Pin It

Widgets

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நீ மறுக்க மறுக்க நான் பிடிவாதமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. உன் மனதிற்கு ஒருவேளை அந்த பதில் தேவைப்படலாமென்று தான் அன்று பதில் சொல்ல வேண்டியதாயிற்று. எப்படியும் உன் கோபம் தணியும் என்ற நம்பிக்கை தான். தூங்கி எழுகையில் ஒரு தெளிவு இருக்குமே அப்போது அந்த பதிலை உணர்வாய் என்ற நம்பிக்கையில் தான் அந்த பதிலை சொல்ல வேண்டியதாயிற்று. 

எனக்கு அப்படித் தோன்றியது என்பது எனக்குள் இருந்து வெளிவந்தது ஒன்றுமில்லை. நீ கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை எனக்கு இது தான் நீ என வெளிக்காட்டிய பிம்பத்திலிருந்து முளைத்த மல்லிக்கொடி போன்று தரை படர்ந்து கிடக்கிறது. அங்கிருந்து தான் மீண்டும் மீண்டும் தரை படர்ந்து பக்கக்கண் இட்டு முளைக்கிறேன்.

நீ ஒவ்வொரு முறையும் பதில்களை நிராகரிப்பதும் பின் அதற்கு வருந்துவதும் அதற்கான கால இடைவெளி மட்டும் மாறிக்கொண்டு வருகிறதே தவிர, பதில்களற்ற சண்டையல்ல. எனக்கு எதையாவது நினைவூட்டவேண்டும் போலிருக்கிறது. எதையாவது என்றால் எதையாவது ஓர் நள்ளிரவில், விடிகாலையில், “எத்தன தடவ சொல்லிருக்கேன் டேட்டா ஆப் பண்ணிட்டு தூங்குனு” எதையாவது தோன்றியதை எனக்கு அனுப்பிவிட்டு அது டபுள் டிக் ஆகும் பட்சத்தில் நான் விழித்துவிடுவேனோ என்று மறுநாள் நீ திட்டித் தீர்க்கும் கொஞ்சல்கள் போன்று எனக்கும் எதையாவது நினைத்துப்பார்க்க, கொஞ்சம் சிரித்துக்கொள்ள உடல் தேடா காமம் கொள்ள, இன்னும் சொல்லத் தெரியா என்னென்னவோ.

இடைவேளைக்குக் கூட எழுந்து செல்லாமல் இருக்கையிலேயே இருந்துவிட்டு படம் முடிந்து எரியும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் நகர்ந்து உடலோடு ஒட்டிக்கொண்ட உன் உள்ளாடையின் பிடிப்பை தளர்த்தி விட்டது என்னை சில்லிட வைக்கிறது.

சில்லிட என்றால் சூடு தணிந்து இதமாய் கிளம்பும் நீராவி போல இதமாய் சில்லிடலாய்.

பென்சில் கொண்டு எப்படி உள்ளங்கையில் எழுத முடியும்? உனக்கொரு நிழல் படர்ந்த இருக்கை கிடைத்துவிடக்கூடாது கூர்மையாய் முனை நகர்வதை கவனித்தாலும் பிடிபடாதபடிக்கு எதையோ எழுதி எதையோ வரைந்து சிரிக்கும் சிரிப்பை இழை அருந்த என் அரை பல்பில் நுழைத்து ஓட்டிவிடலாமென்று பார்க்கிறேன்.

“நான் வேணா தூக்கட்டுமா” என்று கேட்டது, அந்த குரல் சன்னல் திறந்திருந்தும் வெளியேற மறுக்கிறது.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets