Pin It

Widgets

என் ஆத்தாளுக்கு அப்புறமா
நெத்தியில திருநீரு வச்சிவிட்டவளே
ஒரு அசைவு இல்லாம கெடக்குறியே

நீ போற வர இடமெல்லாம்
சொல்லிட்டு போவியே-இன்னைக்கு
சொல்லாம தவிக்க விட்டுட்டு போயிட்டியே

ஆத்தாக்காரி இல்லனா
கூப்பிட்டு வச்சி சோறு போடுவியே
வீடு தேடி வந்திருக்கேன்
வான்னு சொல்ல நீயில்லையே

திருவிழா நல்ல நாளுன்னு வந்துட்டா
சேத்து வச்ச காசுல துணி எடுத்து தருவியே
இப்படி கோடி துணி போட வச்சிட்டியே

கம்மா கரை கெணத்தடி
தெருநல்லி பீடிகடைனு
காவல் நின்னேனே
இப்படி கால்கட்டி கெடத்திருக்கே

கோவத்துல சண்ட போட்டு போனாலும்
என் தெருக்காரிகிட்ட கொடுத்தனுப்பும்
கொழுக்கட்டை இனி யாரு கொடுப்பா?

முதுகு தேய்க்க வரட்டுமானு
கேக்கையில
கல்யாணத்துக்கு அப்புறம்னு கண்ணடிப்பியே
கண்மூடி கெடக்குறியே

மருதாணி வச்சக்கை செவந்திருக்கானு
முகம் சிவக்க வந்து கேப்பியே
மரக்கட்டைக்கு இரையாகி போனியே

கொடுக்காபுளி நவாபழம்
சீசனுக்கு கேட்டு வாங்கிப்பியே
இனிமேல்
யாருகிட்ட கொண்டு கொடுப்பேன்

தீட்டுதுணி வாங்கிவான்னு
சொன்ன மொத ஆம்புள
நீ தானு சொல்லுவியே
மொத்தமா போய் சேந்துட்டியே

உன் அப்பன் கூட போகையில
பின்னாடி வராதேனு
வாய்க்குள்ள முணுமுணுப்பியே
வாய்க்கரிசி போட வச்சிட்டியே


பாவாடை ரவிக்கை துணி
என் கையால வாங்கி கட்டினியே
பாடையில போறதுக்க்கா
பாவிமக நான் என்ன செய்வேன்

பொங்கலுன்னு வந்துட்டா
நான் உரிச்ச கரும்பு வாங்கி கடிப்பியே
பொசுக்குனு போய் சேந்துட்டியே

துணிதுவைக்க குளத்தங்கரைக்கு போகையிலே
சைக்கிள்ள எங்கூட வருவியே
அனாதையாக்கிட்டு போயிட்டியே

ரெட்ட புள்ள பெத்துக்கனும்
உன் தோள்ள ஒன்னு என் இடுப்புல ஒன்னு
டவுன்ல படிக்க வைக்கனும்னு சொன்னியே

வாங்கி வந்த வளையல் கழற்றி
என்னை போட சொல்லி
வளையல் கூட சேர்ந்து சிரிப்பியே
என் வருங்காலம் என்ன செய்வேன்

உடம்புக்கு நோக்காடுனு வந்துட்டா
விரதம் எல்லாம் இருப்பியே
உசுர விட்டு வெத்து உடம்பா கெடக்குறியே

உன் பொறந்த நாளன்னு
கல்யாணம் வைக்கனும்னு சொல்லுவியே
பொணமா கிடத்திருக்கே

உன் வீட்டு சீதனமா
நான் மட்டும் போதாதான்னு கேப்பியே
மூச்சு நின்னு கெடக்குறியே

அங்க நின்னு இங்க நின்னுன்னு
கண்ணால பேசுவியே
வா வான்னு கூப்டுறனே
உன் காது ரெண்டுலையும் கேக்கலயா?

வார்த்தைக்கு வார்த்தை
என்ன கட்டிப்பியானு கேட்டவளே
இனி யாரு வந்து கேட்டிடுவா
நாதியத்து போனேனே!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets