Pin It

Widgets

முத்தம்

Saturday, March 21, 2015 | 0 comments »

எனக்கு பயமாய் இருக்கிறது. திரும்புவதற்குள் பெற்றுவிடத் துடிக்கும் அந்த முத்தத்தை அறையிலிருந்து சுமந்து வருகிறேன் நீ என்னிடமிருந்து பெற்றுவிடாதபடிக்கு. பிடிவாதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு ஒரு விளையாட்டு அப்படித்தான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உன் சொற்களின் ஊடு விளையாட்டை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அங்கு தான் தவறி(ற)விடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

ஒரு முறையேனும் எனை அனுமதிப்பாய் என்றுதான் நம்பி வருகிறேன். எப்படி நான் ஜெயித்துக் கொள்கிறேன் என்று உன்னிடமே வேண்டுவது. சொற்களின் ஊடு விளையாட்டில் நீ போடும் கொக்கியில் நேரிடையாகவே மீனாகித் தொலைகிறேன். புழுவாய் உருக்கொண்டு உணவாகிறது முத்தம். இத்தனையும் பேசிவிட்டு, முற்றிலுமாய் நிராகரித்துவிடவா முடியும்?

நீயும் அப்படியே தான் கேட்டும் தொலைப்பாய். என்னமோ வேண்டாத மாதிரி ஹ்ம்ம்” உன் புருவம் உயர்த்துதலை வெறுமனே புருவம் உயர்த்துதலென்று ஒருபோதும் சொல்லிவிடமுடியாதொரு தருணத்தில் தான் இந்த சில்லறை சேட்டையை தொடங்கி வைப்பாய்.

அது ஒரு விடுபடல்
அது ஒரு அழைப்பு
அது ஒரு வேண்டுதல்
அது ஒரு அனுமதி

என் பிடியில் இல்லாமல் நழுவி வேடிக்கை பார்த்தலின் சுகம் என்னைப் போலவே உனக்கும் தெரியுமென்பதால் சுகத்தின் ஊடாகவே தொடரும் அவஸ்தையை நான் சீண்டிப்பார்க்க விரும்பவில்லை. அது தோல்வியன்று தோல்வியின் வெற்றி. இருவருமே தோற்பதற்கு தயாராக இருக்கும் களம் அப்படி. போ ஹேட் யூ.

எனக்கு மறுபடியும் பயமாய் இருக்கிறது. முத்தத்தை கொடுத்து விடுவேனோ என்று. உன் செய்கைகள் என் கண்ணாடி முன் நின்றாடும் போதேல்லாம் அதட்டி வென்று விடுவேன்.

இனி உனக்கொரு மாஸ்க் மாட்டிவிடலாம் என்றிருக்கிறேன். அப்படியும் ஒரு பயம் துரத்திக்கொண்டே வருகிறது பாரேன். நீ ஒரு மாதிரி தலை சாய்த்து குரல் மாற்றி குழைவாயே. என் கையை நானே பின் கட்டிக்கொள்ள வேண்டும்.

போ... அதுவும் முடியாது. நான் நெட்டி முறிக்கையில் நீ பார்த்தது.

கெட் லாஸ்ட் பரம் மை தாட்ஸ்

ப்ளீஸ் கிஸ் மீ.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets