Pin It

Widgets

மழை

Wednesday, July 18, 2012 | 0 comments »

முந்தானை குடை விரிக்க
அவள் இல்லை
வேடிக்கை பார்க்கிறேன் மழையை!

மழை நீர் சுடுமென்பததை
அவள் தேகம் தொட்டு
பாதம் கடப்பதில்
அறிந்து கொள்கிறேன் நான்!

அவள் உதடு தொட்டு
வழியும் நீரினை கண்டு
எச்சில் விழுங்குகிறேன்
இனித்து கிடக்கிறது தொண்டை!

நீ
கெண்டைக்கால் தெரிய
சாலை கடக்கிறாய்
வெள்ளத்தின் அளவு மேலேறுகிறது!

அவள் மட்டும்
மழைக்கு ஒதுங்காமலிருந்திருந்தால்
சாரல் என்றொன்று
கிட்டாமலே போயிருக்கும்!

மழையை திட்டிக் கொண்டே
சாலை கடக்கிறாய்
உன்னை பின் தொடர்ந்து
வளைந்து கிடக்கிறது
ஏழு வர்ணங்கள்!

கைகுட்டையில்
கூந்தல் மறைக்கிறாய்
ஒவ்வொன்றாய் மலருகின்றது
மொட்டுகள்!

அவசர அவசரமாய்
குடை விரிக்கிறாய்
அதற்குள் நனைந்து விடுகிறது
மழை!

ஒரு பள்ளிக் குழந்தைக்கும்
சேர்த்து குடை பிடிக்கிறாய்
தூரலில் மின்னும் வானவில் போல
நீயும் அக்குழந்தையும் பேரழகு!

அவசரமாய்
போக வேண்டியவள் போல
மழை கண்டு உதடு சுளிக்கிறாய்
குடையாகிப் போகிறது என் இதயம்!

உன் வீட்டு மொட்டை மாடியில்
இரு கை விரித்து சுற்றுகிறாய்
மயிலென்று மழை வேகம் கூடுகிறது

தேநீர் கோப்பையோடு
வாசலில் நின்று
சாலை ரசிக்கிறாய்
ஆவி பறக்க பொழிகிறது
மழை!

விறுவிறுவென
ஓடி ஒதுங்குகிறாய்
வியர்த்து கொட்டுகிறது வானம்!

இரு கைகளால்
மழையடித்து விளையாடுகிறாய்
சாலையெங்கும் காதல் வாசம்!

மழையின் குளிரில்
தேகம்
ஒளித்து வைக்கிறாய்
குளிர் காய்கிறது போர்வை!

கொடியில் காயும்
துணியெடுக்க விரைகிறாய்
நீ வரும் வரை
காத்திருக்கிறது மழை!

உன் வீட்டு கூரையில்
வழியும் மழை நீரை
உள்ளங்கையில் ஏந்துகிறாய்
ஏனோ பொங்குகிறது பாற்கடல்

மழைக்காலங்களில்
மட்டும் வேண்டிக்கொள்கிறேன்
நீ அணைத்து தூங்கும்
கரடி பொம்பை
நானாக வேண்டுமென்று!

நீ
பூப்பெய்து சல்லடையில்
நீராட்டுவதைப் பார்த்தே
வானம் பொழியத்துவங்கியதாய்
ஒரு மழை ஆய்வு!

மொத்தத்தில்
நீ தேவதையாகவே
விண்ணில் இருந்திருக்கலாம்
உன் பாதம் தொட புற்கள்
தேகம் நனைக்க மழை!


0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets