Pin It

Widgets

கோயில் கல்லமர்ந்து
ஊர் நியாயம் பேசும்
பெருசுகள்
தகப்பனார் பெயர் சொல்லி
இன்னாரு மகன்
இறந்துவிட்டான் என்றும்,

திண்ணை பேச்சி நடத்தும்
கிழவிகள் கூட்டம்
தாயின் பெயர் சொல்லி
அவ மகன்
இறந்துவிட்டான் என்றும்,

தெரு கூடி
நின்று பேசும்
நடுத்தர வயசுகாரிகள்
அவளுக்க புருஷன்
இறந்துவிட்டான் என்றும்,

வயசு பெண்கள்
அவளுக்க அண்ணன்
இறந்துவிட்டான் என்றும்,

சிறார்கள் எல்லாம்
அவனுக்க அப்பா
இறந்துட்டார் என்றும்
பேசி திரிய

இதயம்
கனக்கச் செய்யும்
ஒரு தாயின் அழுகுரல்...,

பட்டமரம் நானிருக்க
பச்சை மரம் நீயின்றி

ஆலமரம் நானிருக்க
அதில் விழுது நீயின்றி

கருவில் சுமந்தவள்
நானிருக்க
கல்லறை வரை சுமக்க
நீயின்றி...,

தொட்டில் போட்டவள்
நானிருக்க
வாய்க்கரிசி போட
நீயின்றி..,

தோளில் போட்டு
தாலாட்டிய-உன்
தகப்பனிருக்க
கொள்ளிகுடம் தூக்க
நீயின்றி..,

நீ தொட்டு பொட்டு
வைத்தவள் தனித்திருக்க
அவள் துணைக்கு
நீயின்றி,

ஊர் போற்ற
வாழுவாய் என்றல்லவா
நானிருந்தேன்..,

ஊர் போட்ட
மாலையிலே
நீ உறங்க,

ஏதுமறியா
உன் பிள்ளை இந்நாளில்
"ஈ" ஆடாது உன் முகம்
விசிறி நிற்க,

பின்னாளில் தேடுவானே
நீயின்றி வாடுவானே
என்ன சொல்லி
நான் தேற்ற....

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets