் இன்றி
அடிக்கும் கம்புகள் குறைத்து
புத்தகம் ஏற்றப் பட்டுள்ளது..,


கூலி வேலைக்கு
செல்லும் ஆட்கள் போன்று
வேனில் ஏற்றியும்
பின் இறக்கியும்
விடப் படுகின்றனர்..,


அப்பாவின் தோள் பிடித்தோ
அம்மாவின் கைபிடித்தோ
செல்ல முடியாமல்!


விளையாடும் இடங்களும்
கணினி என்றாகி விட
கண்களுக்கு கண்ணாடி..,


ஒரு சுழலுக்குப்  பின்


தாய் மளிகை சாமான்
எழுதுடா என்றால்
தமிழ் பேசத் தெரியும்
எழுதத் தெரியாது என்கிறது
தமிழ் பிள்ளை!

வெற்று குழி

Thursday, September 15, 2011 | 0 comments »

குவியல் குவியலாய்
நீண்டு கிடக்கும்
மணல் மேடுகளில்

கற்றாளை செடிகள்
முட்கள் நீட்டியும்,
பாம்பென நீளும்
சில கொடிகளும்
படர்ந்து கிடக்க..,

ஒவ்வொரு நீள்
குவியல் நோக்கி
ஒற்றையடி பாதையும்
பயணிக்கின்றன..,

இறுதியாய் உடைக்கப்பட்ட
கலசத்தின் துண்டுகளும்
பூக்கள் உதிர்ந்த
நார்களும்
எஞ்சியிருக்க,

வருடத்தின் ஒருநாள்
சிறு மெழுகுவர்த்தியோ
ஒரு மாலையோ
வைத்துவிட்டு
செல்கின்றனர்..,

கரையான்
அரித்து விட்டு போன
அந்த வெற்று குழியில்!

கோயில் கல்லமர்ந்து
ஊர் நியாயம் பேசும்
பெருசுகள்
தகப்பனார் பெயர் சொல்லி
இன்னாரு மகன்
இறந்துவிட்டான் என்றும்,

திண்ணை பேச்சி நடத்தும்
கிழவிகள் கூட்டம்
தாயின் பெயர் சொல்லி
அவ மகன்
இறந்துவிட்டான் என்றும்,

தெரு கூடி
நின்று பேசும்
நடுத்தர வயசுகாரிகள்
அவளுக்க புருஷன்
இறந்துவிட்டான் என்றும்,

வயசு பெண்கள்
அவளுக்க அண்ணன்
இறந்துவிட்டான் என்றும்,

சிறார்கள் எல்லாம்
அவனுக்க அப்பா
இறந்துட்டார் என்றும்
பேசி திரிய

இதயம்
கனக்கச் செய்யும்
ஒரு தாயின் அழுகுரல்...,

பட்டமரம் நானிருக்க
பச்சை மரம் நீயின்றி

ஆலமரம் நானிருக்க
அதில் விழுது நீயின்றி

கருவில் சுமந்தவள்
நானிருக்க
கல்லறை வரை சுமக்க
நீயின்றி...,

தொட்டில் போட்டவள்
நானிருக்க
வாய்க்கரிசி போட
நீயின்றி..,

தோளில் போட்டு
தாலாட்டிய-உன்
தகப்பனிருக்க
கொள்ளிகுடம் தூக்க
நீயின்றி..,

நீ தொட்டு பொட்டு
வைத்தவள் தனித்திருக்க
அவள் துணைக்கு
நீயின்றி,

ஊர் போற்ற
வாழுவாய் என்றல்லவா
நானிருந்தேன்..,

ஊர் போட்ட
மாலையிலே
நீ உறங்க,

ஏதுமறியா
உன் பிள்ளை இந்நாளில்
"ஈ" ஆடாது உன் முகம்
விசிறி நிற்க,

பின்னாளில் தேடுவானே
நீயின்றி வாடுவானே
என்ன சொல்லி
நான் தேற்ற....

(__________________)

Tuesday, September 13, 2011 | 0 comments »

நீயும் நானும்
தனித்திருப்பதையும்,
நீயின்றி-நான்
தவித்திருப்பதையும்,
யாரோ ஒருவனால்
ரசிக்கப்பட்டுக்
கொண்டு தான்
இருக்கிறது-அது
என் அறையில்
தொங்கி கொண்டிருக்கும்
ஒட்டடையாகவோ-இல்லை
வலை பின்னி வாழும்
சிலந்தியாகவோ இருக்கலாம்!

ஒரு நத்தையென
நினைவுகளை
சுமந்துகொண்டு
நடக்கலானேன்..,


அதிகாலை காட்சிகள்
அவ்வளவு எளிதாய்
எதையும் கடக்க
அனுமதிக்கவில்லை!


பாதங்கள் வழியே
செம்மண் புழுதிச்
சாரல்கள் என்
உடலேறி ஆரவாரம்
செய்தன!


கதிரவன் வெளிச்சம்
துணை வாங்கி
மலர்ந்து நிற்கும்
கள்ளி பூக்கள்
ரசித்து நடக்க,


தட்டான்கள்
ராஜா, ராணி
ஆன கதையும்
என்னில் இன்று
நினைவில் தான்!


வெள்ளை சிகப்பு நிற
அரளி பூக்களும்
பூப்பறிக்கும்
சிறுவர் சிறுமிகள்
சிலாகித்தலும் கண்டு


இன்னுமொரு முறை
டவுசர் சட்டை போட்டு பார்க்க
ஆசையும்
வந்ததெனக்கு!


பனை ஓலைப் பட்டை
பிடித்து
நான் பருகிய
பதநீரும்
மாங்காய் துண்டுகளும,


இன்றும் அதே
பனைமர காட்டில்
எனக்காய் காத்திருப்பதாய்
தொலை பேசி
அழைப்பிருக்கு!


இதோ இந்த
ஒற்றை கால்
கொக்கின் தவத்தினை போல்
ஒத்திருக்கிறது
எனது இன்னுமொரு கனவு!

சிறிது சிறிதாய்
குச்சிகளும்
தேங்காய் நார்களும்
காற்றில் வெடித்து சிதறிய
இலவம் பஞ்சிகளினாலும்
வடிவமைத்தேன்...,


இன்று
கேட்பாரற்று கிடக்கும்
கூட்டினில்
சில குயில்களும்
வாழ்ந்து சென்றதை
என் குஞ்சிகள்
அறிய வாய்ப்பில்லை!

ஒரு கிணற்று
தவளையென
யாரோ ஒருவனின்
வருகையினை


சித்தரிகின்றது
வரிசையாய்
ஊற்றிப் போகும்
பால் துளிகள்!


பின்னலிடப் பட்ட
வலையில் சிக்கிக் கொண்ட
குயிலின் அழுகுரல்
என்னை தவிர
யார் காதுகளிலும்
விழுவதாய் தெரியவில்லை!


தேகம் நிகழ்த்தியிருக்கும்
நார் கட்டிலின்
பள்ளத்தினை கொண்டு


நான் படுக்கையில் கிடந்த
வருடங்களை
அளவீடு செயிகின்றனர்
சுற்றங்கள்!


என் முகத்தின்
நகல்களை
கண்டுவிட்டதால்
அவ்வளவாய் துக்கமில்லை
நான் பெற்ற மக்களுக்கு!


ரேகைகளோடு
ஒன்றி போன
கைத்தடியினையும்
என்னோடு வைத்து
தீயிலிடுவாய்
பேசிக் கொள்கின்றனர்..,


எனக்கென்று ஒதுக்கப்பட்ட
தட்டும் அதனுடனான
தண்ணீர் குவளையும்
என்னாகும்?
நானறியேன்...,


அநேகமாய்
இன்று எனது விலாசம்
ஒரு கோப்பை சாம்பலென
மாற வாய்ப்பிருக்கிறது...,
நாளை?

என் காதுகளில்
இசைந்து கொண்டிருக்கும்
பாடலில்
பல புதிய காட்சிகள்
கண்களுக்குள் ஊடுருவி,

நீர் வேண்டாத
தாகம் ஒன்று நிகழ்த்தி அதன்
வறட்சி விரித்து-என்
எண்ணக் கலப்பை கொண்டு
உழுது கொண்டிருக்கிறது!

கோடுகளாய் கீறலிடப் பட்ட
முகமெங்கும் எங்கும்
அமிலம் தெளித்தது போன்று
பார்க்கும் இடமெல்லாம்
பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது!

உருகி விழும்
ஒரு மெழுகின்
வெப்ப துளிகள்
என் நிர்வாண மேனியை

மெல்ல மெல்ல
சிதைப்பது போன்ற
பிம்பம் ஒன்று
நான் பார்த்திருக்கும் விட்டத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறது

சட்டென கண் மூடுகையில் 
வழி நெடுவே
ஓலமிட்டு வந்த
அக் கண்ணீருக்கு சொந்தகாரியின்

அழுகுரல்
என் அறையில் பட்டு
எதிரொலிப்பதை
என் காதுகளால்
தவிர்க்க இயலவில்லை ..,

அவள் தாயாகவோ
தகப்பனுக்கு பிள்ளையாகவோ
கணவனுக்கு மனைவியாகவோ
இருக்க கூடும்....,

முடிந்தால்
என் கனவுகளையும்
சிறை செய்யுங்கள்..,

பெரும்பாலான
பொழுதுகள்
எனது தற்கொலை
கனவில் தான் தொடர்கிறது!


                        -கவிதை காதலன் 



சொட்டு சொட்டென
பாத்திரத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும்
ஓட்டின்
நீர் சத்தமும்,

சம்மளமிட்டு
அருந்திய
கருப்பட்டி காபியும்
அரிசி பொறியும்,

தெருவில் வழிந்தோடும்
நீரோடையில் நண்பனோடு
பயணித்த
காகித கப்பல்களும்,

கால் சட்டை பையில்
கடலை நிறைத்து
கொறித்து போடும்
ஊர் பாலமும்,

ஆற்றிலோடும் வெள்ளத்தில்
வீசிப் போகும்
சீம உடைக் கம்புகளும்

கையசைத்தபடியே
கடந்து போகும்
ரோட்டோர வாகனங்களும்,

தூரத்து மலை ஒன்றில்
மாலை போல்
கவிழிந்து விழும்
நீர்வீழ்ச்சியும்,

நண்பர்களோடு
சைக்கிளில் சுத்தி வந்த
குளக்கரை
மணல் மேடுகளும

வேலியோர ஓணான்கள்
குருவிகளோடு கதை பேசி
கடந்துவரும் வழியில்,

எதிர் பாராது
பெய்திடும் மழைதனில்
நினைந்து

சட்டையினால்
தலை துவட்டி
பறக்க விட்டபடியே
வீடு வந்தடையும்
அந்த நாட்களை போல்

மீண்டும் ஒருமுறை
வாழ்ந்திட ஆசை பட்டு
நேற்று பொழிந்த மழையில்
தேநீர் கடையோரம் நின்று
ஏமாந்து போனேன்!
               -கவிதை காதலன்

இரவின் நெடி

Wednesday, August 10, 2011 | 0 comments »

என் சன்னல் வழி
நிலவினை
பார்த்த படியே
என் தனிமையினை
கிடத்தியிருந்தேன்!

என்றோ ஒரு நாள்
மிச்சம் வைத்திருந்த
வெறுமை ஒன்று-என்
பின்னந்தலை வழியே
மயிர் பிடரி
நனைந்துக் கொண்டிருந்தது!

இருளின் சூட்சமம்
என்னவென்று
ஒரு சூனியக்காரனாய்
மெளன மொழி ஒன்றில்
வசியம் செய்ய முயன்று
தோற்று போக..,

அதன் எச்சத்தின்
வார்த்தைகள்
சில் இரவுகளில்
விழி வழியே
பிடுங்கப் படுவதும் உண்டு!

என் நாசி துளைத்து
உறங்க விடாமல்
செய்து கொண்டிருக்கும்
அத் தனிமையின் நெடியினை...,

எவனோ ஒருவன்
வெளி நின்று
தாளிட்டதாகவும்,

வெளியில் இருந்தொருவன்
உள்ளே தாளிட்டிருப்பதாகவும்
நினைப்பும் ஒன்று உண்டெனக்கு!


                               
                                        -கவிதை காதலன்



ஆளுயர
கனவு ஒன்று
வானம் பார்த்தபடி
படுத்திருக்க..,

முகம் தொட்டணைத்து
அழ நினைத்த ஆன்மா ஒன்று
கண்ணாடி கூண்டிருக்கு வெளியே
ஒரு கைதியாய்
சேலை நுனி கடித்து
விம்மி நிற்கிறது!

சுற்றத்தார்
கனவிலிருந்து விழித்திட
ஒரு எச்சரிக்கை..,

மேள தாளங்களும்
பட்டாசு சத்தமும்!

இங்கேயும் சில
புகழ்தலும்,இகழ்தலும்
ஒய்ந்த பாடில்லை!
 

காது கடிக்கும்
கிழவிகள் கூட்டம் ஏனோ
காண கிட்டவில்லை!

விதியில் வீசிப் போகும்
பூக்கள் யாருக்கும்
பிடிப்பதில்லை..,
வாசனை
நுகரப் படுவதில்லை!


அமரர் ஊர்தியில்
நகர்ந்து போகும்
இக்கனவினை போல ..,

இனி வரும் கனவுகளுக்கு
தோள் கொடுக்கவும்
தோள் மாற்றவும்
பாக்கியம்
கிடைப்பதாய் தெரியவில்லை!

Blogger Wordpress Gadgets