Pin It

Widgets


கற்றாழை நார் கிழித்து
அதிகாலை தலை தேய்த்து
கன்றுக்கு தாய் மடி காட்டி 
பசுவுக்கு வைக்கோலிட்டு
தொழுவத்தில் சாணி எடுத்து
முற்றம் தெளித்து கோலமிட்டு,

கருப்பட்டி காபி போட்டு
அதில் கொஞ்சம் பால் சேர்த்து
சுட்டு வைத்த முறுக்கில் ரெண்டு
முறித்து போட்டு சுவை பருகி
ஆற்றிற்கு நடக்கிறாள் குளியல் போட,

சேர்த்து வைத்த ஆடைவெளுத்து
புல் தரையில் உலரவிட்டு
கட்டிய சேலை மடித்து கட்டி
கெண்டைகால் அழகு காட்டி
ஆயிர மீனு அரித்து பிடித்து
வாளியிலே நீந்த விட்டு,

மாராப்பு துணி உடுத்தி
தலை நனைத்து மஞ்சள் தேய்த்து
கூழாங்கல் பாதம் தேய்த்து
குளித்தெழுபவள்

காற்றில் காய்ந்த ஆடையுடுத்தி
வெளுத்த துணி தோளிலிட்டு
மீன் வாளி இடையிலேந்தி,

குத்திட்ட பார்வை தீட்டி
வீதியில்
ஒய்யார நடை நடந்து
வீடு வந்தவள்,

குத்துக்காலிட்டு மீன்கழுவி
மண்சட்டி,மாங்காய் போட்டு
வெங்காயம் நறுக்கி போட்டு
அறிந்து வைத்த மீனதனை
புட்டவித்து,

பழைய சோறு தண்ணீர் ஊற்றி
உப்பு ரெண்டு சேர்த்து போட்டு
கிண்ணத்தை  தொட்டு நக்கி
மீன் குழம்பு ருசிக்கும் பாக்கியம்
இனி வரும் சந்ததியருக்கு
எப்படி கிடைக்கும்?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets