Pin It

Widgets

என்னை சாகச்சொல்லி
எவனோ ஒருவன் உள்ளிருந்து
தூண்டிக்கொண்டேயிருக்கிறான்

உயிரின் வடிவமானது

இரத்த நிறத்தில் வேண்டுமா
துடிதுடிப்பில் வேண்டுமா என்றால்

நீ சாகவேண்டும்
அவ்வளவே என்கிறான்
நான் மட்டும் கேட்கும் குரலில்

துயர் மிகுந்த பாடலையோ
வரியில்லா இசையோ
அமைதியோ விரும்பவில்லை அவன்

ஒரு குறிப்பெழுதவும்
அனுமதிக்க மறுக்கிறான்
குரல்வளையில் அமர்ந்திருக்கிறான்

எங்கே உடைந்துஅழுது
நான் மீண்டுவிடுவேனோ
என்ற பெரும் அச்சம் அவனுக்கு

இருளை வெறுக்கிறான்
வெளிச்சம் தவிர்க்கிறான்
மின்விளக்கின் சூட்டில் தவிக்கும்

நிறமிழந்த பட்டாம் பூச்சி ஒன்றின்
துடிப்பை அதன் இறக்கை அசைப்பை
சாகும் விதத்தை ரசிக்கிறான்

அறையின் சூட்டில் நனையும்
உடலை நள்ளிரவில் நீர் நனைத்து
கொன்றுவிட துடிக்கிறான்

யாரும் பேச்சு கொடுத்துவிடாதிருக்க
எப்போதும் இனம் புரியா
துயரத்திலமர்த்தி ரசிக்கிறான்

புத்தக திறப்போ கண் மூடலோ
நிகழ்ந்திடாதிருக்க
இரவெல்லாம் கவனமுடன் இருக்கிறான்

இயற்கையை ரசித்துவிடுவேனோவென்று
பெரிதும் அச்சம் கொண்டு
என் கால்களை கட்டிப்போடுகிறான்

கனவுகளின் எண்ணிக்கை கூட்டுகிறான்
அது நிகழ்ந்திடாதிருக்க துன்பமுற
சிந்தனை சித்தரவதை செய்கிறான்

அடிக்கடி பெருவிரல் கட்டு நடனமென
கண்முன்னே நிறுத்துகிறான்
ஒப்பாரி கேட்க செய்கிறான்

பாதையில்லா பயணத்தை
காட்சிகளாக்குகிறான்-நான்
எங்கோ நடப்பது போல காட்டிக்கொல்கிறான்

என் பலவீனம் தேடுகிறான்
விலங்குகள் மீது மட்டும்
இரக்கமுள்ளவனாய் இருக்க செய்கிறான்

கண்ணாடி பிம்பம் உடைத்து
முகத்தை ரசித்திடாதிருக்க
எல்லா காலையும் துயர் ஏற்றுகிறான்

புழுக்கள் நெழியும் உடல்
சிதைந்த மாலை நாறும் ஊதுபத்தி
யாவும் மழையில் வேண்டுமென அலைகிறான்

எதற்கும் இணங்க மறுக்கிறான்
மதுவோ மாதுவோ ஒரு கோப்பையில்
தாகம் தீர்ப்பவன் போலில்லை

அவனுக்கு நான் சாக வேண்டும்
செல்லரித்து செல்லரித்து
தினம் தினம் சாக வேண்டும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets