Pin It

Widgets

காதல்

Saturday, February 21, 2015 | 0 comments »

அப்படியெல்லாம் இல்லையென
நீ வெட்கிப் பதிலுரைத்த
பெண்களின் உள்ளாடைப்பிரிவில்

வெடுக்கென தளர்ந்தது
இறுக்கிப்பிடித்திருந்த
காதல் சம்பிரதாயம்
------------------------------------

நடைபாதையில் நடக்கையில்
உரசிக்கொள்ளும்
வளையல்களும் கைமுடியும்

ஒப்பந்தம் செய்திருக்கலாம்

நீ ஓசையெழுப்பு
நான் நின்றாடுகிறேன்
மொழி திணறட்டுமென்று
----------------------------------------

சற்று கீழிறங்கி
தலைவைக்க அனுமதித்த
நிலா இல்லாத இரவில்

பதற்றத்தையும்
வெட்கத்தையும்
பரிகசித்துக்கொண்டிருந்தது

நுண்ணிய நொடிகள்
அளக்குமளவிற்கு மூடிய அவள்
விழிகளுக்குள் நட்சத்திரங்கள்
-------------------------------------

பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்கும் நடுவில்
சுழலும் தொடுதிரையில்

அச்சேறிக்கிடக்கும்
ரேகைகளின் வளைவுகள்
போடா பொறுக்கியென

குளியலரைச் சென்றவளின்
மார்பில் விழுந்திருந்தது
காயங்களாக...
--------------------------------------

வெயிலேறும்
மணல் சூட்டினை அறியாத
பனிப்பிரதேச அழகி அவள்

பருவம் எய்த மூங்கிலுடைத்து
அதிலூற்றிய மெழுகின்
திரியில் உருகும் துளியை

முன்னெற்றி தாண்டி முன்விழும்
கேசம் ஒதுக்கி
நுனி நாக்கில் தொட்டு வைக்கிறாள்

சற்று முன்னவன்
கோபத்தில் துண்டித்த
அழைப்பை தொடர்ந்து
----------------------------------------------

யாரும் யாரையும்
காத்திருக்க வைக்கக்கூடாதென
மணி நேரம் முன்னதாகவே

இரயில்நிலையம் வந்துவிட்ட
இருவரின் மனக்கம்பிகளில்
தடதடத்துக்கொண்டிருந்தது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets