Pin It

Widgets

தாவணியெல்லாம்
கட்டத்தெரியுமா என்கிறேன்
தாலிகட்டு
சேலைகட்டுகிறேன் என்கிறாள்

வாங்கிய பூவை
ஏன் வைக்கவில்லை என்கிறேன்
வைத்துவிடுகிறென் தாவென
கேட்கவில்லையெங்கிறாள்

உனக்கு ஏண்டி இவ்வளவு
பிடிவாதம் என்கிறேன்
ஒரு நாள் விரதமிருந்தால்
சாக மாட்டேன் போடா என்கிறாள்

அப்படி என்னதான்
வேண்டுவாய் என்றேன்
நீ வேண்டுமென்று
வேண்டினேன் என்கிறாள்

போடி லூசு என்றதும்
போடா எருமை என்கிறாள்
செல்லப்பெயர்கள்!

ஏய் உனக்கொன்னு தெரியுமா என்றவள்
ஒன்றுமில்லையென
இறுக கைப்பற்றிக் கொள்கிறாள்
அதுவொரு கனவென
தொலைபேசியில் தொடர்வாள்

உன் பார்வையில்
உடையலாம்
உருண்டோடலாம்
கண் சிமிட்டிவிடாதே
வளையல் கடையில்!

ராட்டிணம் ஆடுகையில்
ஏன்
மடியில் படுத்துக்கொண்டாய் என்கிறேன்
போடாவென்று
தோளில் சாய்ந்து கொள்கிறாள்

எத்தனைமுறை தான்
ஒவ்வொரு ஜடமாட்டியாய்
கண்ணாடிமுன் வைத்துப்பார்ப்பாய்
அள்ளி முடியும்-உன்
கொண்டை அழகுக்கு ஈடாகுமா சொல்?

மீசையில் ஒட்டியதாய்
துடைத்தவள்
விரலை சப்பிக் கொள்கிறாள்
தேன் மிட்டாய் பிடிக்குமாம்

திருவிழா கடையெங்கும்
சுற்றிவிட்டு-நீ
தாடி எடுக்கவில்லையென்றால்
கரடி பொம்மைதானென கண்ணடிக்கிறாள்

யாருக்கும் தெரியாமல்
எப்படி திருநீரு வைத்தாய் என்கிறேன்
நேருக்கு நேர்
முட்டிக் கொள்ளும் போது என்கிறாள்

என்னதிது
பெருவிரலில் மோதிரம் என்றவள்
மெட்டியாக்கிக் கொண்டாள்
திருவிழா முடியும்வரை!

அவள் விரல் விடுத்து
சாலை கடந்தது கோபமாம்
பாதி தின்றிருந்த ஐசை
பிடிங்கிக் கொண்டாள்

அவ்வளவு இஸ்டமா உனக்கு
கூந்தலை என் மடியில்
கிடத்தியிருக்கிறாயென்றேன்
“போ” என்கிறாள் எழாமலே

மணலில் கிறுக்காதே
நிலா மறைகிறது என்றேன்
'ம்" என இழுத்தவள்
கொட்டொன்று வைக்கிறாள்

பனிவெடிப்பா என்கிறேன்
ஏன் ஒத்தடமிட ஆசையோ என்கிறாள்
உதட்டைக் கடித்தபடி

எப்பொழுது தான்
கச்சேரி பார்ப்பாய் என்கிறாள்
உன் கண்களாடும்
நடனம் போதுமென்றேன்
தொடையில் கிள்ளி வைக்கிறாள்

பச்சைக்குத்திக்கலாமா என்கிறாள்
வேணாமடி என்றதும்
கைக்குட்டையில் பெயர் காட்டுகிறாள்
குழந்தை போல!

'என்னடி பண்ற" என்கிறேன்
உன் சட்டையில் என் தாவணி
முடிச்சிடுகிறேன் என்கிறாள்

"டேய்" என இழுத்தபடி
முகம் பார்க்கிறாள்
கழிவறை கூட்டிப் போய் வந்ததும்
கைபிடித்து கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்

ஏண்டி மெளனமாய் இருக்கிறாய்
என்கிறேன்
எதாவது பேசுடா என்கிறாள்
திருவிழா முடிவுறும் வேளையில்

யாருமில்லா நேரத்தில்
வீட்டில் என்னசெய்வாயென்றேன்
உன்னுடன் காதல் செய்வேன் என்கிறாள்
புருவம் உயர்த்தியபடி!

உங்க அம்மா எங்க என்றதும்
ஏன் என்னை அம்மா ஆக்கலாம்னா
என்றபடி கதவைத் தாழிடுகிறாள்
என்னை வெளியில் தள்ளிவிட்டு!

திரும்பிப் பார்க்காமல்
போ என்கிறாள்
வாசலை விட்டு நகராமல்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets