Pin It

Widgets

அதெப்படி இருவருக்குமே
ஏறியிறங்குகிறது தொண்டைக்குழி
மழையை பருகாமலே!

நனைந்துவிட
நீ வேண்டும்
நனைத்துவிட
நான் வேண்டும்
நனைக்க
மழை வேண்டும்

புத்தகம் நனைந்துவிடக் கூடாதென
நீயும்
நீ நனைந்துவிடக் கூடாதென
நானும்
எத்தனை நாள்தான் வேண்டுவது
வா நனையலாம்!

எதைக் கேட்பது
ஓடிவருகையில் எழும்
கொலுசின் ஒலியையா
உன்னைத்துரத்தி வரும்
மழையின் ஓசையையா?

நீ மஞ்சளிட்ட
முகம் தொட்டு
மழை கொடுத்திருக்கலாம்
வானவில்லுக்கு ஒரு நிறம்!

கெஞ்சுவதற்கும்
கொஞ்சுவதற்கும்
வேண்டும் மழை

காக்கா கடிகடிக்க
தூது போகிறது
மழை!

எதை நிறுத்துவது
மழையையா
நீ ஓடிவருகையில் தடுமாறும்
என் மூச்சையா?

நீ
ஓடிவந்து கட்டிக்கொள்வதற்காகவே
சண்டையிடலாம் மேகங்கள்!

முழுக்க நனைத்துவிடுகிறது மழை
ஆடையையும்
ஆசையையும்

தூரல் பிடிக்குமா
சாரல் பிடிக்குமா என்கிறேன்
உன்னோடு நனைய பிடிக்குமென்கிறாள்

பறவைகளெல்லாம் மழையில்
என்ன செய்யுமென வருந்துகிறாய்
போர்வைக்குள் நுழைந்தபடி

வானுக்கும்
இப்படித்தான் வியர்க்குமாவென
வினவுகிறாள்
கலவி முடிந்த தருணத்தில்!

மழையில்
நிலா தேடுகிறாள்
கண்ணாடி காட்டினால்
மறையத்துவங்குகிறாள்
மார்புக்குள்!

வானம் பார்த்து நனைய
அவ்வளவு ஆசையா என்கிறேன்
முதன்முறை எனைதூக்கி
நனைத்த அன்றிலிருந்து என்கிறாள்

நீ
சட்டென உதிர்த்துவிடும்
கிளைசேர்ந்த மழை நீரில்
முளைத்துவிடுகிறது மெல்லிய காமம்!

ஆடை மாற்றிட
தாழிடுகிறாய்
ஆசை தணித்திட
போரிடுகிறாய்

தொப்பலாய்
நனைத்துவிட்ட மழையை
நீ திட்டுவதும் நான் ரசிப்பதும்
இவ்விரவின் ஒத்திகை!

மழை நனைந்து தலை துவட்டி
கொடியிலிடும் பூத்துவாலையில்
மீசை முடியும் கற்றை கூந்தலும்!

அவளின் ஈரக்கூந்தலில்
சீகைக்காய் வாசனை
இந்த மழை இரவில்!

ஆவி பறக்கும்
தேநீர் கோப்பையில்
இருவரது இதழ்கள்
இரவின் கனவுகள்

கைகோர்த்து கடக்கும் சாலையில்
பட்டாம்பூச்சி கூட்டம்
மழை இரவு மனதில் கனவு

பின்னிருந்து அணைத்தபடி
தெருவிளக்கின் வழியே
காணும் தூரலும் ஒரு தூண்டுகோல்
இவ்விரவின் விளையாட்டிற்கு!

சரிவா மழை நிற்கட்டும் என்றால்
அதற்கும் சிணுங்குகிறாள்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வியர்க்கிறது
மெதுவாய் மெதுமெதுவாய்!

தரைக்கும் கதவிற்குமான
இடைவெளியில் வழியும்
நனைந்த ஆடை நீரில் நீந்துகிறது
அவளின் உதிர்ந்த முடிகள்

விரல் கோர்கிறாய்
விழி மூடுகிறாய்
மழை இரவு


0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets