Pin It

Widgets

செத்துவிடலாம்
கொலைப்பழி ஏற்கத்தான்
யாருமில்லை-ஏன்
நானும்கூட...

மரணத்தின் ருசியறிய
ஆசைப்பட்டு
தற்கொலையின் பசிக்கு
உணவாக ஆசைப்பட்டு
அனுபவிக்கமுடியாதென
உணர்ந்த நாளொன்றில்
நடைபிணமாய்
வாழத்துவங்கினேன்
புன்னகையின் பாதையில்!

அருகாமையே
தீர்வென்றானபின்
சொற்களெதற்கு?
காலத்தை வளைத்து
முடிச்சிடு...

பால்வடிய பெயர் கிழித்த
கள்ளிச்செடியின் முட்களுக்குள்
படுக்கையமைத்து
பால்யம் தேடுகிறேன்

இருந்தாய்
இருக்கிறாய்
இருப்பாய்
இப்போதைக்கு
இளைப்பாரிக்கொள்கிறேன்
இக்கவிதையில்

மனமும் மெளனமும்
நிகழ்த்தும்
கூட்டுவிளையாட்டில்
பொய் சொல்லிப்பழகுகிறது
உதடுகள்!

நெடிய கோடையில்
நீண்ட நடையில்
பாளம் பாளமாய்
பிளந்து கிடக்கும்
மணல்வெடிப்பின்
இடுக்குகள் வழியே
தொலையவேண்டும்

நீர் அரித்து
மினுக்கும் மதியவேளை
ஆற்றுமணல் கொண்டு
மூடமறுக்கும்
விழியின் கதவை
தாழிட வேண்டும்

இரவு
எனக்கொரு பொதி
விடிய விடிய
சுமக்கிறேன்

எழுத்தாணி
துணை நில்லாது போகும்
இரவில் துயரத்தை
வழியவிடு விழிவழியே

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets