Pin It

Widgets

ஒரு கிணற்று
தவளையென
யாரோ ஒருவனின்
வருகையினை


சித்தரிகின்றது
வரிசையாய்
ஊற்றிப் போகும்
பால் துளிகள்!


பின்னலிடப் பட்ட
வலையில் சிக்கிக் கொண்ட
குயிலின் அழுகுரல்
என்னை தவிர
யார் காதுகளிலும்
விழுவதாய் தெரியவில்லை!


தேகம் நிகழ்த்தியிருக்கும்
நார் கட்டிலின்
பள்ளத்தினை கொண்டு


நான் படுக்கையில் கிடந்த
வருடங்களை
அளவீடு செயிகின்றனர்
சுற்றங்கள்!


என் முகத்தின்
நகல்களை
கண்டுவிட்டதால்
அவ்வளவாய் துக்கமில்லை
நான் பெற்ற மக்களுக்கு!


ரேகைகளோடு
ஒன்றி போன
கைத்தடியினையும்
என்னோடு வைத்து
தீயிலிடுவாய்
பேசிக் கொள்கின்றனர்..,


எனக்கென்று ஒதுக்கப்பட்ட
தட்டும் அதனுடனான
தண்ணீர் குவளையும்
என்னாகும்?
நானறியேன்...,


அநேகமாய்
இன்று எனது விலாசம்
ஒரு கோப்பை சாம்பலென
மாற வாய்ப்பிருக்கிறது...,
நாளை?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets